“ரகசிய வழியில் நாங்கள் வெளியே வந்தோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? குறைந்தபட்சம் எங்களிடம் மூலப்பொருட்கள் இருந்தால், வீட்டிலேயே இருந்து கொண்டு கூடைகள் பின்னித் தயார் செய்வோம்,” என தெலங்கானாவின் கங்கல் கிராமத்திலிருக்கும் கூடை பின்னும் குழு ஒன்று கூறியது. ரகசிய வழியா? ஆம். காவல்தடுப்போ முள்வேலிகளோ இல்லாத இடத்தில் கிராமவாசிகள் ரகசியமாக அமைத்துக் கொண்ட வழி.
கங்கலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெள்ளிதண்டுப்பாடு என்கிற குக்கிராமத்தில் பேரீச்சை இலைகள் சேகரிக்கவென ஏப்ரல் 4ம் தேதி காலை 9 மணி அளவில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆணுடன் சேர்ந்து நெலிகுந்தரஷி ரமுலம்மா ஆட்டோவில் கிளம்பினார். அவற்றைக் கொண்டுதான் கூடைகள் தயாரிக்கிறார்கள். பொது நிலங்களிலிருந்து சேகரிப்பார்கள். சமயங்களில் விவசாய நிலங்களில் சேகரித்து அதற்கு பதிலாக சில கூடைகளை விவசாயியிடம் கொடுத்து விடுவார்கள்.
கங்கலில் இருக்கும் கூடைத் தயாரிப்பவர்கள் தெலங்கானாவில் பழங்குடிச் சமூகமாக பட்டியலிடப்பட்டிருக்கும் யெருகுலா சமூகத்தை சேர்ந்தவர்கள். மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலம்தான் கூடை விற்பனை நடக்கும் காலம். இம்மாதங்களின் வெயில்காலம் இலைகளை காய வைப்பதற்கான சரியான காலம்.
வருடத்தின் மற்ற மாதங்களில் அவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். நாட்கூலியாக 200 ரூபாய் வரை கிடைக்கும். பருத்தி அறுவடைக்காலமான டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஒரு நாளைக்கு 700லிருந்து 800 ரூபாய் வரை, வேலை இருந்தால் சம்பாதிப்பார்கள்.
இந்த வருடத்தின் கொரோனா ஊரடங்கு, கூடை விற்று வரும் அவர்களின் வருமானத்தை முடக்கி விட்டது. “பணமுள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள். எங்களால் முடியவில்லை. அதனால்தான் நாங்கள் வெளியே வந்தோம் (இலைகளை சேகரிக்க). இல்லையெனில் நாங்கள் ஏன் வெளியே வரப் போகிறோம்?” என கேட்கிறார் 70 வயதான ரமுலம்மா.
ரமுலம்மாவின் குழுவிலுள்ள ஆறு பேரும் 2, 3 நாட்களுக்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரங்கள் வரை வேலை பார்த்தால் 35 கூடைகள் தயாரிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வேலை பார்ப்பார்கள். ரமுலம்மாவின் கணக்குப்படி கங்கலில் மட்டும் அதுபோல் 10 குழுக்கள் இருக்கின்றனர். நல்கொண்டா மாவட்டத்தின் கங்கல் மண்டல் கிராமத்தில் 7000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 200 பேர் பட்டியல் பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள்.
“இலைகளில் இருக்கும் முட்களை முதலில் அகற்றுவோம். பின் ஊற வைத்து காய வைப்போம். மெலிதாகவும் வளைவாகவும் இருக்கும் வகையில் வெட்டுவோம். பிறகு கூடைகள் (பிற பொருட்களும்) பின்னுவோம்,” என விளக்குகிறார் ரமுலம்மா. “இவை எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு, இப்போது விற்கும் வழியில்லாமல் (ஊரடங்கினால்) இருக்கிறோம்.”
7-லிருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை ஹைதராபாத்திலிருந்து ஒரு வியாபாரி வந்து கூடைகளை கொள்முதல் செய்வார். கூடை பின்னுபவர்கள், ஒரு கூடைக்கு ஐம்பது ரூபாயென நாளொன்றுக்கு 100லிருந்து 150 ரூபாய் வரை மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை சம்பாதிப்பார்கள். “அந்த பணத்தையும் நாங்கள் விற்றால் மட்டுமே கண்ணில் பார்க்க முடியும்” என்கிறார் 28 வயதாகும் நெலிகுந்தரஷி சுமதி.
மார்ச் 23ம் தேதி ஊரடங்கு, தெலங்கானாவில் அறிவிக்கப்பட்ட பின் கங்கலுக்கு வியாபாரி வரவில்லை. “ஒன்றிரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒரு ட்ரக்கில் வந்து எல்லா கூடைகளையும் எங்களிடமிருந்தும் மற்ற கிராமங்களிலிருந்தும் வாங்கிச் செல்வார்,” என ஊரடங்குக்கு முன் இருந்த நிலவரத்தை விவரிக்கிறார் 40 வயதாகும் நெலிகுந்தரஷி ரமுலு.
ரமுலுவும் மற்றவர்களும் தயாரிக்கும் கூடைகள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் சோறு காய வைக்கவும் வறுத்த உணவுப் பொருட்களின் எண்ணெய்யை வடிய வைக்கவும் பயன்படுத்தப்படுபவை. மார்ச் 15ம் தேதியிலிருந்து அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு தெலங்கானா அரசு தடை விதித்திருக்கிறது.
மார்ச் 25ம் தேதி வரும் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதிக்கு என ஒரு வாரத்துக்கு முன்னமே வணிகர்கள் வாங்கிய கூடைகள் விற்காமல் தேங்கிவிட்டன. ஊரடங்கு விலக்கப்பட்டாலும் தளர்த்தப்பட்டாலும் திருமண மண்டபங்களும் அரங்குகளும் மீண்டும் இயங்கத் தொடங்கியபிறகுதான் வியாபாரி கங்கலுக்கு வருவார்.
“ஊரடங்கு முடிந்ததும் எல்லா கூடைகளையும் வாங்கிக் கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்,” என்கிறார் சுமதி. கூடைகள் அழியாத பொருட்கள் என்பதால் அவரும் மற்றவர்களும் எந்த கூடையும் வீண் போகாது என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் அடுக்கப்படும் கூடைகளின் எண்ணிக்கை, ஊரடங்குக்கு பின் என்ன விலையை பெற்றுத் தரும் என்கிற கேள்வியை எழுப்புகிறது.
உகாதிக்கு முந்தைய வாரத்தில் வியாபாரியிடம் கூடைகள் விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு ஊரடங்கு தொடங்கும் முன் ரமுலுவின் மனைவியான நெலிகுந்தரஷி யதம்மா பத்து நாட்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டார். பொதுவாக கூடை பின்னுபவர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள், எண்ணெய் போன்ற பொருட்களை உள்ளூர் சந்தையிலும் நியாயவிலைக் கடையிலும் வாங்குவார்கள். யதம்மாவை ஏப்ரல் 4ம் தேதி நான் சந்திக்கும்போது அவர் வாங்கியிருந்த அரிசி தீர்ந்துபோயிருந்தது. முந்தைய மாதம் நியாயவிலைக் கடையில் வாங்கிய அரசியில் மிச்சம் இருந்ததை கொண்டு சமைத்துக் கொண்டிருந்தார். தெலங்கானாவில் கிலோ 1 ரூபாய் என்கிற விலையில் ஆறு கிலோ அரிசி நியாயவிலைக் கடையில் அனைவருக்கும் கிடைக்கும். சந்தையில் வாங்கும் அரிசி ஒரு கிலோ 40 ரூபாய்.
ஊரடங்குக்கு பல நாட்களுக்கு முன்னமே நியாயவிலைக் கடையில் கிடைக்கும் அரிசி சமைக்க உகந்ததாக இருக்கவில்லை என்பது யதம்மாவுக்கும் மற்றவருக்கும் தெரிந்திருக்கிறது. சமைத்தால் குழைந்திருக்கிறது. துர்நாற்றமும் கொண்டிருக்கிறது. “ரொம்ப ருசியான அரிசி,” என நக்கலாக யதம்மா சொல்கிறார். “சாப்பிட்டு, சாப்பிட்டு, இறந்துவிடலாம்,” என்கிறார் அவர்.
ஆனாலும் பொருட்கள் வாங்கவில்லை எனில், குடும்ப அட்டையை இழந்துவிடுவோமோ என்கிற பயத்தில் தொடர்ந்து அரிசி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரிசியை அரைத்து மாலை உணவாக தனக்கும் கணவருக்கும் இரு குழந்தைகளுக்கும் ரொட்டிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் யதாம்மா. ஊரடங்குக்கு முன், அவர்களின் காலை மற்றும் மதிய உணவுகள் காய்கறிகளுடன் சந்தையில் வாங்கப்பட்ட விலை உயர்ந்த பொடி அரிசியில் செய்யப்பட்டன. இவ்வகை அரிசியையும் காய்கறிகளையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க வேண்டுமெனில் கூடை தயாரிப்பவர்களுக்கு நிலையான வருமானம் இருக்க வேண்டும். “இந்த சின்ன சாதிக்கு இதுதான் பிரச்சினை,” என்கிறார் ரமுலம்மா.
சேமிப்புக் கிடங்கிலிருந்து, இந்திய உணவுக் கழகம் (FCI) கொடுத்திருக்கும் உணவு தானியங்களை மாநில அரசு விநியோகிக்கிறது. FCI-ன் தரக் கட்டுப்பாட்டு அறிக்கை, புறாக்களின் கழிவு, குருவிகளின் இறகுகள், எலிகளின் சிறுநீர், வண்டுகள் மற்றும் பூச்சிகள் போன்றவை தானியங்களை பாழாக்கும் எனக் கூறுகிறது. அதனால் மெதில் ப்ரோமைட் மற்றும் பாஸ்ஃபின் போன்ற ஊசிப் போன வாடை தரக் கூடிய ரசாயனங்கள் மருந்துக்கொல்லிகளாக பயன்படுத்தப்படுகின்றன. கங்கல் நியாயவிலைக் கடையில் கிடைக்கும் அரிசியின் தரம் குறைவாக இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். “எங்கள் குழந்தைகள் அந்த அரிசியை சாப்பிடுவதில்லை,” என்கிறார் நெலிகுந்தரஷி வெங்கட்டம்மா என்ற கூடை தயாரிப்பாளர்.
இப்போதைக்கு தரப் பிரச்சினை ஓரளவுக்கு சமாளிக்கப் பட்டிருக்கிறது. ரமுலுவும் அவர் குடும்பமும் கங்கலின் பிற மக்களும் தலா 12 கிலோ அரிசியையும் ஒவ்வொரு குடும்பத்துக்கு 1500 ரூபாய்யையும் மாநில அரசின் நிவாரணத் தொகுப்பின்கீழ் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு பெற்றிருக்கிறார்கள். நியாயவிலைக் கடையில் கிடைக்கும் அரிசியை விட இந்த அரிசியின் தரம் நன்றாக இருப்பதாக ரமுலு சொல்கிறார். ஆனால் மே 6ம் தேதி என்னிடம் தொலைபேசியில் அவர் பேசுகையில், “நிவாரண அரிசி எல்லாமும் ஒன்றும் நன்றாக இல்லை. அவற்றில் சில நன்றாக இருக்கிறது. சில மோசமாக இருக்கிறது. தற்போது இதைத்தான் சாப்பிடுகிறோம். சிலர் நிவாரண அரிசியையும் சந்தையில் வாங்கிய அரிசியை கலந்து சாப்பிடுகிறார்கள்,” என்றார்.
ஏப்ரல் 15ம் தேதி நான் ரமுலுவை சந்தித்தபோது, கங்கலிலுள்ள அரசு நெல் கொள்முதல் மையத்தில் நாட்கூலியாக பணிக்கு சேர்ந்திருந்தார். அந்த வேலை வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருக்கும். அந்த வேலைக்கு பலர் ஆர்வம் காட்டுவதால் அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் கூலியாக 500 ரூபாய் கிடைக்கிறது. அந்த வேலையும் மே மாதத்தின் 3ம் வாரம் வரைதான் நீடிக்கும். நெல் கொள்முதல் முடிந்துவிடும்.
ரமுலம்மா, யதம்மா மற்றும் குழுவின் பிற பெண்கள் அவ்வப்போது 200லிருந்து 300 ரூபாய் நாட்கூலி கிடைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். “பருத்தி மிச்சத்தை (தண்டுகள், கிளை மற்றும் அறுவடையில் மிஞ்சிய பிறவை) சேகரிக்க நாங்கள் வெளியே செல்கிறோம்,” என மே 12ம் தேதி காலை தொலைபேசியில் பேசுகையில் யதம்மா கூறினார்.
அவரும் கங்கலில் இருக்கும் பிற குடும்பங்களும் வரும் மாதங்களில் சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் நிவாரண அரிசியின் தரத்தையும் கூடைகள் விலை போகுமா என்பதையும் நிலையான விவசாய வேலை கிடைக்குமா என்பதையும் பொறுத்தே இருக்கப் போகிறது.
உள்துறை அமைச்சகம் மே 1ம் தேதி வெளியிட்டிருக்கும் ஊரடங்குக்கான புதிய விதிகளில் 50 பேருக்குள்ளான எண்ணிக்கையில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. அது அமலுக்கு வரும் பட்சத்தில் தெலங்கானாவில் கூடைகளுக்கான தேவையும் கொள்முதலும் மீண்டும் தொடங்கும். “இதுவரை அவரிடமிருந்து (கூடை வியாபாரி) எந்த அழைப்பு வரவில்லை. நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் ரமுலு.
“5-லிருந்து 6 மாதங்கள் வரை கூடைகளுக்கு எந்தவித பாதிப்பும் வராது,” எனவும் சொல்கிறார் ரமுலம்மா. “ஆனால் அவர் (வியாபாரி) இன்னும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. கொரோனா இன்னும் முடியவில்லை.”
தமிழில்: ராஜசங்கீதன்