"பழமைவாத சமுதாயத்தில், பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகராக (ஆணாக) வாழ்வது மிகவும் கடினம்", என்று 52 வயதான ஓம்பிரகாஷ் சவான் கூறுகிறார், இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக 8,000 க்கும் மேற்பட்ட தசாவதார நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தசாவதார் என்பது தெற்கு மஹாராஷ்டிரா மற்றும் வடக்கு கோவாவில் ஒரு மதரீதியிலான நாட்டுப்புற நாடக வடிவமாகும், இது குறைந்தது 500 ஆண்டுகள் பழமையானது. இது விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிய புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது - மச்ச (மீன்), கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்ம (சிங்க மனிதன்), வாமன (குள்ளன்), பரசுராமா, ராமர், கிருஷ்ணா (அல்லது பலராமா), புத்தர் மற்றும் கல்கி ஆகியவையே அந்த பத்து அவதாரங்கள். நாடகங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன, பல மணி நேரங்கள் நீளமானவை இந்நாடகங்கள், மற்றும் பொதுவாக பருவகால விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் இந்நாடகம் நிகழ்த்தப்படுகின்றது. பாரம்பரியமாக, இவை கோயில்களுக்குள் நடத்தப்படும் மற்றும் ஆண்கள் மட்டுமே நடிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், நெல் அறுவடை முடிந்தவுடன், தசாவதார நாடக நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்திலும், வடக்கு கோவாவின் சில பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய துவங்குகின்றனர். கோயில்கள், கிராம தெய்வத்திற்கான வருடாந்திர ஜதாராவில் (திருவிழா) நாடக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை வளங்குகின்றன, இங்குள்ள பார்வையாளர்கள் உள்ளூர்வாசிகளும் மற்றும் மும்பையில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோரும் ஆவர். இந்நிறுவனங்கள் சுமார் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது - இதில் 8 - 10 நடிகர்கள், 3 இசைக் கலைஞர்கள், மற்றும் 2 சமையல்காரர்களும் உள்ளனர்- இவர்கள் ஒரு பருவத்திற்கு (அக்டோபர் முதல் மே வரை) சுமார் 200 நாடகங்களை நிகழ்த்துகின்றனர்.
சில நேரங்களில், இந்நிறுவனங்களுக்கு வீடுகளில் இவர்களின் நிகழ்ச்சிகளை நடத்த மக்களிடம் இருந்து அழைப்பு வரும், அங்கு புராண கதாபாத்திரங்கள் இருக்கும், ஆனால் கதை கற்பனையாக இருக்கும். அதே வேளையில், கோவிலில் நடக்கும் நாடக நிகழ்ச்சிகள் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட மராத்தியில் இருக்கும், அதுவே மக்களின் வீடுகளில் நடக்கும் நாடக நிகழ்ச்சிகள் உள்ளூர் மால்வானி மொழியில் இருக்கும்.
2014 ஆம் ஆண்டு முதல் யக்ஷினி தசாவதார நிறுவனம் மற்றும் பர்சேகர் நிறுவனம் ஆகிய இரண்டும் பல கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது நான் புகைப்படம் எடுத்துள்ளேன். அவர்களின் நிகழ்ச்சிகள் நள்ளிரவில் துவங்கி சூரிய உதயம் வரை நடைபெறும். மொத்த குடும்பமும் நாடகங்களைக் காண வரும், சிறு குழந்தைகள் கூட அவற்றை பார்க்க தங்கியிருப்பார்கள். இக்கலைஞர்கள் அவர்களின் மேம்பாடுகள் மற்றும் பிரபலமான கதையின் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் மக்களின் முன் நாடகங்களில் நிகழ்த்திக் காட்டுகின்றனர்.
தமிழில்: சோனியா போஸ்