இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமான ஒரு நபர் கே வி ஜார்ஜ்குட்டி. இதைப் பற்றித் தெரியவந்தபோது பலர் எங்களைப் பார்த்துச் சிரித்தார்கள். இது சாத்தியமே இல்லை என்று ஏளனம் செய்தார்கள்” என்று புன்சிரிப்புடன் சொல்கிறார்.
இது பிப்ரவரி மாதம். விரைவில் கேரளாவின் சுட்டெரிக்கும் கோடைக்காலம். கே.வி ஜார்ஜ்குட்டியும் பாபு உலகண்ணனும் தங்கள் குடிசைகளின் வெளியே சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது வீசும் இனிமையான தென்றலின் குளிர்ச்சியை விட சிறிது தூரத்தில் 250 ஏக்கரில் பரந்து விரிந்து, பச்சைப்பசேலென்று காட்சியளித்த நெற்கதிர், அவர்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளித்தது, . இது கோட்டயம் மாவட்டத்தில் பல்லோம் வட்டத்தில் அமைந்துள்ள பனச்சிக்காடு தாலுகா. வரிசையாக, கண்கள் குளிர அமைந்திருக்கும் நெல்வயல்கள், இடையிடையே சலசலத்து ஓடும் நீர் ததும்பும் கால்வாய்கள், நெற்பயிரின் நீண்ட கூர்மையான இலைகளின் இடையிலிருந்து பறக்கும் பால்வண்ணப் பறவைகள், வயல்களின் குறுக்கே கட்டியிருந்த கம்பிகளில் அமர்ந்திருக்கும் கருப்பு நிறப் பட்சிகள் அழகுக்கு அழகு சேர்த்தன.
சில மாதங்களுக்கு முன்பு வரை, இவ்வயல்வெளிகள் வெறுமையாக காணப்பட்டன. 30 வருடங்களுக்கும் மேல் தரிசாகக் கிடந்த நிலங்கள்! பாபு, ஜார்ஜ்குட்டி, சுரேஷ்குமார், சிபுகுமார், வர்கீஸ் ஜோசப் ஆகியோரின் தளரா முயற்சியில் இத்தனை மாற்றம்! ”நிலத்தை மீண்டும் பயிர் செய்யும் நிலைக்குத் தயார் செய்வதுதான் மிக, மிகக் கடினமான வேலை. வயல்வெளியின் மூலைமுடுக்கு விடாமல் மண்ணைப் பதப்படுத்துவது, களை எடுப்பது, நீர்ப்பாசன கால்வாய்கள் அமைப்பது எனக் கடினமான வேலைகள் பல. சாதாரண நிலத்தை விட தரிசு நிலத்தை மீட்டெடுப்பது பத்துமடங்கு கடினம். மனித உழைப்பும் இயந்திர பலமும் இல்லாமல் முடியாத காரியம்” எனக் கூறுகிறார் பாபு. அவரும் அவரின் சக-விவசாயிகளும் இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கணச்சேரியில் வசிக்கும் தேர்ந்த நெல் விவசாயிகள் ஆவர்.
நெல் சாகுபடி செய்தல் கேரளாவின் இயல்பான விவசாய வழக்கத்திற்கு மாறானது. மாநில அரசின் 2016-17 வருடத்திற்கான வேளாண் புள்ளிவிவரங்கள் அறிக்கையின்படி, 1980-ல் 32 சதவிகிதத்துடன் மாநிலத்திலேயே அதிகபட்ச விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்ட அரிசி குறைந்து கொண்டே வந்து 2016-17-ல் 6.63 சதவிகிதத்தில் நின்றது. 2016-ம் வருடத்திற்கான மாநில திட்டக்குழுவின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 1974-75ல் 8.82 லட்சம் ஹெக்டேரிலிருந்து, விளைநெல் நிலப்பரப்பு வெறும் 1.96 லட்சம் ஹெக்டேராகக் குறைந்திருந்தது.
நெற்பயிரின் பொருளாதார நம்பகத்தன்மையானது, பணப்பயிர் விளைச்சல் அதிகம் ஆக ஆக, படிப்படியாகக் குறைந்து விட்டது. பரந்த வயல்வெளிகள் வீடுகளும் கட்டிடங்களும் கட்டப்பட எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. ரப்பர், மிளகு, தேங்காய், ஏலக்காய், தேயிலை, காப்பி போன்ற பணப்பயிர்கள் 2015-16ம் ஆண்டில் கேரளாவின் மொத்த விளைச்சல் நிலப்பரப்பில் 60 சதவிகிதத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. உணவுப்பயிர்களான அரிசி, மரவள்ளி, மற்றும் பருப்புவகைகள் வெறும் 10.23 சதவிகிதமே.
”கேரளாவில் பணப்பயிர்களுடன் ஒப்பிடும்போது அரிசிக்கு இடம் மிகக்குறைவு. விவசாயிகள் பணப்பயிர்களைப் பயிரிடுவதையே விரும்புகின்றனர். எளிதாகக் கருதுகின்றனர்” என்று கூறுகிறார் லாரி பேக்கர் சென்டர் ஃபார் ஹாபிடாட் ஸ்டடீஸ் (Laurie Baker Centre for Habitat Studies) என்ற அமைப்பின் தலைவர், கே பி கண்ணன். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள CDS என்று சுருக்கமாகச் சொல்லப்படும் Centre for Development Studies-ஸின் (சென்டர் பார் டெவெலொப்மெண்ட் ஸ்டடீஸ்) முன்னாள் தலைவரும் கூட.
‘நிலத்தை மீண்டும் பயிர் செய்யும் நிலைக்குத் தயார் செய்வதுதான் மிக, மிகக் கடினமான வேலை. வயல்வெளியின் மூலைமுடுக்கு விடாமல் மண்ணைப் பதப்படுத்துவது, களை எடுப்பது, நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைப்பது எனக் கடினமான வேலைகள் பல’
”இதனால் கேரளாவின் அரிசி உற்பத்தி போதுமானதாக இல்லை; எங்கள் மாநிலத்தின் மொத்தத் தேவையில், ஐந்தில் ஒரு பங்கைக்கூட எங்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை” என்கிறார் CDS-சின் ஆய்வு உதவியாளர் கே கே ஈஸ்வரன். பொருளாதார அறிக்கையின்படி, நெல்சாகுபடி 1972-73ல் இருந்த 13.76 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2015-16ல் 5.49 லட்சம் மெட்ரிக் டன்னாகச் சரிந்துள்ளது.
மாநிலம் முழுவதும் நீர்த்தடங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டி பல மக்கள் இயக்கங்களாலும் செயற்பாட்டாளர்களாலும் முன்னெடுக்கப்பட்டப் போராட்டங்களின் விளைவாகப் பத்தாண்டுகளுக்கு முன், கேரள நெல் மற்றும் நீர்த்தட பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.இச்சட்டத்தின்கீழ், நெல் வயல்களையும் நன்செய் நீர்த்தடங்களையும்மாற்றியமைப்பது ஜாமீனில் விடத்தகாத குற்றமாகும். 2010ஆம் ஆண்டு 'தரிசில்லாப் பஞ்சாயத்துகள்' அமைக்கும் நோக்கத்தைச் செயலாக்கி, விவசாயிகளுக்கு தரிசுநிலங்களில் பயிர் செய்ய ஊக்கத்தொகையும் பல சலுகைகளும் அளித்தது அரசு.
”முதல் வருடத்தில் மாநில அரசு ஹெக்டேருக்கு ரூ.30,000 மானியத்தொகை அளித்து அதில் ரூ.25,000 விவசாயிக்கும் மீதம் ரூ.5,000 நிலஉரிமையாளருக்கு வாடகையாகவும் கிடைக்கும்படி செய்தது. முதல் வருடம் நிலத்தைப் பதப்படுத்தும் வேலை முடிந்தபின் இச்சலுகை ரூ.5,800 ஆகவும் ரூ.1,200 ஆகவும் குறைகிறது” எனப் பகிர்கிறார் ஜார்ஜ்குட்டி.
” பயிரை விளைவித்தால் கிடைக்கும் வருமானத்துக்கு ஈடானத் தொகையை நீங்கள் வழங்க வேண்டும்.. சூழலைக் காக்க வேண்டிய சமூகப்பொறுப்பை விவசாயிகள் மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டுப் செலவினங்களைச் சுமக்க வேண்டும்??' என்று நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகிறார் கண்ணன்.
நில அபகரிப்புப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், இச்சட்டம் உள்ளூர் பஞ்சாயத்துகளை விவசாயிகளுக்கும் தரிசுநில உரிமையாளர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்களாக இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தித் தரும்படி ஊக்குவிக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் உள்ளூர் வேளாண்துறை அலுவலரின் கண்காணிப்பில் நடைபெறுகின்றன.
”1969-ம் ஆண்டின் நிலச் சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, நிலக்குத்தகை சட்டப்படி குற்றமாக்கப்பட்டது. ஆயினும் பஞ்சாயத்தின் உதவியுடனும், மத்தியஸ்தத்துடனும் எடுக்கப்படும் குத்தகை இன்றும் அனுமதிக்கப்படுகிறது” என்று சொல்கிறார் ஷெபின் ஜேகப். இவர் கொல்லட் பஞ்சயாத்தின் உறுப்பினர். கோட்டயத்தின் இப்பகுதியில் தரிசுநில நெல்சாகுபடி நடைபெறுவதில் முக்கிய பங்கு வகிப்பவர். உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் சென்று “நீங்கள்தான் உரிமையாளர், ஆனால அவர்கள் விளைவிப்பார்கள்’ எனக் குத்தகைக்காரர்களின் சார்பாக உறுதி அளிப்பார்கள் என்கிறார் அவர்..
”ஆயினும், தற்போதைய நிலைமையில் வெற்றி தொடர்ச்சியற்றதாகத்தான் இருக்கிறது. அரக்குளம், இடுக்கி, காயல் நிலம் (ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகியப் பகுதிகளில் கடல் மட்டத்தின் கீழே விவசாயம் நடக்கக்கூடியத் தனிச்சிறப்பினால் யுனெஸ்கோவால் பாரம்பரிய பண்பாட்டுச் சான்று பெற்ற குட்டநாடு) முதலியப் பகுதிகளில் நிறைய மக்கள் முயற்சிப்பதால் ஓரளவிற்கு வெற்றி கிடைக்கிறது,” என்கிறார் ஈஸ்வரன்.
உள்ளாட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மக்கள் அமைப்புகள், விவசாய ஆர்வலர்கள், அலுவலர்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்டவர் ஒன்றாக இணைந்து செய்த முயற்சியினால் கொல்லட் பகுதியில் நெற்பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. 2017-18 ஆண்டுக்கான கோட்டயம் விவசாயத்துறை அலுவலகத்தின் அறிக்கையின்படி சுமார் 830 ஹெக்டேர் தரிசு நிலம் தற்போது நெல்சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளது.
“நாங்கள் 2017 நவம்பர் மாதம் விதைக்க ஆரம்பித்தோம். 120 நாட்களின் கடும் உழைப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது' என்கிறார் பாபு 'வள்ளம்' என்று அழைக்கப்படும் சிறியப் படகில் வயல்களைச் சுற்றிக் காண்பித்துக்கொண்டே. ”நாங்கள் எதிர்பார்ப்பது ஒரு ஏக்கருக்கு 22 குவிண்டால் அரிசியும் 25 ஆயிரம் ரூபாய் லாபமும் தான்”.
பாபுவும் சங்கணச்சேரியைச் சேர்ந்த சக விவசாயிகளும் நிர்வாக அனுமதிகளைப் பெற்ற பின்னர், தங்களுக்குத் தெரிந்த உழவுத்தொழிலாளர்களை முதலில் வேலைக்கு நியமித்தனர். கேரள அரசாங்கத்தின் தரிசுநிலம் மீட்டெடுக்கும் முயற்சியில் முட்டுக்கட்டையாக ஓங்கி நிற்கும் பிரச்சினை தொழிலாளர் பற்றாக்குறை!
ஜோஸ் ஜார்ஜ் கோட்டயம் மாவட்டத்தின் மீனசில் தாலுகாவில் களத்துக்கடவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சகவிவசாயிகளுடன் இணைந்து 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார். ”எங்கள் பிரச்சினைகளில் மிகப்பெரிய ஒன்று வேலைக்கு ஆட்கள் கிடைப்பது! உள்ளூர் தொழிலாளர்களின் தினசரிக்கூலி ரூ.850; பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ரூ.650 கூலி. இங்கிருக்கும் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களிலிருந்து வேலையாட்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மற்றொரு சிக்கல்” எனக் கூறுகிறார்.
இப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய ஊர் கிராமசபை நிர்வாகம் கேரள மாநிலத்திலுள்ள சிறு கிராமங்களிலிருந்து ரூ.260 தினக்கூலிக்கு ஊரக வேலைத்திட்ட ஆட்களை நியமிக்கிறது. ”நிலத்தை தயார் செய்யும் முதல் கட்ட வேலைகளில் இவர்கள் உதவி எங்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது; இவர்கள் வயல்களைச் சுற்றித் தேவையான நுண்பாசன கால்வாய்களையும் அமைத்துக் கொடுக்கிறார்கள். இது எங்களது நெல்சாகுபடி செலவைக் குறைக்கிறது” என்று கோட்டயத்தைச் சேர்ந்த ராசியா ஏ சலாம் சொல்கிறார். ”முன்னர் கிராமசபையால் 30 நாள் வேலை கூட கொடுக்க இயலவில்லை. இப்புதிய திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 50-60 நாட்கள் வரை வேலை கிடைக்கிறது.”
அரசாங்கம் நெற்பயிர் சாகுபடிக்கான மாற்றுக் கொள்கைகளைக் கொண்டு வருவதற்கு வெகுமுன்னரே, குடும்பஸ்ரீ குழுவும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. 1998ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சிகள், தற்போது சுமார் 43 லட்சம் பேரைக் கொண்ட பிரம்மாண்டமான வலைப்பின்னலாக மாறியுள்ளது. இதில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். அதிலும், விதை விதைத்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல் முதலான உழவுத் தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளில் தேர்ந்தவர்களும் கூட இருக்கின்றனர். குடும்பஸ்ரீ முயற்சி இவர்களை ஒருங்கிணைத்து நிலவுரிமையாளர்களையும் விவசாயிகளையும் அணுக வாய்ப்புகள் ஏற்படுத்தியது. இப்பெண்கள் நிலங்களில் தாங்களே வேலை செய்து, ஹெக்டேருக்கு ரூ.9,000 குடும்பஸ்ரீயிலிருந்து மானியமாகப் பெறுகின்றனர். இதனால் இப்போது கேரள மாநிலம் முழுவதும் 8300 ஹெக்டேர் நிலம் அரசு சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான நிலம் மலப்புரம், திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களைச் சேர்ந்தவை. அறுவடைக்குப்பின் சுத்தப்படுத்தப்பட்டு, அரிசி அந்தந்தப் பகுதிகளின் பெயரிலேயே 'பிராண்ட்' செய்யப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ”இது அவர்களின் வருமானத்தைக் கூட்டுகிறது,” என்கிறார் குடும்பஸ்ரீ ஆலோசகர் ராகுல் கிருஷ்ணன்.
இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தின் கல்லரா பகுதியில் உள்ள வைக்கம் கிராமத்தில், சுமார் 40 விவசாயிகளும் அவர்தம் குடும்பங்களும் விவசாய அலுவலர்கள், பஞ்சாயத்து ஊராட்சி நபர்கள் மற்றும் ஊடகங்களுடன் பிப்ரவரி 16-ம் தேதி ஓர் அறுவடை விழாவிற்காக ஒன்று கூடினர். 100 ஏக்கர் தரிசு நிலத்தைப் பொன்னிற நெற்பயிர் காடாக மாற்றியதைக் கொண்டாடவே இந்த விழா. மேளங்கள் கொட்ட, மலர்கள் மணம் கமழ விவசாயிகளுக்குப் பரிசுகளும் பொன்னாடைகளும் துண்டுகளும் வழங்கப்படுகின்றன.
ஸ்ரீதரன் அம்பட்டுமுகில், இந்த நாற்பது விவசாயிகளில் ஒருவர். முதன்முதலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர் கட்டு ஒன்றைப் பெருமையுடன் கையில் ஏந்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார். பல மாதங்கள் நீடித்த கடும் உழைப்பின் பரிசு இது. ஆனால் கல்லாராவில் உள்ள மற்ற விவசாயிகளைப் போலவே, விற்பனை பற்றிய கவலை இவருக்கும் இருக்கிறது.. ”கேரள மாநில அரசாங்கத்தின் பயனுக்காக அரிசி வாங்கும் ஒப்பந்ததாரர்கள் 100 கிலோ அரிசியில் சுமார் 17 கிலோவிற்குப் பணம் செலுத்துவதில்லை. கடந்த வருடம் வெறும் நான்கு கிலோதான் குறைத்தார்கள்.” தனியார் ஒப்பந்ததாரர்கள் அனைத்து பயிர்வகைகளிலும் இதைச் செய்வது வழக்கமான விஷயம்தான். ஆயினும் இதை விவசாயிகள் வரவேற்பதில்லை.
”சில இடங்களில், விவசாயிகளுக்கும் ஆலை உரிமையாளர் மற்றும் முகவர்களுக்கும் நெல் தரத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளினால் அறுவடையில் இருந்து விற்பனைக்கு வரும் காலம் நீண்டு, தாமதம் ஏற்படுகிறது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை அளிக்கிறது” என்கிறார் ஈஸ்வரன்.
இவ்வாறு பலவித நிச்சயமின்மைகளுக்கு இடையே விவசாயிகளை இயக்குவது எது? ”விவசாயத் தொழில் எங்கள் வேட்கை; எத்தனைக் கஷ்டநஷ்டங்களுக்கு இடையிலும் நாங்கள் எங்கள் தொழிலைக் கைவிட மாட்டோம்” என்கிறார் ஸ்ரீதரன். ”விவசாயிகள் இந்த நாட்டில் என்றும் செழிப்புடனும், சிறப்புடனும் வாழப்போவதில்லை; ஆயினும் எங்களையும் எங்கள் உழைப்பையும் அகற்றவே முடியாது.”
தமிழில்: சந்தியா கணேசன்