அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக ஓட்டுநர் உறுதியளித்தார். ஆனால் கார் எதிர்திசையில் விரைந்து கொண்டிருந்தது. முதல் U வளைவில் அவர் திரும்பாதபோது, கவனிக்கத் தவறியிருப்பாரென நேகா நினைத்தார். இரண்டாம் U வளைவும் கடக்கப்பட்ட போது 15 வயது சிறுமியின் சந்தேகம் வளர்ந்தது. மூன்றாம் முறையும் அது நடந்ததும், அவர் அச்சமுற்றார். கண்கள் கலங்கின. உடல்நலம் குன்றியது.

உறுதியற்ற தன்மையுடன் இருந்த அவர், பெற்றோரை பார்க்க வேண்டுமென அழுதார். காரில் அவருக்கருகே அமர்ந்திருந்த பெண்ணும் ஓட்டுநரும் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தனர். கவலைப்பட வேண்டாம் என்றனர்.

ஆனால், பெரும் சிக்கலில் இருப்பதை நேகாவால் உணர முடிந்தது. வீட்டை விட்டு வெளியேறுவது அவருடைய தன்னிச்சையான முடிவுதான். அதற்கு இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மே 2023-ல், அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிகம் செல்பேசியில் நேரம் கழிக்கிறாரென பெற்றோருக்கு கோபம். இறுதியில் நேகாவின் செல்பேசி பறிக்கப்பட்டது.

“செல்பேசியை என் பெற்றோர் பறித்ததும் நான் கடும் கோபம் கொண்டேன்,” என்கிறார் அவர் சன்னமான குரலில் நேரடியாக முகத்தை பார்க்காமல். “அங்கிருந்து சென்று விடத் தோன்றியது.”

எனவே அதிகாலை ஆறு மணிக்கு கிளம்பினார். அவரிருந்த பகுதியின் குறுகலான தெருக்களின் வழியாக நடந்து நெடுஞ்சாலையை அடைந்தார். பெற்றோர் மீது இருந்த கோபத்தில் 7-8 கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலையில் நடந்தார். பிறகுதான் ரொம்ப தூரம் வந்து விட்டதை அவர் உணர்ந்தார். வெயில் ஏறியிருந்ததால், அவருக்கு தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் பாட்டில் வாங்க காசில்லை.

பளபளப்பான ஒரு கறுப்பு செடான் கார் அவரின் முன் வந்து நின்றது. “ஒரு ஆண் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண் பின்னால் அமர்ந்திருந்தார்,” என நேகா நினைவுகூருகிறார். கண்ணாடியை இறக்கிய பெண், வீட்டுக்கு செல்ல லிஃப்ட் வேண்டுமா என நேகாவை கேட்டார். “நல்லவர்கள் போல இருந்தனர். அத்தனை தூரம் நடந்ததில் நான் களைத்திருந்தேன். பேருந்தில் டிக்கெட் எடுக்க என்னிடம் காசில்லை.”

நேகாவும் ஒப்புக் கொண்டார். குளிர்சாதனம் அவரை சாந்தப்படுத்தியது. தலையை சாய்த்து, நெற்றியில் இருந்த வியர்வையை கைக்குட்டையில் துடைத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலை அவருக்குக் கொடுத்தார் அப்பெண்.

ஆனால் அந்த நிம்மதி விரைவிலேயே அச்சமாக மாறவிருந்தது. அந்த ஆண், வீடு இருக்கும் இடத்துக்கு எதிர்திசை நோக்கி காரை ஓட்டி சென்றார். நேகா கத்த முயன்று போராடினார். ஒரு மணி நேரத்துக்கு பிறகுதான் கார் நின்றது. போபாலுக்கு வந்துவிட்டனர். நேகா கடத்தப்பட்டிருந்தார்.

குழந்தைகள் காணாமல் போகும் எண்ணிக்கையில் மத்தியப்பிரதேசம் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. 2016 தொடங்கி 2021 வரை, அம்மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக 60,031 பேர் (தேசிய குற்றத் தரவுகள்) காணாமல் போயிருந்தனர். 2022-ல், 11,717 பேர் காணாமல்போனதாக தெரிவித்தது CRY என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பிய தகவல் அறியும் உரிமை மனுக்கு பெறப்பட்ட பதில். சராசரியாக வருடத்துக்கு 10,250 குழந்தைகள். அதாவது ஒருநாளுக்கு 28 பேர். இந்தியாவின் வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை.

Madhya Pradesh consistently has the highest numbers of children that go missing in India

இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போகும் எண்ணிக்கை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில் அதிகமாக இருக்கிறது

தொலைந்து போனவர்களில் - 55,073 - நேகாவை போன்ற சிறுமிகள் 77 சதவிகிதம் பேர். “இந்த எண்ணிக்கையும் உறுதி கிடையாது. ஏனென்றால், தூரத்துப் பகுதிகளில் காணாமல் போனவர்களின் விவரம் பதிவாகியிருக்கவே செய்யாது,” என்கிறார் போபாலை சேர்ந்த செயற்பாட்டாளரான சச்சின் ஜெயின். மத்தியப்பிரதேசத்தில் தொலைந்து போகும் குழந்தைகள் பற்றிய தரவுகளை தொடர்ந்து பதிவு செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனமான விகாஸ் சம்வத் சமிதியில் அவர் பணிபுரிகிறார்.

இவற்றுக்கிடையில் புறநகரில் ஓரறை குடிசையில் வசித்து வந்த நேகாவின் பெற்றோரான ப்ரிதி மற்றும் ராமன் அக்கம்பக்கத்தாரையும் உறவினர்களையும் கூட்டி, சிறுமியை தேடினார்கள். “குற்றவுணர்வில் என்னை நானே திட்டிக் கொண்டேன்,” என்கிறார் ப்ரிதி. “மொத்தப் பகுதியையும் சுற்றி தேடினோம். ஆனால் அவள் எங்குமில்லை. மதியம் திரும்பி விடுவாள் என நினைத்தோம்.” அடுத்த நாள் உள்ளூர் காவல் நிலையத்துக்கு அவர்கள் சென்று புகார் பதிவு செய்தனர்.

போபாலை சுற்றியிருக்கும் பகுதியிலுள்ள வெவ்வேறு ஆலைகளில் தினக்கூலிகளாக வேலை பார்க்கும் அவர்கள் மாதந்தோறும் 8,000 - 10,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர். “எந்த நிலையிலும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி தர வேண்டுமென விரும்பினோம். அப்போதுதான் அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்,” என்கிறார் ப்ரிதி.

நிலமற்ற அவரும் கணவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்து வந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள். “தொழிலாளராக இருப்பதால் எதிர்கொள்ள வேண்டிய அவமதிப்பும் சுரண்டலும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நினைப்போம். அதனால்தான் அவளை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினோம்.”

இளம் நேகாவை போல, இளவயதினர் பலர் பெற்றோருடன் சண்டை போட்டு வீடு விட்டு சென்று விடுகின்றனர். காதல்வயப்படும் பதின்வயதினர் ஓடிப் போவதும் குழந்தைகள் தொலைந்து போகும் காரணங்களில் ஒன்று. வேலைக்கும் பாலியல் தொழிலுக்கும் கடத்தப்படுவதுதான் கொடுமையான காரணம் ஆகும். “குழந்தைகளை ஒப்பந்ததாரர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்காக கொண்டு செல்வார்கள். இத்தகைய குழந்தை தொழிலாளராக்குதலுக்கு பின் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது,” என்கிறார் ஜெயின்.

*****

போபாலின் ஃப்ளாட் ஒன்றுக்கு நேகா கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து வெளியே செல்லவோ யாரையும் தொடர்பு கொள்ளவோ அவர் அனுமதிக்கப்படவில்லை. உறவினரின் மகள் என அண்டை வீட்டாரிடம் அவரைப் பற்றி சொன்னார்கள். சனா என அழைத்தார்கள். புதுப் பெயரை ஏற்காதபோது அவருக்கு அடி விழுந்தது.

அவர் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவர் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் தம்பதியர், வீடு சுத்தப்படுத்துதல் மற்றும் பாத்திரம் கழுவதல் போன்ற வீட்டு வேலைகளை ஓயாமல் செய்ய வைத்தனர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தப்பிக்க அவர் முயன்றபோது, பிடிபட்டு தண்டிக்கப்பட்டார். “வீட்டுக்கு திரும்பும் நம்பிக்கையே இழந்து விட்டேன்,” என நினைவுகூருகிறார். “காவலர்கள் வந்து மீட்டதை என்னால் நம்ப முடியவில்லை.”

நெடுஞ்சாலையில் அவர் நடந்து சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை கண்டறிந்த காவல்துறைக்கு, போபாலில் அவரை கண்டுபிடிக்க நாட்கள் பிடித்தன. கடத்தியிருந்த தம்பதியர், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் சட்டத்திலும் (POCSO) குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.

வீட்டுக்கு அவர் திரும்பியதும் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். “காவல்துறைக்கு என்றும் நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம்,” என்கிறார் ப்ரிதி.

PHOTO • Priyanka Borar

இளம் நேகாவை போல, இளவயதினர் பலர் பெற்றோருடன் சண்டை போட்டு வீடு விட்டு சென்று விடுகின்றனர். காதல்வயப்படும் பதின்வயதினர் ஓடிப் போவதும் குழந்தைகள் தொலைந்து போகும் காரணங்களில் ஒன்று. வேலைக்கும் பாலியல் தொழிலுக்கும் கடத்தப்படுவதுதான் கொடுமையான காரணம் ஆகும்

அதிர்ஷ்டவசமாக நேகா உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் காணாமல் போகும் சம்பவங்களின் அதிகரிப்பு பெரும் கவலையை கொடுப்பதாக ஜெயின் சொல்கிறார். “இது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை மட்டும் அல்ல,” என்கிறார் அவர். “இது சமூகப் பிரச்சினை. இன்றைய குழந்தைகள் மற்றும் பதின்வயதினரின் உணர்வுரீதியிலான, உடல்ரீதியிலான, மனநல ரீதியிலான சவால்களை கையாள சமூகம் திணறுகிறது.”

கிட்டத்தட்ட 70,000 குழந்தைகள் மத்தியப்பிரதேசத்தில் காணாமல் போன கடந்த ஏழு வருடங்களில், குழந்தைகள் மீட்கப்படும் சதவிகிதத்தை காவல்துறை 60-65 சதவிகிதமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் ஒரு குழந்தை தொலைந்து போவதும் பெரிய விஷயம்தான். 11,000-க்கும் அதிகமான குழந்தைகள் தற்போது பிரச்சினைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எத்தகைய கொடுமைகள் அக்குழந்தைகளுக்கு இழைக்கப்படும் என தெரியாமல் அவர்களின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

ஆகஸ்டு மாத மத்தியில் 14 வயது மகள் பூஜா காணாமல் போனதிலிருந்து எல்லா வித சாத்தியங்களையும் மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர் லஷ்மியும் நிதிஷும். காவல்துறையால் அக்குழந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“அது எங்களின் தலைகளில் ஓடிக் கொண்டே இருக்கிறது,” என்கிறார் நிதிஷ். “நல்லவிதமாக முடிந்தவரை நாங்கள் யோசிக்க முயன்றாலும், எங்களின் மகள் என்ன செய்து கொண்டிருப்பாளென யோசிக்காமல் இருக்க முடியவில்லை.”

ஒரு காலை, பூஜா பள்ளிக்கு சென்றார். திரும்பவே இல்லை. சிசிடிவி காட்சியில் பள்ளிக்கு பாதி தூரம் வரை அவர் சென்றது இருக்கிறது. பிறகு காணவில்லை. திட்டமிட்டுதான் அவர் அப்படி செய்திருக்கிறாரென அவரது பெற்றோர் நம்புகின்றனர். ஏனெனில் வீட்டிலிருந்து கிளம்பும்போது வீட்டிலேயே செல்பேசியை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். எப்போதும் அவர் அப்படி செய்ததில்லை. “அவளது செல்பேசி தரவுகளை பரிசோதிக்கையில், ஒரு பையனுடன் அவள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது காவல்துறைக்கு தெரிய வந்தது,” என்கிறார் நிதிஷ். “செல்பேசியில்தான் அவள் அதிகம் நேரம் செலவழிப்பாள். ஆனால் அவளின் தனி விவகாரங்களை மதித்து நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. எப்போதுமே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க தோன்றும் வயது என்பதால் அப்படி இருக்கிறாளென நாங்கள் நினைத்தோம்,” என்கிறார் 49 வயது தந்தை.

பூஜா பேசிக் கொண்டிருந்த பையனுக்கும் அவரது வயதுதான். உத்தரப்பிரதேச கிராமத்தில் அவர்களுக்கு தெரிந்த பையன்தான் அவர். காவல்துறை, இருவரையும் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் கண்டுபிடிக்கவில்லை.

நிதிஷும் லஷ்மியும் யதார்த்தத்துக்கு பழகிவிட்டனர். தினமும் வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். நாற்பது வயதுகளில் இருக்கும் இருவரும், மேற்கு பிகார் கிராமம் ஒன்றிலிருந்து 30 வருடங்களுக்கு முன் வேலை தேடி புலம்பெயர்ந்து வந்தவர்கள். “இங்கு புலம்பெயர்ந்து வந்த சிலரை எங்களுக்கு தெரியும்,” என்கிறார் நிதிஷ். “அவர் எங்களை இங்கு வந்து வேலை தேடும்படி அறிவுறுத்தினார்.”

இருவரும் தினக்கூலிகளாக வேலை பார்க்கின்றனர். குடிசை வீட்டிலிருந்து காங்க்ரீட் வீட்டுக்கு மாறவும் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். 12-14 மணி நேரங்கள் தினமும் வேலை பார்த்து, மாதந்தோறும் 9,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர். நீண்ட நேரம் பணி செய்ததால், மகளை பொருட்படுத்தவில்லையோ என நிதிஷுக்கு ஓர் யோசனை இருக்கிறது. “எங்களுக்கு கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தோம். குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென விரும்பினோம். எங்களிடம் அவள் பேச முடியாதளவுக்கான பெற்றோராக நாங்கள் இருக்கிறோமா?”

பூஜா, நன்றாக படித்த மாணவி. மேற்படிப்பு படிக்க வேண்டுமென்ற கனவில் இருந்தவர். மூத்த சகோதரிகள் 20 மற்றும் 22 வயதுகளில் திருமணம் செய்து கொண்டனர். அவரோ போலீஸ் அதிகாரியாக வேண்டுமென விரும்பினார். தன் கனவை அவர் கைவிட்டுவிட்டாரா, பெற்றோரை மறந்துவிட்டாரா என்றும் பெற்றோர் யோசிக்கின்றனர். அல்லது அவரது விருப்பத்துக்கு எதிராக அவர் கொண்டு செல்லப்பட்டு விட்டாரா, திரும்ப பார்க்க முடியுமா என்று கூட யோசிக்கின்றனர்.

PHOTO • Priyanka Borar

மகளை திரும்பக் காண முடியுமா என்பதே பூஜாவின் பெற்றோருக்கு தெரியவில்லை

“காணாமல் போகும் பெண் குழந்தைகளுக்கு என்ன நேர்கின்றன என குறிப்பிடும் பல அச்சமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன,” என்கிறார் லஷ்மி. மகள் காணாமல் போனதிலிருந்து அவர் சரியாக தூங்கவில்லை. “இத்தகைய பல பயங்கரமான எண்ணங்கள் தோன்றுகின்றன. வீட்டுச் சூழலே மரண வீடு போல் இருக்கிறது.”

நடைமுறைப்படி ஒரு மைனர் குழந்தை நான்கு மாதங்களாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் வழக்கு கடத்தல் இலாகாவுக்கு (AHTU) மாற்றப்பட வேண்டும்.

அங்கு மாற்றப்பட்டதும், அந்த வழக்கு இன்னும் தீவிரத்துடனும் கவனத்துடனும் கையாளப்படும் என்கிறார் ஜெயின். “ஆனால் அரசு அதை செய்வதில்லை. ஏனெனில் கடத்தல் எண்ணிக்கை அதிகமாவது கெட்ட பெயரை தரும்.” இந்த வழக்குகள் யாவும் உள்ளூர் காவல்துறை மட்டத்திலேயே புதைந்து போய், குழந்தை கண்டுபிடிப்பது இன்னும் தாமதமாகும்.

*****

குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு உடனே முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்களின் மனநலம் பாதிப்பில் இருக்கும்.

போபாலை சேர்ந்த குழந்தைகள் நல செயற்பாட்டாளரானா ரேகா ஸ்ரீதர், மத்தியப்பிரதேச அரசு மருத்துவமனைகளில் தொழில்பூர்வமான உளவியலாளர்கள் இல்லை என்கிறார். அப்படி இருப்பவர்களும் நகரங்களில்தான் இருக்கின்றனர். “கிராமங்களை சேர்ந்த மன நல பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை சிகிச்சை கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். மேலும், “அத்தகைய சூழலை வீட்டில் கையாளுமளவுக்கு பெற்றோரும் இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பொருளாதார பிரச்சினைகளில் இருப்பார்கள். மனநல நோயாளியை கையாளும் விதம் குறித்த விழிப்புணர்வும் குறைவாகவே இருக்கும்.

மனநல ஆலோசனையின் முக்கியத்துவத்தை ஷ்ரீதர் வலியுறுத்துகிறார். “குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டு, தற்கொலை எண்ணங்களால் பீடிக்கப்படலாம்,” என்கிறார் அவர். ”அது அவர்களின் மனநலத்தில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் அவர்கள் கொள்ளக் கூடிய உறவுகளையும் பாதிக்கும்.”

நேகா, வீடு திரும்பி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. நான்கைந்து மனநல ஆலோசனை அமர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் அவர் சரியாக முடியவில்லை. வீடு திரும்பி பாதுகாப்பாக இருக்கும் உணர்வை புரிந்து கொள்ளவே அவருக்கு சற்றுக் காலம் பிடித்தது.
“அந்த 17 நாட்கள் முடியாது என நினைத்தேன்,” என்கிறார் நேகா.

பள்ளியில் மீண்டும் சேர்ந்துவிட்டார். ஆனால் தனியாக செல்ல அவருக்கு தைரியம் இல்லை. அவரின் சகோதரர் தினமும் அவரை கொண்டு சென்று விட்டு, பள்ளி முடிந்ததும் மீண்டும் சென்று அழைத்து வருகிறார். வெளிப்படையாக பேசி பழகும் இயல்பு கொண்ட நேகா, தற்போது புதியவர்களை சந்திக்க பயப்படுகிறார். நேராக பார்க்கவும் அஞ்சுகிறார்.

ஓரறை மற்றும் ஒரு சமையலறை இருக்கும் கல் வீட்டில் குடும்பம் வாழ்கிறது. தரையில் அனைவரும் அடுத்தடுத்து படுத்து உறங்குவார்கள். ஆனால் அது, நேகாவுக்கு பல தொந்தரவான நினைவுகளை கொண்டு வருகிறது. “திரும்பியதிலிருந்து அவள் நிம்மதியாக ஓரிரவு கூட தூங்கியதில்லை,” என்கிறார் ப்ரிதி. “அவளுக்கருகே படுத்திருப்பவர் அசைந்தாலும் போதும், அவள் கண் விழித்து நடு இரவில் அமர்ந்து கொண்டு உதவி கேட்டு அழத் தொடங்குவாள். அமைதிப்படுத்த நேரம் பிடிக்கும்.”

மைனர் குழந்தைகளின் பாதுகாப்புக்காக எல்லா பாத்திரங்களின் பெயர்களும் இக்கட்டுரையில் மாற்றப்பட்டிருக்கின்றன

தமிழில்: ராஜசங்கீதன்

Parth M.N.

पार्थ एम एन, साल 2017 के पारी फ़ेलो हैं और एक स्वतंत्र पत्रकार के तौर पर विविध न्यूज़ वेबसाइटों के लिए रिपोर्टिंग करते हैं. उन्हें क्रिकेट खेलना और घूमना पसंद है.

की अन्य स्टोरी Parth M.N.
Illustration : Priyanka Borar

प्रियंका बोरार न्यू मीडिया की कलाकार हैं, जो अर्थ और अभिव्यक्ति के नए रूपों की खोज करने के लिए तकनीक के साथ प्रयोग कर रही हैं. वह सीखने और खेलने के लिए, अनुभवों को डिज़ाइन करती हैं. साथ ही, इंटरैक्टिव मीडिया के साथ अपना हाथ आज़माती हैं, और क़लम तथा कागज़ के पारंपरिक माध्यम के साथ भी सहज महसूस करती हैं व अपनी कला दिखाती हैं.

की अन्य स्टोरी Priyanka Borar
Editor : PARI Desk

पारी डेस्क हमारे संपादकीय कामकाज की धुरी है. यह टीम देश भर में सक्रिय पत्रकारों, शोधकर्ताओं, फ़ोटोग्राफ़रों, फ़िल्म निर्माताओं और अनुवादकों के साथ काम करती है. पारी पर प्रकाशित किए जाने वाले लेख, वीडियो, ऑडियो और शोध रपटों के उत्पादन और प्रकाशन का काम पारी डेस्क ही संभालता है.

की अन्य स्टोरी PARI Desk
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan