"நாங்கள் எவ்வளவு அதிகமாக வாங்குகிறோமோ, அவ்வளவு அதிகமான கடனில் நாங்கள் இருக்கிறோம்". என்று பெரும்பான்மை சௌரா ஆதிவாசிகள் வசிக்கும் கிராமமான கைராவிலிருந்து, 40 வயதாகும் விவசாயி குணாரி சபரி, எங்களிடம் கூறினார்.

"மாட்டு சாணம் மற்றும் கலப்பைகளுடனான விவசாயம் (கோபர்கட்டச்சாசா, ஹலாச்சாசா) எங்களுடையது, இப்போது யாரும் அதைச் செய்யவில்லை", என்று அவர் கூறினார். "இப்போது நாங்கள் எல்லாவற்றிற்கும் சந்தைக்கு ஓடுகிறோம். விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் ஆகிய அனைத்திற்கும். முன்பு போலல்லாமல், நாங்கள் சாப்பிடுவதைக் கூட வாங்க வேண்டி இருக்கிறது", என்று கூறினார்.

குணாரியின் கூற்று ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியம் வாய்ந்த மலைப்பகுதிகளில் வேரூன்றி வரும் பருத்தி சாகுபடியின் சார்பு நிலையைப் பிரதிபலிக்கிறது, அதன் பல்லுயிர் வளம், விவசாயிகளின் துயரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அது ஆழமான தாக்கங்களைக் கொண்டு இருக்கிறது (பார்க்க: ஒடிசாவில் பருவநிலை நெருக்கடிக்கான விதைகள் விதைக்கப்படுகின்றன ). பருத்தி முதன் முதலில் வந்த ராயகடாவின் குனுபூர் வட்டத்தின் சமவெளிக்குத் தென்கிழக்கில் நாங்கள் இறங்கியபோது இது தெளிவாகத் தெரிந்தது. ஆந்திராவின் எல்லையில் இருக்கும், இங்குள்ள நிலப்பரப்பில் கண்ணுக்குத் தெரிந்தவரை பருத்தியின் ஒற்றைப் பயிர்  சாகுபடி முறையாக இருக்கிறது.  மேலும் - ஆழ்ந்த துயரமும் தெரிகிறது.

"நாங்கள் 10 - 12 ஆண்டுகளுக்கு முன்பு பருத்திக்கு மாறினோம்.  எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் இப்போது நாங்கள் அதைச் செய்து வருகிறோம்". இது தான் குனுப்பூர் வட்டத்தில் உள்ள கைராவில் உள்ள பலர் எங்களிடம் கூறியது. இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள், தீவிர - மூலதனம் கொண்ட பருத்தியை நோக்கி நகர்ந்த போது, ​​அவர்கள் படிப்படியாக தங்கள் சொந்த விதைகளையும், பல பயிர் செய்யும் முறைகளின் பாரம்பரிய முறைகளையும் இழந்துவிட்டதாகவும் கூறினர்.

"எங்களுக்கென எங்கள் சொந்த பயிர்கள் மற்றும் எங்கள் சொந்த விவசாய முறையும் இருந்தது" என்று ஒரு இளம் சௌரா விவசாயியான கேத்ரா சபரா கூறினார். "ஆந்திராக்காரர்கள் வந்து பருத்தியை வளர்க்கச் சொன்னார்கள், மற்றும் எல்லாவற்றையும் எங்களுக்குக் கற்றும் கொடுத்தார்கள்", என்று கூறினார். இங்குள்ள மற்றொரு விவசாயியான சந்தோஷ் குமார் தண்டசேனா, லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு கிராம மக்களை கப்பா அல்லது பருத்தியின் பக்கம் ஈர்த்தது என்று கூறினார். "ஆரம்பத்தில் அது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது, நாங்களும் பணம் சம்பாதித்தோம். ஆனால் இப்போது, ​​அது துன்பம் மற்றும் இழப்புகளை மட்டுமே கொடுக்கிறது", என்று அவர் கூறினார். "நாங்கள் அழிக்கப்பட்டுவிட்டோம், மேலும் சாஹுகர்கள் [கடன் கொடுப்பபவர்கள்] மகிழ்ச்சியாக இருக்கின்றனர்", என்றும் கூறினார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அடர் பச்சை நிற ஜான் டீரெ டிராக்டர்கள் கிராம சாலையில் மேலும் கீழும் செல்லும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. உள்ளூர் கோயில் சுவர்களில் Bt பருத்தி விதை நிறுவனங்களின் ஒடியா மொழியிலான விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த பயிருக்கான உழுகும் மற்றும் விதைக்கும் உபகரணங்கள் அனைத்தும் அந்த கிராம சதுக்கத்தைச் சுற்றியே இருந்தது.

PHOTO • Chitrangada Choudhury

மேல் இடது: குனுபூர் வட்டத்தில், GM பருத்தியின் ஒற்றை பயிர் சாகுபடி முறை அடிவானம் வரை நீண்டு கிடக்கிறது. மேல் வலது: கைரா கிராமத்தில், விவசாயிகள் 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பு பருத்திக்கு மாற்றப்பட்டதிலிருந்து கடனில் மூழ்கி இருப்பதாகவும், மேலும் பருத்தியை விதைக்காவிட்டால் கடன்காரர்களிடமிருந்து புதிய கடனை வாங்க முடியாது என்றும் கூறுகின்றனர். கீழ் வரிசை: பருத்தி விதைகளுக்கான ஒடியா மொழியிலான விளம்பரங்கள் மரங்களின் மீது அறையப்பட்டு இருந்தன, மேலும் கிராம கோவில் சுவர்களில் இன்னும் பல பருத்தி விதைகளை விளம்பரப்படுத்தும்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன

"பருத்தி விவசாயிகளில் பெரும்பாலோர் கடன்பட்டுள்ளனர், ஏனெனில் விதை மற்றும் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வருகின்றன, அதே நேரத்தில் உற்பத்தியின் விற்பனை விலை ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கிறது; மேலும் இடைத்தரகர்கள் லாபத்தை பறிக்கிறார்கள்", என்று இந்தப் பகுதியில் பணியாற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான தேபல் தேப் விளக்குகிறார். "ராயகடாவில், பல விவசாயிகள் குறைந்தபட்சமாக சந்தை விலையில் 20 சதவீதத்தை மட்டுமே [தங்களின் விளை பொருட்களுக்காக] பெறுகிறார்கள்", என்று கூறினார்.

அதிகரித்து வரும் இழப்புகளை எதிர் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் பருத்தியினை ஏன் தொடர்ந்து பயிர் செய்ய வேண்டும்?  "நாங்கள் சாஹுகர்களுக்கு கடனால் பிணைக்கப்பட்டு இருக்கிறோம்," என்று சபரா கூறினார்.  "நாங்கள் பருத்தியை விதைக்காவிட்டால், அவர்கள் எங்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள்", என்று கூறினார். மேலும், "நாங்கள் அரிசியைப் பயிர் செய்தால், எங்களுக்கு எந்த கடனும் கிடைக்காது. பருத்திக்கு மட்டுமே கடன் கிடைக்கும்", என்று தண்டசேனா கூறினார்.

"விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் இந்த பயிரைப் பற்றி புரிந்து கொள்ளவே இல்லை" என்று தேபின் சகாவான, தேப்துலால் பட்டாச்சார்யா எங்களிடம் கூறினார். "விதைப்பதில் இருந்து அறுவடை வரை, அவர்களின் ஒவ்வொரு அடியிலும் அவர்கள் சந்தையை முழுமையாக சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது…  தங்களால் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க முடியாது [என்றாலும்]... அவர்களுக்கே நிலம் சொந்தமானது. நாம் அவர்களை அவர்களது சொந்தப் பண்ணைகளிலேயே விவசாயிகள் அல்லது தொழிலாளர்கள் என்று  அழைக்க வேண்டுமா?" என்று கேட்கிறார்.

பருத்திப் பரவலின் மிகவும் அழிவுகரமான தாக்கம் என்று, தேப் மற்றும் அவரது சகாக்கள் சுட்டிக்காட்டுவது எதை என்றால், உள்ளூர் உயிர்ப் பன்மை அழிவு மற்றும் அதனுடன் சுற்றுச்சூழல் ரீதியாக வளமாக இருக்கும் இந்த நிலப்பரப்பில் பணிபுரியும் மற்றும் பராமரிக்கும் சமூகங்களின் அறிவு ஆகியவையே. இந்த இரண்டும் - அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைகளையும், வானிலையின் தீவிரத்தையும் தாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் பருவநிலையை - தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு விவசாயத்திற்கு முக்கியமானவையாக இருக்கிறது.

"பருவநிலை மாற்றம், உள்ளூர் வானிலையின் திடீர் மாறுபாடுகளைத் தூண்டுகிறது", என்று தேப் கூறுகிறார். ஒடிசா விவசாயிகள் நீடித்த வறட்சி, நீண்ட நேர மழை, மற்றும் அடிக்கடி ஏற்படும் வறட்சி ஆகியவற்றை ஏற்கனவே அனுபவித்து வருகின்றனர்", என்று கூறுகிறார். பருத்தி மற்றும் நவீன வகை அரிசி மற்றும் காய்கறிகளும், பாரம்பரிய வகைகளுக்கு மாற்றாகி வருகின்றன, இவைகளால் திடீரென ஏற்படும் உள்ளூர் சுற்றுச்சூழல் மாற்ற நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்து வாழ இயல்பாகவே முடிவதில்லை. இதன் பொருள், பயிர் தாவரங்களின் வாழ்வு, மகரந்தச் சேர்க்கை, உற்பத்தித்திறன் மற்றும் இறுதியாக உணவுப் பாதுகாப்பு ஆகியவை கடும் நிச்சயமற்ற தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதே", என்று கூறுகிறார்.

இந்தப் பகுதிக்கான மழைப்பொழிவின் தரவு மற்றும் விவசாயிகளின் கணக்குகள் ஆகிய அனைத்தும் அதிகரித்து வரும் ஒழுங்கற்ற வானிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. 2014 - 18 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் ஆண்டு சராசரி  மழை அளவு 1,385 மி.மீ. இதுவே 1996 - 2000 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கான மழை அளவான 1,034 மி.மீ.யை விட 34 சதவீதம் அதிகமாகும் (இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் தரவுகள் இவ்வாறு காட்டுகின்றன). மேலும், புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2019 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு, “குறிப்பாக கன முதல் தீவிர கன மழை நாட்களும், வறண்ட நாட்களும் அதிகரித்து வருகின்றன என்றும், அதே நேரத்தில், ஒடிசாவில், லேசான முதல் மிதமான மழை நாட்கள் மற்றும் ஈரமான நாட்கள் குறைந்து வருகிறது", என்றும் கூறுகிறது.

PHOTO • Chitrangada Choudhury
PHOTO • Chitrangada Choudhury
PHOTO • Chitrangada Choudhury

குனுஜி குலுசிகா-வைப் (நடுவில் இருப்பவர்) போன்ற விவசாயிகள் Bt பருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண் - ரசாயனங்களின் பரவலால் தங்களது பாரம்பரிய விதை வகைகளில் (இடது), மற்றும் அவர்களின் மண் மற்றும் பண்ணைகளிலும் (வலது) அங்குள்ள பிற உயிரினங்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்

"கடந்த மூன்று ஆண்டுகளாக… மழை தாமதமாக வந்து கொண்டிருக்கிறது", என்று அருகிலிருக்கும் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியும், ஆர்வலருமான சரண்ய நாயக் கூறுகிறார். "மழைக் காலத்தின் ஆரம்பப் பகுதியில் குறைந்த மழைப் பொழிவையும், அதன் பிறகு மழைக் காலத்தின் நடுப்பகுதியில் அதி தீவிர மழையும், பின்னர் மழைக் காலத்தின் இறுதியில் அதிக மழையும் பெய்கிறது".  இதன் பொருள், விதைப்பு தாமதமாகிறது என்பதையும், தீவிர மழை என்பது மிக முக்கியமான நடுப்பகுதியில் சூரியன் இல்லை என்பதையும், இறுதியில் பெய்கிற மழையால் அறுவடை சேதமடைகிறது என்பதையும் குறிக்கிறது.

இந்தப் பகுதியில் உணவு மற்றும் வேளாண்மை குறித்து பணிபுரியும் 'வாழும் பண்ணைகள்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தேப்ஜீத் சாரங்கி, "இந்த பகுதியில் பருவமழை ஜூன் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் வரை நீடிக்கிறது. எவ்வாறாயினும், கடந்த சில வருடங்களில் அது ஒழுங்கற்றதாகிவிட்டது", என்று கூறுகிறார். ஒடிசாவின் பல பயிர்கள் விளைவிக்கும் முறைகள், பாரம்பரிய உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவை, இந்த மாறுபாடுகளைச் சமாளிக்க பருத்தியை விட மிகவும் பொருத்தமானவை என்று சாரங்கி மற்றும் நாயக் ஆகிய இருவரும் வாதிடுகின்றனர். "பல பயிர்கள் விளைவிக்கும் விவசாயிகளால் இத்தகைய ஒழுங்கற்ற வானிலை முறைகளை சமாளிக்க முடிகிறது என்பது எங்கள் அனுபவமாகும்", என்று சாரங்கி கூறுகிறார். "Bt பருத்தி என்னும் ஒரு பயிர் மூலம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகள் வெடிகுண்டின் மீது அமர்ந்திருக்கிறார்கள்", என்றும் கூறுகிறார்.

