ஒடிசா கவர்னரும், அவரின் மனைவியும் குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், அதற்குப் பின்னர்த் தேநீருக்கு ராஜ் பவன் வர வேண்டும் எனவும் லட்சுமி ‘இந்திரா’ பண்டாவுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். அவரின் மகிழுந்தை நிறுத்த கவர்ச்சிகரமான ‘வாகன நிறுத்த சீட்டு’-ம் (Parking Pass) அனுப்பப்பட்டு இருந்தது. அந்த அழைப்புக்கு லட்சுமி பதில் அனுப்பவில்லை. அவர் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும் இல்லை.

லட்சுமி பண்டாவுக்கு என்று தனியாக மகிழுந்து இல்லை. அவர் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் சாவல் எனப்படும் வசிப்பிடத்தில் உள்ள சிறிய அறை ஒன்றில் வசிக்கிறார். ஒரு மோசமான குடிசைப்பகுதியை விடச் சற்றே மேம்பட்ட இந்த இடத்திலேயே இருபது வருடங்களாக வாழ்கிறார். கடந்த ஆண்டு விடுதலை தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது உள்ளூரில் இருந்த நலம் விரும்பிகள் அவருக்குப் பயணசீட்டு வாங்கித் தந்தார்கள். இந்த வருடம் வாங்கித்தர யாருமில்லை. அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ், வாகன நிறுத்த சீட்டை காட்டி வெறுமையாகச் சிரிக்கிறார். “எனக்கும் மகிழுந்துக்கும் இருக்கிற ஒரே தொடர்பு என் கணவர் நாற்பது வருடங்களுக்கு முன்னால் வாகன ஓட்டுனராக இருந்தார் என்பது மட்டும் தான்.” என்கிறார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி கம்பீரமாக நிற்கும் தன்னுடைய இந்திய தேசிய ராணுவ காலப் புகைப்படத்தைப் பெருமிதத்தோடு காட்டுகிறார்.

Laxmi Panda outside her home
PHOTO • P. Sainath

மறக்கப்பட்ட விடுதலை போராளியான லட்சுமி ஓடிசாவின் கோராபுட்டில் உள்ள தன்னுடைய சிதிலமடைந்த வீட்டின் முன்னால் நிற்கிறார்

இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு போராடிய எண்ணற்ற கிராமப்புற இந்தியர்களில் லட்சுமியும் ஒருவர். இவர்கள் புகழ்பெற்ற தலைவர்களாக, அமைச்சர்களாக, ஆளுநர்களாக மாறாமல் இருந்துவிட்ட சாதாரண மனிதர்கள். மிகப்பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு, விடுதலை கிடைத்ததும் இவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். இந்தியா தன்னுடைய விடுதலை வைரவிழாவை கொண்டாடும் தருணத்தில் இவர்களில் பெரும்பாலானோர் இறந்து விட்டார்கள். மிச்சம் இருக்கும் சிலரும் எண்பது, தொன்னூறு வயதில் நோயோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், இல்லை வறுமையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். (லட்சுமி இதற்கு விதிவிலக்கு. தன்னுடைய வளரிளம் வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார் என்பதால் அவர் இன்னும் 80 வயதையே தொடவில்லை.) விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணிக்கை வீழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஒடிசா மாநிலம் லட்சுமி பண்டாவை விடுதலை போராட்ட வீரர் என்று அங்கீகரிக்கிறது. இதற்கு முன்பு வரை மாதத்துக்கு 7௦௦ ரூபாய் என்கிற சொற்பமான ஓய்வூதியம் கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு ஒரு 3௦௦ ரூபாய் ஏற்றப்பட்டது. பல வருடங்களுக்கு அவருக்கு எப்படிப் பணம் அனுப்புவது என்று முகவரி தெரியாமலே விழித்துள்ளார்கள். மத்திய அரசு அவரை விடுதலைப் போராட்ட வீரராக அங்கீகரிக்கவில்லை. அவருடன் போரிட்ட பல்வேறு இந்திய தேசிய ராணுவ வீரர்கள் லட்சுமி தங்களுடன் போரிட்டார் என்று சான்றிதழ் கொடுத்தும் எதுவும் பலனில்லை.”நான் சிறை புகவில்லை என்பதால் அங்கீகாரம் கிடையாது என்று டெல்லியில் சொன்னார்கள். உண்மைதான். நான் சிறைக்குப் போகவில்லை. என்னைப்போலப் பல இந்திய தேசிய ராணுவ வீரர்கள் சிறை புகவில்லை. அதற்காக நாங்கள் விடுதலைக்குப் போராடவில்லை என்று ஆகிவிடுமா? ஓய்வூதியம் வேண்டும் என்பதற்காக நா கூசாமல் என்னால் பொய் சொல்ல முடியாது.” என்கிறார் லட்சுமி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் போராடிய மிக இளைய உறுப்பினர்களில் லட்சுமியும் ஒருவர். இந்திய தேசிய ராணுவத்தில் பர்மாவில் இணைந்த ஒரே ஒடியா பெண் லட்சுமி மட்டுமே. மேலும், உயிரோடு இருக்கும் ஒரே நபரும் அவரே. ஏற்கனவே படைத்தளபதியாக இருந்த லட்சுமி (செகால்)யுடன் இவருடைய பெயர் குழப்பிக்கொள்ளப்பட வாய்ப்பு உண்டு என்பதால் போஸ் அவர்களே தனிப்பட்ட முறையில் எனக்கு இந்திரா என்று பெயரிட்டார். “இந்தக் குழுவில் உன் பெயர் இந்திரா” என்றார் போஸ் . எனக்கு அதெல்லாம் அப்போது புரிகிற வயதில்லை. அப்போது இருந்து நான் இந்திரா என்றே அறியப்பட்டேன்.” என்கிறார் லட்சுமி.

Laxmi Panda

‘என்னைப்போல பல்வேறு இந்திய தேசிய ராணுவ வீரர்கள் சிறை புகவில்லை. அதற்காக நாங்கள் விடுதலைக்கு போராடவில்லை என்று ஆகிவிடுமா?’

லட்சுமியின் பெற்றோர் பர்மாவின் ரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது ஆங்கிலேயர்களின் குண்டுவீச்சில் மரணமடைந்தார்கள். “அதற்குப் பிறகு நான் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வெறிக் கொண்டேன். இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த மூத்த ஒடியா தோழர்கள் என்னை எந்தப் பணியிலும் ஈடுபடுத்த தயங்கினார்கள். நான் மிகவும் இளவயது பெண்ணாக இருப்பதாகச் சொன்னார்கள். எதாவது எடுபிடி வேலையாவது தருமாறு நான் மன்றாடினேன். என் அண்ணன் நகுல் ரத்தும் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தார். அவர் போரில் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து ஒருவர் என்னிடம் வந்து “உன் அண்ணன் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். இப்போது காஷ்மீரில் இருக்கிறார்.” என்றார்கள். எப்படி நான் உறுதிப்படுத்துவது. அவர் காணாமல் போய் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது.” என்கிறார் லட்சுமி.

“நாங்கள் கூடாரத்தில் லெப்டினென்ட் ஜானகி, லட்சுமி செகால், கெளரி உள்ளிட்ட எராளமான பெண் வீராங்கனைகளையும் , புகழ்பெற்ற இந்திய தேசிய ராணுவ போராளிகளையும் கண்டோம். போரின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் சிங்கப்பூருக்கு சென்றோம். நாங்கள் பகதூர் குழுவோடு சென்றோம் என நினைவு.” என்கிறார். அங்கே இந்திய தேசிய ராணுவத்தின் அனுதாபிகளான தமிழர்களோடு தங்கியிருந்தார். அவர்களிடம் இருந்து சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டார் லட்சுமி.

தான் சொல்வதை உண்மை என்று நிரூபிக்கத் தன்னுடைய பெயரை தமிழில் ‘இந்திரா’ என்று கையெழுத்து இடுகிறார். இந்திய தேசிய ராணுவத்தின் கீதத்தைக் கம்பீரமாகப் பாடுகிறார். “ஒவ்வொரு அடியாக ஒற்றுமையோடு எடுத்து வைப்போம். ஆனந்த கீதம் அனைவரும் இசைப்போம். இந்த உயிர் மக்களுக்காக, மக்களுக்காக மரணத்தையும் மறுக்காமல் ஏற்போம்.”

துப்பாக்கியோடு இருக்கும் இந்திய தேசிய ராணுவ புகைப்படத்தை ஏந்தியபடி மலரும் நினைவுகளில் மூழ்குகிறார். “இந்தப் புகைப்படம் போருக்குப் பின்னால் எங்களுடைய பிரிவுபசாரச் சந்திப்பில் எடுக்கப்பட்டது. படையைக் கலைப்பதற்கான விழா அது. அதற்குப் பிறகு 1951-ல் காகேஸ்வர் பண்டாவை பெர்ஹாம்பூரில் மணந்து கொண்டேன். எண்ணற்ற இந்திய தேசிய ராணுவ வீரர்கள் விழாவுக்கு வந்திருந்தார்கள்.” என்கிறார்.

தன்னுடைய சக இந்திய தேசிய ராணுவ தோழர்கள் குறித்து நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் லட்சுமி. “அவர்களின் நினைவாக இருக்கிறது. அவர்களை அவ்வளவாகத் தெரியாது என்றாலும், அவர்களை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒருமுறை லட்சுமி செகால் கட்டாக்கில் பேச வந்திருந்தார். என்னால் போக முடியவில்லை. கையில் பணமில்லை. அவர் கான்பூருக்கு வந்த போது மீண்டும் செல்ல முயற்சித்தேன். உடல்நலம் மோசமாகி செல்ல முடியாமல் போனது. இனிமேல் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?” என்று ஆதங்கப்படுகிறார்.

திருமணத்துக்குப் பிரு இவருடைய கணவர் ஓட்டுனர் உரிமம் பெற்றார். “நாங்கள் இணைந்து ஹிராகுட்டில் சிலகாலம் வேலை பார்த்தோம். அப்போது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. எனக்காக நான் உழைக்க வேண்டிய நிலைமையில்லை.1976-ல் அவர் மரணமடைந்தார். அப்போது தான் என் வாழ்க்கையில் துயரங்கள் ஆரம்பித்தன.”

லட்சுமி வெவ்வேறு இடங்களில் சொற்பமான கூலிக்குக் கடை உதவியாளர், தொழிலாளி, வீட்டு வேலையாள் என்று பல்வேறு வேலையில் ஈடுபட்டிருக்கிறார். ஒரே ஒரு மகன் குடிநோயாளியாக மாறி அவனுடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதும் பெரும்பாடாக மாறியது.

Laxmi Panda showing her old photos
PHOTO • P. Sainath

லட்சுமி பண்டா இந்திய தேசிய ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் தன்னுடைய புகைப்படத்தை காட்டுகிறார்

“நான் எதையுமே கேட்கவில்லை. நான் நாட்டுக்காகப் போராடினேன். எந்தச் சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் குடும்பத்துக்கு என்று எதையும் அரசிடம் கேட்டதில்லை. இப்போதாவது என்னுடைய பங்களிப்பை அரசு அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்.”

சில வருடங்களுக்கு முன்னால் உடல்நலக்குறைவு, வறுமை அவரைப் புரட்டிப்போட்டன. அப்போது ஜெய்பூரை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் பரேஷ் ரத் இவரின் கதையைக் கட்டுரையாக்கினார். பரேஷ் அவரைக் குடிசைப்பகுதியை விட்டு ஒரு அறை உள்ள இந்த இடத்திற்குத் தன்னுடைய சொந்த செலவில் இடம் மாற்றினர். லட்சுமியின் மருத்துவச் செலவுகளையும் பரேஷ் பார்த்துக் கொண்டார். இப்போது உடல்நலமில்லாமல் தன்னுடைய மகனின் வீட்டில் லட்சுமி இருக்கிறார். தன்னுடைய மகனின் குடிப்பழக்கம் குறித்துக் கவலைகள் இருந்தாலும் அவருடனே தங்கியிருக்கிறார். பரேஷ் ரத்தின் கட்டுரையைத் தொடர்ந்து பலரும் இவரைப் பேட்டி கண்டார்கள். ஒரு தேசிய பத்திரிகையின் அட்டைப்படத்தில் இவர் இடம்பிடித்தார்.

“நான் முதல் கட்டுரையை எழுதிய போது ஓரளவுக்கு உதவி கிடைத்தது. அப்போது கோராபுட்டின் ஆட்சியராக இருந்த உஷா பதி கரிசனத்தோடு நடந்து கொண்டார். செஞ்சிலுவை சங்க நிதியில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மருத்துவச் செலவுக்கு வழங்கினார். அதோடு நில்லாமல் அரசாங்க நிலத்தை ஒதுக்குவதாகவும் சொன்னார். அதற்குள் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். வங்கத்தைச் சேர்ந்த சிலர் ஓரளவுக்கு நிதியுதவி செய்தார்கள். இவை எல்லாம் வெகு சீக்கிரமே நின்று போயின. மீண்டும் கொடும் வறுமைக்குத் தள்ளப்பட்டார் லட்சுமி.” என்கிறார் பரேஷ் ரத். “இனிமேல் மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைத்தாலும் அவர் என்ன வாழ்ந்து விடப்போகிறார். மத்திய அரசு அவரை அங்கீகரித்தால் மட்டும் போதும். வெறும் பெருமை சார்ந்த ஒன்று மட்டுமே இந்தக் கோரிக்கை.” என்று சொல்கிறார் பரேஷ் ரத்.

பல்வேறு ஓயாத முயற்சிகளுக்குப் பிறகு லட்சுமிக்கு துண்டு நிலம் பஞ்சியாகுடா கிராமத்தில் ஒதுக்கப்பட்டது. அதில் அரசாங்கமே வீடு கட்டித்தருமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார். இப்போதைக்கு முன்னர் இருந்த அறையை விட மேம்பட்ட அறையில் லட்சுமி வாழ வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பரேஷ்.

இப்போது ஓரளவுக்கு மக்கள் அவரை அங்கீகரிக்கிறார்கள். சில அமைப்புகள் அவருக்காகப் போராடுகின்றன. “நாளைக்குப் பக்கத்தில் இருக்கும் தீப்தி பள்ளியில் கொடியேற்ற போகிறேன்.” என்று பெருமிதம் பொங்க ஆகஸ்ட் பதினான்கு அன்று எங்களிடம் சொல்கிறார் லட்சுமி. ஆனால், “விழாவுக்கு அணிந்து கொள்ள ஒழுங்கான உடுப்பு சேலை இல்லை.” என்று இயல்பாகப் பேசுகிறார்.

அதே சமயம், வயதாகி கொண்டிருக்கும் இந்த இந்திய தேசிய ராணுவ வீரர் தன்னுடைய அடுத்தப் போருக்கு ஆயத்தம் ஆகிறார். ‘டெல்லிக்கு போ’ என்கிற நேதாஜியின் முழக்கத்தோடு டெல்லிக்குப் போகத் திட்டமிட்டுள்ளார். “என்னை மத்திய அரசு அங்கீகரிக்காமல் போனால் நாடாளுமன்றத்தின் முன்னால் ஆகஸ்ட் 15-க்குப் பின்னால் தர்ணாவில் அமர்வேன். டெல்லி நோக்கி போகத்தான் போகிறேன்,,

அறுபது ஆண்டுகாலம் கழித்து டெல்லிக்கு போகும் கனவை அவர் நிஜம் ஆகலாம். அவர் ‘ஒவ்வொரு அடியாக ஒற்றுமையோடு எடுத்து வைப்போம்.’ என்று பாட ஆரம்பிக்கிறார்.

புகைப்படங்கள்: பி சாய்நாத்

P. Sainath
psainath@gmail.com

पी. साईनाथ, पीपल्स ऑर्काइव ऑफ़ रूरल इंडिया के संस्थापक संपादक हैं. वह दशकों से ग्रामीण भारत की समस्याओं की रिपोर्टिंग करते रहे हैं और उन्होंने ‘एवरीबडी लव्स अ गुड ड्रॉट’ तथा 'द लास्ट हीरोज़: फ़ुट सोल्ज़र्स ऑफ़ इंडियन फ़्रीडम' नामक किताबें भी लिखी हैं.

की अन्य स्टोरी पी. साईनाथ
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

की अन्य स्टोरी P. K. Saravanan