“இன்று நீங்கள் கடைகளில் எதை வேண்டுமானாலும் வாங்கி வரலாம். ஆனால், எங்களுடைய பழங்குடி சமூகத்தில் மத சடங்குகளின் போது நாங்கள் பயன்படுத்துகின்ற மண்பாண்டங்களை எங்களுடைய கோடா பழங்குடி இனத்தின் பெண்கள் மட்டுமே செய்வார்கள்.” என்கிறார் 63 வயதான சுகி ராதாகிருஷ்ணன். திருச்சிகாடி என்பது அவரின் மலைக்கிராமம். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரத்துக்கு அருகே உதகமண்டலம் தாலுகாவில் இந்தக்  கிராமம் இருக்கிறது.  பழங்குடி மக்கள் அவர்களின் குடியிருப்புகளுக்கு சிறிது வேறுபட்ட பெயர்களை வைத்திருக்கிறார்கள்.. கிராமத்தின் பெயரை அவர்கள்‘ ட்டிருச்காத்’ என்று உச்சரிக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும்போது சுகி  வழக்கமாக கோடா பழங்குடி பெண்களின் அடையாளமாக இருக்கின்ற ஆடைகளை அணிகிறார். கனமான, வெள்ளைத்துண்டைச் சுற்றியது போல அது இருக்கிறது. ‘துப்பிட்’ என்று அதனை அழைக்கிறார்கள். அதோடு அவர்கள் அணிகிற வெள்ளை நிற சால்வை என்பது ‘வாரத்’ என்று அழைக்கப்படுகிறது. கோத்தகிரியிலும் மற்ற நகரங்களுக்கும் வேலைக்கும் போகும்போது அவர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிவதில்லை. ஆனால், வீட்டுக்குத் திரும்பியபிறகு அவர்களின் பாரம்பரிய உடைகளைத் தான் அணிகிறார்கள்..  சுகியின் எண்ணெய் தடவப்பட்ட தலைமுடி அவர்களின் பழங்குடி இனப் பெண்களுக்கே உரிய வகையில் பக்கவாட்டில் தனித்துவமான முறையில் முடிந்து வைக்கப்படுகிறது. அவரது வீட்டிற்கு அடுத்ததாக சின்னதாக உள்ள  பானைகள் செய்யும் அறையில் எங்களை வரவேற்கிறார்.

“இந்தப் பானையை எப்படி செய்றது என்பதற்கான  சொல்லிக்கொடுக்கிற முறை எதுவும் கிடையாது. நான் என்னோட பாட்டிங்க எப்படி பானைகளை செய்றாங்கன்னு அவுங்களோட கைகளைப் பார்த்துத் தான் கத்துக்கிட்டேன்” பானையைச் செய்யும்போது அவுங்க கையி எப்படியெல்லாம் அசையுதுன்னு பாப்போம். வட்டமான ஒன்னுல இருந்து எப்படி பானை மாதிரியா எப்படி கொண்டுவர்றதுன்னு அவுங்க கையிதான் சொல்லிக்கொடுக்கும். ஒருத்தருக்கு அதுக்கே பல மணிநேரம் ஆகும். பானையோட வெளிப்புறத்துல மரத்தால் செஞ்ச ஒன்னை வெச்சுக்கிட்டு மென்மையானதா, மெதுவாக அதை மாத்துற அதே நேரத்தில் பானைக்கு  உள்ளே மெதுவான, வட்ட வடிவமான கல்லை வைச்சுக்கிட்டு அதையும் மெதுவானதாக மென்மையானதாக மாத்துவாங்க. வெளிப்புறத்துலயும் உள்புறத்திலயும் செய்ற வேலை ஒன்னோடு ஒன்னு இணைந்து இணக்கமாக நடக்கும். கீறலுங்க வரக்கூடாது. பானை தண்ணி ஒழுகக் கூடாது. இரண்டு பக்கமும் ஒன்னுபோல செஞ்சாத்தான் அப்படி வரும். அப்படிப்பட்ட பானையில சமைச்சா ரொம்ப ருசியாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக வந்து சாப்ட்டு பார்க்கனும். சாம்பார் வைக்கிறதுக்கு நாங்க சின்ன வாயோடு இருக்கின்ற இன்னொரு பானையையும் தயார் செய்வோம்.” என்கிறார் அவர்.

PHOTO • Priti David
PHOTO • Priti David
PHOTO • Priti David

சுகி ராதாகிருஷ்ணன் , (63) திருச்சிகாடியில் பழங்குடி மக்களின் பெண் குயவர்களின் நீண்ட பரம்பரையில்  வந்திருப்பவர், அவர்களின் பாட்டிகள் எப்படி பானைகளைச் செய்கிறார்கள் என்று பார்த்துத்தான் பானை செய்யக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்

தென்னிந்தியாவில் இருக்கிற நீலகிரி மலைகளில் வாழ்கின்ற கோடா பழங்குடி இனத்தில் பெண்கள்தான் மண்பானைகள் செய்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011.  வெறும் 308 போடா 102 குடும்பங்களாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்கிறது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.  ஆனாலும் இந்த எண்ணிக்கை என்பது பழங்குடிச் சமூக தலைவர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களின் எண்ணிக்கை 3000 வரை இருக்கிறது என்று கூறுகிறார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் முறையான சரியான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்திருக்கின்றனர்.

குடியிருப்புக்கு அருகில் இருக்கின்ற மைதானங்களில் இருந்து களிமண்ணை எடுத்துவருவது  மதரீதியான ஒரு சடங்கு. எடுத்துவந்த களிமண்ணை வடிவமைப்பது, அதிலிருந்து  பானை செய்வது, பானையைச்  சுடுவது  அனைத்தும் பெண்களின் பணிகளாக இருக்கின்றன.  ஆண்கள் வழக்கமாக இந்தப்  பணியில் கவனம் செலுத்துவதில்லை.  கடந்த காலத்தில் பெண்கள்  மத சடங்குகளுக்காக மட்டும் பானைகளை செய்யவில்லை. தினசரி செயல்பாடுகளுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் பானைகள் செய்துள்ளனர்.   சாப்பிடுவதற்கு, சமைப்பதற்கு, தண்ணீரை சேமித்து வைப்பதற்கு, தானியங்களை சேமித்து வைப்பதற்கு எண்ணை விளக்குகள்,  குழாய்கள் என அனைத்தும் மண் பாண்டங்களின் மூலமாகவே நடைபெற்றுள்ளது. சமவெளிப் பகுதிகளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்கள் கிராமங்களுக்கு உள்ளே வரும் வரையில் மண் பாண்டங்கள் மட்டுமே இந்த மலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.  அவை கோடா பெண்களால் செய்யப்பட்டவையே.

மண்பாண்டங்கள் செய்வது என்பது பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கின்ற  நாடு இது. இது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது.  பெண் குயவர்களைப் பற்றி மிகச்சிறிய அளவில்தான் ஆவணப்ப டுத்தப்பட்ட விசயங்கள் கிடைக்கின்றன. மெட்ராஸ் மாவட்ட கெஜட்டர் - 1908 ஆம் வருடத்தை சார்ந்தது. அதில் இந்த நீலகிரி என்ற பகுதியில் கோடா மக்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் தற்போது இசையமைப்பாளராகவும் கலைஞர்களாகவும் மற்ற மலைவாழ் மக்களுக்கு காணப்படுகின்றனர் ஆண்கள் தங்க வேலை செய்பவர்களாகவும் தச்சு வேலை செய்பவர்களாகவும் இரும்பு வேலை செய்பவர்களாகவும்  இருக்கிறார்கள். பெண்கள் ஒருவிதமான வளையத்தின் மூலம் பானைகளை தயார் செய்கிறார்கள் என்று அதில் இருக்கிறது.

“எங்கள் சமூகப் பெண்கள் மட்டுமே இந்தப் பணிகளை செய்ய முடியும்” என்கிறார் சமூகத்தின் மூப்பரான சண்முகம் என்ற 65 வயதானவர். அவர்  ஓய்வுபெற்ற பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் தாளாளர்.   தற்போது கோடா பழங்குடி கிராமமான புட்டு கோத்தகிரிக்குத் திரும்பியிருக்கிறார். “எங்களுடைய கிராமத்தில் பானை செய்கிற பெண் இல்லை என்றால் நாங்கள் இன்னொரு கிராமத்தில் இருந்து ஒரு பெண்ணை வரவழைத்து எங்களுக்கான தேவைகளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.

மண் பானை செய்வதும் மதமும் கோடா பழங்குடி மக்களின் பண்பாட்டில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றது.  மண்பானைகளுக்கான களிமண் எடுக்கிற நிகழ்வு என்பது 50 நாள் நடக்கிற  ஆண்டுவிழாவோடு தொடங்குகிறது. அவர்களின் குலதெய்வமான காம்டிராய்யாவுக்கும் அவனின் மனைவியான அய்யனூருக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாக 50 நாள்  விழா தொடங்குகிறது. கடந்த ஆண்டு விழாவில் சுகி ஏறத்தாழ நூறு பானைகள் செய்திருக்கிறார். டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் வரும்  முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வருகிற  அமாவாசை நாளில் இது தொடங்குகிறது என்கிறார். அவர். தலைமை மதகுருவும்  அவரது மனைவியும் களிமண் எடுப்பதற்கான புனித இடத்தை நோக்கிய ஊர்வலத்துக்கு தலைமை தாங்குவார்கள். இசை வாசிப்பவர்கள் அதற்கென்றே வாசிக்கப்படுகின்ற ‘மாண் ஏத் கொடு” (களிமண்ணை எடு) ஒரு தனியான, சிறப்பு இசையை வாசிப்பார்கள். தப்பிட், தாப்பர் எனப்படும் முரசுகளும் மற்றும் புல்லாங்குழலிலும் வாசிப்பார்கள். புல்லாங்குழல் இசைக்க, தப்பும் முரசுகள் முழங்க முதலில் கருப்புநிறமான களிமண் எடுக்கப்படும்.  அதன் பிறகு பழுப்பு நிறமான களிமண் எடுக்கப்படும். இந்த விழாவில் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்கடுத்த நான்கு மாதங்களும் பானைகள் செய்வதற்காகவே செலவிடப்படும். குளிர்காலத்து சூரியனும் காற்றும் மண்பாண்டங்கள் வேகமாக வளர்வதற்கு உதவுகின்றன.

PHOTO • Priti David
PHOTO • Priti David

குளிர்காலத்தில் பெண்கள் நூற்றுக்கணக்கான பானைகளைச் செய்கிறார்கள். அவர்கள் களிமண்ணை எடுக்கிறார்கள். வடிவமைக்கிறார்கள். அவற்றை நெருப்பில் சுடுகிறார்கள். பானைகள் செய்வதற்கு பெண்கள்  பயன்படுத்துகிற சக்கரங்களை அலங்கரிப்பதைத் தவிர ஆண்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை

காலங்கள் மாறுகிற போதும் கோடா பழங்குடியின குடியிருப்புகளில் மண்பாண்டம் செய்கின்ற கைத்தொழில்  இன்னமும் உயிரோடு இருப்பதற்கு அது ஆன்மீகத்தோடு இணைக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம். இன்று எங்களது சமூகத்தின் இளம் பிள்ளைகள் ஆங்கில வழி பள்ளிகளில் படிப்பதற்காக வெகு தூரம் செல்கிறார்கள். இத்தகைய விஷயங்களை கவனிப்பதற்கும்  கற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கு ஏது நேரம்? இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வருகிற விழாக் காலத்தின் போது இந்தக் கிராமத்தில் இருக்கிற அனைத்து பெண்களும் ஒன்றாக அமர்ந்து இதை செய்ய வேண்டும் என்கிறார் சுகி. இந்த நேரத்தில்தான் இளம் பெண்கள் இந்த கலையை கற்றுக் கொள்கின்றனர்.

கோடா களிமண் படைப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும், அதற்கு உதவ வேண்டும் என்ற முயற்சியில் கோத்தகிரியில் இருந்து செயல்படுகின்ற சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. 2016 - 2017 காலகட்டத்தில் கோடா பழங்குடி பெண்களால் செய்யப்பட்ட களிமண் கலைப்பொருள்கள் ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ளவற்றை நீலகிரி ஆதிவாசிகள் நல்வாழ்வு அசோசியேஷன் விற்பனை செய்திருக்கிறது. இங்கே இருக்கின்ற பழங்குடி குடியிருப்புகளில் ‘ஏழு குடியிருப்புகளுக்கு ஒன்று’ என்ற அடிப்படையில் களிமண் கலக்கின்ற ஒரு எந்திரத்தை வாங்குவதற்கு அரசாங்கம் நிதியுதவி செய்தால் மேலும் சிறப்பானதாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  அந்த இயந்திரம் உண்மையிலேயே மிகவும் கடினமான முறையில் அமைந்திருக்கின்ற களிமண்ணை கையாள்வதில் உதவிகரமாக இருக்கும் என்கிறார் சுகி. அதேநேரத்தில் எங்களால் டிசம்பர் முதல் மார்ச் மாத காலகட்டத்தில் மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியும். களிமண் மற்ற காலகட்டங்களில் போதுமான அளவிற்கு வேகமாக உலர்வதில்லை. ஒரு எந்திரம் அதனை மாற்ற முடியாது என்றும் கூறுகிறார்.

கோடா பழங்குடி மக்களின் மண்பாண்ட கைத்தொழில் திறமையை மறுபடியும் புதுப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்கிறார் கோத்தகிரியில் செயல்படுகிற கீஸ்டோன் பவுண்டேஷனின் இயக்குனர் சினேகலதா நாத். அந்த நிறுவனம் சூழல் மேம்பாடு தொடர்பாக ஆதிவாசிகளோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. “இந்த சமூகத்தின் மண்பாண்டங்கள் செய்யும் கலைத் திறமையை முன்னேற்றுவதற்கு அவர்களிடம் இன்னும் கூடுதலான ஆர்வம் வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். பெண்கள் மதரீதியான சடங்குகளைச் செய்வதற்கு மட்டும் இந்தக் கலைத் திறமை இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். பெண்களின் இளைய தலைமுறையோடு இணைந்து நின்று இந்தக் கலையை புத்துயிர் அளிப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். நவீன பயன்பாட்டுப் பொருட்களையும் மண்பாண்ட கைத்தொழில் திறமையில் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் அவர்.

தனது கணவருடன் மகனோடும் வசிக்கிற சுகி, அவரால் ஒரு பானையை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கீஸ்டன் பவுண்டேஷனுக்கு விற்க முடிகிறது என்கிறார். இந்தப் பொருட்களை சந்தைப்படுத்துகிற பழங்குடி மக்கள் கூட்டுறவு வளர்ச்சிக்கான மார்க்கெட்டிங் இந்திய சம்மேளனம்  போன்ற அமைப்புகளுக்கும் விற்க முடிகிறது என்கிறார் அவர். கொஞ்ச காலத்திற்கு முன்பாக மூன்று பெண்களோடு சேர்ந்து அவர் 200 பானைகளை விற்பனைக்காக செய்து வைத்தார். அதன் மூலம் வந்த வருமானத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். ஆனாலும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு இணைந்து வேலை செய்தவர்களின் குடும்பங்களுக்கும் வருகிற வருமானத்தின் பெரும் பகுதி  விவசாயத்தின் மூலமாகத்தான் வருகிறது. கோத்தகிரியிலும் மற்ற நகரங்களிலும் அவர்கள் செய்கின்ற வேலைகளின் மூலமாகவும் வருமானம் வருகிறது.

பானைகள் செய்வதில் உள்ள மதரீதியான சடங்கு எனும் முக்கியத்துவத்தை சமூகத்தின் மூத்தவர்கள் மங்களி சண்முகம் (இடது) மற்றும் ராஜூ லட்சுமண்ணா (வலது) ஆகியோர் வலியுறுத்துகின்றனர். ஆனால், மண்பாண்டங்கள் செய்வதில் இருக்கிற பொருளாதார வளர்ச்சிக்கான ஆற்றலையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

மண் பாண்டம் செய்வதில் உள்ள மத சடங்கு முக்கியத்துவம் என்பது வேறு எதையும் விட சுகிக்கு மிகவும் உயர்வானது.  ஆனாலும், அதே நேரத்தில் கூடுதல் வருமானம் உடனடியாக கையில் கிடைக்கவும் செய்கிறது. அவர்கள் சமூகத்தின் மூத்த உறுப்பினர் சண்முகம் சொல்வதுபோல, “இந்தப் பிரச்சனையின் சடங்கு தொடர்பான பக்கம் என்பது பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லாதது.  மற்றொரு பக்கம் என்பது எளிமையான பொருளாதாரம் தொடர்பானது. பொருள்களின் விற்பனை மூலமாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பான வருமானம் ஒருவருக்கு கிடைக்குமென்றால் எங்களது பெண்கள் மகிழ்ச்சியோடு கூடுதல் வருமானத்தை பார்ப்பார்கள். இன்று கூடுதலான எந்த ஒரு வருமானமும் வரவேற்கக் கூடியதே”

சமூகத்தின்  மற்ற உறுப்பினர்களும் இதற்கு  ஒப்புக்கொள்கின்றனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை மேலாளராக 28 வருடங்களாக பணியாற்றிய பிறகு பொட்டு கோத்தகிரிக்கு வா என்ற ஆன்மீக ரீதியான அழைப்பைக் கேட்டு சொந்த கிராமம் திரும்பியவர் பூஜாரி ராஜூ லட்சுமணா. “வணிக ரீதியானதோ  அல்லது இல்லையோ எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. பழங்குடி மக்கள் அவர்களின் தேவைகளை மற்றவர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டு வந்துள்ளனர்.  எங்களின் சடங்குகளுக்காக இந்த மண் பாண்டங்கள் தேவைப்படுகின்றன.  நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்.  மற்ற விஷயங்கள் அவ்வளவு முக்கியமானது அல்ல”  என்கிறார்

கீஸ்டோன் பவுண்டேஷனைச் சேர்ந்த என். செல்வியும் பத்மநாபன் அரவிந்தனும் என்ஏடவுள்யுஎ எனும் அமைப்பின் பீ. கே. புஷ்பகுமாரும் ஆங்கிலக் கட்டுரைக்கு செய்த உதவிக்கு  கட்டுரையின் ஆசிரியர் பிரிதி டேவிட் நன்றி தெரிவிக்கிறார்.

தமிழாக்கம்: த.நீதிராஜன்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan