“சரியான மணமகள் கிடைக்க அவருக்கு என் கணவர் வீட்டாரால் பணம் கொடுக்கப்பட்டது. இது இங்கு வழக்கத்தில் இருக்கும் முறைதான்.” இருபது வயதுகளில் இருக்கும் ருமா கீச்சத், தன் கதையை பகிர்ந்து கொள்கிறார். “தூரப் பகுதியிலிருந்து வந்து இங்கு (ராஜஸ்தான்) வாழ, எல்லாராலும் முடியாது. என் அண்ணி…”

“50,000 ரூபாய் கொடுத்து அவரை வாங்கினோம். இருந்தும் அவள் ஏழு வயது மகளை விட்டுவிட்டு ஓடிப் போனாள்.” மருமகள் சொன்ன விஷயத்தை தன்னுடைய சொந்த விஷயம் போல மாற்றி சொல்லும் யஷோதா கீச்சதுக்கு (பெயர் மாற்றப்பட்டது) வயது 67.

“அந்தப் பெண்! மூன்று வருடங்கள் இருந்தாள் அவள்.” பஞ்சாபிலிருந்து வந்து ஓடிப் போன மூத்த மருமகளை பற்றி பேசுகையில் இன்னும் கோபத்துடன் பேசுகிறார் யஷோதா. “அவளுக்கு மொழிப் பிரச்சினை இருந்தது. எங்களின் மொழியை கற்றுக் கொள்ளவே இல்லை. ஒரு ரக்‌ஷாபந்தனின்போது, சகோதரனையும் குடும்பத்தையும் பார்க்க செல்வதாக முதன்முறையாக சொன்னாள். நாங்களும் போக அனுமதித்தோம். திரும்பி அவள் வரவில்லை. ஆறு வருடங்கள் ஆகி விட்டன,” என்கிறார் அவர்.

யஷோதாவின் இரண்டாம் மருமகளான யஷோதா, வேறொரு தரகரின் மூலம் ஜுன்ஜுனூனுக்கு வந்தார்.

திருமணமான வயது அவருக்கு தெரியாது. “பள்ளிக்கு நான் சென்றதில்லை. எனவே பிறந்த வருடம் எனக்கு தெரியாது,” என்கிறார் அவர், பழுப்பு நிற அலமாரியில் ஆதார் அட்டையை தேடியபடி.

அறையின் கட்டிலில் அவரின் ஐந்து வயது மகள் விளையாடுவதை பார்த்தேன்.

“அநேகமாக என் ஆதார், கணவரின் பர்ஸில் இருக்கலாம். எனக்கு 22 வயதாகப் போகிறதென நினைக்கிறேன்,” என்கிறார் ருமா.

Left: Yashoda says that Ruma learnt to speak in Rajasthani within six months of her marriage, unlike her elder daughter-in-law.
PHOTO • Jigyasa Mishra
Right: Ruma is looking for her Aadhaar card copy to confirm her age
PHOTO • Jigyasa Mishra

இடது: மூத்த மருமகளைப் போலல்லாமல், திருமணமாகி ஆறு மாதங்களில் ருமா, ராஜஸ்தானி பேச கற்றுக் கொண்டதாக சொல்கிறார் யஷோதா. வலது: தன் வயதை உறுதி செய்ய ஆதார் அட்டையை ருமா தேடுகிறார்

“என் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோலகாட்டில்தான் (அசாம்),” என அவர் தொடர்கிறார். “என் ஐந்து வயதிலிருந்து அண்ணனும் அண்ணியும் தாத்தாவும் பாட்டியும்தான் எனக்கு குடும்பமாக இருந்தனர்,” என்கிறார் அவர்.

2016-ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், வித்தியாசமான உடை அணிந்த இருவரை அசாமின் கோலாகாத் மாவட்டத்திலுள்ள தாத்தா பாட்டி வீட்டுக்கு அண்ணன் அழைத்து வந்ததை ருமா பார்த்தார். அவர்களில் ஒருவர் இளம்பெண்களை மணமகள்களாக்கும் தரகர் வேலை செய்து கொண்டிருந்தவர்.

“பிற மாநிலங்களிலிருந்து ஊருக்கு மக்கள் வருவது அடிக்கடி நிகழும் விஷயம் அல்ல,” என்கிறார் ருமா. நல்ல கணவர், வரதட்சணை வேண்டாம் போன்ற உறுதிகளை அவர்கள் குடும்பத்துக்கு அளித்தனர். செலவில்லாமல் திருமணம் செய்வதற்கான வாக்குறுதியும் பணமும் கூட கொடுத்தனர்.

வந்தவர்களில் ஒருவருடன் ‘சரியான பெண்’ ருமா அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு வாரத்துக்குள் இருவரும் அவரை, அசாமிலிருக்கும் அவரது வீட்டிலிருந்து 2500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜுன்ஜுனூன் மாவட்டத்தின் கிஷன்புரா கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.

தூரத்து பகுதியில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டதற்கு உறுதியளிக்கப்பட்ட பணம் ருமாவின் குடும்பத்துக்கு வழங்கப்படவே இல்லை. அவரின் கணவர் வீட்டாரான கீச்சத்கள், பெண்ணின் குடும்பத்துக்கு கொடுக்கப்படுவதற்கான பணத்தையும் சேர்த்துதான் தரகரிடம் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

“பெரும்பாலான வீடுகளில், பல மாநிலங்களை சேர்ந்த மணமகள்களை நீங்கள் பார்க்க முடியும்,” என்கிறார் ருமா. ராஜஸ்தானுக்கு கொண்டு வரப்படும் இளம்பெண்கள் பெரும்பாலும் மத்தியப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலிருந்துதான் கொண்டு வரப்படுவதாக அப்பகுதியில் இயங்கும் உள்ளூர்வாசிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.

Left: Ruma right outside her in-law's house.
PHOTO • Jigyasa Mishra
Right: Ruma with her husband Anil and her daughter
PHOTO • Jigyasa Mishra

இடது: கணவர் வீட்டார் வசிக்கும் வீட்டுக்கு வெளியே ருமா. வலது: கணவர் அனில் மற்றும் மகளுடன் ருமா

ராஜஸ்தானில் மணமகள் கண்டுபிடிப்பது பெரும் சிரமம். குழந்தைப் பாலின விகிதத்தில் (0-விலிருந்து ஆறு வயது வரை) மோசமான நிலையில் அம்மாநிலம் உள்ளது. 33 மாவட்டங்களில் ஜுன்ஜுனூன் மற்றும் சிகார் ஆகியவைதான் மிகவும் மோசமான மாவட்டங்கள். ஜுன்ஜுனூனின் கிராமப்புறத்தில் குழந்தைப் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 832 பெண் குழந்தைகளாக இருக்கிறது. தேசிய அளவு 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண் குழந்தைகளாக 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கான பற்றாக்குறைக்குக் காரணமாக, மாவட்டத்தில் நிலவும் ஆண் குழந்தைகள் மீதான விருப்பத்தை குறிப்பிடுகிறார் மனித உரிமை செயற்பாட்டாளரான விகாஷ் குமார் ரகார். “மகன்களுக்கு மணமகள்கள் கிடைக்காததால், பெற்றோர் எளிதாக தரகர்களை அணுகுகின்றனர். அவர்களோ பிற மாநிலங்களிலிருக்கும் ஏழைக் குடும்பங்களிலிருந்து பெண்களை கொண்டு வருகின்றனர்,” என்கிறார் அவர்.

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பான ( NFHS-5 ) 2019-2020 -ன் தரவுப்படி, ராஜஸ்தானில் கடந்த ஐந்து வருடங்களில் பிறந்த குழந்தைகளில், நகர்ப்புறங்களில் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகளாக விகிதம் இருக்க்கிறது. கிராமப்புற பகுதிகளில் அது இன்னும் குறைந்து 879 பெண் குழந்தைகளாக இருக்கிறது. ஜுன்ஜுனுனின் மக்கள்தொகையில் 70 சதவிகிதம் கிராமப்புறங்களில் இருக்கிறது.

ராகர், உள்ளூரில் இயங்கி வரும் ஷிக்‌ஷித் ரோஜ்கர் கேந்திரா பிரபந்தக் சமிதி (SKRPS) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். “மணமகள்களுக்கென 20,000 முதல் 2.5 லட்சம் வரை தரகர் கமிஷனும் சேர்த்து பணம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்,” என்கிறார் அவர்.

ஆனால் ஏன்?

“அது இல்லாமல் எப்படி ஒரு மணமகளை நாங்கள் பெற முடியும்?” எனக் கேட்கிறார் யஷோதா. “உங்கள் மகனுக்கு அரசாங்க வேலை இல்லாமல் யாரும் இங்கு பெண் கொடுக்க மாட்டார்கள்.”

From left: Ruma’s father-in-law, Ruma near the wall, and her mother-in-law Yashoda with her grand-daughter on her lap. The family has adopted a dog who follows Yashoda's c ommands
PHOTO • Jigyasa Mishra

இடதிலிருந்து: ருமாவின் மாமனார், சுவரருகே ருமா மற்றும் பேத்தியை மடியில் வைத்திருக்கும்  மாமியார் யஷோதா. யஷோதாவின் கட்டளைகளை கேட்கவென ஒரு நாயை வளர்த்து வருகிறார்கள்

யஷோதாவின் இரண்டு மகன்களும் தந்தையின் நிலத்தையும் ஆறு கால்நடைகளையும் பார்த்துக் கொள்கின்றனர். தானியம், கோதுமை, பருத்தி, கடுகு போன்றவை வளர்க்கப்படும்18 பிகா நிலம் (ஒரு பிகா என்பது 0.625 ஏக்கர்) குடும்பத்துக்கு இருக்கிறது.

“என் மகன்களுக்கு இங்கு பெண்கள் கிடைக்கவில்லை. எனவே வெளியிலிருந்து ஒரு பெண்ணை கொண்டு (கடத்தி) வருவதுதான் எங்களுக்கு இருந்த ஒரே வழி. எத்தனை காலத்துக்கு எங்கள் மகன்களுக்கு திருமணம் முடிக்காமல் இருக்க முடியும்?” எனக் கேட்கிறார் யஷோதா.

Protocol to Prevent, Suppress and Punish Trafficking in Person என்கிற ஆவணத்தில் “லாபத்துக்காக சுரண்டவென வேலைக்கு சேர்ப்பது, போக்குவரத்தில் கொண்டு செல்வது, இடமாற்றம் செய்வது, கட்டாயத்தில் மக்களை அனுப்புவதோ பெறுவதோ, மோசம் செய்தும் ஏமாற்றியும் கொண்டு செல்வது ஆகியவை கடத்தல்” என போதைப் பொருள் மற்றும் குற்றம் ஆகியவற்றுக்கான ஐநா அலுவலகம் (UNODC) விளக்குகிறது. இந்தியாவில் அது சட்டப்படி குற்றம். 370ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். 7 முதல் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

“ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடத்தலுக்கு எதிரான தனிப்பிரிவு இருக்கிறது,” என்கிறார் இம்முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஜுன்ஜுனூனின் காவல்துறை கண்காணிப்பாளரான மிருதுள் கச்சவா விளக்கும்போது. “சில மாதங்களுக்கு முன், ஒரு பெண் கடத்தப்பட்டது தொடர்பாக அசாம் காவல்துறை எங்களை அணுகியது.  நாங்கள் துப்பறிந்து பெண்ணை மீட்டு திருப்பி அனுப்பிவிட்டோம். ஆனால் சில வழக்குகளில், கடத்தி செல்லப்பட்ட பெண் வீடு திரும்ப மறுத்துவிடுவார். விரும்பிதான் இங்கு வந்திருப்பதாக சொல்வார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும்.”

தன் குடும்பத்தை அடிக்கடி சென்று பார்க்க ருமா நிச்சயம் விரும்புகிறார். எனினும் கணவர் வீட்டில் தொடர்ந்து வசிக்கவும் விரும்புகிறார். “ஒரு சாதாரண பெண்ணை போல் இங்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன்,” என்கிறார் அவர். “இங்கு பிரச்சினைகள் ஒன்றும் இல்லை. கண்டிப்பாக நான் அடிக்கடி வீட்டுக்கு செல்ல முடியாது. ஏனெனில் வீடு தூரமாக இருக்கிறது. எனினும் என் சகோதரனையும் குடும்பத்தையும் விரைவிலேயே சென்று பார்க்க விரும்புகிறேன்.” கணவர் வீட்டாரிடமிருந்து உடல் ரீதியான வன்முறையோ வசவு வார்த்தையோ ருமாவுக்கு நேர்ந்ததில்லை.

Ruma visited her family in Assam twice since her marriage about seven years ago. She speaks to them occassionally over the phone
PHOTO • Jigyasa Mishra

திருமணமான ஏழு வருடங்களில் அசாமிலுள்ள குடும்பத்தை இரண்டு முறை சென்று ருமா பார்த்து வந்திருக்கிறார். அவ்வப்போது அவர்களுடன் தொலைபேசியில் பேசுவார்

’சாதாரண பெண்’ணாக ருமா நினைத்துக் கொண்டாலும் 2019ம் ஆண்டில் மேற்கு வங்கத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு தற்போது இருபது வயதுகளில் இருக்கும் சீதாவுக்கோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்ல வேறு கதை இருக்கிறது. அதை சொல்லக் கூட அவர் பயப்படுகிறார்: “என் மாவட்டத்தின் பெயரையோ என் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரையோ நீங்கள் பயன்படுத்தக் கூடாது.”

“2019ம் ஆண்டில் ஒரு ராஜஸ்தானி தரகர் என் வீட்டுக்கு ஜுன்ஜூனுனிலிருந்து பெண் தேடி வந்திருந்தார். குடும்பத்திடம் நிறைய பணம் இருப்பதாக சொன்னார். கணவராக போகிறவரின் வேலை குறித்து பொய் சொன்னார். பிறகு என் தந்தைக்கு 1.5 லட்ச ரூபாய் கொடுத்து, உடனே என்னை அழைத்து செல்ல வேண்டுமென கேட்டார்.” ராஜஸ்தானில் திருமணம் நடக்குமென சொல்லி இருக்கிறார். புகைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

கடன்களோடும் நான்கு இளம் குழந்தைகளுடனும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தந்தைக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு அதே நாளன்று சீதாவும் கிளம்பினார்.

“இரண்டு நாட்கள் கழித்து ஓரறைக்குள் என்னை பூட்டினார்கள். பிறகு ஒரு ஆண் உள்ளே வந்தான். என் கணவனென நினைத்தேன்,” என தொடர்கிறார் அவர். “என் உடைகளை களையத் தொடங்கினான். திருமணம் பற்றி அவனிடம் கேட்டேன். என்னை அறைந்தான். நான் வல்லுறவு செய்யப்பட்டேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு அதே அறையில் குறைவான உணவுடன் இருந்தேன். பிறகு என் கணவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டேன். அப்போதுதான் என் கணவர் வேறொருவர் என்பதை புரிந்து கொண்டேன். அவர் என்னைவிட எட்டு வயது மூத்தவர்.”

“எல்லா வயதுக்கும் வசதிக்கும் மணப்பெண்ணை தரகர்கள் கொண்டிருக்கின்றனர்,” என்கிறார் SRKPS அமைப்பின் நிறுவனர் ராஜன் ஜுன்ஜுனுனில். “ஒருமுறை எனக்கு ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடியுமா என ஒரு தரகரிடம் கேட்டேன். எனக்கு 60 வயதுக்கு மேல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். செலவாகும் ஆனால் சுலபமாக பெண் கிடைத்துவிடும் என சொல்லி ஆச்சரியப்படுத்தினார் அவர். அதற்கொரு திட்டத்தை சொன்னார். ஒரு இளைஞனை என்னுடன் அழைத்து சென்று, அவனை வரன் போல காட்ட சொன்னார்.” குடும்பம் பெண்ணை கொடுத்ததும், தரகர் ராஜஸ்தானுக்கு கொண்டு வந்து திருமணத்தை உறுதி செய்து விடுவார்.

Varsha Dangi was trafficked from her village in Sagar district of Madhya Pradesh and brought to Jhunjhunun
PHOTO • Jigyasa Mishra

மத்தியப்பிரதேச சாகர் மாவட்டத்திலிருந்து கடத்தி ஜுன்ஜுனூனுக்கு கொண்டு வரப்பட்டவர் வர்ஷா டங்கி

ராஜனை பொறுத்தவரை, ஜுன்ஜுனூனுக்கு மணம் முடிக்க பெண்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதற்கான முக்கியமான காரணம், மாவட்டத்தின் பாலின விகிதம்தான். “குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சட்டவிரோத பரிசோதனைகள் மாவட்டத்துக்கு உள்ளும் வெளியேவும் சுலபமாக பெருமளவில் நடக்கின்றன,” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ருமாவின் வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜுன்ஜுனூனின் அல்சிசார் கிராமத்தில் வசிப்பவர் வர்ஷா டங்கி. 15 வயது மூத்தவரை அவர் 2016ம் ஆண்டில் மணம் முடித்தார். மத்தியப்பிரதேச சாகர் மாவட்டத்து கிராமத்திலிருந்து கணவரின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.

”அவர் மூத்தவர். ஆனால் என்னை நேசித்தார்,” என்கிறார் வர்ஷா. “என் மாமியார்தான் நான் இங்கு வந்ததிலிருந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இப்போது என் கணவர் இறந்துவிட்டதால், நிலைமை மோசமாகி இருக்கிறது,” என்கிறார் 32 வயதாகும் அவர்.

“ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தரகர் அடிக்கடி மத்தியப்பிரதேசத்துக்கு வருவார். என் திருமணத்துக்கென வரதட்சணையாக கொடுக்க என் குடும்பத்திடம் பணம் இல்லை.எனவே அவருடன் என்னை அனுப்பி வைத்து விட்டனர்,” என்கிறார் அவர்.

பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டில் ஒளிந்தபடி அவர் நம்மிடம் பேசுகிறார்: “என் மாமியாரிடமோ நாத்தனாரிடமோ இதை பற்றி எதுவும் பேசி விடாதீர்கள். அவர்களில் ஒருவருக்கு நாம் பேசுவது தெரிந்தாலும் எனக்கு நரகம்தான்.”

‘ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தரகர் அடிக்கடி மத்தியப்பிரதேசத்துக்கு வருவார். என் திருமணத்துக்கென வரதட்சணையாக கொடுக்க என் குடும்பத்திடம் பணம் இல்லை.எனவே அவருடன் என்னை அனுப்பி வைத்து விட்டனர்’

காணொளி: ஜுன்ஜுனூனுக்கு ‘சரியான பெண்களை’ வாங்குதல்

பேசிக் கொண்டிருக்கும்போதே பிஸ்கட் கேட்டு அவரின் நான்கு வயது மகன் தொந்தரவு செய்கிறான். பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் பிஸ்கட்டுகள் கொடுக்கிறார்.  பக்கத்து வீட்டுக்காரர்களை சுட்டிக் காட்டி, “இவர்கள் இல்லையெனில் என் மகனும் நானும் பட்டினியில் செத்திருப்போம். என் நாத்தனாருக்கும் எனக்கும் தனித்தனியே சமையலறைகள் உண்டு. என் கணவர் இறந்துவிட்டதால், ஒவ்வொரு வேளை உணவும் எனக்கு சவால்தான்.” 2022ம் ஆண்டில் கணவர் இறந்த பிறகு குறைவான உணவுக்காக சார்ந்திருக்கும் நிலை குறித்து விவரிக்கையில் வர்ஷா அழத் தொடங்குகிறார்.

“ஒவ்வொரு நாளும் என்னை வீட்டை விட்டு போகச் சொல்வார்கள். நான் வாழ வேண்டுமெனில், யாருடைய மனைவியாகவாவது ஆக வேண்டுமென என் மாமியார் சொல்வார்,” என விதவையாகி விட்ட பெண்ணை, கணவர் வீட்டாரை சேர்ந்த ஒருவரை வயது பார்க்காமல் மணம் முடிக்கக் கட்டாயப்படுத்தும் ராஜஸ்தானிய சடங்கை குறிப்பிடுகிறார் வர்ஷா. “சொத்தில் என் கணவரின் பங்கை கேட்டு விடுவேனோ என அவர் பயப்படுகிறார்,” என்கிறார் வர்ஷா அதற்கான காரணத்தை விளக்கி.

மாவட்டத்தின் 66 சதவிகிதம் கிராமப்புறம்தான். அங்கிருப்பவர்கள் விவசாயம் செய்கின்றனர். அவருடைய கணவர் ஒரு விவசாயி. அவர் இறந்தபிறகு அவருக்கு சொந்தமான நிலத்தில் யாரும் சாகுபடி செய்வதில்லை. குடும்பத்துக்கென இருக்கும் 20 பிகா நிலத்தில் இரு சகோதரர்களின் பங்கு இருக்கிறது.

அடிக்கடி மாமியார், “உனக்காக 2.5 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறோம். எனவே நாங்கள் சொல்வதை செய்வது உனக்கு நல்லது,” எனச் சொல்வதாக கூறுகிறார் வர்ஷா.

“வாங்கப்பட்டவள் என்கிற பட்டத்தோடு வாழ்கிறேன். அதோடே இறந்தும் போவேன்.”

Varsha says that after her husband's death her in-laws pressurise her to either live with her younger brother-in-law or leave
PHOTO • Jigyasa Mishra

கணவரின் மரணத்துக்கு பிறகு மைத்துனருடன் வாழும்படி கணவர் வீட்டார் அழுத்தம் கொடுப்பதாக வர்ஷா சொல்கிறார்

*****

டிசம்பர் 2022. ஆறு மாதங்கள் கழித்து பாரியுடன் தொலைபேசியில் பேசியபோது அவரின் குரலில் வேறொரு தன்மை வெளிப்பட்டது. “என் சொந்த வீட்டுக்கு காலையில் வந்துவிட்டேன்,” என்கிறார் அவர். கணவர் வீட்டார், மைத்துனருடன் வாழும்படி கட்டாயப்படுத்தியதாகவும் இல்லையெனில் கிளம்பும்படி சொன்னதாகவும் சொல்கிறார். “அவர்கள் என்னை அடிக்கவும் செய்தார்கள். எனவே நான் கிளம்பி வந்துவிட்டேன்,” என்கிறார்.

இனியும் தாங்க முடியாது என அவர் முடிவெடுத்துவிட்டார். அவரின் மைத்துனருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். “கிராமத்தில் இருக்கும் விதவைகள் கணவர் வீட்டிலுள்ள எவரையும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். வயது, திருமண நிலை எதுவும் பிரச்சினை இல்லை,” என்கிறார் வர்ஷா.

தடுப்பூசி போடச் செல்வதாக சொல்லி மகனுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்துவிட்டார் வர்ஷா. வெளியேறியதும் மத்தியப்பிரதேச ரயிலைப் பிடித்தார். “பகுதியில் வாழும் பெண்கள் கொஞ்சம் பணம் சேகரித்து டிக்கெட்டுகளுக்காக எங்களுக்குக் கொடுத்தனர். ஆனால் வழியில் என்னிடம் பணமில்லை,” என்கிறார் அவர்.

“100க்கு அழைத்து காவல்துறையை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள், பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எனக்கு உதவுவார்கள் என்றனர். பிரச்சினை பஞ்சாயத்துக்கு சென்றதும் எனக்கு உதவ அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.”

புதிய நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருந்த அவர், “என்னை போன்ற பெண்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்வுலகம் அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்றார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Jigyasa Mishra

Jigyasa Mishra is an independent journalist based in Chitrakoot, Uttar Pradesh.

यांचे इतर लिखाण Jigyasa Mishra
Editor : Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या पारीमध्ये वरिष्ठ संपादक असून त्या पारीवरील सर्जक लेखन विभागाचं काम पाहतात. त्या पारीभाषासोबत गुजराती भाषेत अनुवाद आणि संपादनाचं कामही करतात. त्या गुजराती आणि इंग्रजी कवयीत्री असून त्यांचं बरंच साहित्य प्रकाशित झालं आहे.

यांचे इतर लिखाण Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan