“காய்ந்து கொண்டிருக்கும் வண்டல் மண்ணிலிருந்து எழும் தூசும் இந்த சேற்றில் உள்ள மாசும் ரொம்ப மோசமானவை” என்கிறார் பட்டணம்திட்டாவைச் சேர்ந்த டத்தன் சி.எஸ். “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகமூடியை நீட்டுகிறார். அவர் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு பெண் இதை கேட்டு சிரிக்கிறார். அந்தப் பெண்ணின் வயலும் கேரள வெள்ளத்தில் அழிந்திருக்கிறது. “அவர் மும்பையில் வாழ்கிறார்” என்று கிண்டல் செய்தார். “அவருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவைப்படும்?”

வயல்வெளிகள் பேரழிவின் காட்சியாக நிற்கின்றன. முன்பு மிகச் சிறப்பான, நெல்லையும் மரவள்ளிக் கிழங்கையும் பயிரிட்டு லாபம் ஈட்டித் தரக்கூடிய நிலங்களில் ஆற்றுப் படுகையிலிருந்து அடித்துவரப்பட்ட சகதி பல அங்குல உயரத்திற்கு இருக்கிறது. சில இடங்களில் அடி உயரத்திற்கு சகதி படிந்திருக்கிறது.  வேறு சில இடங்களில் ஆற்றில் அடித்துவர்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள் நிரம்பிக்கிடக்கின்றன.  பல ஏக்கர் விவசாய நிலம், இம்மாதிரியான சகதி மற்றும் கழிவுகளால் போர்த்தப்பட்டு, வெயிலில் காய்ந்து ஒரு சிமென்ட் போர்வையைப் போல நிலத்தில் படிந்து கிடக்கிறது.

நிலத்தடி நீர் கீழே போய்க்கொண்டேயிருக்கிறது. நிலத்தடிக்கு நீர் சென்று சேரவில்லை. கிணறுகள் காய ஆரம்பித்திருக்கின்றன.  வெப்பம் உயர்ந்துகொண்டே வருகிறது.  இவையெல்லாம் சேர்ந்து தரையின் மேல் பரப்பில் உள்ள நீருக்கும் நிலத்தடி நீருக்கும் இடையிலான சமன்பாட்டைக் குலைத்து வருகின்றன.  ஆறுகளின் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மாறியிருக்கிறது. மணல் படுகை இல்லாததால், பல ஆறுகளால் தண்ணீரை உறிஞ்சி வைக்க முடியவில்லை.  ஆகவே, கேரளா எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சனை பஞ்சமாக இருக்கலாம். இம்மாதிரியான ஒரு சூழலில் மீண்டும் விவசாயத்தில் ஈடுபடத்தக்க சூழலை உருவாக்குவதென்பது, மிக உறுதியானவர்களைக்கூட நிராசையடையச் செய்யும்.

ஆனால், குடும்பஸ்ரீ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அப்படி  நம்பிக்கையிழப்பவர்கள் அல்ல. குடும்பஸ்ரீ அமைப்பில் கிட்டத்தட்ட 45 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  வயது வந்த எல்லா பெண்களும் உறுப்பினராகலாம், ஆனால் ஒரு குடும்பத்திலிருந்து ஒரே ஒரு பெண் மட்டும்தான் உறுப்பினராக முடியும். அப்படியென்றால் மொத்தமுள்ள 77 லட்சம் வீடுகளில் கிட்டதட்ட 60 சதவிகிதம் வீடுகளிலாவது குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் இருக்கிறார்கள். குடும்பஸ்ரீயின் மையமாக இருப்பது 3.2 லட்சம் பெண் விவசாயிகள். தங்களை சங்க கிருஷிகளாக அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் – கூட்டு விவசாயம் செய்யும் சிறு குழுக்கள்.
Silt now covers a lot of the farmland, running several inches – sometimes feet – deep
PHOTO • P. Sainath

விவசாய நிலங்களில் பெரும்பாலானவற்றை வண்டல் மூடியிருக்கிறது. சில அங்குலங்கள் சமயங்களில் அடி வரை அவை இறங்கியிருக்கிறது.

3.23 லட்சம் பெண்களையும் உள்ளடக்கிய 45 லட்சம் உறுப்பினர்களை கொண்ட குடும்பஸ்ரீ உலகின் மிகப் பெரிய பாலின நீதி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாக இருக்கலாம்.

மொத்தம் 70,000 சங்க கிருஷிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் தோராயமாக 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவும் குத்தகை நிலத்தில்தான் உழைக்கிறார்கள். பொதுவாக இரண்டரை ஏக்கருக்கும் குறைவான நிலம். சில நேரங்களில் வெறும் ஒரு ஏக்கர்.  பெரும்பாலானவர்கள் இயற்கை விவசாயமோ அல்லது குறைந்த இடுபொருள் தேவைப்படும் நீடித்த விவசாயமோதான் செய்கிறார்கள். விவசாயம் மோசமான ஒரு நிலையில் இருக்கும் இந்த நாட்டில் இந்த பெண்கள் அவர்களது சின்ன குத்தகை நிலத்தில் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் உணவு நீதி என்னும் கொள்கையின் அடிப்படையில் உழைக்கிறார்கள்.  இந்த குழுக்களுடைய குடும்பங்களின் தேவைகள் பூர்த்தியான பிறகு மீதி விளைபொருட்கள்தான் சந்தையில் விற்கப்படும்.

அவர்களுடைய திறன் மற்றும் வெற்றி ஒரு விஷயத்தை உறுதி செய்தது. நாட்டின் பிற பகுதிகள் போல அல்லாமல் இங்கு வங்கிகள் அவர்களுக்கு பின்னால் ஓடின. நாங்கள் இப்போது இருக்கும் பட்டணம்திட்டாவில் வங்கிக்கு கடன் திரும்ப செலுத்தும் விகிதம் 98.5 சதவிகிதமாக இருக்கிறது. சில கிராமங்களில் உள்ளூர் வங்கியில் அதிகமான வைப்பு நிதி குடும்பஸ்ரீ பெயரிலேயே இருக்கிறது.

ஆனால் இப்போது சங்க கிருஷிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அனேகமாக மாநிலம் முழுவதுமாக அவர்கள் 400 கோடி ரூபாய் இழந்திருக்கலாம். அதில் பயிர்களால் ஏற்பட்ட அழிவு மட்டும் 200 கோடி ரூபாய் இருக்கும். பிறகு மண் வள இழப்பு, நில இழப்பு, வாங்கிய கடன்களின் இழப்புகள் மற்றும்  இதர இழப்புகள். ஒவ்வொன்றுக்குமான மதிப்பு தெரிய வரும் போது இழப்பு இன்னும் கூடுதலாக இருக்கலாம்.
PHOTO • P. Sainath

ரன்னி அங்காடி பஞ்சாயத்து அலுவலகத்தில் பல சங்க கிருஷி குழுக்களிலிருந்து வந்திருக்கும் குடும்பஸ்ரீ உறுப்பினர்களின் உற்சாகமான சந்திப்பு.

ரன்னி வட்டத்திலுள்ள ஒன்பது பஞ்சாயத்துகளில் 92 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் 71 விவசாயக் குழுக்கள் இந்த வருடம் வங்கிக் கடனாக 72 லட்சம் பெற்றிருக்கின்றன. “எல்லாம் வெள்ளத்தோடு போய்விட்டது” என்கிறார் குடும்பஸ்ரீயின் களப்பணியாளரும் குழு விவசாயியுமான ஓமனா ராஜன். அவரது சங்க கிருஷியான மன்னா (புனித பரிசு) வாழை சாகுபடியில் மட்டும் 2 லட்சம் லாபம் ஈட்டியிருந்தது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் கடந்த வருடம் 50,000 ரூபாய் லாபம் ஈட்டியிருந்தார்கள். “இயற்கை விவசாயம் என்பதால் கூடுதல் விலை கிடைக்கும். ஆனால் இந்த வருடம் எங்களுக்கு மிக அதிக விலை தரக் கூடிய ஓணம் பண்டிகையை தவற விட்டுவிட்டோம். எல்லாமே அழிந்துவிட்டது. ஆனாலும் நாங்கள் மீண்டும் கட்டியமைப்போம்.”

ரன்னி அங்காடி கிராமத்தில் நேர்ந்த அழிவை பார்வையிட்டுக்கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் 71 சங்க கிருஷிகளில் பத்துக்கும் குறைவான சங்க கிருஷிகளிடத்தில்தான் காப்பீடு இருக்கிறது. குத்தகை நிலத்திற்கு அதை வாங்குவதும் கடினம். விவசாயத்துறையில் எம்.எஸ்சி படித்து கேரள அரசின் மண்வள பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் டத்தன் ஒரு நிபுணரின் பார்வையில் அங்கு நடந்த சேதத்தை பார்த்துக் கொண்டிருந்தார். குடும்பஸ்ரீயோடு பணிபுரிய அவர் தற்காலிகமாக அனுப்பப்பட்டிருந்தார். மும்பையிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் மாசிலிருந்து பாதுகாப்பு தேவையில்லை என்று கிண்டல் செய்த பின்சி பிஜாய் குடும்பஸ்ரீயின் களப்பணியாளர். அவர் விவசாயத்தை செய்பவராக சேதத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.

எப்படிப்பார்த்தாலும்,  சேதம் மலைக்க வைக்கிறது. ஆனால் இந்த பெண்களின் தைரியமும் உற்சாகமும் கேரள வெள்ளத்தில் பாதிப்புகளோடு ஒப்பிடும் போது தலைகீழாக அதிகமாகியிருக்கிறது. ஒரு நூற்றாண்டில் கேரளா பார்த்திராத வெள்ளம் அது. ரன்னி அங்காடி பஞ்சாயத்து அலுவலகத்தில் எங்களது முதல் சந்திப்பின் போது அவர்கள் சிரித்துக்கொண்டும் உற்சாகமாக பேசிக்கொண்டும் இருந்தார்கள். பஞ்சாயத்து தலைவர் பேபி புல்லட் அதைப் பற்றி கிண்டலடித்தார். “இந்த நபர் எழுத வந்திருக்கும் மிகப்பெரிய துயரத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம்” என்று அவர்களிடம் சொன்னார். “ஆனால் நீங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் என்ன நினைப்பார்? நாம் கொஞ்சமாவது சீரியஸாக இருக்க வேண்டாமா?” என்று அவர் சொன்னதும் இன்னும் அதிகமாக சிரித்தார்கள். பெண்களில் பலர் என்னுடன் இந்தியில் பேச வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்கும் எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் என்ற போதிலும். ஆனால் நான் மும்பையிலிருந்து வந்திருக்கிறேன். அதனால் இந்தியில்தான் பேச வேண்டும்.
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

ரன்னி அங்காடியில் உள்ள இந்த வீட்டில் மேற்கூரை வரை வெள்ளம் பாய்ந்தது. (வலது) ஒட்டுமொத்த வாழை மட்டும்  மரவள்ளிக்கிழங்கு பயிர் சேதமடைந்தது

ஒரு ஏக்கரில் வாழையை விளைவிக்க மூன்று லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என்கிறார் பிஜாய். “ஒரு ஏக்கரில் நாங்கள் 1000 செடிகளை பயிரிட முடியும். ஒவ்வொரு செடியும் 300 ரூபாய். தவிர இயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கும் கொஞ்சம் செலவாகும். பிறகு கூலியும் அதிகம் தர வேண்டியிருக்கும்.” ஆனால் ஒரு ஏக்கரில் 10 முதல் 12 டன் வாழை கிடைக்கும். ஒரு கிலோ வாழையை 60 ரூபாய் வரை விற்கலாம். அதனால் 1.5 முதல் 2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். பல குழுக்கள் கடந்த வருடம் அப்படிதான் லாபம் பார்த்தன. “தவிர, ஓணம் பண்டிகையின் போது நிறைய விலை கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 80 முதல் 85 ரூபாய் வரை” என்கிறார் சங்கமம் என்கிற சங்க கிருஷியைச் சேர்ந்த ஷைனி.

கடந்த வருடம் சங்கமத்தின் ஆறு உறுப்பினர்களும் ஆளுக்கு 50,000 ரூபாய் லாபம் ஈட்டினார்கள்.  “இந்த வருடம் எல்லாம் தொலைந்துவிட்டது. மூன்று ஏக்கர்களும் முடிந்து விட்டது. ஒவ்வொரு ஏக்கரிலும் இருக்கும்  தூசுகளையும் வண்டல்களையும் அகற்றவே ஒரு லட்சம் ஆகலாம்” என்கிறார் ஜோசப். “கால்வாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் அதற்கு முன்பாகவே முடிக்க முயற்சி செய்கிறோம். இப்போது எல்லாம் காய்ந்து போய்க்கொண்டிருக்கிறது. வறட்சியை எதிர்நோக்கியிருக்கிறோம்.”

நாங்கள் பேசிய ஒவ்வொரு பெண் விவசாயியும் அவர்களால் மீண்டும் இதை கட்டியெழுப்ப முடியும் என்று மிக தீவிரமாக நம்பினார்கள். சேதம் எவ்வளவு மோசம் என்று அவர்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் அவர்களுடைய மனவுறுதி அவர்கள் சந்தித்த பேரழிவை விட தீவிரமானதாக இருக்கிறது. “எங்களுடையது கூட்டு வலிமை. எங்களது ஓர்மையிலிருந்துதான் நாங்கள் எங்களுடைய துணிவையும் மனவுறுதியையும் பெறுகிறோம். குடும்பஸ்ரீ என்பதே ஓர்மையோடு இருப்பதுதான்.”  இதை அவர்கள் திரும்பத் திரும்ப சொல்வதை நான் பல வருடங்களாக கேட்டு வந்திருக்கிறேன்.  மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கேரள வெள்ளத்திற்கு பின் அவர்கள் அந்த வார்த்தைகளை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
PHOTO • P. Sainath

நிலங்களை சுத்தம் செய்ய பெண்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது போல நடுவில் பாளம் பாளமாக இறுகிவிட்ட நிலங்களை சுத்தம் செய்வது மிக கடினமானது

எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் மாநிலம் முழுவதும் சங்க கிருஷி விவசாயிகள் தங்களால் முடிந்த பங்களிப்பை அனுப்ப, குடும்பஸ்ரீ முதல்வர் நிவாரண நிதிக்கு ஏழு கோடி ரூபாய் தந்திருக்கிறது. செப்டம்பர் 11 அன்று இன்னொரு நெகிழ்ச்சியான தருணம் அவர்களுக்கு வாய்த்தது. அன்று புது தில்லியில் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (National Rural Livelihoods Mission) விவசாய வாழ்வாதாரங்களில் மிகச்சிறந்த செயல்பாட்டுக்காக குடும்பஸ்ரீக்கு விருது கொடுத்தது. அந்த அமைப்பு அப்படியொரு விருது தருவது அதுவே முதல் முறை.

உலகிலேயே மிக பெரிய பாலின நீதி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாக குடும்பஸ்ரீ இருக்க கூடும். 1998ல் அரசின் ஒரு திட்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த பெண்கள் அவர்கள் அப்போதிலிருந்து கூட்டு முயற்சியில் கட்டியெழுப்பிய சுதந்திரத்தையும் சுயாட்சியையும் மிக முக்கியமாக நினைக்கிறார்கள். “நாங்கள் அரசுகளோடு பணி செய்கிறோம், அரசுகளுக்காக அல்ல” என்பது அவர்களிடத்தில் ஒரு முழக்கம் போல. அவர்களுடைய சுதந்திரம், துணிவு எல்லாம் தாண்டி அவர்களுக்கு இன்று தேவைப்படுவதெல்லாம் வங்கிகளின், பிற நிறுவனங்களின் உதவி. பிறகு நம்முடைய ஆதரவு. ஏழைப் பெண்கள் தலைமையேற்று நடத்தும் இந்த உன்னதமான வேளான்மை முயற்சிக்கு நிகராக இந்தியாவில் எங்கும் எந்தவொரு திட்டத்தையும் பார்க்க முடியாது.  நிச்சயமாக அதன் நோக்கம், எண்ணிக்கை மற்றும் சாதனைகளில் அப்படியொரு திட்டத்தை எங்குமே பார்க்க முடியாது.

பிற சங்க கிருஷிகளை பார்க்க கிளம்பும் போது ஒரு பெண் வந்து சொல்கிறார்: “நாங்கள் மீண்டெழுவோம். மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்தான் ஆனால் மீண்டெழுவோம். இன்னும் ஒரே மாதத்தில் பயிரிடத் தொடங்குவோம். நீங்கள் பார்ப்பீர்கள்.”

மொழிபெயர்ப்பு: கவிதா முரளிதரன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan