“மது மீதான தடை எங்கே போனது?’ எனக் கேட்கும் கவுரி பர்மாரின் குரலில் கசப்பும் எள்ளலும் தொனிக்கிறது.
“அது மோசடியாக இருக்கும். அல்லது என் கிராமம் குஜராத்தில் இல்லை,” என்கிறார் கவுரி. என் கிராமத்திலுள்ள ஆண்கள் பல ஆண்டுகளாக குடித்துக் கொண்டிருக்கின்றனர்.” அவரின் கிராமமான ரோஜித், குஜராத்தின் பொதாத் மாவட்டத்தில் இருக்கிறது.
இந்தியாவின் ‘வறண்ட’ மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. அங்குள்ள மக்கள் மதுவை வாங்கவோ குடிக்கவோ முடியாது. மது தயாரிப்பதும் விற்பதும் குஜராத் மதுவிலக்கு சட்டத்திருத்தம் 2017-ன்படி ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை பெற்றுத் தரும்.
ஆனால் 50 வயது கவுரி, 30 வருடங்களுக்கு முன் மணமாகி ரோஜித்துக்கு வந்ததிலிருந்து, அந்த விதி புறக்கணிக்கப்படுவதை பார்த்து வருகிறார். உள்ளூரிலேயே சாராயம் காய்ச்சப்பட்டு விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பாலிதீன் பைகளில் விற்கபடுவதை அவர் பார்த்திருக்கிறார்.
இத்தகைய மது தயாரிக்கப்படுவது மரணத்தை கூட விளைவிக்கும். கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் போதைக்காக விஷத்தன்மை கொண்ட வஸ்துகளை பயன்படுத்துகின்றனர். “அவர்கள் சானிடைசர், யூரியா, மெத்தனால் போன்றவற்றை கலப்பார்கள்,” என்கிறார் கவுரி.
இத்தகைய கள்ளச்சாராயம் ஜுலை 2022-ல் 42 பேரை குஜராத்தில் கொன்றது. கிட்டத்தட்ட 100 பேர் அகமதாபாத்திலும் பவ்நகரிலும் பொதாதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களில் 11 பேர், ரோஜித் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
“என்னுடைய மகன் வஸ்ரமும் அவர்களில் ஒருவன்,” என்கிறார் கவுரி. 30 வயது வஸ்ரம்தான், மனைவியும் 4 வயது, 2 வயது குழந்தைகளும் இருக்கும் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர். அவர்கள் குஜராத்தின் பட்டியல் சாதியான வால்மிகி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
ஜுலை 25, 2022 காலையை கவுரி நினைவுகூருகிறார். வஸ்ரம் அசவுகரியுமாக உணர்ந்தார். மூச்சுத் திணறல் இருந்தது. குடும்பம் அவரை பர்வாலாவில் இருக்கும் தனியார் மருத்துவ மையத்துக்குக் கொண்டு சென்றனர். தேவையான மருத்துவ வசதிகள் இல்லையென மருத்துவர் கூறினார். பிறகு வஸ்ரம், பர்வாலாவில் இருக்கும் சமூக மருத்துவ மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டர். “அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஊசி போட்டு ட்ரிப்ஸ் ஏற்றினார்கள்,” என்கிறார் கவுரி. “பிற்பகல் 12.30 மணிக்கு அவரை பொதாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினார்கள்.”
மருத்துவமனை 45 நிமிட பயண தூரத்தில் இருந்தது. பயணத்தில் வஸ்ரம் நெஞ்சு வலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். “மூச்சு விட சிரமமாக இருப்பதாக சொன்னார்,” என்கிறார் கவுரி. “வாந்தியும் எடுத்துக் கொண்டிருந்தார்.”
பொதாத் மாவட்ட மருத்துவமனையில் என்ன பிரச்சினை என்பதை மருத்துவர்கள் அவரிடம் சொல்லவில்லை. ஒரு தகவலும் இல்லை என்கிறார் கவுரி. அவர்களை கேட்டபோது, வார்டை விட்டு செல்லுமாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மகனின் நெஞ்சை மருத்துவர்கள் அழுத்திக் கொண்டிருப்பதை கையறுநிலையில் பார்த்துக் கொண்டிருந்தார் கவுரி. வஸ்ரமை இந்த நிலைக்கு மதுதான் கொண்டு வந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் எந்தளவுக்கு சேதத்தை அது ஏற்படுத்துகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. “என்ன ஆனது என நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. உங்களின் மகன் மருத்துவமனையில் இருக்கும்போது மருத்துவர்கள் உங்களிடம் பேச வேண்டும். கெட்ட சேதி என்றாலும் உங்களுக்கு அவர்கள் சொல்ல வேண்டும்,” என்கிறார் அவர்.
ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழும் மக்களிடம் மருத்துவர்கள் காட்டும் அலட்சியம் புதிதொன்றும் இல்லை. “ஏழைகளுக்கு யாருமே கவனம் செலுத்துவதில்லை,” என்கிறார் கவுரி.
இதனால்தான் நோயாளிகளுக்கான உரிமைகள் மற்றும் கடமைகளுக்கான சாசனம் , (மருத்துவ நிறுவனங்களுக்கான தேசிய கவுன்சிலால் 2021-ல் அங்கீகரிக்கப்பட்டது) “நோய்க்கான காரணம், இயல்பு போன்றவற்றுக்கான போதுமான தகவல்கள்” பெறும் உரிமை நோயாளிக்கும் நோயாளியை சார்ந்தவருக்கும் இருப்பதாக கூறுகிறது. சமூகரீதியான (பொருளாதார, சாதிய) வேற்றுமைகள் சிகிச்சையில் காட்டப்படக் கூடாது என்றும் சாசனம் கூறுகிறது.
சில மணி நேரங்கள் கழித்து வார்டை விட்டு கவுரியை கிளம்பச் சொல்லியிருக்கிறார்கள். மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் வஸ்ரமை பொதாதின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி காரணமேதும் குறிப்பிடாமல் கூறியிருக்கின்றனர். தனியாருக்குக் கொண்டு செல்லப்பட்ட வஸ்ரம் மாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார்.
“மதுவுக்கு தடை என்பது வேடிக்கைதான்,” என்கிறார் கவுரி. “குஜராத்திலுள்ள அனைவரும் குடிக்கின்றனர். ஆனால் அதில் ஏழைகள் மட்டுமே இறக்கிறார்கள்.”
விஷசாராயம் என்பது குஜராத்தில் நாற்பது வருடங்களாக பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. விஷ சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கான பேர் இறந்திருக்கின்றனர். விஷ சாராய துயரங்களிலேயே பெருந்துயரம் ஜூலை 2009ல் நேர்ந்ததுதான். அகமதாபாத் மாவட்டத்தில் 150 பேர் இறந்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன் மார்ச் 1989-ல் வடோதரா மாவட்டத்தில் 135 பேர் இறந்தனர். பெருமளவிலான மரணம் முதன்முதலாக 1977ம் ஆண்டு அகமதாபாத்தில் நேர்ந்தது. சராங்க்பூர் தவுலத்கானா பகுதியில் 101 பேர் இறந்தனர். இந்த சம்பவங்கள் எல்லாவற்றிலும் எரி சாராயம் எனப்படும் மெத்தனால் அதிகரித்ததே காரணமாக இருந்திருக்கிறது.
மது தயாரிப்பதற்கென வரையறுக்கப்பட்ட முறை எதுவும் கிடையாது. வழக்கமாக வெல்லப்பாகு அல்லது கரும்பு மிச்ச சாற்றை நொதிக்க வைத்து, காய்ச்சி நாட்டு சாராயம் தயாரிக்கப்படும். தேவை அதிகமாக இருக்கும் போது காய்ச்சுபவர்கள், தொழிற்சாலை எத்தனாலை பயன்படுத்துகின்றனர். சானிடைசர்களிலும் அதிக விஷத்தன்மை வாய்ந்த மெத்தனாலிலும் எத்தனால் இருக்கிறது.
பெரும் பிரச்சினையின் ஒரு துளிதான் இது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சாராய புழக்க வணிகத்தில் (சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமின்றி) காவலர்களும் அரசியல்வாதிகளும் உள்ளடக்கம் என்கிறார் அகமதாபாத்தின் மூத்த சமூகவியலாளர் கன்ஷியாம் ஷா.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க பல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. லத்தா (சாராயம்) விசாரணை கமிஷன் 2009ம் ஆண்டு நிகழ்வுக்கு பிறகு அமைக்கப்பட்டது. நீதிபதி கே.எம்.மேத்தா தலைமை தாங்கினார். மது விலக்கு கொள்கை அமல்படுத்தப்படுவதில் உள்ள குறைபாடுகளை அந்த ஆணையம் சுட்டிக் காட்டியது.
விஷ சாராயம் குஜராத்தில் நாற்பது ஆண்டுகளாக பொது சுகாதாரப் பிரச்சினையாக நீடிக்கிறது. விஷ சாராயம் குடித்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மோசமான நிகழ்வு ஜூலை 2009-ல் நேர்ந்தது
மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே மது குஜராத்தில் அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மருத்துவர் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் மது அருந்த அனுமதி உண்டு. அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மது வாங்க அவர்கள் தற்காலிக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
“மத்திய தர மற்றும் உயர் மத்திய தர வர்க்கங்களுக்கு குறிப்பிட்ட விலைகளில் மது கிடைக்கிறது,” என்கிறார் ஷா. “ஏழைகள் அவற்றை வாங்க முடியாது. எனவே கிராமங்களில் தயாரிக்கப்படும் மலிவான மதுவை நோக்கி அவர்கள் செல்கின்றனர்.”
கள்ள சாராயம் குடிப்பவரை உடனடியாக கொல்லாவிட்டாலும், பார்வை பறிபோகலாம், வலிப்பு வரலாம், மூளைக்கும் கல்லீரலுக்கும் நிரந்தர சேதம் விளையலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குஜராத்தின் பொது சுகாதார கட்டமைப்பில் இத்தகைய சுகாதாரப் பிரச்சினை சந்திக்க தேவையான வசதிகள் இல்லை.
உதாரணமாக கிராமப்பகுதி மக்களுக்கான அவசர கால மையங்களான மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு படுக்கைகள் கிடையாது. மாவட்ட மருத்துவமனைகளின் செயல்பாடு குறித்த நிதி அயோக்கின் 2021ம் ஆண்டு அறிக்கை யின்படி குஜராத்தில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் 19 படுக்கைகள்தான் இருக்கின்றன. தேசிய சராசரியான 24-ஐ விட இது குறைவு.
மேலும் மாவட்ட, துணை மாவட்ட மருத்துமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. கிராமப்புற குஜராத்துக்கு 74 மருத்துவர்கள்தான் இருக்கின்றனர். கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பு (2020-21)ன்படி 799 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 588 பேர் மட்டுமே இருக்கின்றனர்.
மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் 333 சமூக மருத்துவ மையங்களில் அறுவை சிகிச்சையாளர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள், குழந்தை நோய் மருத்துவர்கள் போன்ற 1,197 திறன்சார் மருத்துவருக்கான இடங்கள் காலியாக இருக்கிறது.
ஜூலை 26, 2022 அன்று பவ் நகரின் சர் டி மருத்துவமனைக்கு தந்தையைக் கூட்டி சென்றபோது தினக்கூலி தொழிலாளரும் விவசாயத் தொழிலாளருமான 24 வயது கரன் வீர்கமா அங்கு வேலைப்பளுவில் இருந்த ஊழியர்களை எதிர்கொண்டார். “எங்கு செல்வதென தெரியாதளவுக்கு மருத்துவமனையில் கூட்டம் நிரம்பியிருந்தது,” என்கிறார் அவர். “ஊழியர்கள் வேலை மும்முரத்தில் இருந்தனர். என்ன செய்வதென யாருக்கும் தெரியவில்லை.”
2009ம் ஆண்டில் மது தொடர்பான மரணங்களை கையாளுவதற்கான நெருக்கடி நேர தயார் நிலை இருக்கவில்லை என லத்தா விசாரணை கமிஷன் குறிப்பிடுகிறது. மெத்தனால் விஷத்துக்கென சிகிச்சை முறை இல்லையெனவும் அது குறிப்பிடுகிறது.
கரனின் தந்தை புபாத்பாய்க்கு 45 வயது. விவசாயத் தொழிலாளரான அவர் ரோஜித்தின் பலரை பாதித்த அதே சாராயத்தைதான் குடித்திருந்தார். அதிகாலை 6 மணிக்கு அவர் அசவுகரியமாக உணரத் தொடங்கினார். மூச்சு திணறத் தொடங்கியது.
பர்வாலா மருத்துவமனைக்கு அவரை கரன் அழைத்து சென்றபோது ஊழியர்கள் யாரும் புபத்பாயை பார்க்கவில்லை. பார்க்காமலேயே பவ் நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னார்கள். மதுவால் பலர் பாதிப்படைந்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். “என்ன பிரச்சினை என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது,” என்கிறார் கரன். “நேரத்தை வீணாக்காமல் பவ் நகருக்கு கொண்டு செல்ல சொல்லி விட்டார்கள். வசதிகளை பொறுத்தவரை இங்கிருக்கும் எங்களுக்கு அதுதான் சரியான வழி.”
ஆனால் மருத்துவமனை 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இரண்டு மணி நேரம் ஆகும். “ரோஜித்திலிருந்து பவ் நகருக்கு செல்லும் சாலை நன்றாக இருக்காது. அதனால்தான் இரண்டு மணி நேரங்கள்,” என்கிறார் 108 அவசர ஊர்தி ஓட்டும் பரேஷ் துலேரா.
புபத்பாயை வண்டியில் ஏற்றும்போது அவருக்கு ஸ்ட்ரெச்சர் தேவைப்படவில்லை என நினைவுகூருகிறார் துலெரா. “எந்த உதவியுமின்றி அவரே அவசர ஊர்தியில் ஏறினார்.”
பொது-தனியார் இணைவில் இயங்கும் அவசர ஊர்தி சேவை, நெருக்கடி நேரத்தில் மருத்துமனைக்கு முந்தைய பராமரிப்பை அளிக்கும். துணை செவிலியர் ஒருவரும் பொது செவிலியர் ஒருவரும் உடன் வருவார்கள் என்கிறார் துலேரா. மேலும் வாகனத்தில் ட்ரிப்ஸ் பாட்டில்கள், ஊசிகள், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவையும் இருக்கும்.
மருத்துவமனையில் நிலவிய குழப்பமான சூழலில், புபத்பாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “ஊழியர்கள் அவரை உள்ளே கொண்டு சென்றனர். கூட்டம் அதிகமிருந்ததால் நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை,” என்கிறார் கரன். “ஒரு மணி நேரம் கழித்து, அவர் உயிரிழந்து விட்டாரென எங்களுக்கு சொல்லப்பட்டது. எங்களால் நம்ப முடியவில்லை,” என்கிறார் அவர், அவசர ஊர்தியில் ஏறும்போது அவரது அப்பா நன்றாக இருந்தார் என்கிற விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லியபடி.
“அவர் இறந்துவிட்டார் என எனக்கு தெரியும்,” என்கிறார் கரன். “ஆனால் எப்படி ஏன் அவர் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு (குடும்பத்துக்கு) ஒரு முடிவான விளக்கம் தேவை.” அத்தகைய கொடும் விளைவுக்கான காரணம் அவர்களுக்கு விளக்கப்படவில்லை.
புபத்பாய் இறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் குடும்பத்துக்கு உடற்கூறு ஆய்வறிக்கை கொடுக்கப்படவில்லை.
ஜுலை 27, 2022 அன்று கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் வாங்கியதாக குற்றஞ்சாட்டி காவல்துறை ஒரு 15 பேரை கைது செய்தது . மாநிலம் முழுக்க கள்ளச்சாராயம் காய்ச்சுபவருக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டதாக ஜூலை 29ம் தேதி செய்தி வெளியானது. 2,400 பேர் கைது செய்யப்பட்டு, 1.5 கோடி மதிப்பிலான கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.
காவல்துறை நடவடிக்கை பொதாதில் வேகமாக இருந்தது. கள்ளச்சாராயப் பையின் விலை 20 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
பார்த் எம்.என், தாகூர் குடும்ப அறக்கட்டளையில் பெறும் சுயாதீன இதழியலுக்கான மானியத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றிய செய்திகளை எழுதுகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்