தமிழ்நாட்டின் ஓசூர் தாலுகாவில் ஜனவரி மாதம் அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் உலர வைக்கப்பட்டுள்ளன. கேழ்வரகு பயிர்களை ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைப்பதால் தண்டிலிருந்து விதைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் வந்து சேரும் என்கின்றனர் விவசாயிகள்.
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் சிலர் கைவிடப்பட்ட சின்ன கொட்டகை நிழலில் நிற்கின்றனர். அவர்களில் நீலநிற காதி வேட்டியும், வெயிலை தாங்க தலையில் முண்டாசும் கட்டியுள்ள 52 வயது நாராயணப்பாவும் ஒருவர். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பலவனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவர் 1.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மழை காலத்திற்குப் பிறகு கேழ்வரகு, கொள்ளு பயிரிடுகிறார். அவரது கிராமத்திலிருந்து ஒரு மணி நேரம் நடந்தால் பரபரப்பான தொழிற்பேட்டையாக திகழும் ஓசூருக்கு சென்றுவிடலாம்.
*****
“விவசாயம் எங்கள் குடும்பத் தொழில். இளம் வயதிலேயே இத்தொழிலுக்கு தள்ளப்பட்டேன். கேழ்வரகு பயிரிடுவதில் உள்ள நன்மை என்னவென்றால் மழை நீர் மட்டுமே போதும் என்பதால் வெளியிலிருந்து நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை. பூச்சிகளும் தாக்காது. ஏப்ரல், மே மாதங்களில் விதைத்தால் எனக்கு நல்ல அறுவடை கிடைக்கும். விதைத்து ஐந்து மாதங்களில் அறுவடை செய்யலாம். கதிரடித்தலை நாமே செய்ய வேண்டும். என்னால் தலா 100 கிலோ எடையிலான 13-15 மூட்டை கேழ்வரகை அறுவடை செய்ய முடியும். எங்களுக்கு கொஞ்சம் வைத்துக் கொண்டு மிச்சத்தை கிலோ 30 ரூபாய்க்கு விற்போம். கிடைத்த வருமானத்தில் 80 சதவிகிதத்தை அடுத்த அறுவடைக்கு நான் முதலீடு செய்கிறேன்.
பயிர் வளரும் காலத்தில் நாங்கள் பல சவால்களை சந்திக்கிறோம். கூட்டம் கூட்டமாக மயில்களும், மந்திகளும் வந்து பயிர்களை அழித்துவிடுகின்றன. நான் கவனிக்காவிட்டால் ஓர் இரவில் முழு பயிர்களும் அழிந்துவிடும். நாங்கள் எப்போதும் மழை, பனி, குளிர் காற்றின் கருணையை நம்பியிருக்கிறோம். எங்கள் கடின உழைப்பின் பலனை, கணிக்க முடியாத மழை கொண்டு சென்றுவிடுகிறது.
முழு நேர விவசாயியாக இருந்துகொண்டு வாழ்நாளை நடத்துவது சாத்தியமற்றது. நான் 35,000 முதல் 38,000 ரூபாய் வரை செலவிட்டால் தான் 45,000 ரூபாய் சம்பாதிக்க முடியும். ஒரு சீசனுக்கு 10,000 ரூபாய் வரை கிடைக்கிறது. இதனால் அன்றாட செலவுகளுக்கு போதாமல் கடன் வாங்க நேரிடுகிறது.
அடுத்த அறுவடைக்கு நிலத்தை தயார் செய்வது, தண்ணீர் வரி, பழைய கடன்களை அடைப்பது என அனைத்து பணத்தையும் நான் செலவழித்துவிட்டேன்.
அடுத்த 5 மாதங்களுக்கு என் குடும்பத்தை நடத்துவதற்கு என்னிடம் 5000 ரூபாய் மட்டுமே உள்ளது. என் மனைவி தின்கூலியாக வேலை செய்கிறார். என் மகன் விவசாயத்தில் எனக்கு உதவியாக இருக்கிறான். பணமில்லாமல் என் மகனை படிக்க வைக்க முடியவில்லை. அறுவடைக்கும், களை எடுக்கவும் எனது கிராமத்தில் தொழிலாளர்களை அழைக்கிறேன். இதற்கு தினக்கூலியாக அவர்களுக்கு 400 ரூபாய் கொடுக்கிறேன்.
நான் இரண்டு நாட்டுப் பசு மாடுகளை வைத்துள்ளேன். அவை ஒரு நாளுக்கு சுமார் 10 லிட்டர் பால் தருகிறது. பால் விற்பதில் அவற்றை பராமரிப்பது, உணவளிப்பது போன்ற செலவு போக மாதம் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
என்னால் குறைந்த வருமானமே சம்பாதிக்க முடிவதால் குடும்ப தேவைகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. கடந்த 20 ஆண்டுகளில், பஞ்சாயத்திடம் நாங்கள் உதவி கேட்டுள்ளோம். எட்டுத் தலைவர்கள் மாறினாலும், எங்கள் வாழ்வில் பெரிய மாற்றமில்லை. இயற்கை பேரிடர்களில் பயிர்கள் நாசமடைந்தாலும் மானியத் தொகையை அரசு உயர்த்துவதில்லை.
இத்தனை போராட்டங்களிலும் வயல்களில் இறங்கி வேலை செய்வதை மகிழ்வாக உணர்கிறேன். அக்கம்பக்கத்தினருடன் நான் நல்லுறவில் இருக்கிறேன்.”
இக்கட்டுரைக்கு தமிழ்நாடு, ஓசூரில் உள்ள டிவிஎஸ் அகாடமியைச் சேர்ந்த சஹானா, பிரணவ் அக்ஷய், திவ்யா, உஷா எம்.ஆர். ஆகிய மாணவர்கள் செய்தி சேகரித்தனர். அவர்கள் பாரியின் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்றனர்.
தமிழில்: சவிதா