“எல்லா போடோ பெண்களைப் போல, நானும் என் அம்மா நெசவு செய்வதைப் பார்த்தே வளர்ந்தேன்” என சாமா பிரம்மா நினைவுகூர்கிறார். குஜ்ரகுரி நெ.2 கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் மூங்கில் கைத்தறியில் அவர் அமர்ந்திருக்கிறார். பச்சை பசேலன வயல்வெளிகள் சூழ, லோயர் அசாம், போடாலேண்டின் சிராங் மாவட்டத்தில் பாயும் அய் ஆற்றங்கரையில் இந்தச் சின்னஞ்ச்சிறிய கிராமம் அமைந்துள்ளது.

அருகிலுள்ள நகரமான போங்கையான் இங்கிருந்து 20கிமீ தொலைவில் உள்ளது. 87 வீடுகளைக் கொண்ட அவரது கிராமத்திற்குச் செல்லும் பாதைகளில் சில, மணற்பாங்கான ஆற்றங்கரையே சாலையாக இருக்கின்றன; ஒரு இடத்தில், உடைந்த மூங்கில் பாலத்தை கவனமாக நடந்து கடக்க வேண்டியிருந்தது.

அசாம் கிராமங்களில், போடோ சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் தறி இருக்கும். இச்சமூகம் (அசாமில் ‘போரோ’) பழங்குடி இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. துணி நெய்வது மதிப்பிற்குரிய திறனாகவும் நல்ல வாருங்கால மணமகளாகவும் பெண்களிடம் பார்க்கப்படுகிறது. சாமா போன்ற சில பெண்களே இந்தப் பாரம்பர்ய திறமையை பயன்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள்.

“15 வயதிற்கு முன்பே நான் துணி நெய்ய ஆரம்பித்து விட்டேன். சாலா மடா கப்டா (எளிமையான துணி) போன்றவற்றை நெய்து இந்த நுட்பத்தில் தேர்ச்சி பெற்றேன். எனக்கு நம்பிக்கை அதிகமானதும் கோமோசா (சால்வை போன்ற ஆடை) போன்ற பாரம்பர்ய துணிகளையும் போர்வைகளையும் நெய்ய ஆரம்பித்தேன். ஆனால் சிக்கலான மலர் வேலைப்பாடுகளைக் கொண்ட டோக்னாவை (சேலையை போன்றது) மிகவும் ரசித்து நெய்வேன்” என அவர் கூறுகிறார்.
Sama seated at her bamboo pedal loom
PHOTO • Anne Pinto-Rodrigues
Sama seated at her bamboo pedal loom
PHOTO • Anne Pinto-Rodrigues

போடோலேண்டில் உள்ள குஜ்ரகுரி கிராமத்தில், தினமும் 6-8 மணி நேரம் தன்னுடைய மூங்கில் கைத்தறியில் (வலது) துணி நெய்கிறார் சாமா பிரம்மா. எப்போதாவதுதான் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்கிறார்

நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது, எங்களோடு பேச சாமாவிற்கு நேரம் இருந்தது. இன்று அவருக்கு ஓய்வு நாள். அருகிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு சத்துணவு சமைக்க செல்ல வேண்டியதில்லை. இந்த வேலையை திங்கள் முதல் வெள்ளி வரை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை செய்கிறார். இதற்காக மாதம் ரூ. 1000 பெறுகிறார். கடந்த காலங்களில், எப்போதாவது அரிசி பீர் விற்பனை செய்துள்ளார். அவர் நெய்வது அனைத்தும் அவருக்கும் அவரது குடும்பத்திற்குமே பயன்படுகிறது.

2000 வருட தொடக்கத்தில் அகோர் தாக்ரா அஃபாத் (போடோ மொழியில் இந்த வார்த்தைகளுக்கு ‘வடிவமைப்பு’, ‘நெசவாளர்’ மற்றும் ‘அமைப்பு’ என்று பொருள்) என்ற உள்ளூர் நெசவுக் குழுவில் சாமா சேர்ந்தார். தங்கள் பாரம்பர்ய துணி நெய்யும் திறனைக் கொண்டு உள்ளூர் பெண்கள் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு,  நெசவாளர்களால் நடத்தப்படுகிறது. அகோரிடமிருந்து சாயமிட்ட பருந்தி நூலைப் பெறும் சாமா, அதை ஆடையாக நெய்து கொடுக்கிறார். அதன்பிறகு கையால் நெய்யப்பட்ட இந்த ஆடை நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வேலை சாமாவிற்கு நிலையான வருமானத்தை தருகிறது. ஒவ்வொரு மீட்டர் துணிக்கும் ரூ. 75 கிடைக்கிறது. சில மாதங்களில் 45-50 மீட்டர் வரை நெய்து ரூ. 4000 வரை வருமானம் ஈட்டுகிறார். “எந்த வேலைப்பாடுகளும் இல்லாத சாதாரன துணியை நெய்யவே எனக்கு தருகிறார்கள். அதனால் அதை விரைவாக செய்து முடிக்கிறேன்” என நம்மிடம் விளக்குகிறார்.

80 பெண்களைக் கொண்ட நெசவு கூட்டமைப்பில், கடந்த மூன்று வருடங்களாக அதிக துணியை நெய்து முதல் இடத்தில் உள்ளார் சாமா. அவரது நோக்கம் தெளிவாக இருக்கிறது: தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். “என் மூத்த மகள் மேனுகா, 21, ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்காமல்  போனதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். அந்த சமயத்தில் அவளது கல்விக்காக செலவழிக்க எங்களிடம் பணம் இல்லை. ஆனால் அதே நிலையை என்னுடைய மற்ற மகள்களும் அடைய விட மாட்டேன்” என கண்ணீரோடு கூறுகிறார்.

Sama tinkering with the warping drum that has recently been installed at her home. The warping drum is used to prepare the vertical yarn known as ‘warp’, which is later loaded on the loom
PHOTO • Anne Pinto-Rodrigues
Sama shares a joke with her daughter Sulekha
PHOTO • Anne Pinto-Rodrigues

செங்குத்தாக நூல் பாவப்பட பயன்படும் பாவு டிரம்மை (இடது) சரி பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் இது தறியில் பொருத்தப்படும். சாமாவும் அவரது மகள் சுலேகாவும் (வலது)

அவரது 15 வயது மகன் ஸ்வரங் மற்றும் 12 வயது மகள் லட்சுமியும் இன்னும் பள்ளியில் இருந்து வரவில்லை. சுலேகா, 18, கலைக் கல்லூரியில் 12-ம் வகுப்பு படிக்கிறாள். “பட்டப்படிப்பை முடிப்பதில் சுலேகா உறுதியாக இருக்கிறாள். அவள் படித்து முடிப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இவ்வுளவு அதிகம் நான் துணி நெய்வதற்கு அவளே காரணம். அவளது லட்சியத்திற்கு குறுக்காக எனது வலிகளையும் வேதனைகளையும் இருக்க விட மாட்டேன்.”

சாமா இரண்டாம் வகுப்பு வரையே படித்திருக்கிறார் (போடோ வழிப் பள்ளியில்). அவரது குடும்பத்தில் ஒருவர் கூட கல்லூரி படிப்பு முடித்ததில்லை. வழக்கமாக, அவரது கிராமத்தில் ஆன் பிள்ளைகளே கல்லூரிக்குச் செல்வார்கள். அதனால் தன்னுடைய மகள் எப்போது பிஏ பட்டம் பெறுவாள் என ஆவலோடு காத்திருக்கிறார். “நான் தொடர்ந்து துணி நெய்வேன். அப்போதுதான் என் மகள் எங்கள் கிராமத்திலேயே முதல் பட்டதாரியாக வருவாள்.”

காலை 5 மணிக்கு எழுந்து, நீண்ட நேரம் வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு, தினமும் 6 முதல் 8 மணி நேரம் சாமா. தினமும் தறியில் அமர்ந்து வேலை செய்கிறார். எப்போதாவது ஒருநாள் ஓய்வெடுத்துக் கொள்கிறார். இவர் பயன்படுத்தும் மூங்கில் தறியை அவரது கனவர் தனேஷ்வர் பிரம்மா கட்டினார். தங்கள் கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள கிராமத்து வயல்களிலோ வேலை பார்க்கும் இவர், தினசரி ரூ. 300 வரை வருமானம் ஈட்டுகிறார். இவரது வருமானம் வீட்டுச் செலவுகளுக்கு உதவியாக இருக்கிறது. பெரும்பாலும் சாமாவின் வருமானம் குழந்தைகளின் கல்விக்கே செலவழிக்கப்படுகிறது. 25கிமீ தொலைவில் உள்ள பிஜ்னி நகரத்தில்தான் கல்லூரி உள்ளது. மங்கோலியன் பஜர் வரையிலான முதல் ஐந்து கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்கிறாள் சுலேகா. அங்கிருந்து பிஜ்னிக்கு ரிக்ஷாவில் செல்கிறார்.

Doing the household chores forms a big part of Sama’s day
PHOTO • Anne Pinto-Rodrigues
Sama heads to the market on her bicycle
PHOTO • Anne Pinto-Rodrigues

வீட்டு வேலைகளும் சாமாவின் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. சந்தைக்குச் செல்வதற்கும் மற்ற வேலைகளுக்கும் தன்னுடைய சைக்கிளை பயனபடுத்துகிறார்

ஆனால் மேலும் மேலும் இளம் தலைமுறையினர் நல்ல கல்வி கற்று வேலைக்குச் சென்றுவிட்டதால், போடோ மக்களின் நெசவு திறன் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பாரம்பர்யம் உயிர்ப்போடு இருக்கஎன்னால் முடிந்த பங்கை செய்கிறேன். என் மூத்த மகள் இருவருக்கும் நெசவு செய்வதைக் கற்றுக் கொடுத்துள்ளேன்.

கையால் நெய்யப்பட்ட துணிக்கான தேவையும் அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இயந்திரத்தால் ஆன டோக்கனாஸ் மேற்கு வங்காள சந்தையை நிரப்பியது. ஒரு ஆடை ரூ. 250-300 என சாத்தியப்படக்க் கூடிய விலையில் இருந்தாலும் தரமில்லாதவையாக இருந்தன. இன்று கையால்  நெய்யப்பட்ட டோக்கனாஸும் வரத் தொடங்கியுள்ளது. இதை ரூ.600 அல்லது அதற்கும் மேல் விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

சாமாவின் சைக்கிள் நோக்கி நாங்கள் நடந்து சென்று, அங்கிருந்து விடைபெற்றேன். இந்த சைக்கிளைச் சந்தைக்குச் செல்லவும் மற்ற வேலைகளுக்கும் அவர் பயன்படுத்துகிறார். அவரது குடும்ப வருமானச் சூழல் இன்னும் சவாலுக்குரியதாக இருந்தாலும், தன் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு கொடுக்கவும் வருமானம் ஈட்டவும் வாய்ப்பு இருப்பது சாமாவை மகிழ்ச்சியாக்குகிறது. சுலேகா தலைமுறையினரின் எதிர்காலம் வளமாக இருக்கும் என நம்பிக்கையோடு அவர் கூறுகிறார்.

இந்த நேர்கானல் சாத்தியமானதற்கும் போடோ மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ததற்கும் அகோர் தாக்ரா அஃபாத்தின் மேலாளர் ரஹிமோல் நர்சாரிக்கு நன்றிகள்.

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

Anne Pinto-Rodrigues

Anne Pinto-Rodrigues is a Netherlands-based writer and photographer. Her work can be viewed at www.annepintorodrigues.com

Other stories by Anne Pinto-Rodrigues
Translator : V Gopi Mavadiraja

V Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V Gopi Mavadiraja