கே ஆர் சாரதாவின் வீடு பட்டணம்திட்டா மாவட்டத்திலுள்ள ராணிஅங்காடி கிராமத்தில் ஒரு மேட்டுப்பாங்கான இடத்தில் நெல் மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட வயல்கள் மற்றும் வாழை தோட்டங்களை பார்த்தபடி அமைந்துள்ளது. இந்த வயல்களில் வேலை பார்க்கும் அனைவரும் குடும்பஸ்ரீ விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் (கூட்டு/குழு விவசாயம்). கேரளாவில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம் இந்த வயல்களை முழ்கடித்ததோடு மட்டுமல்லாமல் மேட்டிலிருந்த அவரது வீட்டிற்குள் வெள்ளம் புகும் அளவுக்கு தண்ணீர் வந்து - தரைதளம் முழுவதையும் மூழ்கடித்துவிட்டது. "நான் எனது வீட்டை விட்டு 11 நாட்கள் வெளியே தங்க வேண்டியிருந்தது", என்று அந்த நாட்களை உயரமான இடத்தில் இருக்கும் நிவாரண முகாமில் கழித்த, சாரதா கூறினார். அவர் ஒரு விவசாயி அல்ல ஆனால் ஒரு இல்லத்தரசி.
வீட்டுக்குத் திரும்பி பல நாட்களான பிறகும், இன்னமும் கூட அவர் தனது உடமைகளை வீட்டின் முற்றம் மற்றும் வாயில்படியில் வைத்து உலர வைத்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் அவர் மிகவும் பொக்கிஷமாக கருதுவது அவரது அழகிய குடும்பத்தினரின் படங்களை. அதிர்ஷ்டவசமாக, அவற்றில் பல கழுவக் கூடிய அல்லது நீர் புகாத வண்ணம் லேமினேட் செய்யப்பட்டவை. பக்கத்தில் இருந்த படிகளில் அவற்றை அவர் உலர வைத்திருந்தார், அதில் ராணுவத்தில் பணிபுரியும் அவரது மகன் கே ஆர் ராஜேஷின் படங்களும் இருந்தது. சாரதாவுக்கு துல்லியமாக அவருடைய மகன் எங்கே வேலை செய்கிறார் என்று தெரியவில்லை என்றாலும் கூட வடக்கில் "ஏதோ ஒரு இடத்தில்" இருப்பதாக நம்புகிறார்.
தமிழில்: சோனியா போஸ்