"பல முறை கடைசி நபராக நான் வெளியேறும் பட்சத்தில், சுமார் மதியம் 2 மணி போல இருக்கும், நான் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். நான் வீட்டிற்கு வரும் வரை மூச்சு கூட விட மாட்டேன். யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவோம். ஆனால் பயந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போய் தான் ஆக வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது", என்று சம்பா ராவத் கூறுகிறார்.

வேகமாக நடந்தபடியே அவர் சேலைத் தலைப்பால் தொடர்ந்து முக்காட்டை சரி செய்தபடியே தனது முகத்தை மூடிக் கொள்கிறார். தானா கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் ( MGNREGA ) கீழ் வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று சம்பா என்னிடம் கூறுகிறார். தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர் பாசன அகழிகள் கொண்ட ஒரு நிலத்தை அவர் சுட்டிக்காட்டி, "இது தான் நாங்கள் வேலை பார்த்த இடம்”, என்று கூறினார். ஆனால் இந்த முறை (2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) எங்களுக்கு நான்கு கிலோ மீட்டர் தள்ளி ஒரு இடம் வழங்கப்பட்டது, அது இதைவிட தனிமை படுத்தப்பட்ட இடம்", என்று கூறுகிறார். அங்கு நடந்து செல்வதற்கு ஒரு மணி நேரம், திரும்பி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த  மைல்கல் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) நன்மைகள் மற்றும் பலவீனங்களைப் பற்றிய விவரங்களை சம்பா தெரிவிக்கிறார். இந்தியாவில் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் ஊதியம் உள்ள வேலைகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மண்டல் தாலுகாவில் - சம்பாவின் கிராமமான தானா அமைந்துள்ளது - இத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மட்டும் மிகவும் அவசியமாக தேவைப்படுகிற, ஊதியம் உள்ள வேலைகளை 8,62,533 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தால் பில்வாராவில் மொத்தம் 60 லட்சம் குடும்பங்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இந்த வருமானம் பல குடும்பங்களின் பொருளாதாரத்தை சமாளிக்க உதவியாக இருக்கிறது, மீனா சால்வியின் குடும்பம் உட்பட, 19 வயதாகும் அவர் அவரது வீட்டின் ஒரே வருமானம் ஈட்டும் நபராகவும், நோயுடன் இருக்கும் தனது பெற்றோரையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். மீனாவும் தனிமை படுத்தப்பட்ட இடங்களில் வேலை செய்யும் சிக்கல்களைப் பற்றி பேசுகிறார். "நான் ஏன் பயப்படுகிறேன் என்றால் நான் தனியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும், குறிப்பாக நான் தான் வேலை செய்யும் கடைசி நபராக இருக்கிறேன் என்றால்", என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆண்டு மே மாதம் சம்பா மேற்பார்வை செய்யும் இடத்தில் வேலை செய்யும் 25 தொழிலாளர்களும் - அனைவருமே பெண்கள் - இவ்வளவு தொலைவு தள்ளி இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இந்த தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு செல்ல அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்றால் அடுத்த முறை பஞ்சாயத்து இன்னும் சற்று தொலை தூரத்தில் இருக்கும் இடத்தை அவர்களுக்கு ஒதுக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். "வேலை நடக்க வேண்டிய பிற இடங்கள் அருகிலேயே இருக்கின்றன", என்று சம்பா கூறுகிறார். இடையில் இருக்கும் காட்டை தாண்டாமல் எங்களால் இங்கு வர முடியாது. சில நேரங்களில் அங்கு வன விலங்குகளும், சில நேரங்களில் குடித்துவிட்டு வரும் மனிதர்களும் அங்கு இருப்பர்...", என்று அதே இடத்தில் வேலை செய்யும் சவிதா ராவத் கூறுகிறார். ஆனால் ஒரு வார கால போராட்டத்திற்கு பிறகு அவசரமாக பணம் தேவைப்படும் சிலர் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். சிலர் சம்பாவுடன் சேர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர் மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.

'I am afraid because I have to walk back alone', says Champa Rawat (left).
PHOTO • Nioshi Shah
'I am afraid because I have to walk back alone', says Champa Rawat (left). Other women workers echo the same anxieties
PHOTO • Nioshi Shah

நான் தனியாக திரும்பி நடந்து வர வேண்டி இருப்பதால் பயப்படுகிறேன் என்று சம்பா ராவத் (இடது) கூறுகிறார். மற்ற பெண் தொழிலாளர்களும் இதே கவலையையே எதிரொலிக்கின்றனர்

30 வயதாகும் சம்பா 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 100 நாள் வேலைத் திட்டத்தில் (MGNREGA) பணி நிலைய மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அவர் இத்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியாற்றத் துவங்கினார். மேற்பார்வையாளரும், தொழிலாளியும் ஒரே ஊதியத்தையே பெறுகிறார்கள் - ராஜஸ்தானில் ஒரு நாளுக்கான சம்பளம் 199 ரூபாய் ஆகும். மேற்பார்வையாளராகப் பணியாற்ற, ஒரு படித்த பெண் தொழிலாளியாக இருக்க வேண்டும். அவர் முந்தைய அல்லது நடப்பு நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) தொழிலாளியாக குறைந்தது 50 நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும், அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்", என்று இத்திட்டத்தின் விதிகள் கூறுகின்றன.

இந்த வேலை சம்பாவுக்கு சிறிது சுதந்திரத்தை வழங்குகிறது. "எனது கணவரது குடும்பத்தினருக்கு நான் வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். "வீட்டிலேயே செய்வதற்கு நிறைய வேலை எனக்கு இருக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். 100 நாள் வேலையில் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை, ஒரு நாளுக்கு நான்கு மணி நேரமே வேலை செய்கிறேன். இதன் மூலம் என்னால் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்ள முடிகிறது", என்று அவர் கூறுகிறார்.

தானாவில் உள்ள சம்பாவின் ஒரே ஒரு அறை கொண்ட சிமெண்ட் வீட்டில் உள்ள அலமாரியில் அவரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த ஒரு பதாகை: 'தானா கிராம பஞ்சாயத்துத் தலைவராக போட்டியிடுகிறார் சம்பா தேவி (பி. ஏ. பி. எட்)' என்று கூறியது. 2015 ஆம் ஆண்டு நான் கிராம தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்... 2016 ஆம் ஆண்டு அங்கன்வாடியில் உள்ள பணிக்கும் முயற்சி செய்தேன், என்று அவர் கூறுகிறார். அதே அறையில், ஒரு மூலையில் தையல் இயந்திரம் ஒன்றும் இருந்தது - தூசி படிந்து மற்றும் பழைய துணியால்  மூடப்பட்டு இருந்தது. "நான் இதற்கு முன்னால் தையல் வேலையும் செய்தேன்", என்று சம்பா கூறுகிறார். "கிராமப் பெண்கள் அவர்களது துணியை என்னிடம் கொண்டு வந்து தைக்க கொடுப்பார்கள், நான் அவர்கள் துணியை தைப்பதற்கு இரவு முழுவதும் விழித்திருந்து தைத்துக் கொடுப்பேன். அதன் மூலம் மாதத்திற்கு 4,000 ரூபாய்  சம்பாதித்து வந்தேன். ஆனால், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எனது மாமியார் இறந்த பின் எனது கணவர் வீட்டு வேலைகள் அனைத்திற்கும் எனக்கு நேரம் வேண்டும் என்று கூறி என்னை தையல் வேலை செய்வதை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தினார்", என்று கூறுகிறார்.

அவரது கணவர் விதித்த கட்டுப்பாடுகள் சம்பாவுக்கு 100 நாள் வேலையைத் தவிர வேறு வழியைத் தரவில்லை. அவர் இப்போது இங்கே தங்கி இருக்கவில்லை, மேலும் இப்போதெல்லாம் அவர் உனக்கு என்ன விருப்பமோ அதை செய், ஆனால் வீட்டை கவனித்துக் கொள்ள உன்னால் முடிய வேண்டும் என்று கூறுகிறார்", என்கிறார் சம்பா. சம்பாவின் கணவர் 30 வயதாகும் ஹுக்கும் ராவத், குஜராத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் மாதம் சுமார் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது கிராமத்திற்கு திரும்பி வருகிறார், திரும்பிச் செல்லும் போது அவர் சம்பாவிற்கும் அவர்களது இரண்டு மகன்களான 12 வயதாகும் லவி மற்றும் 7 வயதாகும் ஜிகர் ஆகியோருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டுச் செல்கிறார்.

Champa and her 7 year old son Jigar.
PHOTO • Nioshi Shah
Champa's husband returns to Thana every two months when he leaves some money for her and their two sons, Jigar (left) and Lavi (right)
PHOTO • Nioshi Shah

சம்பாவின் கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தானா கிராமத்திற்கு திரும்பி வருகிறார், திரும்பிச் செல்லும் போது அவர் சம்பாவிற்கும் அவர்களது இரண்டு மகன்களான ஜிகர் (இடது) மற்றும் லவி (வலது) ஆகியோருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டுச் செல்கிறார்

சம்பா தனக்கு இப்போது இருக்கும் ஒரே வழியான, இந்த வேலையை மிகவும் தீவிரமாக அணுகுகிறார். ஒரு மேற்பார்வையாளராக அவரது பணி, வருகைப் பதிவேட்டில் தொழிலாளர்களின் வருகையைக் குறிப்பது, தோண்டப்பட்ட அகழிகளை அளவிடுவது மற்றும் அவர்களுக்கு ஒதுக்கிய பணிகள் அனைத்தையும் முடிப்பதை உறுதி செய்வது ஆகியவை ஆகும். மேற்பார்வையாளரின் கடமையில் "தொழிலாளர்கள் தங்கள் முழு ஊதியத்தையும் பெறுகிறார்களா என்பதை கவனித்துக் கொள்வதும் மேலும் கொடுக்கப்பட்ட ஊதியத்தில் ஏதேனும்  முரண்பாடுகள் இருப்பின் அதைத் தொடர்ந்து கிராம பஞ்சாயத்திடம் எடுத்துச் சென்று அதை தீர்த்து வைக்க முயற்சிப்பதும் ஆகும்". அவர்களது இடத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்ட வேலையை செய்து முடித்ததற்கான தினசரி ஊதியத்தை முழுமையாகப் பெறுகிறார்கள் என்பதையும், தான் உறுதி செய்வதாக சம்பா கூறுகிறார். "இதற்கு முன்னால், தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு சுமார் 50 - 60 ரூபாயைத் தான் ஊதியமாக பெற்றனர். இந்த மதிப்பீட்டை பஞ்சாயத்து தான் முடிவு செய்யும். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது...", என்று கூறுகிறார்.

எனவே சம்பா அவர்களது இடத்தில் உள்ள தொழிலாளர்களிடம் - அனைவருமே பெண்கள் - வருகைப் பதிவேட்டில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிவது உங்கள் உரிமை என்று அடிக்கடி கூறுகிறார். நீங்கள் அதை சரி பார்க்க வேண்டும், உங்கள் பெயருக்கு நேராக குறியிடப் பட்டிருந்தால் மேற்பார்வையாளர் நீங்கள் வந்திருந்தாலும் கூட உங்களின் வருகையைப் பதிவு செய்யவில்லை என்று அர்த்தம். மேற்பார்வையாளரோ அல்லது பஞ்சாயத்தோ அல்லது எந்த ஒரு அதிகாரியோ உங்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை கண்டறிவது உங்களுடைய உரிமை", என்று கூறுகிறார்.

இந்த திட்டத்தால் கட்டாயமாக செய்து கொடுத்திருக்க வேண்டிய வசதிகள் குறித்தும் சம்பா பேசுகிறார். "அவர்கள் கூடாரங்களையும், மருத்துவ உதவியையும் செய்து தருவார்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் நாங்கள் அவற்றை இதுவரை பார்த்ததே இல்லை. தொழிலாளர்கள் காயப்படும் போது பெண்கள் தங்களது துப்பட்டாவை கிழித்து காயத்தை சுற்றிக் கட்டிக் கொள்கிறார்கள். இந்திராவதி (இந்த தளத்தில் வேலை செய்பவர்) கிட்டத்தட்ட அவர் ஒரு முறை மயக்கமே அடைந்துவிட்டார். ஒரு கருவி அவரது பாதத்தை துளைத்து விட்டது... எங்களுக்கு எந்த மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை. இப்போது இங்கு இருக்கும் முதலுதவி பெட்டி, அங்குல நாடா, மற்றும் கால்குலேட்டர் ஆகியவற்றை நான் பஞ்சாயத்திடம் இருந்து பெற்றேன். நான் அவர்களிடம் பலமுறை முறையிட்ட பிறகு, கடைசியாக அவர்கள் எனக்கு அதைக் கொடுத்தார்கள்...", என்று கூறுகிறார்.

1,172 பேர் கொண்ட தனது கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை (MGNREGA) முறையாக சீரமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளால், தானாவில் உள்ள சிலரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர் கொண்டதாக அவர் கூறுகிறார். "அவர்கள் கிராமத்தில் தங்களது அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார்.

At MGNREGA work sites: 'I've never been put on water duty, because I belong to a lower caste', says Gita Khatik
PHOTO • Nioshi Shah
At MGNREGA work sites: 'I've never been put on water duty, because I belong to a lower caste', says Gita Khatik
PHOTO • Nioshi Shah

100 நாள் வேலை (MGNREGA) நடக்கும் இடத்தில்: 'நான் ஒரு போதும் தண்ணீர் கொடுக்கும் பொறுப்பில் அமர்த்தப் படவில்லை, ஏனென்றால் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள்', என்று கூறுகிறார் கீதா காதிக்

கிராமத்தில் அதிகாரம் பல மட்டங்களிலும் இயங்குகிறது, எனவே அது 100 நாள் வேலை நடக்கும் இடங்களிலும் இருக்கிறது. ராஜஸ்தானில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப் படுத்தப்பட்ட ராவத் சமூகத்தைச் சேர்ந்த சம்பா, " 'தாழ்த்தப்பட்ட' சமூகத்தை சேர்ந்த பெண்கள் தங்களது சொந்த தண்ணீர் பாட்டில்களை வீட்டிலிருந்து கொண்டு வருகின்றனர், ஏனென்றால் அவர்கள் இங்குள்ள பானையை தொடவோ அல்லது அதிலிருக்கும் தண்ணீரையோ குடிக்கக் கூடாது என்று கூறுகிறார். தண்ணீர் கொடுக்கும் பொறுப்பில் இருக்கும் பெண் சார்ந்து இருக்கும் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நான் இருந்தால் மட்டுமே நான் அந்தப் பானையை தொட முடியும் மேலும் அதிலிருந்து தண்ணீர் பருக முடியும். ஆனால் எடுத்துக்காட்டாக பில்ஸ் சமூகத்தைச் (ராஜஸ்தானில் பட்டியல் பழங்குடியினராக வகைப் படுத்தப்பட்ட சமூகம்) சேர்ந்தவர்களால் அது முடியாது", என்று கூறுகிறார்.

நண்பகலுக்கும் சற்று முன்னர் வேலை நடக்கும் இடத்தை சம்பா அணுகிய போது, கீதா காதிக் அன்றைய நாளுக்கான தனது வேலையை முடித்திருந்தார், சம்பா அருகிலுள்ள மரத்தின் அடியில் நிழலில் அமர்ந்தார். சோர்ந்து போயிருந்த கீதா மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு சம்பாவின் அருகில் மெதுவாக வந்து அமர்ந்தார். காதிக் சமூகத்தைச் சேர்ந்த அவர், இது ஒரு பட்டியல் இனமாக வகைப் படுத்தப்பட்டது, 40 வயதாகும் கீதா, தனது பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீரை பருகினார், "இங்குள்ள உயர் சாதித் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக, குறிப்பாக தலித்துகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர். அவர்கள் ஒரு போதும் தாழ்த்தப்பட்ட பெண்ணை அனைவருக்கும் தண்ணீர் நிரப்ப அனுமதிக்க மாட்டார்கள். நான் ஒரு போதும் தண்ணீர் கொடுக்கும் பொறுப்பில் அமர்த்தப் படவில்லை, ஏனென்றால் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் என்பதால்", என்று கூறுகிறார் அவர்.

சிறிது நேரத்துக்கு பிறகு, வீட்டிற்கு திரும்பும் வழியில், சம்பா, "100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை கவனிக்கவும், ஊதியத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் முயற்சி செய்தால் குறைந்த பட்சம் மக்கள் வயிற்றையாவது நிரப்ப முடியும், என்று கூறுகிறார். எல்லா இடத்திலும் அரசாங்கம் எவ்வளவோ பணத்தை செலவழிக்கிறது ஏன் அதில் சிலவற்றை அவர்களது தொழிலாளர்களுக்காக செலவிடக் கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

நண்பகலுக்கு சற்று நேரத்திற்கு பிறகு சம்பா வீட்டிற்கு திரும்பி வந்து, தனது குழந்தைகளை அழைக்கிறார். கதவினைத் திறந்தபடியே அவர், "மேற்பார்வையாளராக நான் எனது  ஊதியத்தை  பெறவே இல்லை (5 மாதங்களுக்குப் பிறகும், கடந்த மே மாதத்தில் நான் அவரை சந்தித்த போது வரை) என்று கூறுகிறார். அவர்கள் (சில பஞ்சாயத்து உறுப்பினர்கள்) நான் மேற்பார்வையாளராக இருப்பதை விரும்பவில்லை, அதனால் அவர்கள் ஊதியத்தை எனக்கு வழங்க விடமாட்டோம் என்று கூறுகின்றனர். எனவே நான் அவர்களிடம், நீங்கள் அதை (அந்தப் பணத்தை) ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க விடவில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்...", என்று கூறுகிறார்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் கவனமாக தனது முக்காட்டை எடுத்து விடுகிறார், இப்போது சற்று சத்தமாக, "அரசாங்கம் ஆண்களுக்கு என்று வேறு 100 நாள் வேலை இடங்களை உருவாக்கித் தர வேண்டும், என்று அவர் கூறுகிறார். ஆண்கள் சுற்றிலும் ஆண் கள் சுற்றிலும் இருந்தால், வேலை செய்யும் போது கூட எங்களது முக்காட்டை எடுக்க எங்களுக்கு அனுமதி கிடையாது. எங்களால் முக்காட்டை போட்டுக் கொண்டு பேசவும் முடியாது. எங்களால் சரியாகப் பார்க்கக் கூட முடியாது... வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மட்டும் இருந்தால், இந்த விதிகளை எல்லாம் நாங்கள் பின்பற்றுவதே இல்லை... நாங்கள் பேசுவோம், சிரிப்போம், ஒருவரது பிரச்சனையை மற்றொருவர் புரிந்து கொள்வோம்...", என்று கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Nioshi Shah

Nioshi Shah is a former PARI intern and student of Liberal Arts at FLAME University, Pune. Her research interests include themes of social exclusion and gender.

Other stories by Nioshi Shah
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose