“எங்களை இங்கு அழைத்து வந்தவர்களுக்கு சமைத்து கொண்டிருக்கிறேன். என் கணவர் செங்கல் தயாரிப்பதற்கு உதவி செய்கிறார்” எனக் கூறும் ஊர்வசியை, ஹைதராபாத்தில் உள்ள செங்கல் சூளையில் நாங்கள் பார்த்தோம்.

தேகு தருவா, 61 மற்றும் ஊர்வசி தருவா, 58, இருவரையும் செங்கல் சூளையில் பார்த்தபோது நாங்கள் ஆச்சர்யமடைந்தோம். இந்த தம்பதிகள் மேற்கு ஒடிஸாவின் போலாங்கிர் மாவட்டத்திலுள்ள பரிஜோர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இது இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும்.

மேற்கு ஒடிஸாவில் – இங்குதான் இருபது வருடங்களுக்கும் மேலாக நான் செய்தி சேகரித்து வருகிறேன் - உள்ள மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்து வருகின்றனர். பட்டினிச் சாவு மற்றும் வறுமையாலும் கடன் தொல்லையாலும் குழந்தையை விற்பதற்கும் இப்பகுதி பிரச்சித்தமானது என மோசமான பெயரைப் பெற்றுள்ளது.

1966-67 களில் ஏற்பட்ட பஞ்சம் புலம்பெயர்விற்கு வித்திட்டது. 90-களில் களஹந்தி, நுபடா, போலாங்கிர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் ஏற்பட்ட பஞ்சம் மீண்டும் புலம்பெயர்விற்கு காரணமாக அமைந்தது. அந்த சமயத்தில், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் வேலை தேடி வேறு மாநிலத்திற்கு சென்றார்கள் என்பதையும் வயதானவர்கள் கிராமத்திலேயே இருந்து விட்டார்கள் என்பதையும் நாங்கள் கவனித்தோம்.

PHOTO • Purusottam Thakur

ஹைதராபாத் செங்கல் சூளையில் பணிபுரியும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் (இடது), தேகு தருவா மற்றும் அவரது மனைவி ஊர்வசியை விட மிகவும் இளையவர்கள்

“இவர்கள் வெளியேறியதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்திலிருந்து வெளியேறியவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். செங்கல் சூளையில் (இங்குதான் பல புலம்பெயர்ந்தோர்கள் பணிபுரிகிறார்கள்) இரவு பகலாக வேலை இருக்கும். வயதானவர்களால் அங்கு கடுமையாக வேலை பார்க்க முடியாது. ஆகையால் எந்த (செங்கல் சூளை) முதலாளியும் (வயதான தொழிலாளர்களுக்கு) முன்பணம் கொடுக்க மாட்டார்கள். குழந்தைகள் தனியாக விட்டுச் சென்றுவிடுவதால், ரேஷன் பொருட்கள் வாங்கவும் வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் இவர்கள் அங்கேயே இருந்து விடுகின்றனர். இப்படி கவனிக்க யாரும் இல்லாத வயதானவர்கள், அங்கேயே இருந்து சிரமத்திற்கு உள்ளாவதாக” கூறுகிறார் வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளரும், பல வருடங்களாக புலம்பெயர்வை கவனித்து வருபவருமான பிஷ்னு ஷர்மா. இவர் ஒடிஸாவின் போலாங்கிர் மாவட்டத்திலுள்ள கண்டாபாஞ்சியைச் சேர்ந்தவர். கண்டாபாஞ்சி முக்கியமான ரயில் நிலையம் என்பதால், இங்கிருந்துதான் தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைகள் உள்பட பல ஊர்களுக்கு மக்கள் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.

1966-2000 வரையிலான காலகட்டத்தில் நிலவிய மோசமான சூழல் ஓரளவிற்கு தற்போது மேம்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கணவரை இழந்தவர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களே. அதுவும் இந்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் பசியால் இறந்துவிட்டதாக எந்த செய்தியும் வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆகஸ்ட் 2008-ல் ஒடிஸா அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம். 2013-ல் இது 1 ரூபாயாக குறைக்கப்பட்டது (ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி)

ஊர்வசியும் தேகு தருவாவும் ஹைதராபாத் வந்து செங்கல் சூளையில் பணிபுரிய நேர்ந்ததற்கு காரணம் என்ன? துயரமான காலகட்டங்களில் கூட இவர் வயதையொத்த முதியவர்கள் கடும் உழைப்பைக் கோரும் இதுபோன்ற வேலைக்காக புலம் பெயரவில்லையே?

PHOTO • Purusottam Thakur

செங்கல் சூளையில் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாலும் மோசமான உடல்நிலை காரணமாகவும் ஒடிஸாவின் போலாங்கிர் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்வது என்று தாங்கள் எடுத்த முடிவை நினைத்து வருந்துகின்றனர் தருவாக்கள்

ஊர்வசி கூறுகையில், “எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்போது நாங்கள் தனியாக இருக்கிறோம்… நாங்கள் குறு விவசாயிகள் (பருத்தி அல்லது நெல் விளைவிக்கிறோம். ஆனால் இந்த வருடம் விளைச்சல் மோசமாகவே இருந்தது). எங்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை….”

“இளம் வயதில் இந்த செங்கல் சூளைக்கு நாங்கள் இரண்டு முறை வந்துள்ளோம். இப்போது எங்கள் சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி இங்கு மறுபடியும் வந்துள்ளோம். முன்பு செங்கல் சூளைக்கு வேலை செய்ய வரும்போது, பெரும்பாலும் 500-1000 ரூபாய் முன்பணமாக எங்களுக்கு கொடுப்பார்கள். இப்போது ஒரு நபருக்கு முன்பணமாக ரூ. 20,000 அல்லது அதற்கும் மேல் கொடுக்கிறார்கள். தன்னை இங்கு சூளைக்கு அழைத்து வந்த என்னுடைய உறவினர் முதலாளியிடம் ரூ. 20,000 வாங்கிக் கொண்டு என்னிடம் ரூ. 10,000 மட்டுமே கொடுத்தார்” எனக் கூறுகிறார் தேகு.

வழக்கமாக ஐந்து முதல் ஆறு மாத கால பணிகளுக்கு முன்பணம் வழங்கப்படும். கிராமத்தில் உள்ளோர் அறுவடை முடிந்த பிறகு சூளைக்கு வருவார்கள் (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்). ஜூன் மாதவாக்கில் பருவமழை தொடங்கும் முன்பு இங்கிருந்து ஊருக்கு திரும்பி விடுவார்கள்.

“இங்கு வேலை மிகவும் சிரமமாக இருந்ததால், வாங்கிய முன்பணத்தை ஒப்பந்ததாரரிடம் கொடுத்துவிட்டு மறுபடியும் எங்கள் கிராமத்திற்கு செல்ல விரும்பினேன். ஆனால் செங்கல் சூளை முதலாளி எனது வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார். எனக்குப் பதிலாக வேறு ஒரு நபரை அழைத்து வருமாறு கூறுகிறார். இன்னொருவருக்கு நான் எங்குச் செல்வேன்? அதனால் நாங்கள் இங்கிருந்து சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம்” என்கிறார் தேகு.

PHOTO • Purusottam Thakur

தொழிலாளர்கள் வசிக்கும் தற்காலிக குடியிருப்புகள். வருடத்தில் ஆறு மாதங்கள் பணிபுரிவதற்கான முன்பணம் வாங்கியுள்ளதால் பலர் இங்கு சிக்கி தவிக்கின்றனர்

எங்களிடம் பேசியபடியே, செங்கலை உலர வைக்கும் தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர்களுக்கு உதவி செய்கிறார் தேகு. சூளைக்கு அருகில் தொழிலாளர்களுக்கு கட்டப்பட்டுள்ள தற்காலிக வீட்டின் உள்ளிருந்து அங்குள்ளோர்களுக்கு – அரிசியும் காய்கறியும் - சமைத்துக் கொண்டிருக்கிறார் ஊர்வசி. நீண்ட உரையாடலுக்குப் பிறகே தங்களது பிரச்சனைகள் குறித்து இருவரும் எங்களிடம் கூறினர்.

நாங்கள் அதன்பிறகு தெலங்கானாவில் உள்ள பல செங்கல் சூளைக்குச் சென்றோம். ஆனால் எந்த வயதான தம்பதிகளையும் நாங்கள் அங்கு பார்க்கவில்லை. “அவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். இப்போது வசமாக பொறியில் சிக்கியுள்ளார்கள் (முன்பணம் வாங்கியுள்ளதால்). இது பரிதாபத்துக்குரியது. புலம்பெயர்வின் யதார்த்தம் இதுவே என தருவாக்கள் பற்றி கூறுகிறார் சர்மா.

தமிழில்:  வி கோபி மாவடிராஜா

Purusottam Thakur

پرشوتم ٹھاکر ۲۰۱۵ کے پاری فیلو ہیں۔ وہ ایک صحافی اور دستاویزی فلم ساز ہیں۔ فی الحال، وہ عظیم پریم جی فاؤنڈیشن کے ساتھ کام کر رہے ہیں اور سماجی تبدیلی پر اسٹوری لکھتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پرشوتم ٹھاکر
Translator : V Gopi Mavadiraja

V Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

کے ذریعہ دیگر اسٹوریز V Gopi Mavadiraja