சிறிய மூங்கில் குடிலுக்குள் இருக்கும் ஒரு குறுகலான படுக்கையில் மோகினி கவுர் தைக்க வேண்டியத் துணிகள் குவிந்திருந்தன. “நன்றாகவெல்லாம் தைக்க எனக்குத் தெரியாது. முடிந்தவற்றை தைத்துக் கொடுக்கிறேன்,” என்கிறார் புது தில்லியின் ஸ்வரூப் நகரைச் சேர்ந்த 61 வயது மோகினி கவுர். நவம்பர் 2020-ல் சிங்கு போராட்டக் களத்துக்கு அவர் வந்தார். “போராடும் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக நான் இங்கு வந்தேன். அவர்கள் நமக்காக உணவு விளைவிக்கின்றனர். அவர்களுக்கென நான் இந்த விஷயங்களைச் செய்கிறேன்,” என்கிறார் அவர். மோகினி ஒருமுறை கூட வீட்டுக்குச் செல்லவில்லை. டிசம்பர் 9, 2021 அன்று விவசாயச் சங்கங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறும் வரை அவர் திரும்பிச் செல்லவே இல்லை.

தன்னார்வலராக அவர் சிங்கு போராட்டக் களத்தில் பணிபுரியும் செய்தி பஞ்சாபி செய்தித்தாள் அஜித்தில் வெளியானதைப் படித்து ஈர்க்கப்பட்ட ஒரு வாசகர் மோகினிக்கு உதவ முன் வந்தார். இந்த வருட ஜூலை மாதத்தில் 22 வயது ஹர்ஜீத் சிங் என்ற இளைஞர், மோகினி பார்க்கும் வேலையில் இணைந்து கொண்டார்.

ஹர்ஜீத்திக்கு சொந்தமாக பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் ஒரு தையற்கடை இருக்கிறது. அவரது தந்தை ஒரு விவசாயி. நெல், கோதுமை மற்றும் சோளம் ஆகியவற்றை நான்கு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறார். “என்னுடைய கடையை இரண்டுப் பணியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு மோகினி அம்மாவுக்கு உதவ ஜூலை மாதம் இங்கு வந்தேன். ஏகப்பட்ட வேலை இங்கு இருக்கிறது. அவரால் தனியாக இவற்றைச் செய்ய முடியாது.”

படுக்கை மற்றும் மேஜையை தவிர்த்து, இரண்டு தையல் இயந்திரங்களும் ஒரு டேபிள் ஃபேனும் குடிலின் மிச்ச இடத்தை நிரப்பியிருக்கின்றன. நடப்பதற்குக் கூட இடமில்லை. தரையில் பால் காய்ச்சவென ஒரு சிறு கேஸ் ஸ்டவ் வைத்திருக்கிறார். ஹர்ஜீத் அல்லது மோகினியிடம் பேச ஒரே ஒருவரால் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும். அந்த அளவுக்குதான் இடம் இருந்தது. வாடிக்கையாளர்களான விவசாயிகளும் போராட்டக் களத்தின் பிற மக்களும் வாசலிலேயேதான் நிற்கிறார்கள்.

The bamboo shed at Singhu, where Mohini Kaur set up her tailoring unit.
PHOTO • Namita Waikar
Harjeet Singh (left) and Mohini at their worktable
PHOTO • Namita Waikar

இடது: போராட்டக்களத்தில் மோகினி கவுர் பணிபுரியும் மூங்கில் குடில். வலது: ஹர்ஜீத் சிங் (இடது) மற்றும் மோகினி

பணி மேஜையின் ஒரு ஓரத்தில் புதுத் துணிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. “இது பருத்தித் துணியாகும். விலையும் சந்தை விலைதான். செயற்கை இழையிலான துணிகளை நான் வைத்திருப்பதில்லை,” எனக் குறிப்பிட்ட ஒரு துணியைப் பற்றி விசாரிக்கும் ஒருவரிடம் கூறுகிறார் மோகினி. “ஒரு மீட்டருக்கு 100 ரூபாய் ஆகும்.” துணிக்கான விலையை மட்டும் கட்டணமாக பெற்றார். அவரின் உழைப்பு இலவசம்.அவரது தையலுக்கென விரும்பி ஏதேனும் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்.

1987ம் ஆண்டு பெங்களூருவில் செவிலியர் பயிற்சி பெற்றவர் மோகினி. தாயாகும் வரை சில வருடங்களுக்கு அவர் செவிலியராக பணிபுரிந்தார். அவரின் கணவர் 2011-ல் இறந்துவிட்டார். இப்போது தனியாகதான் இருக்கிறார். அவரது மகளுக்கு திருமணமாகி தென்மேற்கு தில்லிப் பகுதியில் வசிக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன் 20 வயதுகளில் இருந்த மகனை அம்மை நோய்க்கு பறிகொடுத்தார் மோகினி. “மகனை இழந்தத் துயரை கையாளுவது சுலபமான விஷயம் இல்லை. எனவே விவசாயிகளுக்கு உதவி செய்யலாம் என முடிவெடுத்தேன். நான் தொடர்ந்து வேலை செய்ய இது ஊக்குவிக்கிறது. தனிமையுணர்வில் சிக்குவதில்லை.” ஹர்ஜீத் அவரை ‘அம்மா’ என அழைக்கிறார். ”இப்போது நான்தான் அவருக்கு மகன்,” என்கிறார் அவர்.

நவம்பர் 26ம் தேதி, சிங்குப் போராட்டக் கள மேடையில் பிரார்த்தனைகளும் பேச்சுகளும் பாடல்களும் விவசாயப் போராட்டத்தின் ஓராண்டு நினைவைக் கொண்டாடக் கூடியிருந்த பெண் மற்றும் ஆண் விவசாயிகளின் கைதட்டல்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஆனால் மோகினியும் ஹர்ஜீத்தும் அளவு எடுத்து, வெட்டி, தையல் இயந்திரத்தை ஓட்டும் தங்களின் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உணவுக்கும் இரவு உறங்கவும் மட்டும் அவர்கள் இடைவேளை எடுக்கிறார்கள். மோகினி கொட்டகையிலும் ஹர்ஜீத் சற்று தூரத்தில் இருக்கும் ட்ராக்டரின் ட்ராலியிலும் உறங்குகிறார்கள்.

உணவுக்கும் இரவு உறங்கவும் மட்டும் அவர்கள் இடைவேளை எடுக்கிறார்கள். மோகினி கொட்டகையிலும் ஹர்ஜீத் சற்று தூரத்தில் இருக்கும் ட்ராக்டரின் ட்ராலியிலும் உறங்குகிறார்கள்

காணொளி: விவசாயிகளுக்கு சேவை செய்யும் பெரிய இதயங்களும் நிலையானக் கரங்களும்

விவசாயிகள் போராட்டக் களத்தில் இருக்கும் வரை தையல் சேவையை மோகினியும் ஹர்ஜீத்தும் தொடர விரும்பினார்கள். அப்படியே தொடரவும் செய்தார்கள். “எவ்வளவு சேவை செய்தாலும் மனதை திருப்திப்படுத்தாது,” என்கிறார் மோகினி.

விவசாயப் போராட்டங்கள் தொடங்கிய 378ம் நாளான டிசம்பர் 9, 2021 அன்று விவசாயிகள் போராட்டக் களத்திலிருந்து  கிளம்பிச் செல்லலாமென சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் அறிவித்தனர். ஜூன் 5, 2020 அன்று அவசரச் சட்டங்களாக கொண்டு வரப்பட்டு, செப்டம்பர் 14ம் தேதி விவசாய மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு,  அவசர அவசரமாக செப்டம்பர் 20, 2020 அன்று சட்டங்களான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் போராட்டக் களங்களில் விவசாயிகள் கூடினர்.

எத்தனை வேகத்தில் நிறைவேற்றப்பட்டதோ அதே வேகத்தில் நவம்பர் 29, 2021 அன்று நாடாளுமன்றத்தில் அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே அச்சட்டங்கள்.

விவசாயிகளின் பெரும்பான்மையான கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டிசம்பர் 9, 2021 அன்று விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.குறைந்தபட்ச ஆதார விலைக்கான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அவை சொல்லியிருக்கின்றன.

Mohini Kaur came to the Singhu protest site in November 2020 and volunteered to stitch and mend the protesting farmers' clothes. "They grow food for us, this was something I could do for them," she says
PHOTO • Namita Waikar

மோகினி கவுர் நவம்பர் 2020-ல் சிங்குவுக்கு வந்தார். விவசாயிகளின் துணிகளை தைக்கும் தன்னார்வலரானார். “நமக்காக உணவு விளைவிப்பவர்களுக்கு என்னால் செய்ய முடிந்த விஷயம் இது,” என்கிறார் அவர்

சிங்குவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திக்ரி போராட்டக் களம் இருக்கிறது. அங்கு டாக்டர் சாக்‌ஷி பன்னு, காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வாரம் முழுக்க சுகாதார மையத்தை நடத்திக் கொண்டிருந்தார். “ஒவ்வொரு நாளும் 100 நோயாளிகளுக்கும் மேலான எண்ணிக்கையில் இங்கு வருவார்கள். குளிருக்கும் காய்ச்சலுக்கும்தான் அதிகமாக மருந்துகள் கேட்பார்கள். சிலருக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருக்கும். இங்கேயே போராட்டக் களத்திலேயே இருப்பதால் பலருக்கு வயிற்று உபாதைகளும் ஏற்படும்,” என்கிறார் அவர்.

நவம்பரில் சாக்‌ஷியை சந்தித்தபோது நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை மையத்துக்குள் வந்து கொண்டிருந்தனர். இருமல் மருந்து தீர்ந்து போயிருந்ததால் நோயாளியை அடுத்த நாள் வந்து வாங்கச் சொல்லிக் கொண்டிருந்தார். மையத்துக்கான மருந்துகளையும் உபகரணத்தையும் ஹரியானாவின் தொண்டு நிறுவனமான உஸ்மா பைதக் அளித்திருக்கிறது.

இன்னும் அதிக நேரத்துக்கு  சிகிச்சை மையத்தைத் திறந்து வைக்க விருப்பம் இருப்பதாக சொல்லும் சாக்‌ஷி, “எனினும் வீட்டிலிருக்கும் என்னுடைய 18 மாத மகன் வாஸ்திக்குடன் நான் நேரம் கழிக்க வேண்டியிருக்கிறது. அவனையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” மையத்தில் அவர் இருக்கும்போது, போராட்டங்களை ஆதரிக்கும் அவரின் கணவர் வீட்டார், பேரக் குழந்தையை போராட்டக் களத்தில் நடக்கும் பிரார்த்தனைகள் மற்றும் சந்திப்புகள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வார்கள். இந்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்து சாக்‌ஷி இந்த தன்னார்வச் சேவையை செய்து வருகிறார்.

அவரின் தாத்தா ஜம்முவில் விவசாயியாக இருக்கிறார். அவரது கணவர் வீட்டார் ஹரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். “ கிராமத்து வேர்களுடன் நாங்கள் இன்னும் இணைந்துதான் இருக்கிறோம். விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர்களின் போராட்டங்களையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்,” என்கிறார் சாக்‌ஷி.

The free health clinic (left) that was set up for  farmers camping at the Tikri border site. Dr. Sakshi Pannu (in the pink dress) ran it every day since April
PHOTO • Namita Waikar
The free health clinic (left) that was set up for  farmers camping at the Tikri border site. Dr. Sakshi Pannu (in the pink dress) ran it every day since April
PHOTO • Amir Malik

திக்ரி போராட்டக் களத்தின் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இலவச சுகாதார மையம் (இடது). டாக்டர் சாக்‌ஷி பன்னு (இளஞ்சிவப்பு உடையில் இருப்பவர்) மையத்தை ஏப்ரல் மாதத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்

திக்ரி போராட்டக் களத்திலிருந்து கணவர் அமித், மகன் வஸ்திக், மற்றும் கணவரின் பெற்றோர் ஆகியோருடன் சாக்‌ஷி வசிக்கும் வீடு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஹரியானாவின் பகதுர்கர் டவுனில் இருக்கிறது. புது தில்லியின் மருத்துவக் கல்லூரியில் 2018ம் ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரியின் மருத்துவமனையிலேயே ஒரு வருடம் பணிபுரிந்தார். தற்போது ஒரு இடைவேளை எடுத்திருக்கிறார். மகன் சற்று வளர்ந்தபிறகு பொது மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படிக்கும் நம்பிக்கையில் இருக்கிறார்.

“பொது மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென எப்போதும் நான் விரும்பியிருக்கிறேன்,” என்கிறார் சாக்‌ஷி. “எனவே விவசாயிகள் இங்கு வந்து கூடியபோது, இந்த மையத்துக்கு வந்து மருத்துவராக சேவை செய்ய முடிவெடுத்தேன். விவசாயிகள் போராட்டக் களத்தில் இருக்கும் வரை இந்த வேலையை நான் தொடருவேன்.”

விவசாயிகள் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்குக் கிளம்புவதைப் பார்த்துக் களிப்புடன் மோகினி, “நாங்கள் ஜெயித்து விட்டோம்,” என்கிறார். சந்தோஷத்துடன் உணர்ச்சிவசப்பட்டு சாக்‌ஷி, “(விவசாயிகளின்) ஒரு வருட கடின உழைப்பு கனிந்திருக்கிறது,” என்கிறார். அவரது சேவையுணர்வு இன்னும் வலிமையாகவே இருக்கிறது. “கடைசி விவசாயி கிளம்பும் வரை நான் இங்கேயேதான் இருப்பேன்,” என்கிறார்.

கட்டுரையில் உதவிய அமிர் மாலிக்குக்கு நன்றி சொல்ல விரும்புகிறார் கட்டுரையாளர்

தமிழில் : ராஜசங்கீதன்

نمیتا وائکر ایک مصنفہ، مترجم اور پاری کی منیجنگ ایڈیٹر ہیں۔ ان کا ناول، دی لانگ مارچ، ۲۰۱۸ میں شائع ہو چکا ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز نمیتا وائکر
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan