“குடும்ப அட்டையில் முத்திரை இல்லை என முதலில் சொன்னார்கள். முத்திரை பெறுவதற்கான எல்லா ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்தேன். ஆனாலும் அவர்கள் எனக்கான உணவுப் பொருட்களை கொடுக்கவில்லை,” என்கிறார் கயாபாய் சவான்.

புனே நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கயாபாய்யை ஏப்ரல் 12ம் தேதி நான் சந்தித்தேன். ஊரடங்கு காலத்தில் குடும்பத்துக்கு எப்படி உணவு வாங்குவது என்கிற கவலையில் இருந்தார். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கென கொடுக்கப்பட்டு, அவரிடம் இருக்கும் மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. புனேவின் கொத்ருட் பகுதியில் அவர் இருக்கும் ஷாஸ்திரி நகர் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்றிருக்கிறார். அவரின் குடும்ப அட்டை செல்லாது என கடைக்காரர் கூறியிருக்கிறார். “உணவுப்பொருட்கள் பெறுவோருக்கான பெயர்ப்பட்டியலில் என் பெயர் இல்லையென சொன்னார்.”

கயாபாய்க்கு வயது 45. அவருடைய கணவர் பிக்கா, ஆலையில் வேலை பார்க்கையில் நேர்ந்த விபத்தில் ஊனமடைந்த ஒரு வருடத்துக்கு பிறகு புனே நகராட்சியில் வேலைக்கு சேர்ந்தார். 14 வருடங்களாக புனே நகராட்சியில் கூட்டிப் பெருக்கும் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் அவர்தான். அவருடைய மூத்த மகளுக்கு மணம் முடிந்துவிட்டது. இளைய மகளும் மகனும் படிப்பை நிறுத்திவிட்டார்கள். இருவரும் சம்பாதிக்கவில்லை. மாத வருமானமான 8500 ரூபாயை கொண்டு குடும்பச் செலவை கயாபாய் கவனித்துக் கொள்கிறார். ஷாஸ்திரி நகரின் தொழிலாளர் குப்பத்தில் தகரக்கூரைக்கு கீழ் வசிக்கும் அவரின் குடும்பம் விரக்தியில் இருக்கிறது. “இதுதான் என் சூழல்” என சொல்லும் அவர், “எனக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை” என்கிறார்.

நியாயவிலைக்கடைக்கு செல்லும் அவரின் பயனில்லா பயணங்கள் ஊரடங்கு காலத்தில் தொடங்கவில்லை. “எங்களுக்கான உணவுப்பொருட்களை ஆறு வருடங்களாக அவர்கள் (கடைக்காரர்கள்) கொடுக்காமல் இருக்கிறார்கள்,” என்கிறார் அவர். ஊரடங்கு நேரத்திலாவது மனமிரங்குவார்கள் என நம்பியிருந்தார் அவர்.

கயாபாய் வாழும் பகுதியில் இருக்கும் பல குடும்பங்கள் மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்குக்கு பிறகு இரண்டு வாரங்கள் வரை நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் பெற முடியாமல் தவித்தனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி (2013) நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்தும், கடைக்காரர்கள் வெவ்வேறு காரணங்கள் சொல்லி மக்களை திரும்ப அனுப்பினர்.

ஊரடங்கு காலத்தில் பல பெண்கள் மானிய விலை உணவுப் பொருட்களை நம்பினர். குறைவாக கிடைக்கும் வருமானத்தில் சில்லறை விலையிலும் அவர்களால் வாங்கவும் முடியாது

காணொளி: ’குடும்ப அட்டையால் என்ன பயன்?’

கயாபாய் வசிக்கும் தொழிலாளர் குப்பத்தில் இருக்கும் பிறர் கடைக்காரர்களின் பதில்களை பட்டியலிட்டனர்: “கடைக்கு சென்றபோது, மாதா மாதம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் இனி எனக்கு கிடைக்காது என சொல்லப்பட்டது,” என்கிறார் ஒருவர். மற்றொருவர், “என் கட்டைவிரல் ரேகை பொருந்தவில்லை (கணிணித் தரவுகளுடன்) என்றார் கடைக்காரர். என்னுடைய ஆதார் அட்டை குடும்ப அட்டையுடன் இணைக்கப்படவில்லை,” என்றார். குடும்ப வருமானம் வருமான வரம்பை விட அதிகமாக இருப்பதாக சொல்லி ஒரு பெண்ணை திரும்ப அனுப்பியிருக்கிறார்கள். “உணவுப்பொருட்களையே வாங்க முடியாதவர்களுக்கு நியாயவிலைக்கடை பொருட்கள் எப்படி கிடைக்கும்?” என்கிறார் அவர்.

“எனக்கு எதையும் கொடுக்க முடியாதென கடைக்காரர் சொல்லிவிட்டார். மூன்று வருடங்களாக உணவுப் பொருட்கள் எனக்கு கிடைக்கவில்லை,” என்கிறார் 43 வயதாகும் அல்கா தாகே. அருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து மாதத்துக்கு 5000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் அவர்.

“வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கான மஞ்சள் நிற குடும்ப அட்டை இருந்தும் அவருக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை,” என அல்காவின் சூழலை விளக்குகிறார் செயற்பாட்டாளர் உஜ்வாலா ஹவாலெ. “கடைக்காரர் அவரைத் திட்டி எங்காவது சென்று தொலையுமாறு கூறுகிறார். குடும்ப அட்டையை செல்ல வைப்பதாக சொல்லி ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 500 ரூபாய் வாங்கியிருக்கிறார். ஆனாலும் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை.”

மார்ச் 26ம் தேதி மத்திய அமைச்சரால் நிவாரணப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து கிலோ இலவச அரிசி, அல்காவுக்கும் கயாபாய்க்கும் கொடுக்கப்படவில்லை. குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுப்பொருட்களை தாண்டி கொடுக்கப்பட வேண்டியவை இவை. ஏப்ரல் 15ம் தேதி நியாயவிலைக் கடையில் விநியோகம் தொடங்கியதும் வரிசைகள் நீளத் தொடங்கின. இலவச அரிசியுடன் கொடுக்கப்பட வேண்டிய ஒரு கிலோ இலவச பருப்பு  நியாயவிலைக் கடைகளை வந்து சேரவில்லை. “இலவச அரசி வந்தாலும் பருப்பு வருவதற்கு இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார் கொத்ருடில் இருக்கும் நியாயவிலைக் கடைக்காரரான கந்திலால் தங்கி.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், ஷாஸ்திரி நகரிலிருந்து பல பெண்கள் மானிய விலை உணவுப் பொருட்களையும் இலவச உணவுப் பொருட்களையும் நம்பியிருந்தனர். கிடைக்கும் குறைந்த வருமானத்தில் சில்லறை விலை அவர்களுக்கு கட்டுபடியாகாது. நியாயவிலைக் கடையிலிருந்து தொடர்ந்து திரும்ப அனுப்பப்படுவதை எதிர்த்து கொத்ருட்டில் இருக்கும் எரண்ட்வானே பகுதி நியாயவிலைக் கடைக்கு முன் போராடுவதென பெண்கள் குழு ஒன்று முடிவெடுத்தது. ஏப்ரல் 13ம் தேதி குடும்ப அட்டைகளுடன் கடைக்கு முன் கூடி உணவுப்பொருட்களை கேட்டு போராடினர்.

நேரு காலனியில் வசிக்கும் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி பவார் கோபத்துடன் பேசுகிறார்: “என்னுடைய கணவரால் ரிக்‌ஷாவும் (ஊரடங்கினால்) ஓட்ட முடியவில்லை. ஒரு வருமானமும் எங்களுக்கு இல்லை. நான் வேலை பார்க்கும் வீட்டில் சம்பளமும் கொடுக்கவில்லை. நாங்கள் என்ன செய்வது? எங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை.”

PHOTO • Jitendra Maid
PHOTO • Jitendra Maid

கயாபாய் சவன் (இடது) மற்றும் அல்கா தாகே ஆகியோர் கடைக்காரர்களால் அவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாது என சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

ஏன் மக்கள் திரும்ப அனுப்பப்படுகின்றனர் என கொத்ருடில் இருக்கும் நியாயவிலைக் கடை உரிமையாளரான சுனில் லோக்கண்டேவிடம் கேட்டபோது, “விதிமுறைகளின்படி நாங்கள் உணவுப்பொருட்களை வழங்குகிறோம். உணவுப்பொருட்கள் எங்களை வந்தடைகையில் நாங்கள் விநியோகிக்கிறோம். நீண்ட வரிசைகளால் சிலருக்கு பிரச்சினை இருக்கிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார்.

“ஒவ்வொரு நியாயவிலைக்கடைக்கும் தேவையான கொள்ளளவு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது,” என தொலைபேசியில் என்னிடம் கூறினார் புனேவின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வு பாதுகாப்பு அதிகாரியான ரமேஷ் சொனவானே. “ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு கிடைக்க வேண்டிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மக்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்,” எனவும் கூறினார்.

ஏப்ரல் 23ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் மகாராஷ்டிராவின் உணவு வழங்கல் துறை அமைச்சர் சகன் புஜ்பால் உணவு தானிய விநியோகத்தில் இருக்கும் முறைகேட்டை பேசியிருக்கிறார். இது போன்ற முறைகேடுகளை செய்து ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காத கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மகாராஷ்டிராவில் 39 கடைக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 48 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

அடுத்தநாள், அரிசியும் கோதுமையும் காவி நிற குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்கள்) வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களின் மஞ்சள் நிற அட்டைகளுக்கும், எக்காரணத்தாலும் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மானிய விலையில் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும் என மாநில அரசு அறிவித்தது.

ஏப்ரல் 30ம் தேதி தன்னுடைய மஞ்சள் நிற குடும்ப அட்டையில் இரண்டு கிலோ அரிசியையும் மூன்று கிலோ கோதுமையையும் நியாயவிலைக் கடையில் வாங்கிக் கொண்டார் அல்கா. மே மாத முதல் வாரத்தில், கயாபாய் 32 கிலோ கோதுமையையும் 16 கிலோ அரிசியையும் தன் குடும்பத்துக்கு வாங்கிக் கொண்டார்.

எந்த அரசின் திட்டத்தால் இந்த நிவாரணம் கிடைத்தது என்பதும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்பதும் கயாபாய்க்கும் அல்காவுக்கும் தெரிந்திருக்கவில்லை

தமிழில்: ராஜசங்கீதன்

Jitendra Maid

جتیندر میڈ ایک آزاد صحافی ہیں جو زبانی روایتوں کا مطالعہ کرتے ہیں۔ وہ کئی سال پہلے پونہ کے سنٹر فار کوآپریٹو ریسرچ اِن سوشل سائنسز میں گائی پوئیٹیون اور ہیما رائیرکر کے ساتھ ریسرچ کوآرڈِنیٹر کے طور پر کام کر چکے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jitendra Maid
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan