“இன்று நான் சேகரித்தவற்றை பிரித்து வைத்துவிட்டேன். காயலான் கடைக்காரர்கள் இவற்றை எடுத்து, எடை பார்த்து எனக்கு பணம் கொடுப்பார்கள்,” என்கிறார் கலுதாஸ் மிச்ச காகிதங்களை பையில் வைத்துக் கொண்டே. பிறகு வண்டி கிடைத்தால் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவேன்.”

பல மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் மாத தொடக்கத்தில் 60 வயது தாஸ் ஹசன்பூர் கிராமத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொல்கத்தாவுக்கு பயணிக்கிறார். ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பேருந்து எடுத்து பயணிக்கிறார் ஒரு வெள்ளை சாக்கை தோளில் மாட்டிக் கொண்டு.

தெற்கு மற்றும் கிழக்கு கொல்கத்தாவில் கடந்த 25 வருடங்களாக குப்பை சேகரிக்கும் வேலை செய்கிறார் தாஸ். இந்த வேலைக்கு முன் அவர் திரைப்பட விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்தார். “நெப்ட்யூன் திரைப்பட நிறுவனத்துக்கு படச்சுருள் கொண்டு போய் கொடுக்கும் வேலை பார்த்தேன்,” என்கிறார் அவர். “பம்பாய், தில்லி மற்றும் மெட்ராஸ் ஆகிய இடங்களிலிருந்து சுருள்கள் (35 எம்எம்) வரும். பெரிய பெட்டிகளில் வரும் சுருள்களை ஹவ்ராவுக்கு கொண்டு சென்று எடை பார்த்து பின் விநியோகத்துக்கு கொடுப்பேன்.”

நிறுவனம் மூடப்பட்டதும் தாஸ் வேலையிழந்தார். அச்சமயத்தில் அவர் தெற்கு கொல்கத்தாவின் போஸ்புகுரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்தான் அவருக்கு காயலான் தொழிலை அறிமுகப்படுத்தினார். “வேலை பறிபோனதும், அவர் வேலையில் என்னையும் சேர்ந்து கொள்ள சொன்னார். அவர் என்னிடம், ‘ஒரு நாளைக்கு 25 ரூபாய் கொடுக்கிறேன். காலை 8 மணிக்கு சென்று மதியம் திரும்பி விடலாம். பொருட்களை சுமந்து என்னுடன் அலைய வேண்டும். நாம் ஒன்றாக டீ குடிக்கலாம்’, என்றார். நானும் ஒப்புக் கொண்டேன். அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஆசிரியர் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை போல் கற்றுக் கொடுத்தார். அவர்தான் எனக்கு குரு.”

Kalu Das resumed his recycling rounds at the end of August, but business has been bad: 'In times of corona, people are not keeping many items'
PHOTO • Puja Bhattacharjee
Kalu Das resumed his recycling rounds at the end of August, but business has been bad: 'In times of corona, people are not keeping many items'
PHOTO • Puja Bhattacharjee

பல வருடங்களுக்கு முன் தாஸ் அவரின் ஆசிரியரை கவனித்து காகிதம், குடுவை, இரும்பு போன்றவற்றுக்கு விலை எப்படி கணிப்பதென கற்றுக் கொண்டார்

தாஸ் அவரின் ஆசிரியரை கவனித்து காகிதம், ப்ளாஸ்டிக், கண்ணாடி குடுவை, இரும்பு முதலிய பொருட்களின் விலையை எப்படி கணிப்பது என கற்றுக் கொண்டார். “150 கிராம், 200 கிராம், 250 கிராம் மற்றும் 500 கிராம் என்ன விலை என்பதையும் பொருட்கள் பிரிக்கவும் கற்றுக் கொண்டேன்.” இருபது வருடங்களுக்கு முன் அவர் இந்த வேலை தொடங்கிய போது நல்ல வியாபாரம் இருந்ததென சொல்கிறார்.

1971ம் ஆண்டு வங்க தேசத்திலிருந்த வன்முறைகளால் அங்கிருந்து தப்பி வந்தவர் தாஸ். அங்கு அவரின் குடும்பத்துக்கென விவசாய நிலம் இருக்கிறது. “கலவரம் மற்றும் சண்டை ஆகியவற்றால் நான் கிளம்பினேன்,” என்கிறார். அவரின் சகோதரரான நரேந்திரா அச்சமயத்தில் வடக்கு 24 பர்கனாஸ்ஸில் வாழ்ந்து வந்தார். கலு அவருடன் தங்கி சில நாட்களுக்கு ஒரு கொத்தனாரிடம் வேலை பார்த்தார். கொஞ்ச காலத்தில் இந்திய அரசிடமிருந்து வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை முதலிய எல்லா ஒப்புதல்களும் ஆவணங்களும் கிடைத்துவிட்டதாக சொல்கிறார்.

ஊரடங்குக்கு முன் வரை, ஹசன்பூர் கிராமத்திலிருந்து கொல்கத்தாவுக்கு வாரத்தில் நான்கு முறை தாஸ் சென்று குப்பை பொருட்களை சேகரித்தார். கட்டடங்களுக்கு சென்றார். குப்பங்களில் ஒரு நாளுக்கு நான்கைந்து மணி நேரங்கள் அலைந்து மாதத்துக்கு 3000 ரூபாய் வரை சம்பாதித்தார்.

ஊரடங்கு மார்ச் மாதத்தில் தொடங்கியதும் பேருந்துகளும் உள்ளூர் ரயில்களும் இயங்குவது நின்று போனது. தாஸின் வேலையும் நின்றது. “எப்படியேனும் கொல்கத்தாவுக்கு வந்து விட நினைத்தேன்,” என்ற அவர், “ஆனால் பலர் என்னை எச்சரித்தனர். நானும் தொலைக்காட்சியில் ஊரடங்கு மீறியவர்களை போலீஸ் அடித்து விரட்டும் காட்சிகளை பார்த்தேன்,” என்றார்.

The total fare from and to his village, as well as the cycle rickshaw to the scrap dealers, cost roughly Rs. 150, and he makes barely any profit –'just 2-4 rupees'
PHOTO • Puja Bhattacharjee
The total fare from and to his village, as well as the cycle rickshaw to the scrap dealers, cost roughly Rs. 150, and he makes barely any profit –'just 2-4 rupees'
PHOTO • Puja Bhattacharjee

கிராமத்திலிருந்து போய் வரவும் காயலான் பொருட்களை ரிக்‌ஷாவில் கொண்டு போகவும் ஆகும் செலவு 150 ரூபாய். கைக்கு லாபமென மிஞ்சுவது 2-4 ரூபாய்தான்

தாஸ்ஸின் மனைவி தெற்கு கொல்கத்தாவின் ஜதவ்பூர் பகுதியில் முழு நேர வீட்டுப் பணியாளராக வேலை பார்க்கிறார். கிராமத்திலிருந்து கிளம்புவதற்கு முன் 18, 16, 12 வயது பேரன்களை தாத்தாவுடன் இருக்கச் சொல்லி வேண்டிக் கொண்டார். “அவர்களிடம், ‘உங்கள் தாத்தா வயதானவர். தனியாக இருக்கிறார்,” என அவர் சொன்னார்,” என்கிறார் தாஸ். அவருடைய 7000 ரூபாய் வருமானத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்து ஊரடங்கு காலத்தை சமாளித்தார் தாஸ்.

“ஊரடங்கு முழுக்க என் மனைவி வேலை பார்க்க வேண்டும். இல்லையெனில் வெறும் 1000 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி நாங்கள் வாடகையையும் பிற செலவுகளையும் சமாளிப்பது?” எனக் கேட்கிறார். ஒவ்வொரு மாதமும் இரண்டு மூன்று நாட்கள் கிராமத்துக்கு வருகிறார் மீரா. “பேரன்களை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அவர்களை பார்க்க ஏங்கி அவர் அழுவார். வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்காக உணவு சமைத்துக் கொடுப்பார்,” என்கிறார் தாஸ். அவர்களின் மூத்த பேரன் மின்சாரப் பழுது சரி செய்யும் வேலை பார்க்கிறான். ஊரடங்கு நேரத்தில் அவனுக்கு எந்த வேலையும் வரவில்லை. இளைய பேரன் பள்ளி படிக்கிறான். இரண்டாம் பேரனுக்கு வேலை இல்லை.

ஆனால் மீராவுக்கு சீக்கிரமே வேலை பறிபோகவிருக்கிறது. “அதிக நாட்களுக்கு அவரை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள்,” என்கிறார் தாஸ். “அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். “அவருக்கு வேலை கொடுத்திருப்பவர்களால் அதிக நாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது.”

ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில், தாஸ் குப்பை சேகரிக்கும் வேலையை மீண்டும் தொடங்கினார். வியாபாரம் மோசமாக இருந்தது. “கொரோனா காலத்தில் மக்கள் நிறைய பொருட்களை வைத்துக் கொள்வதில்லை. தூக்கி எறிந்து விடுகிறார்கள்,” எனச் சொல்லியபடி தூக்கி வீசப்பட்ட ஒரு மிக்ஸியின் அடிபாகத்தை எடுக்கிறார்.

Decades ago, Das observed his teacher and learned how to calculate the price of each item – paper, plastic, glass bottles, iron and other metals:
PHOTO • Puja Bhattacharjee
Decades ago, Das observed his teacher and learned how to calculate the price of each item – paper, plastic, glass bottles, iron and other metals:
PHOTO • Puja Bhattacharjee

கலு தாஸ் ஆகஸ்டு மாத இறுதியில் வேலையைத் தொடங்கி விட்டார். ஆனால் வணிகம் மோசமாக இருக்கிறது

தாஸ் செல்லும் வீடுகளில் செய்தித்தாள் உள்ளிட்ட காகிதங்களை கிலோ ஒரு ரூபாய் என வாங்குகிறார். காயலான் கடைகளில் கிலோ 9 அல்லது 9.50 ரூபாய்க்கு விற்கிறார். சில ப்ளாஸ்டிக் பாட்டில்களுக்கு 2-4 ரூபாய் வரை கொடுக்கிறார். “ப்ளாஸ்டிக் பாட்டில்களின் விலை குறைந்துவிட்டது,” என்கிறார் அவர். “காயலான் கடைக்கு செல்ல ஒரு ரிக்‌ஷாவை நான் வாடகைக்கு எடுக்க வேண்டும். சிலர் சொந்தமாக தள்ளு வண்டி வைத்திருக்கிறார்கள். அவர்கள் பாட்டில்களுக்கு இன்னும் அதிக பணம் கூட கொடுப்பார்கள்.”

தாஸ் சேகரிக்கும் அனைத்தையும் ஒரு பெரிய மூங்கில் கூடையில் போடுகிறார். 20 கிலோ வரை அவரால் தலையில் சுமக்க முடியும். அருகே இருக்கும் ரத்டலா பகுதியிலிருக்கும் காயலான் கடைக்கு செல்ல ஒரு ரிக்ஷாவை வாடகைக்கு எடுக்கிறார். கிராமத்திலிருந்து வரவும் போகவும் பிறகு ரிக்‌ஷாவில் செல்லவும் என மொத்தமாக 150 ரூபாய் ஆகிவிடுகிறது. ”கைக்கு லாபமென மிஞ்சுவது 2-4 ரூபாய்கள் மட்டுமே,” என வட்டார வழக்கில் 80லிருந்து 200 ரூபாய் பணத்தை குறிப்பிடுகிறார். கொல்கத்தாவுக்கு சென்று சேகரித்து பின் விற்று வரும் பணத்தில் பயணச்செலவை கழித்து சொல்கிறார்.

“நான் வேலை பார்க்கத் தொடங்கியபோது என் குடும்பத்தில் எவரும் வேலை பார்க்கவில்லை. இந்த வேலை எங்களுக்கு சாப்பாடு போட்டது. இங்கேயே கொல்கத்தாவில் (போசெக்பூரில்) தங்கியிருப்பது சுலபம் கிடையாது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு மகன்கள், ஒரு மகள். அவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்கள். பிறகு என் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்.” மூத்த மகன் தரக் கொஞ்ச காலத்துக்கு முன் இறந்துவிட்டதாக சொல்கிறார் கலு தாஸ். அவரின் மகள் பூர்ணிமாவுக்கு வயது 30. இளைய மகன் நருவுக்கு வயது 27. இருவரின் வேலையையும் குறிப்பிடும்போது ‘யாருக்கோ உதவுவார்கள்’ எனச் சொல்கிறார் அவர்.

இந்த சூழலில், வேறு வேலை தேடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறார் தாஸ். “என்னால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த வயதில் யாராவது எனக்கு வேலை கொடுப்பார்களா?”

இப்போது வாரநாட்களில் வீட்டிலேயே தங்கி விடுகிறார். அவ்வப்போது அருகே இருக்கும் நரு வீட்டுக்கு செல்கிறார். “கொரோனாவை பற்றி நான் யோசிக்கவில்லை. ஒருவர் வேலை பார்த்தால், அவருக்கு ஓய்வு இருக்காது. வேலைக்கு போகாமல் வீட்டிலேயே நான் இருந்தால், நோயை பற்றிய பயம் வந்துவிடும். தைரியம் வேண்டும்,” என்கிறார் அவர் முகக்கவசத்தை சரி செய்து கொண்டே.

தமிழில்: ராஜசங்கீதன்

Puja Bhattacharjee

پوجا بھٹاچارجی کولکاتا میں مقیم ایک آزاد صحافی ہیں۔ وہ سیاست، عوامی پالیسی، صحت، سائنس، فن اور ثقافت پر رپورٹ کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Puja Bhattacharjee
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan