மீன்பிடித் தொழிலுக்கு, அதுவும் கடலூர் போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடக்கும் மீன் தொழிலுக்கு ஐஸ் வணிகர்கள் இன்றியமையாதவர்கள். நகரத்தின் ஓல்ட் டவுன் துறைமுகத்தில் பெரிய மீன் வணிகர்களுக்கும் இயந்திர படகுகளுக்கும் பெருமளவில் ஐஸை பெரிய நிறுவனங்கள் விநியோகிக்கின்றன.
மீனவர்களுக்கும், பெண் மீன் வியாபாரிகளுக்கும் ஐஸ் விற்பவராக தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் கவிதா. 800 ரூபாய்க்கு பெரிய ஐஸ் பாளங்களை வாங்கும் அவர், அவற்றை எட்டாக உடைத்து ஒவ்வொரு சிறிய கட்டியையும் தலா 100 ரூபாய்க்கு விற்கிறார். கொஞ்சம் உடலுழைப்பு தேவைப்படுகிற தொழில் இது. இதற்காக ஓர் ஆண் தொழிலாளரை வேலைக்கு வைத்துள்ள கவிதா அவருக்கு தினம் இரண்டு வேளை உணவுடன் 600 ரூபாய் கூலி கொடுக்கிறார்.
“சிறு ஐஸ் பாளங்கள் தேவைப்படும் பெண்களுக்கு அவற்றை கொண்டு செல்வதற்கு உதவுகிறேன்,” என்று கூறும் 41 வயது ஐஸ் வியாபாரியான கவிதா, “இதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. பிழைப்பை ஓட்டுவதற்குப் போதுமான அளவுதான் சம்பாதிக்க முடிகிறது. பணம் சேர்க்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், பெரிய கம்பெனிகளோடு போட்டி போடும் அளவுக்கு வளர முடியவில்லை,” என்கிறார்.
2017-ல் வியாபாரத்தில் இறங்கினார் கவிதா. “என் மாமனார் அமிர்தலிங்கத்துக்கு உடல் நலிவுற்ற பிறகு, அவரது ஐஸ் வியாபாரத்தில் சேர்ந்துகொண்டேன். என் கணவருக்கு இதில் ஆர்வம் இல்லை. என்னுடைய மைத்துனர் வெளிநாடு சென்றுவிட்டார்,” என்கிறார் கவிதா. கூடுதலாக, பள்ளிக் கல்வி பெற்றுள்ள கவிதாவுக்கு இந்த வணிகத்தில் பங்களிக்கத் தேவையான திறமை இருந்தது.
தன் பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் எல்லோருக்கும் இளையவர் கவிதா. தானே சொந்தமாக கற்றுக்கொண்டு மெக்கானிக் ஆன அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது கவிதாவுக்கு வயது 14. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கவிதா பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு தமது தாயோடு நாற்று நடுவது, களை பறிப்பது போன்ற விவசாய வேலைகளுக்கு சென்றார்.
ஓவியரும், பெயிண்டருமான அன்புராஜை திருமணம் செய்துகொண்டபோது கவிதாவுக்கு வயது 23. இப்போது, தங்கள் பிள்ளைகள் வெங்கடேசன் 17, தங்க மித்ரா 15 ஆகியோருடன் கடலூர் ஓல்ட் டவுன் துறைமுகம் அருகே உள்ள சான்றோர்பாளையம் என்ற சிற்றூரில் இவர்கள் வசிக்கிறார்கள்.
கவிதாவின் மாமனார் அமிர்தலிங்கம், 75, துறைமுகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஐஸ் விற்கத் தொடங்கினார். அப்போது சிறு சிறு பாளமாக யாரும் ஐஸ் விற்கவில்லை. வியாபாரிகளுக்கு ஐஸ் பெரிய பாளமாகத்தான் விற்கப்படும். பெரிய ஐஸ் பாளங்களை வாங்கி விற்கத் தேவையான அளவு அவரிடம் முதலீடு இல்லை. ஆனால், சிறு வணிகர்களுக்குத் தேவையான அளவில் சிறிய ஐஸ் பாளங்களை விற்பதற்கு யாரும் இல்லாத குறையை பயன்படுத்தி தனக்கான தொழில் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக்கொண்டார்.
“பெரிய வியாபாரிகளுக்கு ஐஸ் தொழிற்சாலைகள், சுமையேற்றும் தொழிலாளிகளின் இருப்பு, போக்குவரத்து வசதிகள், விற்பனை வசதி ஆகியவை உண்டு,” என்று கூறுகிறார் கவிதா. தனக்கு இருக்கும் வசதிக்கேற்ப அவர், 20 சதுர அடி அளவே உள்ள ஒரு சிறிய கடையை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து நடத்துகிறார். பெரிய ஐஸ் பாளத்தை வாங்கி வந்து சிறிய துண்டுகளாக உடைத்து விற்கிறார் அவர்.
“பெரிய வியாபாரிகளால் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிறது. ஆனாலும் நான் தாக்குப் பிடித்துதான் ஆகவேண்டும்,” என்கிறார் கவிதா.
மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களை பதப்படுத்த, இருப்பு வைக்க, விநியோகிக்க, சந்தைப்படுத்த என இந்த வியாபாரத்தின் பல கட்டங்களிலும் ஐஸ் தேவைப்படுகிறது. மீன்களை சந்தைப் படுத்துவது, வலைகள் தயாரிப்பது, வலைகளை சீர் செய்வது, மீன்களைப் பக்குவப்படுத்துவது, பதனம் செய்வது, சீவி சுத்தம் செய்வது ஆகியவையும் மீன் தொழிலில் சேரும் என்கிறது மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கடல்சார் மீன்வள கணக்கெடுப்பு 2016 . மீன் தொழில் செய்கிறவர்களை ‘தொழிலாளர்கள்’ என்றும் ‘மற்றவர்கள்’ என்றும் இரண்டாக வகைப்படுத்தும் இந்தக் கணக்கெடுப்பு, ஏலம் விடுவது, ஐஸ் உடைப்பது, கிளிஞ்சல், சிப்பி, கடல் பாசி, அலங்கார மீன் வகைகள் போன்றவற்றை சேகரிப்பது ஆகிய தொழில்களை செய்பவர்களை ‘மற்றவர்கள்’ என்ற பிரிவுக்குள் கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 2,700 பெண்களும், 2,221 ஆண்களும் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவுக்குள் வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 404 பெண்களும், 35 ஆண்களும் இந்தப் பிரிவுக்குள் வருகிறார்கள். இவர்களில் நான்கில் மூன்று பங்கு பேர் கடலூர் பழைய நகரத் துறைமுகத்தை ஒட்டி உள்ள ஊர்களில் வசிப்பவர்கள். ஐஸ் தொடர்பான பணிகளை செய்கிறவர்கள், வழக்கமாக ஐஸ் சுமை இறக்குவது, ஐஸ் உடைப்பது, மீன்களோடு ஐஸ் சேர்த்து பெட்டிகளில் அடைப்பது, அந்தப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக வண்டிகளில் ஏற்றுவது ஆகிய வேலைகளை செய்வார்கள்.
அருகில் உள்ள சிப்காட் (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்) தொழிற்பேட்டையில் உள்ள இரண்டு கம்பெனிகளில் இருந்து ஐஸ் கொள்முதல் செய்யும் கவிதா, அதனை பலதரப்பட்ட சிறு வணிகர்களுக்கும், தலைச்சுமை தொழிலாளர்களுக்கும் விற்கிறார்.
கவிதாவின் உயரமான ஒல்லியான உடற்கட்டு அவரது உடலுழைப்புக்குப் பொருந்துவதாக இல்லை. “துறைமுகத்தில் உள்ள எங்கள் கடையிலிருந்து மீன் விற்கும் பெண்கள் உட்கார்ந்திருக்கும் பாலம் வரையில் பனிக்கட்டிகளைத் தலையில் சுமந்து வருவது சாத்தியமில்லை,” என்கிறார் கவிதா. கடையில் இருந்து ஐஸ் பாளங்களை ஏற்றி வர மோட்டார் வண்டிக்கு ஒவ்வோர் ஈடுக்கும் 100 ரூபாய் தரவேண்டும். ஐஸ் உடைக்கும் இயந்திரத்துக்கு தினம் 200 ரூபாய்க்கு டீசல் போடுகிறார் கவிதா.
இந்த வியாபாரத்தை நடத்துவது செலவு பிடிக்கும் விஷயம். வாரத்துக்கு ரூ.21,000 செலவில் 210 பாளம் ஐஸ் வாங்குகிறார் கவிதா. இது தவிர கூலி, எரிபொருள், வாடகை, போக்குவரத்து ஆகியவற்றுக்கும் அவர் செலவிடவேண்டும். எல்லாம் சேர்ந்து இவர் வாங்கி விற்கும் ஐஸ் பாளங்களின் அடக்க விலை ரூ.26,000. இதை விற்றால் ரூ.29,000 முதல் 31,500 வரையில் பணம் வரும். வாராந்திர நிகர லாபம் ரூ.3,000 முதல் ரூ.3,500 வரையில் கிடைக்கும். இது கனிசமாகத் தெரியலாம். ஆனால், இந்த வருமானம் கவிதாவும் அவரது கணவர் அன்புராஜும் சேர்ந்து சம்பாதிப்பது.
கவிதா, மீனவப் பெண் இல்லை என்பதால், மீன்பிடிப் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் சேருவதற்கு அவருக்குத் தகுதி இல்லை. அந்த சங்கங்களில் உறுப்பினராக இருந்தால் பல அரசு நலத்திட்டங்கள் அவருக்குக் கிடைக்கும். கவிதா, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்ட வன்னியர் சாதியை சேர்ந்தவர். மீன் தொடர்புடைய பணிகளை செய்யும் சாதியாக அது சேர்க்கப்படவில்லை .
மீன்பிடித் தொழிலின் விளிம்பு நிலையில் இருக்கும் கவிதா போன்ற பெண்களின் வேலைகளைப் பற்றி அரசாங்கத்தின் கொள்கைகள் மேலோட்டமாகத்தான் பேசுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மீன்பிடி மற்றும் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் 2007-ன் கீழ் கவிதா செய்யும் வேலையை ‘ கடற்கரை த் தொழிலாளர் ’ என்ற பிரிவுக்கு கீழ் கொண்டுவரலாம். ஐஸ் சுமை இறக்குவது, ஐஸ் உடைப்பது, மீன்களை ஐஸ் சேர்த்து பெட்டியில் அடைப்பது, அவற்றை அனுப்புவதற்காக வண்டிகளில் ஏற்றுவது போன்ற வேலைகள் இந்தப் பிரிவுக்கு கீழே வரும். ஆனால், இந்தப் பிரிவால் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்காது.
*****
கவிதாவுக்கும் அவரது 42 வயது கணவர் அன்புராஜுக்கும் ஒவ்வொரு நாளும் வேலை அதிகாலையிலேயே தொடங்கும். இவர்கள் அதிகாலை 3 மணிக்கு துறைமுகத்துக்கு சென்று ஐஸ் விற்கத் தொடங்குவர். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மீன் வாங்குவதற்கு வந்து சேரும் காலை 3 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில்தான் இந்த வியாபாரம் மும்முரமாக நடக்கும். பெரும்பாலான மீனவர்கள் இந்த நேரத்தில்தான் தாங்கள் பிடித்து வந்த மீன்களை படகுகளில் இருந்து இறக்குவார்கள். அவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாக்க ஐஸ் தேவைப்படும்.
காலை 6 மணி அளவில் கவிதாவின் மாமியார் சீதா கடைக்கு வந்து கவிதாவை வீட்டுக்கு அனுப்புவார். வீட்டுக்குப் போகும் கவிதா பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சமையல் செய்துவிட்டு மீண்டும் 10 மணிக்கு ஐஸ் விற்பதற்காக துறைமுகத்துக்கு வருவார். வீட்டுக்கும் கடைக்கும் அவர் சைக்கிளில் செல்வதால் ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருந்து கடைக்கும், கடையில் இருந்து வீட்டுக்கும் அவரால் செல்ல முடியும். ஆனால், துறைமுகத்தில் கழிவறை வசதி இல்லை என்பது ஒரு சிக்கல்.
குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பவர் கவிதாவின் மாமியார் சீதா. “ஐஸ் உடைக்கும் இயந்திரம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் அவர்தான் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்,” என்கிறார் கவிதா.
“வாங்கிய கடனுக்கு வட்டி விகிதம் என்ன என்று கூட எனக்குத் தெரியாது. என் மாமியாரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர்தான் எல்லா முக்கிய முடிவுகளையும் எடுப்பார்,” என்று மேலும் கூறினார் கவிதா.
ஆனால், கவிதாவுக்கு வியாபாரத்தைப் பற்றிய புரிதல் உண்டு. கடனுக்கு விற்கும்போது உடனடியாக அதைக் குறித்துக் கொள்கிறார் அவர். ஐஸ் கொள்முதல், விற்பனை ஆகியவற்றையும் அவர் கண்காணிக்கிறார். ஆனால், வருவாய் முழுவதையும் அவர் தனது மாமியாரிடம் ஒப்படைக்கிறார்.
கவிதாவின் தேவைகளை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதால் அவருக்கு புகார்கள் ஏதும் இல்லை. “எனக்கு ஒரு வருமானம் இருக்கிறது. இதனால், பணம் குறித்த கணக்கு வழக்குகள் என்னிடம் இல்லாவிட்டாலும், வீட்டில் எனக்கு மரியாதை இருக்கிறது,” என்கிறார் அவர். துறைமுகத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறது இவரது குடும்பம்.
“எல்லோரும் அன்னியோன்னியமாக இருந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்கும் குடும்பம் எங்களுடையது,” என்கிறார் அவர். குழந்தைகளின் பள்ளிக் கட்டணங்களை, இயந்திரப் பொறியியல் படித்துவிட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் கவிதாவின் மைத்துனர் அருள் ராஜ் செலுத்தி விடுகிறார்.
கவிதாவின் புகுந்த வீட்டாருக்கு வயதாகி உடல் நலச் சிக்கல்கள் தோன்றும்போது, கவிதாவுக்கு குடும்பத்தில் பொறுப்பு கூடுகிறது. ஐஸ் வியாபாரத்திலும் அவர் ஊக்கமாக ஈடுபடவேண்டியிருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்