உயர்நாகரிகம், வேகம் மற்றும் காமம்.
சொகுசு பயணம், பட்ஜெட் பயணம் அல்லது முடிவிலா பயணம்!
மீம்கள், ட்ரெண்டாகும் நடனங்கள், நகைச்சுவை அல்லது கொடூரமான ஃபில்டர்கள்.
இவைதாம் இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கமாக இருக்கிறது. ஆனால் பாரியில் இவை எதுவும் கிடையாது. எனினும் சமூக ஊடக உலகத்துக்குள் எங்களுக்கான ஒரு வாசகர் பரப்பை உருவாக்கி வைத்திருக்கிறோம். எப்படி? அனைவருக்கும் தெரிந்தும் அதிகம் பயன்படுத்தப்படாத உத்தி: உண்மைகளுடன் கூடிய அற்புதமான கதை சொல்லல்.
வருடம் முடியும் தருணத்தில், எங்களின் பணிக்கு வினையாற்றிய வாசகப்பரப்பின் பன்மைத்துவத்தை பகிர விரும்புகிறோம் (இந்தக் காணொளியை பாருங்கள்).
The temporary 'chairwomen' of Banswara கட்டுரை குறித்த பதிவை லட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டினர். ஆண்கள் மற்றும் மூத்தவர்களுக்கு முன் நாற்காலிகளிலோ உயரமான இடங்களிலோ அமராத ராஜஸ்தான் பெண்களை குறித்த நிலஞ்சனா நண்டியின் கட்டுரை அது. அக்கட்டுரை பற்றிய இன்ஸ்டாக்ராம் ரீலுக்கு கிட்டத்தட்டஏழு லட்சம் பார்வைகள் கிட்டின. அதே வகையான அனுபவத்தை பெற்ற பெண்களிடமிருந்து நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களும் வந்தன. சிலர், இத்தகைய விஷயங்களை பொருட்படுத்தாமல் செல்லும் நிலையை ஒப்புக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் இத்தகைய சூழலை கனவு கூட காண முடியவில்லை என குறிப்பிட்டிருந்தனர். மலிகா குமார் என்கிற வாசகரின் பின்னூட்டம், “உன்னிப்பான கவனத்தில்தான் இத்தகைய விஷயங்கள் புலப்படும்,” என இருந்தது. அன்றாட மக்களின் வாழ்க்கைகளை எழுதுபவர்களுக்கு கிடைத்த பெரும் பாராட்டு அது.
பாராட்டுகள் எங்களுக்கு ஊக்கம் தருபவை. வாசகர்களும் பல வழிகளில் எங்களை பாராட்டுகின்றனர். இந்தக் கட்டுரைகளிலிருந்து எத்தனை விஷயங்களை கற்க முடிந்தது என சொல்லி பாராட்டுகின்றனர். பாரி, தொடர்ந்து இதழியல் தளத்தை இயக்கும் வண்ணம் நன்கொடை அளித்தும் பாராட்டுகின்றனர்.
மதுரையில் நெரிசலும் வண்ணங்களும் நிறைந்த மல்லிகைப் பூ சந்தைகள் பற்றிய அபர்ணா கார்த்திகேயனின் காணொளி , பல நினைவுகளை மீட்டளித்ததாக உலகின் பல பகுதிகளிலிருந்து வாசகர்கள் தெரிவித்தனர். “அழகாக எழுதப்பட்டிருக்கிறது. காட்சியை கற்பனை செய்ய முடிந்தது. மல்லிகைப்பூவின் மணமே கூட கமழ்ந்ததை போல் உணர்ந்தோம்,” என்கிறார் நம்ரதா கில்பாடி. நாங்கள் செய்தியளிக்கும் இடங்களுக்கு மக்களை கொண்டு செல்வதுதான் எத்தனை அலாதியான விஷயம். இவை யாவும், நாங்கள் நேர்காணும் மக்களின்றி சாத்தியமாகி இருக்க முடியாது.
இன்ஸ்டாகிராமில் எங்களின் பிரபலமான காணொளி , சுமன் மோரே என்கிற குப்பை சேகரிப்பாளரை பற்றிய 30 வினாடி காணொளிதான். அவரின் வார்த்தைகள் அத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன. குடிமக்களின் குப்பைகளை சேகரிக்கும் அவர்களை போன்ற பெண்கள், ஏன் “குப்பை பெண்கள்” என அழைக்கப்படுகின்றனர் எனக் கேட்கிறார். 12 லட்சம் பார்வைகள் பெற்ற காணொளியை பார்த்து, சமூகத்தின் அறியாமையை கேள்வி கேட்ட விதத்தை பலரும் பாராட்டுகின்றனர். ஒரு வாசகர், “ நானும் குப்பை பெண் என்கிற வார்த்தை பயன்படுத்தி இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். இனி அதை பயன்படுத்த மாட்டேன்,” என்று குறிப்பிட்டிருந்தார். இது, விளிம்புநிலை சமூகத்தினர் மற்றும் அவர்களின் வாழ்வனுபவங்களுக்குள் இதழியல் செல்கையில், அர்த்தப்பூர்வமான சமூகம் எப்படி உருவாக முடியுமென்பதை காட்டுவதாக இருக்கிறது.
இக்கட்டுரைகளை பயன்படுத்தி வகுப்பறைகளில் நாங்கள் முன்னெடுக்கும் கல்விப்பணியைக் குறிப்பிட்டு, “ஒருவரை விட இன்னொருவருக்கு ஏன் வசதி குறைவாக இருக்கிறது என்பதையும் அவர்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் பெரும் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்காது என்பதையும் புரிந்து கொள்ளத் தொடங்குகையில், இந்தியாவின் உண்மை உங்களுக்கு புலப்படத் தொடங்கும்,” என X தளத்தில் பதிவிட்டிருக்கிறார் @Vishnusayswhat என்கிற பதிவர்.
செய்தி இன்னும் பரவலாக சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் நடிகர் ஜீனத் அமன், பாரியின் பணியை அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் குறிப்பிட்டு, “வெகுஜன ஊடகத்திலிருந்து கிராமப்புற கட்டுரைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பதை நான் காணுகிறேன். ஆனால் பிரபலங்கள் பற்றிய செய்திகள் பெருமளவில் இடம்பெறுகின்றன,” என பதிவிட்டிருக்கிறார். சரியான விஷயத்தை ஒரு பிரபலம் செய்வதை குறைத்து மதிப்பிட முடியாது. 24 மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எங்களின் கணக்கை பின்பற்றத் தொடங்கினர். இன்னொரு ஆச்சரியம், ஹாலிவுட் நடிகரான ஜான் சினா எங்களை X தளத்தில் பின்பற்றுவதுதான்.
மனதை நெகிழச் செய்யும் பதில் என்னவென்றால், இச்சமூகம் எங்கள் கதைகளின் மாந்தர்களுக்கு ஆதரவாக இருக்கும்போதுதான். அபரிமிதமாக கிடைக்கும் ஆதரவில் நாங்கள் எப்போதுமே திளைக்கிறோம். மூத்த விவசாயிகளான சுப்பய்யாவும் தேவம்மாவும் மருத்துவ செலவுகளுக்கு சிரமப்படுவதை பதிவு செய்யும் இக்கட்டுரையை பார்த்துவிட்டு, செலவின் ஒரு பங்கை கொடுக்க வாசகர்கள் முன் வந்தனர். இன்னும் சில வாசகர்கள் அவர்களது மகளின் திருமணத்துக்கும் உதவி செய்ய முன் வந்தனர். பதின்வயது வர்ஷா கடம் சிறந்த தடகள வீரர் ஆவார். குடும்பத்தின் பொருளாதார பிரச்சினையும் அரசின் ஆதரவின்மையும் அவரின் லட்சியத்தை நோக்கி செல்லத் தடைகளாக இருந்தன. வாசகர்கள் நிதி, காலணிகள், பயிற்சி போன்றவற்றை அளித்து உதவினர்.
இணையம், அதன் கொடூரங்களுக்கும் இரக்கமின்மைக்கும் பெயர் பெற்றிருந்தாலும் எங்களின் வாசகர்கள், இவ்வுலகம் கருணையால் நிரம்பியதே என்பதை உறுதிபடுத்துகின்றனர்.
எங்களை நீங்கள் பின்வரும் முகவரிகளில் பின்தொடரலாம்.
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்
முகநூல்
லிங்க்ட்இன்
பாரியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வப் பணி செய்ய விரும்புவோர் [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
எங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வமிருந்தாலும் பாரிக்கு பங்களிக்க நீங்கள் விரும்பினாலும் [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுடன் பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்பட இயக்குநர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் கட்டுரை ஆசிரியர்களையும் விளக்கப் பட ஓவியர்களையும் ஆய்வாளர்களையும் வரவேற்கிறோம்.
லாபம் கருதி நடத்தப்படும் நிறுவனம் அல்ல, பாரி. எங்களின்
பன்மொழி இணைய பத்திரிகையையும் பெட்டகத்தையும் ஆதரிக்கும் மக்களின் நன்கொடைகளை சார்ந்து
நாங்கள் இயங்குகிறோம். பாரிக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால்
DONATE
என்ற வார்த்தையில் க்ளிக் செய்யவும்.
தமிழில் : ராஜசங்கீதன்