கசாப்புக் கடைக்காரர் பயன்படுத்தும் பெரிய கத்தி, சில ஆணிகள், இரும்பு வலை, பழைய தலைக்கவசம், எண்ணெய் கேன் என சில பொருட்களைச் சேகரித்தார்  சங்கர் ஆத்ராம். தலைக்கவசத்தில் இரும்பு வலையைச் சேர்த்து தனது தலை, முகத்தை பாதுகாக்க ஒரு உபகரணத்தை உருவாக்கினார். எண்ணெய் கேனை வெட்டி எடுத்து அதன் மூலம் உடற்கவசம் ஒன்றை தயாரித்தார். கசாப்புக் கத்தியை என்ன செய்தார் தெரியுமா? தனது கழுத்தைச் சுற்றி கட்டப்பட்ட ரப்பர் பட்டையில் அதை செருகி வைத்தார். அதையும் தாண்டி கூர்மையான சில ஆணிகள் அந்த பட்டையில் துருத்திக் கொண்டிருந்தன. ஒரு வட்டத் தட்டை தனது முதுகுக்குப் பின்னர் கட்டிவைத்திருந்தார். முகம் முதுகுக்குப் பின்னால் இருப்பது போன்ற தோற்றப்பிழையை ஏற்படுத்த அப்படிச் செய்திருந்தார். இது குறித்து சங்கர் ஆத்ராம் கூறுகையில், "என்னை இந்த கோலத்தில் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்கிறார்.

ஆத்ராம் ஏதோ போருக்கு ஆயத்தமாகவில்லை. தன்னிடம் இருக்கும் கால்நடைகளை அருகிலிருக்கும் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது அவர் இப்படித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. மகாராஷ்டிராவில் மேற்கு விதர்பாவில் யவத்மால் மாவட்டம் ரேலாகான் தாசிலுக்கு உட்பட்டது போராட்டி கிராமம். 300 பேர் வாழும் இக்கிராமத்தில் ஆத்ராம் கால்நடை மேய்ச்சல் தொழில் செய்து வருகிறார்.

* * * * *

மார்ச் 2016 முதல் போராட்டி கிராமத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 12-க்கும் மேற்பட்டோர் புலிகள் தாக்கி இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பலர் தங்களின் கால்நடைகளைப் பறிகொடுத்துள்ளனர். இந்த மாவட்டம் ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலைக்குப் பெயர் பெற்றது.

ஆவ்னி அல்லது T1 என்றழைக்கப்பட்ட பெண் புலி  இப்பகுதிவாசிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ரேலாகான் பகுதி அடர்ந்த புதர்களையும், வனங்களையும் உள்ளடக்கியது. ரேலாகானில் சிறு மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அருகிலேயே பருத்திக் காடுகளும் இருக்கும். இத்தனையையும் உள்ளடக்கிய இப்பகுதியில் சுமார் 50 சதுர கிமீ பரப்பளவில் ஆவ்னி சுற்றித் திரிந்தது.

போராட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் T1 சுமார் 13 பேரை அடித்துக் கொன்றுள்ளது. இதனால் அந்தப் பெண் புலியை பிடிப்பது மகாராஷ்டிரா வனத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலானது. அதனால், 1 செப்டம்பர் 2018 முதல் ஆவ்னியைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், ஆவ்னி 2 ஆண்டுகள் அகப்படாமல் போக்கு காட்டியது. அதற்கிடையில் மக்களும் அரசியல்வாதிகளும் அழுத்தத்தை அதிகரித்தனர். கிராம மக்கள் அச்சத்திலும் அழுத்தத்திலும் மூழ்கினர்.

Maharashtra's  forest officials launched the complex operation
PHOTO • Jaideep Hardikar

செப்டம்பர் 1-ல், மகாராஷ்டிரா வனத்துறை அதிகாரிகள் அந்தப் புலியைப் பிடிக்கும் பணியைத் தொடங்கினர்

விதர்பா முழுவதும் 2008 முதல் சராசரியாக ஆண்டுக்கு 30-ல் இருந்து 50 பேர் வரை புலி தாக்கியதில் இறந்துள்ளனர். அதேபோல், உள்ளூர்வாசிகளாலும், கடத்தல்காரர்களாலும் சில நேரங்களில் மக்களுக்கு அச்சுறுத்தலாகிறது என்பதால் வனத்துறை அதிகாரிகளாலும் புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றன.

ஆவ்னியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையைச் சேர்ந்த 200 பேர் இணைந்தனர். 90 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆவ்னியின் எல்லைப் பகுதியைச் சுற்றி வனவிலங்குகள் பிரிவு தலைவருடன் ஹைதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு வீரர்களும் முகாமிட்டனர்.

விதர்பா முழுவதும் 2008 முதல் சராசரியாக ஆண்டுக்கு 30-ல் இருந்து 50 பேர் வரை புலி தாக்கியதில் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா வனத்துறையின் வனவிலங்குகள் பிரிவு தயாரித்த புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. விதர்பாவின் வனத்தை ஒட்டிய மேய்ச்சல் நிலப்பரப்புகளில் எல்லாம் மனித - விலங்கு மோதல் மலிந்தே இருந்தது.

அதேபோல் புலிகள் பலவும் கொல்லப்பட்டிருக்கின்றன. உள்ளூர் மக்களாலோ கடத்தல் கும்பலாலோ புலி வேட்டை நடந்துள்ளது. சில நேரங்களில் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியதால் வனத்துறையினரே சில புலிகளை வேட்டையாடவும் நேர்ந்துள்ளது.

T1 என்ற புலியும் அச்சுறுத்தலாகவே இருந்தது. மனித ரத்த ருசி கண்ட அந்தப் புலி நவம்பர் 2-ல் கொல்லப்பட்டது. ( மேலும் விவரங்களுக்கு T1 எல்லைக்குள்: கொலையின் வரலாறு என்ற அத்தியாயத்தைப் படிக்கவும்)

மேய்ச்சல்காரரும் அவரது தற்காப்புக் கவசமும்

மக்களின் கோபமும் பயமும் அதிகரித்த நிலையில், செப்டம்பரில் வனத்துறை மேய்ச்சல்காரர்களின் பாதுகாப்புக்கு காவலர்களை நியமித்தது. T1 என்ற ஆவ்னியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆத்ராம் தனது பசுக்களை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றபோது வனத்துறை நியமித்த காவலரும் செல்வார்.

இது குறித்து பாண்டுரங் மேஷ்ராம் கூறும்போது, "அடிப்படையில் நானே ஒரு விவசாயி தான். ஆனால், வனத்துறை அதிகாரி எனக்கு இந்த வேலைய ஒதுக்கியதால் நான் இதை செய்கிறேன்" என்றார். இவர் ஆத்ராமுடன் காலை 10 மணி முதல் 6 மணி வரையிலும் குச்சியும் கையுமாக் காவலுக்குச் செல்கிறார்.

Shankar Atram starts his day by herding the village cattle into the neighbouring forests for grazing; keeping him company now is his bodyguard Pandurang Meshram, who walks behind the caravan
PHOTO • Jaideep Hardikar
Pandurang Meshram in the cattle shed
PHOTO • Jaideep Hardikar

ஒவ்வொரு நாளும் ஆத்ராம் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார். அவருடன் பாண்டுரங் மேஷ்ராம் (வலது) குச்சியுடன் செல்கிறார்)

மேஷ்ராம், பிம்பலஷேண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். போராட்டியிலிருந்து இது 4 கி.மீ தொலைவில் ய்ள்ளது. இங்குதான் 2018 ஆகஸ்ட் 28-ல் T1 நாகோராவ் ஜுங்காரேவை கொன்றது. நாகோராவை தனது கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அது தாக்கியது/ போராட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாகோராவின் மரணம் 3-வது புலி தாக்குதல் மரணம். அதனையடுத்து அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உறைந்தனர். மக்களின் அச்சம் அந்தப் புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க வேண்டிய நிர்பந்தத்தை வனத்துறைக்குத் தந்தது.

"முன்பெல்லாம் ஆத்ராம் புலியைக் கண்டுவிட்டால் மரத்தில் ஏறி அச்சத்துடன் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார். ஆனால், இப்போதெல்லாம் நாங்கள் இரண்டு பேராகச் செல்வதாலும் எப்போதும் வனத்துறையினர் ரோந்தில் இருப்பதாலும் அவர் பாதுகாப்பாக உணர்கிறார்" என்றார் மேஷ்ராம்

ஆத்ராம் போன்ற சாதாரண கால்நடை விவசாயிக்கு மெய்க்காப்பாளர் வைத்துக்கொள்வது என்பது மற்றவர்களால் பரிகாசம் செய்யக்கூடியதாகவே இருந்தது. ஆத்ராம் ஒரு நிலமற்ற கிராமவாசி. அவருக்கான மெய்க்காப்பாளரின் மாதச்சம்பளம் ரூ.9000. ஆத்ராம் கால்நடை மேய்ச்சலில் சம்பாதிக்கும் பணத்தைக் காட்டிலும் இது அதிகம். அதனால் தான் ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ஆத்ராம், "அரசாங்கத்தை எனக்கும் மாதச் சம்பளம் கொடுக்கச் சொல்லுங்கள். எனது அச்சத்தால் பலரும் சம்பாதித்துக் கொண்டு அந்தப் புலி என்னைப் போன்றோரை கொல்லும் வகையில் பிடிக்காமல் விட்டுவைத்துள்ளீர்கள்" என்று ஆவேசமாகக் கூறினார்.

ஆத்ராம் தயாரித்து புலி தடுப்பு பொறி:

தினமும் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக சென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆத்ராம் ஒரு புலி தடுப்புப் பொறியை உருவாக்கினார். இதற்காக தனது உறவினரிடமிருந்து கட்டுமானப் பணியாளர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் ஒன்றைப் பெற்றார். மற்ற பொருட்களை அக்கம்பக்கத்தாரிடம் பெற்றார்.

இன்னும் நிறைய உள்ளது: அவரிடம் இரும்பு வலையால் செய்யப்பட்ட கால்சட்டை உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் ஆத்ராம் எங்காவது மறைவிடத்திலேயே வைக்கிறார். ஏனென்று கேட்டால், "இதை நான் அணிவதைப் பார்த்தால் சிறு பிள்ளைகள் சிரித்து ஏளனம் செய்கின்றனர்" எனக் கூறுகிறார்.

புலியிடமிருந்து தற்காத்துக் கொள்ள ஆத்ராமின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பிரச்சினையைப் புரிந்து கொண்டு தீர்வுக்காக தயாரிக்கப்பட்டவை. ஒருவேளை புலி பின்புறமிருந்து தாக்கினால் என்ன செய்வது: ஒருவேளை அது கால்களைக் கவ்வினால்? இல்லை என்னைக் கொல்லும் நோக்கில் கழுத்தைக் கவ்வினால்? தனது காலால் ஓங்கி என் தலையில் அறைந்தால்? என்ன செய்வது? எப்படிச் செய்வது? என்ற தொலைநோக்குப் பார்வையுடனேயே எல்லாவற்றையும் தயாரித்துள்ளார்.

Shankar Atram  in his protective gear at his home. Atram’s wife Sulochana and his daughter, Diksha, smile at him as he wears his ‘Jugaad’.
PHOTO • Jaideep Hardikar

பீதியில் உறைந்திருந்த ஆத்ராம் மஞ்சள் நிறக் கட்டுமானப் பணியாளர்களுக்கான தலைக்கவசம், கசாப்புக் கடைக்காரரின் பெரிய கத்தி, ஆணிகள், இரும்பு வலை, எண்ணெய்க் கேன், வட்டத் தட்டு என தனது புலி தடுப்பு கவசத்தை வடிவமைத்திருந்தார். என்னைப் பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள் என்பது தெரியும். எனது மனைவியும், குழந்தைகளும் கூட இதைப் பார்த்துச் சிரிப்பார்கள் அதேவேளையில் புலியை நினைத்து அஞ்சுவார்கள்)

கேம் தியரி மொழியில், "நான் ஒவ்வொரு சூழ்நிலையையும் யோசித்தேன்" என்றார் ஆத்ராம். "குறைந்தபட்டசமாக இவை அனைத்துமே நான் என்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவைப்படும் என்பதை உணர்ந்தேன். ஒருவேளை அது சரியில்லை என்றாலுகூட அவற்றை அணிந்துகொள்வதால் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்" என்றார்.

இந்த தற்காப்புக் கவசத்தை அவர் உருவாக்கி ஓராண்டு ஆகிவிட்டது. அவ்வப்போது அதில் ஏதாவது பாதுகாப்பு அம்சத்தை சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆத்ராம் இரண்டு முறை புலியை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார். 2016-ல் ஒருமுறை, பின்னர் அடுத்த ஆண்டே. இரண்டு முறையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பிரார்த்தனையுடன் ஓடிப் பிழைத்தார்.

புலியுடனான முதற் சந்திப்பு

முதன்முதலாக செப்டம்பர் 2017-ல் தான் ஆத்ராம் ஒரு முழுமையாக வளர்ந்த புலியை நேருக்கு நேர் சந்தித்தார். ஆத்ராமின் முன் சில மீட்டர் தொலைவில் அது நின்றுள்ளது. "நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்" என்று சொன்னவாறே அந்த நாளை தயக்கத்தோடு நினைவுகூர்ந்தார். "எனது கிராமத்தார் புலி பற்றி சொன்ன எல்லாக் கதைகளும் எனக்கு அப்போது நினைவுக்கு வந்து சென்றது. புலிகளுக்கு மனித ரத்தம் பிடிக்கும், புலிகள் மனிதனைக் கொன்று புசிக்கும், பின்னால் இருந்து தாக்க்கும்" என்றெல்லாம் சொல்லியது நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் ஆத்ராமால் செய்ய முடிந்த ஒரே சிறந்த தற்காப்பு மரத்தின் மீது ஏறிக் கொள்வது. அந்த மரக்கிளையில் அவர் பல மணி நேரம் அமர்ந்திருந்தார், எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு. அதற்குள் புலி அவரது கால்நடைகளில் ஒரு பசுவைக் கொன்றிருந்தது. மரத்தடியில் அமர்ந்திருந்த புலி தனது இரயை காட்டுக்குள் இழுத்துச் செல்லத் தொடங்கியது. அப்போதுதான் 45 வயதான ஆத்ராம் மரத்தைவிட்டு கீழே இறங்கினார். ஆனால், கால்நடைகளைக் கூட விட்டுவிட்டு ஊருக்குள் உதவிக்காக ஓடினார்.

Shankar Atram in his protective gear outside his cattleshed
PHOTO • Jaideep Hardikar

அவரது கால்நடைத் தொழுவத்தில் முழு கவசத்துடன் ஆத்ராம்

"அன்றைய தினம்போல் நான் அவ்வளவு வேகமாக என் வாழ்நாளிலேயே ஓடியது இல்லை" என்று ஒருவித பதற்றத்துடன் அவர் நினைவுகூரும்போது அவரின் மனைவி சுலோச்சனா, மகள்கள் திஷா (18), வைஷ்ணவி (15) அருகில் இருந்தனர். அவர்களின் புன்னகையிலும் பதற்றம் இருந்தது. அன்றைய தினம் ஆத்ராம் மயிரிழையில் உயிர்பிழைத்தார் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். வீட்டுக்குச் சென்றவுடன் ஆத்ராம் தன்னை ஓர் அறைக்குள் பூட்டிக் கொண்டார். அது கால்நடைகளின் கொட்டில். அன்று இரவு முழுவதுமே அவர் வெளியே வரவில்லை. நடக்கத்துடனேயே இருந்ததாகச் சொல்கிறார்.

அது பெரிய புலி என்று மராத்தி மொழியின் வராஹடி வட்டார வழக்கில் கூறினார். அவரது குரலில் சிறு ஹாஸ்யம் இருந்தது ஆனால் ஒரு துளியும் துணிவில்லை. அவர் பயந்துவிட்டாரா? என்ற கேள்விக்கு அவரின் மகள்கள் இருக்காதா?  என்று சிரிப்புடன் பதிலளித்தனர்.

அதிகரிக்கும் புலி - மனித மோதல்

மகாராஷ்டிராவின் கிழக்குக் கோடியில் உள்ள விதர்பா வனங்களில் அதிகரித்து வரும் மனிதன் - புலிகள் இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டிருப்பதற்கான சாட்சியே ஆத்ராமின் கதை.

புலிகள் - மனிதர்கள் மோதல் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்கிறார் போராட்டியின் முன்னாள் விவசாயி சித்தார்த் தூதே. இப்போது அவர் விவசாயம் செய்யவில்லை பாதுகாவலராக மட்டுமே செல்கிறார். போராட்டி கிராமத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் திப்பேஸ்வர் வனவிலங்குகள் சரணாலயத்தின் காப்புக் காடுகளில் இருந்து சில புலிகள் இடம்பெயர்ந்துள்ளன. எல்லையை நிர்ணயிக்க அவை மேற்கொள்ளும் இந்தப் பயணம் மக்களை அச்சத்தில் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என அவர் கூறுகிறார். (மேலும் விவரங்களுக்கு T1 புலியின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அத்தியாயத்தைப் பார்க்கவும்)

ஆத்ராமின் வீட்டில் நம்மைச் சந்தித்த மேஷ்ராம், "யவத்மால் மாவட்டத்தின் முட்புதர், இலையுதிர் காடுகளை ஒட்டியே அடர்ந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்களும் உள்ளன. புதிதாய்ப் பெருகிய புலிகள் தாவர உண்ணிகளையும், கிராமங்களில் கிடைக்கும் எளிய இரையான கால்நடைகளையும் உண்டு ருசி கண்டுள்ளன. இப்போதெல்லாம் T1- ஐ எங்களால் இப்பகுதியில் பார்க்க இயலவில்லை. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பில் சமரசம் செய்வதில்லை. எப்போதாவது புலி நடமாட்டத்தை உணர்ந்தால் உடனே கிராமத்தாரை உஷார்படுத்துகிறோம்" என்றார்.

இந்த மோதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன எனக் கூறுகிறார் மகாராஷ்டிராவின் வனவிலங்குகளின் முதன்மைப் பாதுகாவலர் அசோக் குமார் மிஸ்ரா. "ஒருபுறம், வனத்துறையின் பாதுகாப்பு முயற்சியால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திட்டமிட்டு நடத்தப்படும் வனவிலங்குகள் வேட்டையை நாங்கள் தடுத்துள்ளது ஒரு காரணம். இன்னொருபுறம், மக்கள் தொகை அதிகரிப்பால் வனங்களின் மீதான் அழுத்தமும் கூடி வருகிறது" என்றார்.

"இதுதவிர விதர்பா வனங்கள் சாலை, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக வெகுவாக துண்டாடப்பட்டுள்ளன. இதனால் புலிகளின் வாழ்விடம் சுருங்கியுள்ளது, அறுபட்டுள்ளது. புலிகளின் பாரம்பரியத் தடங்கள் அழிக்கப்பட்டதால் அவை சுற்றித்திரிய இடம் இல்லாமல் போகிரது. இப்படி நடக்கும்போது மனித - விலங்கு மோதலைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்" என வினவுகிறார் மிஸ்ரா. "இவற்றையெல்லாம் தடுக்காவிட்டால் இந்த மோதல் இன்னும் ஆழமாகும்" என எச்சரிக்கிறார்

Subhash Ghosale, a tribal farmer in village Borati, holds the photo of her mother Sonabai Ghosale, T1’s first victim. She died in T1’s attack on her field close to the village on June 1, 2016.
PHOTO • Jaideep Hardikar

சுபாஷ் கோஸாலே, போராட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசியான அவர் தனது தாய் சோனாபாயின் படத்தைக் கையில் ஏந்தியுள்ளார். சோனாபாய் T1 புலியால் கொல்லப்பட்டார்

2016-ல் போராட்டி கிராமத்தில் சோனாபாய் போஸ்லே, அவரின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது முழுமையாக வளர்ச்சியடைந்த புலி ஒன்று அவரைத் தாக்கிக் கொன்றது. போராட்டி கிராமத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அடர்வனம் ஆரம்பித்துவிடுகிறது. போராட்டி மக்கள் இந்த வனத்தை விறகுக்காகவும், மேய்ச்சலுக்காகவும் நம்பி இருக்கின்றனர். காட்டில் விளையும் சில பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.

"சோனாபி போஸ்லேயை புலி காயப்படுத்தியதிலிருந்தே நாங்கள் அச்சத்தில் தான் இருக்கிறோம்" என்கிறார் ரமேஷ் கான்னி. இவர் உள்ளூர் சமூக, அரசியல் ஆர்வலர். இவர் தலைமையில் தான் போராட்டி மக்கள் வனத்துறை அதிகாரிகளையும், ஆட்சியரையும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தங்களின் குமுறல்களை முறையிட்டனர். "முன்பெல்லாம் வனவிலங்குகள் எங்களின் பயிர்களை நாசப்படுத்தின. இப்போது புலிகள் எங்களையே சேதப்படுத்துகின்றன" என்றார்.

50 பசுக்களும் ஒரு புலியும்

பல ஆண்டுகளாகவே ஆத்ராமின் வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது. அவர் தனது நாளை கால்நடைகளைக் குளிப்பாட்டுவதில் தொடங்குகிறார். பின்னர் அவற்றை கிராமத்துக்கு அருகே உள்ள நிலத்தில் மேய்க்கிறார்.

பொழுதுசாயும்போது திரும்புகிறார். பின்னர் அடுத்த நாளும் இதுவே தொடர்கிறது. ஒரு பசுமாட்டை மேய்க்க முன்பெல்லாம் மாதம் ரூ.100 வசூலித்தார். மேய்ச்சல் கூலியை உயர்த்தித் தருமாறு கோர நாங்கள் வலியுறுத்தினோம். மேய்ச்சலில் இருக்கும் அச்சுறுத்தலைக் குறிப்பிட்டு கூலி உயர்வு கோரச்சொல்கிறோம் எனக் கூறுகிறார் அவருடைய மனைவி சுலோச்சனா. கிராமவாசிகள் இப்போதெல்லாம் அவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ.150 கூலி வழங்குகின்றனர். இந்த 50 ரூபாய் கூலி உயர்வு தான் ஆபத்தை எதிர்கொள்வதற்கான கூலி என்கிறார் ஆத்ராம். "எப்போதும் சராசரியாக 50 மாடுகள் மேய்க்கிரென். இதை நான் நிறுத்திவிட்டால் என் பிழைப்புக்கு வேறு வழியில்லையே!" என்பது ஆத்ராம் ஒருநாள் வீடுதிரும்பியபோது குடும்பத்தினரிடம் கூறியது.

ஆனால் கிராமவாசிகள் ஆத்ராமுக்கு ஒரு சகாயம் செய்துள்ளனர். "ஒருவேளை நீங்கள் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் மாடுகளைப் பற்றி கவலைப்படாமல் தப்பித்துவிடுங்கள்" என்று ஊர்க்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். இது தனக்குப் பெரிய ஆறுதல் என்றே ஆத்ராம் சொல்கிறார். "இது அவர்கள் என் மீது கொண்ட அக்கறை" என்று சிலாகிக்கிறார். "கடந்த இரண்டு ஆண்டுகளில் புலி நிறைய பசுமாடுகளைக் கொன்றுவிட்டது. எனது மாடு ஒன்று இறந்தாலும் நான் வருந்துவேன். அதேவேளையில் நான் பிழைத்திருப்பதில் மகிழ்கிறேன்" என்றார்.

ஆத்ராம் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. அவருடைய மனைவியும் தான். ஆனால் அவர்களின் பிள்ளைகள் படிக்கின்றனர். ஆத்ராம் அவரது குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். தன்னைப் போல் தினம் தினம் உயிருக்கு அஞ்சி வேலை செய்யக் கூடாது என நினைக்கிறார். திஷா பி.ஏ. முதலாம் ஆண்டு முடித்துள்ளார். வைஷ்ணவி 10-ம் வகுப்பு முடித்துள்ளார். மூவரில் கடைக்குட்டியான அனோஜ் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

கிராம அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரியும் சுலோச்சனா தனது குடும்ப வருமானத்திற்கு மாதம் ரூ.3000 பங்களிப்பாகக் கொடுக்கிறார். "ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் என் கணவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். ஒவ்வொரு மாலையிம் அவர் வீடு திரும்புவதைப் பார்க்கும் போது எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. அதனால் அந்தப் புலிக்கு நான் நன்றி சொல்கிறேன்"

தமிழில்: மதுமிதா

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Translator : Madhumitha