"கடந்த ஆண்டு ஒரே இரவில் எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது," என்கிறார் மஞ்சுநாத் கவுடா. "விட்டில் பூச்சிகள் பறந்து வந்து எங்கள் பழங்களை நாசம் செய்தன. ஒரு நாள் காலை, பழத்தில் யாரோ பல ஊசிகளை துளைத்தது போல் சிறிய துளைகளை நாங்கள் பார்த்தோம்.” எனவே இந்த ஆண்டு (2023), அவர் எந்த வாய்ப்பையும் எடுக்காமல், கடேனஹள்ளியில் உள்ள தனது இரண்டு ஏக்கர் மாதுளை பழத்தோட்டத்தை சுற்றி ஒரு வலை அமைத்து வருகிறார். இது நோய்கள், பறவைகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிரைப் பாதுகாக்கும் என்று 34 வயதான அவர் நம்புகிறார்.
மஞ்சுநாத் ஒவ்வொரு ஆண்டும் மருந்துகள் மற்றும் உரங்களுக்காக ரூ.2.5 லட்சம் முதலீடு செய்கிறார். ஏனெனில் பழம் எளிதில் அழியக்கூடியது என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இந்த வருடாந்திர செலவை சமாளிக்க, அவரும், அவரது மனைவியும் கடந்த ஆண்டு கடன் வாங்கினர். "இந்த ஆண்டு நாங்கள் கொஞ்சம் லாபம் ஈட்டி எல்லாவற்றையும் திருப்பிச் செலுத்துவோம் என்று நம்புகிறோம்," என்று மஞ்சுநாத்துடன் பண்ணையில் வேலை செய்து கொண்டு வீட்டு வேலைகளை நிர்வகிக்கும் அவரது மனைவி பிரியங்கா கூறுகிறார்.
சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகன் கௌடாவின் பண்ணையில் 400 மாதுளை செடிகள் பாக்டீரியா கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன (சாந்தோமோனாஸ் ஆக்சோனோபோடிஸ் பி.வி. புனிகே). "இது அனைத்து தாவரங்களுக்கும், ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்கு பரவும்," என்று அவர் கூறுகிறார். இலைகளில் பூஞ்சாணக் கொல்லிகளை தெளிப்பதே இதற்கு ஒரே தீர்வு.
மோகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிளகாய் மற்றும் சாமந்திக்கு பதிலாக மாதுளை விவசாயத்திற்கு மாறினார். "இங்கு வேலை குறைவாகவும், இலாபமும் அதிகமாக இருப்பதால் நான் மாறினேன்," என்று அவர் கூறுகிறார், ஆனால் "மாதுளையை வளர்ப்பதில் ஒரு சவால் உள்ளது" என்பதை அவர் விரைவாகவே அறிந்து கொண்டார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த மாதுளை விவசாயி சேத்தன் குமார், ரசாயன உரங்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை சுட்டிக்காட்டுகிறார். "முகக்கவசம் அணிந்திருந்தாலும் பிரச்னைதான். ரசாயனங்கள் என் கண்களுக்குள் செல்கின்றன. எனக்கு இருமல் வருகிறது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது," என்று சேத்தன் தனது சிவந்த கண்களை சுட்டிக்காட்டி கூறுகிறார். 36 வயதான அந்த விவசாயி கடந்த மூன்று ஆண்டுகளாக தனது நான்கு ஏக்கர் நிலத்தில் மாதுளையை பயிரிட்டு வருகிறார்.
ஆனால் மாதுளை விவசாயிகளிடையே போட்டி அதிகரித்து வருகிறது என்கிறார் சேத்தன். “அரை லிட்டர் உரம் போட்டால் அடுத்தவன் ஒரு லிட்டர் போடுவான். அது அப்படித்தான்" என்று விளக்குகிறார்.
செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் களைகளைப் பறிப்பதன் மூலம் மாதுளை வளர்ப்பு செயல்முறை தொடங்குகிறது. நாற்றுகள் 5-6 ஆண்டுகள் வரை பலன் தரும். மார்ச் மாதத்தில், செடிகளை அடிக்கடி வெட்ட வேண்டும், தண்ணீர் ஊற்ற வேண்டும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை உரங்கள் மற்றும் மருந்துகளை தெளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
"முன்பு நாங்கள் கோபர் [எரு] மட்டுமே பயன்படுத்தினோம். இப்போது நாங்கள் இரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டும்," என்று மஞ்சுநாத்தின் 56 வயதான தாயார் பர்வதம்மா கூறுகிறார். அவர் நாற்பது ஆண்டுகளாக பண்ணைகளில் வேலை செய்து வருகிறார். "முன்பு, பழம் மிகவும் நன்றாக இருந்தது. அதில் அனைத்து வைட்டமின்களும் இருந்தன. இப்போது அதில் எதுவுமே இல்லை. அதில் எந்த ஆற்றலும் இல்லை," என்று பழத்தின் சுவை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி அவர் கூறுகிறார். "காலநிலை நிறைய மாறிவிட்டது."
மஞ்சுநாத் தனது தாயுடன் உடன்படுகிறார், மேலும் முன்கூட்டியே பெய்த மழை தனது விளைச்சலை பாதித்ததாகக் கூறுகிறார். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் செடிகள் செழித்து வளர மழை இல்லாமல் இருப்பது அவசியம். "கடந்த மூன்று ஆண்டுகளாக, பலத்த [முன்கூட்டியே] மழை பெய்துள்ளது. அது பழங்களுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது - அது கருப்பு நிறமாக மாறுகிறது. நாங்கள் அதைப் பயன்படுத்தவோ, விற்கவோ முடியாது," என்று அவர் கூறுகிறார்.
கடந்த பருவத்தில் (2022) அவர்களுக்கு சுமார் 8 டன் (8000 கிலோகிராம்) பழங்கள் கிடைத்ததாக மஞ்சுநாத் கூறுகிறார்.
"மழையின் போக்கு மாறி வருகின்றன, கடந்த இரண்டு ஆண்டுகளில், விளைச்சல் குறைவதை என்னால் காண முடிகிறது. கடந்த ஆண்டு ஒரு மரம் எங்களுக்கு 150 முதல் 180 மாதுளைகளை கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு 60 - 80 மாதுளை மட்டுமே வந்துள்ளது. இதற்கு காரணம் பருவநிலை மாற்றமும், முன்கூட்டியே பெய்யும் மழையும்," என்று அவர் கூறுகிறார்.
*****
சேத்தன் போன்ற விவசாயிகள் வேலைக்கு அமர்த்தும் விவசாயத் தொழிலாளர்களில், பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் களைகளை அகற்றுதல், உரம் சேர்த்தல் மற்றும் பல பணிகளை செய்கின்றனர்.
பிரகாசமான சிவப்பு மாதுளை பூக்கள் மே மாதத்தில் பூக்கும்போது, ஆண் பூக்கள் மற்றும் களைகளைப் பறிக்க வேண்டும். "முட்கள் இருப்பதால் நான் வேலை செய்யும் போது இந்த கையுறைகளை அணிய வேண்டும். சில நேரங்களில், பறிக்கும் போது சரியாகப் பார்க்கவில்லை என்றால், எப்படியும் காயமடைவேன்," என்று 2023 ஜூன் மாதம் சேத்தனின் பண்ணைக்கு பாரி வந்தபோது அங்கு வேலை செய்த ஆறு பெண்களில் ஒருவரான கே.எம். சிவம்மா கூறுகிறார்.
சிவம்மாவின் நாட்கள் காலை 6:30 மணிக்கு தனது வீட்டை சுத்தம் செய்து குடும்பத்திற்கு சமைப்பதில் தொடங்குகின்றன. பின்னர் அவர் ஒரு கிலோமீட்டர் தூரம் வயலுக்கு நடந்து செல்கிறார். அங்கு அவர் மாலை 6:30 மணி வரை வேலை செய்கிறார். மற்ற தொழிலாளர்களைப் போலவே, அவரும் தினக்கூலியாக 350-400 ரூபாய் சம்பாதிக்கிறார். வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறார். "எனக்கு ஓய்வு நேரமோ, ஓய்வோ கிடைப்பதில்லை. எனக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடைக்கிறது. ஆனால் வீட்டை சுத்தம் செய்வதற்கும், துணிகளை துவைப்பதற்கும் அந்த நேரம் செலவாகிவிடுகிறது," என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்த 36 வயது பெண் கூறுகிறார்.
ஜூன் மாதத்தில், பருவமழை தொடங்குவதற்கு முன்பு, தொழிலாளர்கள் வளர்ந்து வரும் பழங்களை கம்பிகளில் பாதுகாக்க வேண்டும். செடி எடை குறையாமல் தடுக்க பழங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும். "இந்த வெயிலில் வேலை செய்யும் போது எனக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. என் தலை, முதுகு மற்றும் தோள்பட்டை எல்லாமே வலிக்கிறது," என்று 43 வயதான விவசாயத் தொழிலாளியான நரசம்மா கூறுகிறார்.
"நான் இங்கு இருக்கும்போது என் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாங்கள் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே ஒன்றாக வேலை செய்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
*****
செப்டம்பரில், பழங்கள் பறிக்க தயாராக இருக்கும். "ஒரு மாதுளை 250-300 கிராம் எடை இருக்கும்," என்கிறார் சேத்தன்.
இது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏலதாரர்களின் வருகையைக் குறிக்கிறது. வியாபாரிகள் மாதுளம் பழத்தின் தரத்தை கவனமாக மதிப்பிட்டு விலை நிர்ணயிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு விலை திருப்திகரமாக இருந்தால், தங்கள் விளைபொருட்களை விற்க ஒப்புக்கொள்கிறார்கள். "உங்களுக்கு இலாபமா அல்லது நஷ்டமா என்று சொல்ல முடியாது. இது பருவம் மற்றும் சந்தையைப் பொறுத்தது. ஒரு முறை எனக்கு 2.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது," என்று நினைவுகூருகிறார் விவசாயி மோகன் கௌடா.
பிரியங்கா மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் என்ற விலையில் விற்றோம். இது ஒரு வாரத்திற்கு முன்பு கிலோவுக்கு 180 ரூபாயாக இருந்தது. விலை இன்னும் அதிகரிக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதனால் விற்காமல் காத்திருந்தோம். ஆனால் விலை குறைந்தது. இப்போது என்ன செய்வது?"
தமிழில்: சவிதா