டிசம்பர் 2020ல் வாரத்தின் ஒரு நாளின் நான்கு மணி நேரங்களை, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி எல்லையில் இருக்கும் காசிப்பூரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உணவு சமைக்கவென சுரேந்திர குமார் ஒதுக்குகிறார். மெல்ல எட்டு மணி நேரங்களுக்கு அந்த நேர அளவு உயர்ந்தது. தற்போது சுரேந்திரா 12 மணி நேரம் போராட்டக்காரர்களுக்கு உணவு சமைக்கிறார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து காசிப்பூர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக்காட்டி, “ஒவ்வொரு நாளும் இந்தளவுக்கு நான் சமைக்க வேண்டியிருக்கும்,” என்கிறார் 58 வயது சுரேந்திரா.
சுரேந்திரா, முசாஃபர் நகர் மாவட்டத்தின் ஷாவோரான் கிராமத்தில் இனிப்புக் கடை வைத்திருக்கிறார். “இங்கு (கிராமத்தில்) உணவு சமைத்து ட்ராக்டர்களிலும் கார்களிலும் எல்லைக்கு அனுப்புகிறோம்,” என்கிறார் அவர். வாரத்துக்கு ஒருமுறை கிராமத்துவாசிகள் காசிப்பூருக்கு உணவு அனுப்புகின்றனர்.
“ஆரம்பத்தில் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இல்லை. எனவே என் கடையை நான் பார்த்துக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு வாரமும் சில மணி நேரங்கள் மட்டும் சமைத்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கடக்க கடக்க எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது,” என்கிறார் சுரேந்திரா.
நவம்பர் 26, 2020 அன்று தில்லியின் எல்லைகளில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கிய விவசாயப் போராட்டங்கள் , மூன்று முக்கியப் பகுதிகளில் நடக்கின்றன. அவற்றில் ஒன்று காசிப்பூர். ஷாவோரனிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகெய்த்தின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி மாத பிற்பகுதியிலிருந்து நிறைய மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வரத் தொடங்கினர்.
போராட்டக்காரர்கள் வெளியேற மாநில அரசு கெடு விதித்ததும் போராட்டக் களத்துக்கு ஜனவரி 28ம் தேதி உத்தரப்பிரதேச காவலர்கள் வந்தனர். காவல்துறையின் அடக்குமுறையை எதிர்பார்த்து பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஊடகங்களில் உடைந்தழுதார். போராட்டத்தை ஆதரிக்க விவசாயிகள் காசிப்பூருக்கு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஜனவரி 26ம் தேதி நடந்த விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியின்போது தில்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் இடம்பெற்ற விவசாயத் தலைவர்களில் திகெய்த்தும் ஒருவர்.
திகெய்த்தின் கோரிக்கை போராட்டத்துக்கு உத்வேகத்தை அளித்தது. இன்னும் பல விவசாயிகள் காசிப்பூர் எல்லைக்கு வந்தனர். அவரின் செல்வாக்கு நிறைந்த மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் தர்ணா போராட்டங்கள் நடந்தன.
ஷாப்பூர் ஒன்றியத்தின் ஷாவோரன் கிராமம் பலியான் கூட்ட கிராமங்களில் ஒன்று. ஜாட் சமூகத்தின் கஷ்யப் பரம்பரை மத்திய காலத்தில் அதிகாரம் செலுத்திய 84 கிராமங்களின் தொகுப்பே பலியான் கூட்ட கிராமங்கள். இன்றும் கூட பலியான் பரம்பரை சபைக்கு தலைமை தாங்கும் திகெய்த்தின் குடும்பத்துக்கு இந்த கிராமங்களில் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் வரை செல்வாக்கு இருக்கிறது. போராட்டம் நீடிக்க உதவும் பலியான கூட்ட கிராமங்களில் ஷாவோரனும் ஒன்று.
”நாங்கள் 7-8 பேர் இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் 1000 பேருக்கும் அதிகமான மக்களுக்கு சமைக்கிறோம்,” என்கிறார் சுரேந்திரா. “நாங்கள் அல்வா, பாயசம், பூரி, உப்புமா, பகோடா மற்றும் பிற உணவுகளையும் சமைக்கிறோம். சமைக்காத உணவுப் பொருட்களும் பழங்களும் கூட நாங்கள் கொடுத்து அனுப்புகிறோம்.” கிராமத்தின் 15700 பேரில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) 150 பேர் காசிப்பூரில் இருப்பதாக சொல்கிறார்.
ஷாவோரனில் ஆண்கள், போராட்டக்காரர்களுக்கான எல்லா சமையல் வேலைகளையும் செய்கின்றனர். சமையல் செய்வதை பற்றி விளக்க ஆர்வத்துடன் அவர்கள் இருந்தபோது , ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்யும் சாஞ்சல் பலியானிடம் ஆர்வமில்லை. “நாங்கள் (பெண்கள்) எல்லா நேரங்களும் சமைக்கிறோம். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது?” எனக் கேட்கிறார் 45 வயது விவசாயி.
கரும்பு விளைவிக்கும் கிராமத்தின் விவசாயிகள் எல்லா உதவிகளையும் திரட்டுகின்றனர். “உணவுப் பொருட்களுக்கான பணத்தை விவசாயிகள் கொடுத்திருக்கின்றனர். நாங்களும் எங்களின் நிலங்களில் விளையும் கோதுமை, பருப்புகள் போன்றவற்றை கொடுக்கிறோம்,” என்கிறார் சாஞ்சல். “சில விவசாயிகள் நேரடியாக எல்லைக்கு சென்று போராடுகின்றனர். இந்த மொத்த கிராமமும் அவர்களுக்கு பின்னால்தான் இருக்கிறது. நாங்கள் அனைவரும் இதில் இணைந்து இருக்கிறோம்.”
போராட்டத்துக்கென விளைச்சலும் பணமும் கொடுக்கும் பல விவசாயிகள் கடனில் இருப்பவர்கள். கரும்பு விளைச்சலுக்கான பணம் இன்னும் கரும்பு தொழிலிலிருந்து வராமல் காத்திருப்பவர்கள் பலர். ஷாவோரனில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் 57 வயது ராம் சிங்குக்கு, 2019-20ம் ஆண்டின் பருவகாலத்தில் விற்ற கரும்புக்கான 18000 ரூபாய் இன்னும் கிடைக்கவில்லை. “ஆனாலும் நான் கொஞ்சம் உணவு தானியங்களை கொடுக்கிறேன்,” என்கிறார் அவர்.
“2019-20ம் ஆண்டு நான் விற்ற கரும்புகளுக்கான 1 லட்ச ரூபாய் தொகை இன்னும் வரவில்லை,” என்கிறார் விஜய் பால். நான்கு ஏக்கரில் விவசாயம் பார்க்கும் 80 வயதான அவர் தொடர்ந்து உணவுப் பொருட்களை கொடுத்து வருகிறார். அதே அளவுக்கான பணத்தை விவசாயி கடன் அட்டை கொண்டு கடனாக வாங்குகிறார் பால். “நாங்கள் என்ன செய்வது? பட்டினி கிடந்து நாங்கள் சாக முடியாது,” என்கிறார் அவர்.
பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் காசிப்பூருக்கு உணவு கொண்டு சென்றார் பால். சில நாட்களுக்கு போராட்டக் களத்திலேயே தங்கியிருந்தார். “என்னுடைய வயதுக்கு நான் அதிக நாட்களுக்கு தங்க முடியாது,” என்கிறார் அவர். வேளாண் சட்டங்கள் மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு அரசின் கொள்கைகளை பற்றிய விழிப்புணர்வு அளித்திருப்பதாக அவர் சொல்கிறார்.
பிப்ரவரி 2016ல் ஒன்றிய அரசு, 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அறிவித்தது. “இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. என்ன ஆனது அந்த அறிவிப்பு? இந்த சட்டங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும்,” என்கிறார் பால்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
மாநில அரசால் மண்டிகள் இல்லாமல்லாக்கப்பட்ட பிறகு பிகாரின் விவசாயிகளுக்கு 2006ம் ஆண்டில் என்ன நேர்ந்ததோ அதுவோ எதிர்காலத்தில் எல்லா விவசாயிகளுக்கும் நேரும் என்கிறார் 36 வயது அஜிந்தர் பலியான். “பிகாரின் விவசாயிகள் அன்றிலிருந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிற மாநில விவசாயிகளுக்கும் அதே நிலை வந்துவிடும்,” என்னும் அவர் ஆளும் கட்சியை முன்பு ஆதரித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறார். “மூத்தவர்கள் எங்களை எச்சரித்தனர். ஆனால் பிரச்சாரத்தில் ஏமாந்துவிட்டோம்.”
விவசாயிகளின் உறுதியால் ஷாவோரனிலிருந்து காசிப்பூருக்கு அனுப்பப்படும் உணவுகள் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பொருளாதார ரீதியாக அதில் சிரமம் இருக்கிறது. “வேலை எதுவும் இல்லை. எங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் கட்டவே சிரமமாக இருக்கிறது. மோட்டார் சைக்கிளை கூட பராமரிக்க முடியவில்லை,” என்கிறார் 60 வயது சுதிர் சவுதரி. ஷாவோரன் கிராமத்தின் தலைவராக இருந்தவர். “போராட்டக் களங்களிலேயே விவசாயிகள் தங்க வேண்டியிருப்பது துயரமான விஷயம்.”
சில விவசாயிகள் அவர்களின் மாடுகள் கொடுக்கும் பாலை விற்று உயிர் வாழ்கின்றனர் என்கிறார் சவுத்ரி. “முன்னெப்போதும் நாங்கள் பால் விற்றதில்லை. இப்போது நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வாளியில் பால் எடுத்துச் சென்று விற்கிறோம். ஆனாலும் இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். ஏனெனில் இது எங்களின் வாழ்க்கைகளுக்கான போராட்டம்.
இந்த கஷ்டங்களுக்கு மத்தியில் உறுதி தளரவில்லை என்கிறார் 66 வயது சாயாந்திரி பலியான். ஷாரோவனில் ஆறு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர். அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார். “அதுவரை, உணவையும் உணவுப் பொருட்களையும் நாங்கள் எல்லைக்கு அனுப்பிக் கொண்டிருப்போம்.”
தமிழில் : ராஜசங்கீதன்