தொடர் மண் அரிப்பு மற்றும் மூழ்குவதற்கு வாய்ப்புள்ள பகுதியாக உள்ளது போன்ற காரணங்களால் பிரமபுத்திரா நதியில் உள்ள தீவுகளில் இருந்து தினமும் காலையில் நாட்டு படகுகள் ஏராளமான தினக்கூலித்தொழிலாளர்களை அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள துப்ரி நகருக்கு கொண்டு வந்துவிடுகின்றன. அண்டை மாநிலமான மேகாலயாவிலிருந்து இங்கு, கடாதர் துணை நதியும், துப்ரியில் பிரம்மபுத்திராவும் சந்திக்கும் இடத்திற்கு மூங்கில்களையே மிதவை படகுபோல் தயாரித்து அதிலும் பயணிகள் மற்றும் வேலைக்கு வருபவர்கள் வருகிறார்கள்.
இந்த சந்திப்பில் வாழ்வாதார பிரச்னை வளர்ந்துவரும் ஒன்றாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பிளக்கப்பட்ட மூங்கில்களுக்கான தேவை குறைந்து வருகிறது. மூங்கில்கள், வேலிகள், பலகைகள், மூங்கில் சுவர்கள் மற்றும் மரஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்பயன்படுகின்றன. இந்த தீவுகள் மற்றும் அசாமின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் பாரம்பரியமான மூங்கில் வீடுகளில் இருந்து, மடித்து வைத்துக்கொள்ளகூடிய வகையிலான, தகர சுவர்கள் மற்றும் தகரக்கூரைகள் கொண்ட வீடுகளுக்கு மாறிவிட்டார்கள். தொடர்ந்து ஏற்படும் மண்அரிப்பு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்னைகளை சமாளிப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்கின்றனர். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலும் பிளக்கப்பட்ட மூங்கில்களுக்காக தேவை குறைந்து வருகிறது. அங்கும் கற்கள் அல்லது தகரங்கள் கொண்டு குறைந்த செலவில் வீடுகளை மூங்கில் வீடுகளுக்கு மாற்றாக கட்டிக்கொள்கிறார்கள்.
மைனுதீன் பிரமாணிக் (35), குந்திர் குடியிருப்பில் இருந்து துப்ரிக்கு தினமும் வருகிறார். அவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தையாவார். கத்தியின் மூலம் அவர் தினமும் மூங்கில்களை பிளந்துகொண்டிருக்கிறார். இந்தத்தொழில் உள்ளூரில் பஷீர் காஜ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேலையின் மூலம் அவர் பணம் ஈட்டுகிறார். 8 மணி நேரத்தில் அவர் 20 மூங்கில்களை பிளக்கிறார். நாளொன்றுக்கு ரூ.250 கூலி பெறுகிறார். இதுபோன்ற மூங்கில் பிளக்கும் தொழில் செய்பவர்களில் மைனுதீனும் ஒருவராவார். உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் அவர்களை இங்கு அழைத்துவருகிறார். இங்கு தற்போது அதிக வேலைகள் இருப்பதில்லை. ஆண்டில் பாதி நாட்களுக்கே வேலைகள் கிடைப்பது அரிதாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு மூங்கிலும் மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. மிருதுவாக உள்ள முதல் அடுக்கு மூங்கில் சுவர்கள் தயாரிக்கவும், இரண்டுவது அடுக்கும் சுவர்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஆனால், இரண்டாவது அடுக்கு மிருதுவாக இருக்காது. அடி அடுக்கு மரப்பலகைகளில் அடைத்து நிரப்பும் பகுதிக்குப்பயன்படுகிறது.
ஒரு மாதத்திற்கு இரண்டு டிரக்குகள் நிறைய மூங்கில்கள் வரும். தற்போது, இரண்டு மாதத்திற்கே ஒரு டிரக்தான் வருகிறது. வியாபாரம் அந்தளவுக்கு குறைந்துவிட்டது
பணியிடங்களில், தொழிலாளர்கள் வெட்டிப்பிளந்த மூங்கில்களை கட்டுகளாக கட்டி அடுக்குகிறார்கள். பின்னர் அவை டிராக்குகளிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். பிளக்கப்பட்ட மூங்கில்களை சேமித்து வைக்க அதிக இடங்கள் தேவைப்படும். அவை காய்ந்து சந்தை மதிப்பை இழந்துவிடக்கூடும். பின்னர் மூங்கிலை அடுப்பெரிக்க மட்டுமே பயன்டுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அதன் விலை மேலும் குறைந்துவிடும்.
இந்த தீவிகளில் வசித்து வந்தவர்களின் மூங்கில் தேவை குறைந்து வருகிறது. ஏனெனில், இங்கு வசிப்பவர்கள் மடக்ககூடிய தகர வீடுகளை தற்போது விரும்பத்துவங்கிவிட்டார்கள். இங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் மண்அரிப்பு போன்ற பிரச்னைகளின்போது அவற்றை எளிதாக வேறு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியும். அவர்கள் வெளியேறியத் தீரவேண்டிய நிலையில் இவைதான் அவர்களுக்கு நீடித்து உழைக்கக்கூடியதாக உள்ளது.
முற்காலங்களில், வனத்துறையினர், நன்றாக வேயப்பட்ட மூங்கில் வேலிகளை அதிகளவில் வாங்கி மாநிலத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பாதுகாக்கப்பயன்படுத்துவார்கள். தற்போது அவர்கள் இரும்பு அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வேலி வலைகளை பயன்படுத்தத்துவங்கிவிட்டனர். இதுவும் பிளக்கப்பட்ட மூங்கிலுக்கான தேவை குறைவுக்கு ஒரு காரணமாகும்.
ஒப்பந்தக்காரர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூலி கொடுக்கிறார்கள். அவைதான் உள்ளூர் சந்தை நாட்கள். மைனுதீனின் ஒப்பந்தகாரர் ராதாகிருஷ்ணா மண்டல் (வலப்புறம் கடைசியில் உள்ளவர்) மேகாலயாவில் இருந்து ஒரு மூங்கில் ரூ.10க்கு வாங்குகிறார். மைனுதீன் மற்றும் மற்ற 7 பேரை வைத்து அவற்றை பிளக்கும் வேலையை செய்கிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை, மண்டல் இரண்டு டிராக்குகள் வரை பிளக்கப்பட்ட மூங்கில்களை மேற்கு வங்கம் மற்றும் பீகாருக்கு அனுப்பி வைத்தார். தற்போது, அவர் ஒரே ஒரு டிரக் மட்டுமே இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்புவதாக கூறுகிறார்.
துப்ரியில் உள்ள 4 படகுத்துறையும் 350க்கும் மேற்பட்ட தீவுக்குடியிருப்புகளை இணைக்கிறது. இந்த நான்கு படகுத்துறைகளிலும் மூங்கில்கள் பிளப்பது ஒரு பொதுவான வேலையாகும். அதுவே அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழியுமாகும். ஒரு படகுத்துறையில் குறைந்தபட்சம் 7 ஒப்பந்தக்காரர்களாவது தங்களின் வியாபாரத்தை செய்கிறார்கள்.
இந்தத்தொழில் தற்போது தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையிலும், மைனுதீனுக்கு வேறு வேலைக்குச் செல்ல வழிகள் இல்லை. மற்ற தினக்கூலி வேலைகளான, சுமைதூக்குவது, ரிக்ஷா ஓட்டுவது, உதவியாளர் மற்றும் மற்ற வேலைகளும் இந்த 350 தீவுக்குடியிருப்புகளிலிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்கிறார்கள்.
தமிழில்: பிரியதர்சினி. R.