*****

புதிய GM ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையின் கீழ் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் தன்னாட்சி ஆகியவற்றிற்கு ஆபத்துகள்  இருப்பதை பல விவசாயிகள் உணர்கின்றனர் - ஆனாலும் அவர்கள் புதிய நடைமுறைகளையே பின்பற்றி செல்கின்றனர். ஆனால் இன்னும் பலர், குறிப்பாக பெண்கள், தங்கள் பாரம்பரிய விவசாயத்தை கைவிடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.  கேரண்டிகுடா கிராமத்தில், நியாம்கிரியின் பின்னணியில், குனுஜி குலுசிகா என்ற கோண்டு ஆதிவாசிப் பெண் தனது மகன் சுரேந்திராவை இந்த ஆண்டு பருத்தி பயிர் செய்வதிலிருந்து தடுத்திருக்கிறார்.

இடம்பெயரும் வேளாண்மைக்காக மலைப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் வெறுங்காலுடன் அவர் கடினமான வேலையில் ஈடுபட்டிக் கொண்டிருந்தார். மேல்சட்டை இல்லாமல் அணிந்திருந்த முழங்கால் நீள சேலை, மற்றும் முடி ஒரு பக்கமாக முடிச்சிடப்பட்டு, குனுஜி ஆதிவாசி பெண்ணின் தோற்றத்தை அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அவர்களை ‘பின்தங்கிய நிலையில்’ இருந்து உயர்த்துவதாக உறுதியளிக்கும் விளம்பரங்களில் இருப்பதைப் போல அவர் இருந்தார். ஆயினும், தேப் குறிப்பிடுவது போல, குனுஜி இனத்தைப் போன்ற இனங்களின் மேம்பட்ட அறிவு மற்றும் திறன்களின் அழிவு பருவநிலை மாற்றத்தின் பிடியில் சிக்கி இருக்கும் இந்த உலகத்திற்கு பேரழிவை அது ஏற்படுத்தும்.

பருத்திக்கு மாறுவதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதை விளக்கிய குனுஜி, "நாங்கள் ஒரு வருடத்திற்கு கூட எங்கள் [சொந்த] பயிர்களை கைவிட்டால்," "விதைகளை எவ்வாறு மறுபடியும் பூர்த்தி செய்ய முடியும்? அவற்றை இழக்கும் அபாயத்திற்கு நாங்கள் தள்ளப்படுவோம். கடந்த ஆண்டு, நாங்கள் சாதாரணமாக மக்கா [மக்காச்சோளம்] நடவு செய்யும் இடத்தில் சுரேந்திரா கொஞ்சம் பருத்தியை நடவு செய்து இருந்தார். நாங்கள் இப்படியே தொடர்ந்தால், எதிர்காலத்தில் விதைக்க எங்களுடைய சொந்த மக்காச்சோள விதைகள் எதுவும் எங்களிடம் எஞ்சியிருக்காது", என்று கூறுகிறார்.

பருத்திக்கு மாறுவதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதை விளக்கிய குனுஜி, விதைகளை எவ்வாறு மறுபடியும் பூர்த்தி செய்ய முடியும்? அவற்றை இழக்கும் அபாயத்திற்கு நாங்கள் தள்ளப்படுவோம்', என்று கூறுகிறார்.

காணொளியில் காண்க: ‘பருத்தி விதைகள் எனக்கானது இல்லை’ என்கிறார் கோண்டு விவசாயியான குனுஜி குலுசிகா, மேலும் அவரின் பாரம்பரிய உணவுப் பயிர்களின் வகைகளை நமக்குக் காட்டுகிறார்

பாரம்பரிய சாகுபடியில் இருந்து எடுக்கப்படும் விதைகளைப் பற்றி நாங்கள் குறிப்பிட்ட போது குனுஜி வெளிப்படையாகவே உற்சாகமடைந்தார். அவர் வேகமாக வீட்டிற்குள் ஓடி, அவர்களது குடும்பத்தால் அறுவடை செய்யப்பட்ட பல்வேறு வகையான பயிர்களுடன் வெளியே வந்தார், அவர் அவற்றை மூங்கில் கூடைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் அல்லது துணி பைகளில் சேமித்து வைத்திருந்தார். முதலில்: இரண்டு வகையான துவரம் பருப்பு, "நிலத்தின் சாய்வினைப் பொறுத்து விதைக்கப்பட வேண்டும்". அடுத்து: ஒரு மேட்டுநில நெல், கடுகு, மூங் அல்லது பச்சைப் பயிறு, பிரி அல்லது உழுந்து, மற்றும் இரண்டு வகையான பீன்ஸ். அடுத்து: இரண்டு வகையான விரல் தினைகள், மக்காச்சோளம், கருஞ்சீரகம். கடைசியாக: சியாலி விதைகளின் ஒரு சாக்கு (ஒரு வன உணவு). "அதிக மழை பெய்து, நாங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றால், நாங்கள் இவற்றை வறுத்து சாப்பிடுவோம்", என்று அவர் கூறினார், மேலும் எங்களுக்கும் ஒரு கையளவு வறுத்துக் கொடுத்தார்.

"இங்குள்ள கோண்டு மற்றும் பிற பழங்குடியினரின் வேளாண் - சுற்றுச்சூழல் அறிவு மிகவும் அதி நவீனமானது, ஏனெனில் இந்த குடும்பங்களால் ஆண்டுக்கு 70 - 80 பயிர்களை ஒரே நிலத்தில் வளர்க்க முடிந்தது - தானியங்கள், பருப்பு வகைகள், வேர்கள், கிழங்குகள், சிறுதானியங்கள் ஆகியன", என்று வாழும் பண்ணைகளைச் சேர்ந்த பிரதீப் பத்ரா கூறுகிறார். "இது இன்னும் ஒரு சில இடங்களில் நடைமுறையில் உள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக, கடந்த 20 ஆண்டுகளில் பருத்தியின் வருகையும் அதன் பரவலும் இங்குள்ள விதைகளின் பன்முகத்தன்மைக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது", என்று கூறினார்.

இரசாயன உள்ளீடுகளின் தாக்கங்களைப் பற்றியும் குனுஜி அஞ்சுகிறார். பருத்தியை வளர்ப்பதற்கு இவை இன்றியமையாதவை, அதே சமயம் ஆதிவாசி குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய பயிர்களுக்கு இதை பயன்படுத்துவதே இல்லை. "அந்த பூச்சிக்கொல்லிகள், அந்த உரங்கள் - சுரேந்திரா பருத்தியின் [செடிகள்] மீது பயன்படுத்தினார். அது நம் மண்ணின் வளத்தைக் கெடுத்து, அதிலுள்ள எல்லாவற்றையும் கொல்லவில்லையா? என்னுடைய பண்ணைக்கு அடுத்த பண்ணையில் நான் அதை என் கண்கூடாகப் பார்த்தேன் - அவர்கள் மீண்டும் மாண்டியாவை [விரல் தினைகளை] நடவு செய்யச் சென்றபோது, ​​அது நன்றாக வளரவில்லை, அது  வளர்ச்சி குன்றியதாகவே இருந்தது", என்று கூறினார்.

களைக்கொல்லியைத் தாங்கும் பருத்தி விதைகள் இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அது ராயகடா வழியாக காட்டுத்தீ போல பரவுகிறது, அதோடு தொடர்புடைய கிளைபோசேட், " அநேகமாக புற்றுநோய் காரணியாக இருக்கக்கூடிய " களைக்கொல்லியாகும், போன்ற வேதிப்பொருட்களும் பரவுகிறது . "களைக்கொல்லிகளை வழக்கமாகப் பயன்படுத்துவதால், பல புதர் தாவரங்கள் மற்றும் புற்கள் உட்பட துணை தாவரங்கள் அனைத்தும் வயல்களில் இருந்து மறைந்துவிட்டன", என்று தேபல் தேப் கூறுகிறார்.  அது பயிர் அல்லாத தாவரங்களை சார்ந்து இருக்கும் பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதற்கு வழிவகுக்கிறது.

"இந்தப்  பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் அறிவு [மற்றும் அதன் பல்லுயிர்] ஆபத்தான முறையில் அழிந்து கொண்டு வருகிறது.  அதிக அளவில் விவசாயிகள் தங்கள் பாரம்பரிய பல பயிர்கள் வளர்க்கும் முறை மற்றும் வேளாண் வனவியல் முறைகளை ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு ஆதரவாக கைவிட்டு வருகின்றனர், அவை அதிக அளவு பூச்சிக்கொல்லிகளைக் கோருகின்றன. பருத்தி விவசாயிகளும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு… எந்த பூச்சிகள் உண்மையில் அழிவு செய்யும் பூச்சிகள் மற்றும் அப்படி அல்லாதவை எவை என்று தெரியவில்லை. எனவே அவர்கள் எல்லா பூச்சிகளையும் அகற்ற பூச்சிக்கொல்லிகளை தெளிக்கின்றனர்", என்று கூறுகிறார்.

பருத்திக்கு மாறியதன் மூலம், “ஒவ்வொரு பூச்சியும், பறவையும், விலங்குகளும் ஒரே ஒரு கண்ணாடியின் மூலமாகவே - பயிரின் எதிரியாகப் - பார்க்கப்படுகிறது. வேளாண்- ரசாயன உள்ளீடுகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதற்கான சரியான அயல் இடச் சான்று இதுவாகும்", என்று சரண்ய நாயக் கூறுகிறார்.

குனுஜி, அதன் மோசமான விளைவுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார், ஆனாலும் அவர்கள் பருத்தியையே பயிரிட்டு வந்தனர். "அவர்கள் ஒரு நேரத்தில் இவ்வளவு பணத்தை பார்க்கிறார்கள்," என்று அவர் கைகளை விரித்துக் காண்பிக்கிரார். "மேலும் அதனால்  அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்", என்று கூறுகிறார்.

PHOTO • Chitrangada Choudhury

Bt பருத்தி ஒற்றைப் பயிர் சாகுபடி முறை (மேல் வரிசை) மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண் - ரசாயனங்கள் (கீழ் வரிசை) ஆகியவை ராயகடா வழியாக பரவி வருகின்றன, இது இந்தப் பகுதியின் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு மாற்ற முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது

"சமூக அமைப்புகளின் விதை பகிர்வு மற்றும் பரிமாற்றம், கால்நடைகளை ஒன்றாக வளர்த்தல் மற்றும் பண்ணையில் வேலை செய்வதற்கான உழைப்பைப் பகிர்ந்து கொள்ளுதல்", ஆகியன எல்லாம், பாரம்பரிய பயிர்களை பருத்தி வெளியேற்றி வருவதால் அழிக்கப்பட்டு வருகிறது, என்று பத்ரா கூறுகிறார். "இப்போது விவசாயிகள், கடன் கொடுப்பவர்கள் மற்றும் வர்த்தகர்களையே நம்பியே இருக்கின்றனர்", என்று கூறுகிறார்.

மாவட்டத்தில் ஒரு விவசாய அதிகாரி (அடையாளம் காண விரும்பாதவர்) பத்ரா சொல்வதை ஒத்துக்கொண்டார். 1990 களில் இங்குள்ள கிராமங்களில் பருத்தியை அறிமுகப்படுத்தி ஊக்குவித்தது அரசு தான் என்று அவர் ஒப்புக் கொள்கிறார். தனியார் விதை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவின் ரசாயன உள்ளீட்டு விற்பனையாளர்களிடமிருந்து மூர்க்கத்தனமான உந்துதல் தொடர்ந்து வந்தது. அரசாங்கம் கவலைப்படும் அதே வேளையில், போலி மற்றும் சட்டவிரோத விதைகளின் பயன்பாடு பற்றி வெளியில் தெரிந்தற்கு மற்றும் வேளாண் - வேதிப்பொருட்களின் பெருகி வரும் நுகர்வு ஆகியவற்றிற்கு தீர்வு காண எதுவும் செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி ஒப்புக் கொள்கிறார். "பருத்தி இப்போது ஒரு பெரும் தலைவலி ஆகிவிட்டது," என்று அவர் கூறினார்.

ஆனாலும், பணத்தின் ஈர்ப்பு சக்தி வாய்ந்தாக இருக்கிறது, குறிப்பாக இளம் விவசாயிகளுக்கு. தங்கள் குழந்தைகளுக்கான ஆங்கில வழிக் கல்வியினை வழங்குதல், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றின் மீதான அவா மற்றும் பெற்றோரின் விவசாய வழிகளில் பொறுமையின்மை ஆகியவற்றால், பருத்தி அவர்களுக்கு ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய  இடராகத் தெரிகிறது. சந்தைகள் ஒரு வருடம் குறைந்து இருந்தால், அவை அடுத்த ஆண்டு அதிகமாகலாம்.

எவ்வாறாயினும், சூழலியல் மன்னிப்பதாக இல்லை.

"மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நோய்களின் வகைகளில் ஆவணப்படுத்தப்படாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நரம்பு மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக  இருக்கிறது", என்கிறார் தேப்.  "இவை ஆர்கனோபாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள் மற்றும் கிளைபோசேட் களைக்கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் வந்தவை என்று நான் சந்தேகிக்கிறேன், அவை மாவட்டத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளன", என்று கூறினார்.

54 வயதான, பிஷமகட்டக்கில் உள்ள கிரிஸ்துவ மருத்துவமனையில் பயிற்சி செய்யும் டாக்டர் ஜான் ஓமன் கூறுகையில், அர்ப்பணிக்கப்பட்ட விசாரணைகள் இல்லாத நிலையில் இது போன்ற சாதாரண இணைப்புகளை உருவாக்குவது கடினம். "மலேரியா போன்ற தொற்றுநோய்களில் தான் மாநிலத்தின் கவனம் இன்னும் உள்ளது. ஆனால் இங்குள்ள பழங்குடியினரிடையே வேகமாக வளர்ந்து வரும் நோய்கள் இதயம் மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்களே... உண்மையில் அவை நாள்பட்ட சிறுநீரக நோய்கள், மேலும் அவற்றின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது", என்று கூறினார்.

"இப்பகுதியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் டயாலிசிஸ் மையங்களைத் துவங்கியுள்ளன, இது ஒரு அருமையான வணிகமாகும், என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.  இந்த அளவிலான சிறுநீரக செயலிழப்புக்கு என்ன காரணம்? என்ற கேள்வியை நாங்கள் விசாரிக்க வேண்டியிருக்கிறது", என்று அவர் கூறுகிறார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தங்களை தக்க வைத்துக் கொண்ட சமூகங்கள் தாங்கள் சிறிதளவும் தயாராக இல்லாத மாற்றங்களுக்கு உள்ளாகின்றன அல்லது அச்சுறுத்தப் படுகின்றன என்று ஓமன் கவலையுடன் தெரிவிக்கிறார்.

*****

அந்த வாரம் நியாம்கிரி மலைகளில், ஒரு கதகதப்பான காலை வேளையில், ஒரு நடுத்தர வயது கோண்டு ஆதிவாசி விவசாயியான ஒபி நாக்-கை, ஒரு உலோகப் பானை மற்றும் ஒரு லிட்டர் பாட்டில் கிளைசெல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த எக்செல் பயிர் பராமரிப்பு லிமிடெட் நிறுவனம் தயாரித்த திரவ உருவாக்கமான கிளைபோசேடுடன் அவரை சந்தித்தோம்.

நாக் ஒரு நீல நிற கையால் இயக்கப்படும் தெளிப்பானை தனது வெற்று முதுகில் சுமந்து கொண்டிருந்தார். அவர் தனது நிலத்தின் அருகே இருந்த ஒரு சிறிய மலை ஓடையில் நின்று கொண்டு, தனது சுமையை கீழே இறக்கி வைத்தார். பானையைப் பயன்படுத்தி, தெளிப்பானில் தண்ணீரை நிரப்பினார். பின்னர் அவர் "கடைக்காரரின் அறிவுறுத்தளின் படி" இரண்டு மூடி கிளைபோசேட்-ஐ தண்ணீரில் கலந்தார். அவர் அதை நன்றாக கலக்கினார், மீண்டும் தெளிப்பானை முதுகில் கட்டிக் கொண்டு, தனது நிலத்தில் உள்ள களைச் செடிகளின் மீது தெளிக்கத் துவங்கினார்.  "இவை அனைத்தும் மூன்று நாட்களில் இறந்துவிடும், மேலும் இந்த நிலம் பருத்தி விதைக்க தயாராக இருக்கும்," என்று அவர் கூறினார்.

PHOTO • Chitrangada Choudhury

ஜூலை மாத காலை வேளையில், நியாம்கிரி மலைகளில், வெற்று உடல் கொண்ட ஒபி நாக் கிளைபோசேட் பாட்டிலைத் திறக்கிறார், இது ஒரு களைக்கொல்லி மற்றும் அனேகமாக புற்றுநோய் காரணியாக இருக்கக்கூடியது. அவர் தனது பண்ணையால் பாயும் ஓடையில் இருந்து தண்ணீரில் கலந்து அதை நீர்த்துப்போகச் செய்து, நிலத்தின் மேல் தெளித்து, Bt பருத்தியை (இடது மற்றும் நடு) விதைக்க நிலத்தை தயார் செய்கிறார். மூன்று நாட்களுக்குப் பிறகு, நிலத்தில் உள்ள பெரும்பாலான செடிகள் வாடிவிட்டன (வலது)

கிளைபோசேட் பாட்டிலில் உள்ள எச்சரிக்கைகள், ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் இருக்கிறது, அது பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கிறது: உணவுப் பொருட்கள், வெற்று உணவுப் பொருள் கொள்கலன்கள் மற்றும் விலங்கு உணவு ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்திருங்கள்; வாய், கண்கள் மற்றும் தோலுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்;  தெளிக்கும் போது ஏற்படும் மூடுபனியை மூச்சின் வழியாக உள்ளிழுப்பதைத் தவிர்க்கவும். காற்றின் திசையில் தெளிக்கவும்; தெளித்த பின் அசுத்தமான உடைகள் மற்றும் உடலின் பாகங்களை நன்கு கழுவுங்கள்; கலந்து மற்றும் தெளிக்கும் போது முழுமையாக பாதுகாக்கும் உடைகளை அணியுங்கள் என்று குறிப்பிடுகிறது.

நாகி இடுப்பைச் சுற்றி ஒரு சிறிய துணியைத் தவிர அவர் வெற்று உடலுடனே இருந்தார்.  அவர் தெளித்த போது, ​​அவரது பாதத்திலும், கால்களிலும் அதன் துளிகள் விழுந்தன, அதே நேரத்தில் காற்று களைக்கொல்லியின் மூடுபனியை எங்கள் பக்கமும் கொண்டு வந்தது, அவரது நிலத்தின் நடுவில் நிற்கும் மரத்திற்கும், அருகிலுள்ள வயல்களுக்கும் கூட கொண்டு சென்றது. அதே போல் அவரது பண்ணைக்கு அருகில் பாயும் ஓடையிலும் கலந்து, இது மற்ற வயல்களின் வழியாகச் சென்று, 10 வீடுகளைக் கொண்ட பகுதி மற்றும் அவர்களுக்குச் சொந்தமான கை பம்பில் சென்று சேர்கிறது.

மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் நாகின் வயலுக்குச் சென்றோம், அருகில் ஒரு சிறிய பையன் மாடுகளை மேய்ப்பதைக் கண்டோம். அவர் தெளித்த கிளைபோசேட் மாடுகளை பாதிக்குமா என்று நாங்கள் நாகிடம் கேட்டோம், அவர், "இல்லை, நான் தெளித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நான் தெளித்த அன்றே அவை மேய்ந்திருந்தால், அவை நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம்", அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

கிளைபோசேட் புதிதாக தெளிக்கப்பட்ட நிலத்திற்கு தனது கால்நடைகளை உள்ளே கூட்டிச் செல்வதை தவிர்க்க எப்படித் தெரிகிறது என்று சிறுவனிடம் நாங்கள் கேட்டோம். அவர் தலையை உலுக்கிவிட்டு, மேலும் "விவசாயிகள் களைக்கொல்லிகளைத் தெளித்திருந்தால் எங்களிடம் கூறிவிடுவர்", என்று கூறினார். சிறுவனின் தந்தை, கடந்த ஆண்டு பக்கத்தில் உள்ள ஒரு  கிராமத்தில் புதிதாக தெளிக்கப்பட்ட வயலில் கால்நடைகள் மேய்ந்த பின்னர் சில கால்நடைகள் இறந்ததை நாங்கள் கண்டோம், என்று எங்களிடம் கூறினார்.

இதற்கிடையில் நாகின் வயலில் பெரும்பாலான புற்கள் வாடிவிட்டன. அந்த நிலம் இப்போது பருத்தி விதைக்கத் தயாராக இருந்தது.

கவர் படம்: ராயகடாவின் குனுபூர் வட்டத்தில் உள்ள சௌரா ஆதிவாசி குத்தகை விவசாயியான மோகினி சபரா, அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவுப் பயிர்களை பயிரிட்டு வந்தார், இப்போது Bt பருத்தியை மட்டுமே பயிரிடுகிறேன், என்று கூறுகிறார். (புகைப்படம்: சித்ரங்கதா சௌத்ரி)

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Reporting : Aniket Aga

Aniket Aga is an anthropologist. He teaches Environmental Studies at Ashoka University, Sonipat.

Other stories by Aniket Aga
Reporting : Chitrangada Choudhury

Chitrangada Choudhury is an independent journalist.

Other stories by Chitrangada Choudhury

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Series Editors : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose