அன்றைய தினம் முகாமில் இருந்த பெண்களும், ஆண்களும் தத்தம் செல்லிடப்பேசிகளில் சில குறுந்தகவல்களையும், மேப்களையும் சில புகைப்படங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் ஏதோ நம்பிக்கை துளிர்விட்டிருந்தது. அதேவேளையில் பதற்றமும் தெரிந்தது.

ஏனென்றால், அன்றைய தினம் காலையில் ஒரு குழு வனத்துக்கு அருகாமையில் புதிதாகப் புலித்தடங்கள் சிலவற்றைக் கண்டறிந்திருந்தது.

இன்னொரு குழு வனத்தில் பொருத்தப்பட்டிருந்த 90 கேமராக்களில் ஏதோ ஒரு கேமராவில் பதிவாகியிருந்த புலியின் மங்கலான புகைப்படத்தைக் கொண்டு வந்தது. அடர்ந்த இலையுதிர் புதர் வனத்தினுள் ஆங்காங்கே உள்ள பருத்திக் காடுகள், நீர் நிலைகளின் ஊடே 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்தப் படத்தைப் பார்த்த ஓர் இளம் வனவர், இந்தப் புலியின் வரிகளைப் பார்க்கும்போது "இது ஒரு பெண் புலியாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று பதற்றமான குரலில் கூறினார். அவருடைய உயர் அதிகாரி "படம் தெளிவாக இல்லை. நமக்கு இன்னும் தெளிவான துல்லியமான தகவல் வேண்டும்" என்றார்.

அது அந்தப் பெண் புலியாக இருக்குமோ? அது அங்கே மறைந்திருக்குமோ?

வனப் பாதுகாவலர்கள் குழுக்கள், விலங்குகளைக் கண்காணிக்கும் குழுவினர், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்கள் என பலரும் பல்வேறு திசைகளில் தங்கள் பயணத்தைத் தீர்மானித்தனர். இரண்டு வருடங்களாக தனது இரு குட்டிகளுடன் அகப்படாமல் சுற்றித் திரியும் அந்தப் பெண் புலியை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர்.

அந்த குறிப்பிட்ட கிராமத்தில் குறைந்தது 13 பேராவது புலியால் தாக்கப்பட்டிருந்தனர். அத்தனை சம்பவங்களிலும் அந்த ஒரே பெண் புலி மீது தான் சந்தேகம் இருந்தது.

இரண்டு மாதங்களாக அந்தப் பெண் புலியை எப்படியாவது உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் முயற்சியில் வனத்துறை ஆப்பரேஷன் பெரியளவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இரண்டுமே அவர்களுக்கு எளிதானதாக அமையவில்லை. 2018 ஆகஸ்ட் 28 வரை அந்தப் பெண்புலியைப் பற்றி எந்த ஒரு குறிப்பிடத்தக்க தகவலும் இல்லை. எப்போதாவது கேமராவில் கேட்கும் பீப் ஒளியும், ஆங்காங்கே தெரியும் புலித் தடங்களும் அந்தப் புலியைப் பிடித்து விடலாம் என்ற சிறு நம்பிக்கையை மட்டும் தந்து செல்வதாக இருந்தது.

For over two months, a 'base camp' was set up between Loni and Sarati villages in Vidarbha’s Yavatmal district, involving 200 tiger-trackers mandated to ‘capture or kill’ the tigress
PHOTO • Jaideep Hardikar

இரண்டு மாதங்களுக்கு மேலாக, விதர்பாவின் யவத்மால் மாவட்டத்தில் லோனி, சராத்தி கிராமங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட அந்த முகாமில் 200 புலி கண்காணிப்பாளர்கள் எப்படியாவது அந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தங்கியிருந்தனர்)

* * * * *

அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிறுக்கிழமை காலை வேளை அது. குளிர் அதிகம் எட்டிப்பார்த்திருக்கவில்லை. நாங்கள் வனத்துறை   அமைத்திருந்த தற்காலிக முகாமில் இருந்தோம்.. விதர்பாவின் யவத்மால் பகுதியில் லோனி - சத்தாரா கிராமங்களுக்கு இடையே அந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்காக அறியப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை எண் 43-ல் ரேலாகான் தாசிலுக்கு உட்பட்ட வாட்கி, உம்ரி கிராமங்கள் கோண்ட் பழங்குடியின மக்களின் வசிப்பிடம். அவர்களில் பெரும்பாலோனோர் சிறு மற்று குறு விவசாயிகள். பருத்தி, பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள்.

புலி கண்காணிப்பாளர்கள் குழுவில் 200 வனவர்கள், மகாராஷ்டிரா வனத்துறையைச் சேர்ந்த வனச்சரக அலுலவர்கள், மாநில வன மேம்பாட்டுக் குழுமம், மாவட்ட வன அலுவலர், காடுகளின் முதன்மை பாதுகாவலர் இன்னும் பல உயரதிகாரிகள் இருந்தனர். அனைவருமே அந்த ஒற்றைப் பெண் புலிக்காக இரவு பகலாக கண்காணிப்பில் இருந்தனர்.

மேலும் அந்தக் குழுவில் ஹைதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்களும் இருந்தனர். அவர்களுக்கு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த நவாப் ஷஃபாஹத் அலி கான் (60) தலைமை வகித்தார். அவர் பயிற்சி பெற்ற வேட்டைக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நவாபின் வருகையில் அதிகாரிகள் மத்தியிலும் உள்ளூர் வனப்பாதுகாவலர்கள் மத்தியிலும் இரு வேறு கருத்து நிலவியது.  ஆனால், அந்த நபரோ வனவிலங்குகளை மயக்கமடையச் செய்து தன்வசப்படுத்துவதில் கைதேர்ந்தவராக இருந்தார்.

"அவர் அதை நிறைய முறை செய்திருக்கிறார்" என்று அவருடைய குழு உறுப்பினரான சைய்யது மொய்னுதீன் கான் கூறினார். சில காலத்திற்கு முன், தடோபா தேசியப் பூங்கா அருகே இரண்டு பேரைக் கொன்ற பெண் புலியை அவர் மயக்கநிலைக்குக் கொண்டு வந்து பிடித்திருக்கிறார்.

அதேபோல், பிஹார், ஜார்க்கண்டில் 6 மாதங்களில் 15 பேரைக் கொன்று குவித்த யானை ஒன்றையும் கட்டுக்குள் கொண்டுவந்தார். மேற்கு மகாராஷ்டிராவில் 7 பேரைக் கொன்ற சிறுத்தையை சுட்டுக் கொன்றார்.

ஆனால் இது வித்தியாசமானது என்று கூறினார் கண்ணாடி அணிந்த அந்த நபர். தனது துப்பாக்கியால் டார்ட் போர்டில் குறிவைத்துக் கொண்டே அவர் இதைக் கூறினார்.

அந்த பெண் புலியையும் அதன் இரு குட்டிகளையும் நாம் மயக்க மருந்து செலுத்தி மயங்கச் செய்ய வேண்டும் என்று தனது மகன் உள்பட சிலர் அடங்கிய குழுவினருக்கு அறிவுறுத்தினார் ஷஃபாஹத் அலி.

அதற்கு அவரது மகனோ சொல்வது எளிமை; செய்வது சிரமம் என்றார். அசாகர் அவரது தந்தைக்கு உதவியாக இந்த ஆப்பரேஷனில் இணைந்துள்ளார்.

நாக்பூரில் உள்ள பென்ச் புலிகள் சரணாலயத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நபர் ஒருவர் ஒருமாதமாக இங்குதான் முகாமிட்டிருக்கிறார். அந்தப் புலி 8 மணி நேரத்துக்கு மேல் ஓரிடத்தில் இருப்பதில்லை என்பதே அவரின் கணிப்பு.

அந்தக் குழுவில் இருந்த சிலர் பொறுமையை இழந்திருந்தனர். ஆனால், இங்கு பொறுமைதான் அடிப்படை. நாட்கள் செல்லச் செல்ல அது குறைந்து கொண்டே வந்தது.

The road between Loni and Sarati where T1 was sighted many times by villagers.
PHOTO • Jaideep Hardikar
A hoarding in Loni listing the 'do's and don'ts' for villagers living in T1's shadow
PHOTO • Jaideep Hardikar

இடது: லோனி - சராத்தி இடையேயான சாலை.. இங்குதான் கிராமவாசிகள் அடிக்கடி T1-ஐ பார்த்துள்ளனர். வலது: T1 நடமாட்டம் உள்ளதால் கிராமத்தினர் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் பதாகை)

T1- அல்லது ஆவ்னி, ரேலாகானில் மட்டும் கடந்த இரண்டாண்டுகளில் 13 முதல் 15 பேரைக் கொன்றிருந்தது. அதே பகுதியில் அடர்ந்த புதர்களுக்குள்ளும் வனத்துக்குள்ளும் எங்கேயோ மறைந்திருந்தது.

கடந்த இரண்டாண்டுகளில், வனத்தை ஒட்டியுள்ள 50 சதுர கி.மீ பரப்பளவில் இருந்த கிராமவாசிகளை ஆவ்னி அச்சத்திலும் பதற்றத்திலும் வைத்திருந்தது. பருத்திக்காட்டுக்குச் செல்லக்கூட பயந்துகிடந்தனர் கிராமவாசிகள். ஆனால் அது அறுவடை காலம். பருத்தியை செடியில் விட்டுவைக்கவும் முடியாது. இந்தச் சூழ்நிலையில் காலாபாய் செண்ட்ரே கூறும்போது, "கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர். பருத்திக் காட்டுக்குள் செல்லத் தயங்குகின்றனர். அறுவடை காலம் வந்துவிட்டதால் கவலையில் உள்ளனர். நான் எனது நிலத்தைப்பார்த்தே ஒருவருடம் ஆகிறது" என்றார். அவரின் கணவரும் T1-ஆல் பலியானவர்.

T1 யாரையும் விட்டுவைப்பதில்லை. ஆனால், ஆகஸ்ட் 28-க்குப் பின்னர் ஆவ்னி யாரையுமே தாக்கவில்லை. இது பிம்பலசெண்டா கிராமத்தின் நிலவரம். ஆவ்னி எவ்வளவுக்கு எவ்வளவு ஆக்ரோஷமானதோ அதே அளவுக்கு அதன் போக்கும் கணிக்க முடியாதது.

வனத்துறையினரோ கிட்டத்தட்ட சோர்வடைந்துவிட்டனர். அதேவேளையில் இன்னும் ஒரேஒரு புலி தாக்குதல் நடந்தாலும்கூட கிராமவாசிகள் வெகுண்டெழுந்துவிடுவர் என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்தது. இது ஒருபுறம் இருக்க வனவிலங்குகள் ஆர்வலர்களும் புலி ஆர்வலர்களும் ஆவ்னியைக் கொல்லக்கூடாது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

வனத்தின் முதன்மை பாதுகாவலர் (வனவிலங்குகள்) ஏ.கே.மிஸ்ரா தனது சகாக்களுடன் பர்தர்கவாடாவில் முகாமிட்டிருந்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு 4 மாதங்களே இருந்தன.

* * * * *

இந்தப் பிரச்சினை T1-ல் தொடங்கவில்லை. T1-உடன் முடியப்போவதில்லை. இது இன்னும் மோசமாகவேப் போகிறது. இந்தியாவுக்கு இதைத் தீர்க்க வழியும் இல்லை.

நாக்பூரைச் சேர்ந்த நிதின் தேசாய் மத்திய இந்தியாவின் வனவிலங்குகள் பாதுகாப்புக் குழுவின் இயக்குநராக இருக்கிறார். இவர் கூறும்போது, "வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இதுவே சரியான தருணம். வனத்தைத் தாண்டி உலாவரும் புலிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்" என்றார்.

தேசாயின் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது.  T1-ன் எல்லையிலிருந்து 150 கி.மீ தொலைவில் அமராவதி மாவட்டம் தமான்காவோன் ரயில்வே தாசிலுக்கு உட்பட்ட பகுதியில் வளரிளம் பருவத்தில் இருந்த ஆண் புலி ஒன்று தனது தாயைவிட்டு தனியாகப் பிரிந்திருந்தது. மங்க்ரூல் தாஸ்கிர் கிராமத்தில் அக்டோபர் 19-ல் ஒரு ஆணை அடித்துக் கொன்றது. 3 நாட்கள் இடைவெளியில் அமராவதி நகரில் ஒரு பெண்ணைக் கொன்றிருந்தது.

சந்தரபூர் மாவட்டத்தில் இருந்து அந்தப் புலி 200 கி.மீ நடந்தே கடந்திருக்கிறது. இத்தனைக்கு இந்த தூரம் அடர்வனப்பகுதியில்லை. இப்படியான பாதையில் புலி உலாவுவது வனத்துறையினருக்கு ஒரு புதிய பிரச்சினையாகவேத் தெரிந்தது. அந்தப் புலியை கண்காணித்துவந்த வனத்துறை அதிகாரிகள் அது மத்தியப்பிரதேசத்தில் இருந்து 350 கி.மீ தூரம் நடந்து பயணம் செய்ததாக உறுதி செய்தனர்.

யவத்மால் மாவட்டத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள திப்பேஸ்வர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து T1 பயணித்திருக்கலாம் என அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். புலி ஆர்வலரும் மாவட்டா வனவிலங்கு கண்காணிப்பாளருமான ரம்ஜான் வீராணி, T1 இருந்த பகுதியில் தான் T2 என்ற ஆண் புலியும் இருந்தது என்கிறார்.

Shafath Ali (left, with the green dart gun) and his team leaving in their patrolling jeep from the base camp in Loni to look for T1, a hunt that finally ended on November 2, after two months of daily tracking, and two years of the tigress remaining elusive
PHOTO • Jaideep Hardikar

team leaving in their patrolling jeep from the base camp in Loni to look for T1, a hunt that finally ended on November 2, after two months of daily tracking, and two years of the tigress remaining elusive

இடது- ஷஃபாத் அலி மற்றும் அவரது குழுவினர். T1-ஐத் தேடி ரோந்து வாகனத்துடன் தயாராக இருக்கின்றதனர். இந்த தேடுதல் வேட்டை நவம்பர் 2-ல் தான் முடிந்தது. 2 ஆண்டுகளாக அந்தப் புலி அகப்படமல் இருந்தது)

பந்தர்காவடா கல்லூரிப் பேராசிரியான வீராணி கூறும்போது, இந்தப் பகுதிக்கு அந்தப் புலி 2014-ல் வந்தது. அப்போதே இருந்தே நாங்கள் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிரோம். ஆனால் இந்த குறிப்பிட்ட பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது இதுவே முதன்முறை..

இதை கிராமவாசிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். சாராத்தி கிராமத்தைச் சேர்ந்த மோகன் தெபாலே (63) கூறும்போது. “இதற்கு முன்புவரை இப்பகுதியில் புலி நடமாடியதாக நன் கேள்விப்பட்டத்தில்லை. ஆனால் இப்போது இங்கே ஒரு பெண் புலியும் அதன் இரண்டு குட்டிகளும் உலாவரும் கதைகளைக் கேட்கிறேன்“ என்றார்.

விதர்பாவின் மற்ற பகுதிகளைப் போல் இங்கும் வனப்பகுதி நீர்ப்பாசனத் திட்டங்கள், சாலை விரிவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக சிதைக்கப்பட்டுள்ளன. பெம்ப்லா நீர்ப்பாசனத் திட்டம் போன்ற பணிகளுக்காக வனப்பகுதி பெரிதளவில் சிதைக்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் T1 புலிக்குப் பலியானவர் சோனாபாய் கோசாலே (60). 2016 ஜூனில் இது நடந்தது (விரிவான தகவலுக்கு T1-ல் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் என்ற கட்டுரையை வாசிக்கவும்) அப்போது T1-க்கு குட்டிகள் இல்லை. 2017 இறுதியில் தான் T1 குட்டிகளை ஈன்ரது. 2018 ஆகஸ்டில் இருந்த அது மனிதர்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கத் தொடங்கியது. அப்போது T1 மூன்று பேரைக் கொன்றிருந்தது. கடைசியாக பிம்பல்செண்டா கிராமத்தைச் சேர்ந்த கால்நடை விவசாயி நாகோராவ் ஜூங்காரே (55) என்பவரை ஆகஸ்ட் 28-ல் கொன்றிருந்தது.

அதற்குள் அந்தப் புலியைக் கொல்ல வனப்பாதுகாவலர் ஆணை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து முதலில் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுகள் எல்லாமே மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்குமாறு வந்தது.

சில வன உயிரி ஆர்வலர்கள் ஒருபடி மேலே சென்று குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.

இதற்கிடையில் வனத்துறை அதிகாரிகள் ஷஃபாத் அலி கானை வரவேற்றிருந்தனர். மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் வனப்பாதுகாவலர்களின் தலையீட்டால் அவர்கள் அனைவருமே வெளியேற வேண்டியதாக இருந்தது.

செப்டம்பர் மாதம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறப்புக் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் நான்கு யானைகள் இருந்தன. 5-வதாக ஒரு மிகப்பெரிய யானை சந்த்ரபூரில் உள்ள தடோபா அந்தாரி வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.

ஆனால், சந்த்ரபூரில் இருந்த வரவழைக்கப்பட்டிருந்த யானை திடீரென மதம் பிடித்து சஹந்த், பொஹானா கிராமங்களுக்குள் புகுந்து இரவோடு இரவாக 2 பேரைக் கொன்றது பேரிடியாக இறங்கியது. ராலேகான் பேஸ் கேம்ப் முகாம் அருகே இது நடந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரச்சினையில் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்காண்டிவர் தலையிட்டார். அவர் மீண்டும் ஷஃபாஹத் அலி கான் குழுவினருக்கு மீண்டும் அழைப்புவிடுத்தார். வனத்துறை அதிகாரி ஏ.கே.மிஸ்ராவையும் பந்தர்காவடாவில் முகாமிட்டிருக்கச் சொன்னார். இதனால் நாக்பூரில் வன உயிரி ஆர்வலர்களின் போராட்டம் வலுத்தது.

Forest guards and teams of villagers before starting a foot patrol from the base camp.
PHOTO • Jaideep Hardikar
 A forest trooper of the Special Task Force taking a break before another gruelling day to find T1 at the base camp near Loni village; behind him are the nets and other material that were to be used in the capture
PHOTO • Jaideep Hardikar

இடது: முகாமிலிருந்து கால்நடை வழி சோதனை மேற்கொள்வதற்கு முன்பு  வன காவலர்களும் கிராம மக்களும். வலது: லோனி கிராமத்தின் முகாமில்  சிறப்பு அதிரடிப்படையின் வன காவலர்  டி ஒன் புலியை தேட தொடங்கும் ஒரு நீண்ட நாளுக்கு முன்பு சற்று ஓய்வெடுக்கிறார். அவருக்குப் பின்னால் புலியைப் பிடிக்க தேவைப்படும் வலைகளும் பிற கருவிகளும்

மீண்டும் நவாப் களத்தில் இறங்கியதால், உள்ளூர் புலிகள் ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் போராட்டக் களத்தில் இருந்து திரும்பிச் சென்றனர். ஷஃபாஹத் அலியின் அணுகுமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அந்தப்புலியைக் கொல்வதே சிறந்தது எனக் கூறியிருந்ததால் அந்த எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் நவாப் ஷஃபாஹத் கான் ஹரியாணாவைச் சேர்ந்த ஜோதி ரந்தாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜோதியிடம் இத்தாலுயன் கேன் கார்ஸோ என்ற வகையைச் சேர்ந்த 2 நாய்கள் இருந்தன. அவற்றிற்கு மோப்ப சக்தி அதிகம் என்பதால் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க வரவழைக்கப்பட்டன.

இதுதவிர, பாராக்ளைடர்ஸ், ஆளில்லா குட்டி விமானங்கள், ட்ராக்கர்ஸ் ஈடுபடுத்தப்பட்டனர். ஆளில்லா குட்டி விமானங்கள் அதிக ஒலி எழுப்பியதால் பயனற்று போனது. அதேபோல் அப்பகுதி அடர்வனம் என்பதால் அங்கு பேராக்ளைடர்களாலும் பயனில்லை.

வலைகள், தூண்டில், கால்நடையாகச் சென்று ரோந்து போகும் முயற்சிகளும் கைவிடப்பட்டன.

T1 யாரிடமும் அகப்படாமல் இருந்தது. கிராமவாசிகள் அச்சத்தில் இருந்தனர். செப்டம்பரிலும் சரி அக்டோபர் பாதியிலும் சரி எதுவுமே நடக்கவில்லை.

* * * * *

தீடீரென ஒரு துப்பு துலங்கியது. அந்தப் புலி அங்குதான் சுற்றித் திரிந்தது.

அக்டோபர் 17-ம் தேதி, ஒரு குழு T1 , புலி வேட்டை குழுவினர் திடீரென குதூகலத்துடன் முகாமுக்குத் திரும்பியது. T1 புலி முகாமுக்கு அருகிலேயே சுற்றித் திரிவதாகத் தெரிவித்தனர். சராத்தி கிராமத்தில் அந்தப் புலியைப் பார்த்ததாகவும் கூறினர். அங்குதான் 2017-ல் ஓர் இளைஞரை T1 கொன்றிருந்தது. அந்த சம்பவம் நடந்த இடத்திற்கும் முகாமுக்கும் வெறும் 3 கி.மீ தொலைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடியாகக் குழுவினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். அங்கு அந்தப் புலியையும் கண்டனர். குழுவினர் அனைவரும் சூழ்ந்து கொண்டு அந்தக் கோபக்கார புலியை சுற்றிவளைத்தனர். ஆனால், கோபத்தில் இருந்த புலி பாய்ந்து தாக்கும் முனைப்பிலேயே இருந்தது. அதனானல், புலியை மயக்க நிலைக்குக் கொண்டு வரும் முடிவைக் கைவிட்டனர். கோபத்தில் பாயத் தயார் நிலையில் இருக்கும் புலியை துப்பாக்கியால் குறி காண முடியாது என்பதால் அவர்கள் முகாமுக்குத் திரும்பினர்.

ஆனால், ஒருவகையில் இது ஒரு நல்ல செய்தி. 45 நாட்களில்  T1 முதன்முறையாக அதன் பதுங்கிடத்தைவிட்டு வெளியே வந்தது. இனி அந்தப் புலியைப் பின் தொடர்வது எளிது. ஆனால், அந்தப் புலியின் ஆவேசத்தைப் பார்க்கும்போது அதைப் பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல.

* * * * *

ஷஹாஹத் அலி கூறும்போது, "அந்தப் புலியின் குட்டிகள் முன்புபோல் இல்லை. அவை சற்று வளர்ந்துவிட்டன. ஒரே நேரத்தில் 6 முதல் 7 பேரை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டன. அதனால், நாங்கள் இப்போது ஒரு புலியின் பின்னால் அல்ல மூன்று புலிகளின் பின்னால் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

மகாராஷ்டிரா வனத்துறை அதிகாரிகளோ ஊடகத்தினருடன் பேசத் தயாராக இல்லை. ஷஃபாஹத் அலி மற்றும் ஹைதராபாத்தில் இருந்துவந்த துப்பாக்கிச் சுடு வீரர்களும் தான் அவ்வப்போது சிற்சில தகவல்களைத் தந்தனர்.

மராத்தி டிவி சேனல்கள் இந்த ஆபரேஷனில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதாக கோப ஆவேசத்துடன் கொதித்துப் பேசினார் வனச்சரக அலுவலர். அதனால் ஷஃபாஹத் அலி தொலைக்காட்சியில் பேசுவதை அவர் சற்றும் விரும்பவில்லை.

ஒருபுறம் பொதுமக்கள் தரும் அழுத்தம் மறுபுறம் அரசியல் அழுத்தம் என வனத்துறை அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இத்தனைக்கும் காரணம் வனத்துறையினரின் மெத்தனமே என வன உயிரி ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஷஃபாஹத் அலி இந்த ஆப்பரேஷனை கையில் எடுத்தவுடனேயே அந்த வன உயிரி ஆர்வலர் T1 தேடுதல் வேட்டையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

அந்த வனப்பகுதியில் பெரிய மரத்தடியில் இது T1 நடமாட்டம் உள்ள பகுதி என சிவப்பு மையால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வனப்பகுதி அவ்வளவு எளிதானது அல்ல. இங்கே காட்டுச் செடிகளும், முட்புதர்களும் அதன் ஊடே விவசாய நிலங்கள், சில இடங்களில் சிற்றோடைகள் என சற்றே கடினமான போக்கு கொண்டது என்று உள்ளூர்வாசி ஒருவர் எச்சரித்தார்.

T1  ஒவ்வொரு நாள் இரவும் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தது. இரவில் மட்டுமே சுற்றிவந்தது.

அக்டோபர் 21-ல் சராத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் T1 அதன் இரண்டு குட்டிகளுடன் ஒரு மாலை வேளையில் உலாவருவதைக் கண்டார். அவர் கொடுத்த தகவலின்படி அங்கு ஒரு குழு விரைந்தது. ஆனால் அதற்குள் T1 அங்கிருந்து வேறு இடத்துக்கு தப்பியிருந்தது.

அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பகுதி முழுவதுமே பல குழுக்கள் இணைந்து T1 மற்றும் அதன் குட்டிகளைத் தேடிவந்தனர். அக்டோபர் 25 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் இரண்டு கிராமவாசிகள் மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தனர். போராத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ஆத்முர்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் என இருவர் தப்பியிருந்தனர். (மேலும் விவரம் அறிய: அவரைத் திரும்பப் பார்க்கும் போதெல்லாம் அந்த புலிக்கு தான் நன்றி சொல்வேன் - கட்டுரையை வாசிக்கவும்)

Even two dogs of an Italian breed were summoned for the tiger-tracking.
PHOTO • Jaideep Hardikar
T1’s corpse was sent to Gorewada zoo in Nagpur  for a postmortem

இடது: இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு நாய்கள் புலிப்பாதையை மோப்பம் பிடிக்க வரவழைக்கப்பட்டிருந்தன. (படம்: ஜெய்தீப் ஹர்திகார்) (T1 -ன் சடலம் கோரேவாடா வனவிலங்கு சரணாலயத்திற்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது)

இதற்கிடையில் ஷஃபாஹத் அலி ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திற்காக பிஹாருக்குத் திரும்ப நேர்ந்திருந்தது. அவரது மகன் அக்ஸார் அலி முகாமில் இருந்த குழுவிற்கு தலைமை வகுத்து வழிநடத்தினார். வனவிலங்கு ஆர்வலர்களோ T1 -ஐ காப்பாற்றக் கோரி நீதிமன்றங்களில் மனுக்களைக் குவித்துக் கொண்டிருந்தனர்.

நவம்பர் 2-ல் T1  போராத்தி கிராமத்தில், ராலேகானின் தார் சாலைகளில் உலா வருவதை பலரும் கண்டனர். அப்போதும் அது தனது குட்டிகளுடன் தான் இருந்தது. தகவலறிந்து அஸ்கார் அலி தனது சகாக்களுடன் அந்த இடத்துக்குச் சென்றார். நம்பவர் 3, சனிக்கிழமை அஸாகர் அலி தனது முகாமுக்குத் திரும்பினார்.

அன்றைய தினம், மகாராஷ்டிரா வனத்துறை T1 முந்தைய தின இரவு 11 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. நாட்டில் இதுவரை ஒரு புலியைத் தேடி அலைந்த மிகப்பெரிய கதை இதுதான்.

மகாராஷ்டிரா அரசு வெளியிட்டிருந்த அதிகாரபூர்வ அறிவிப்பில், அஸாகர் அலி மற்றும் குழுவினர் T1 -ஐ சுற்றிவளைத்தபோது அது ஆக்ரோஷமாக தாக்க முற்பட்டது. அதனை மயக்க நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதனால் திறந்த ஜீப்பில் நின்றிருந்த அஸாகர் அலி தற்காப்புக்காக புலியை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

T1 -ன் சடலம் நாக்பூரில் உள்ள கோரேவாடா வனவிலங்கு சரணாலயத்திற்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது

ஏ.கே.மிஸ்ரா வனவிலங்குகளின் முதன்மைப் பாதுகாவலர் PCCF, T1-ன் இரண்டு குட்டிகளையும் உயிருடன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் தெரிவித்தார்.

ரேலாகான் கிராமத்தினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். ஆனால், வனவிலங்கு ஆர்வலர்கள் அடுத்ததாக உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டப் புறப்பட்டனர். T1 ஏன் கொல்லப்பட்டது? விதிமுறைகள் ஏன் மீறப்பட்டன? போன்ற கேள்விகளோடு புறப்பட்டனர்.

ஒரு புலி இறந்துவிட்டது. ஆனால், மனிதன் - புலிகள் இடையேயான மோதல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

தமிழில்: மதுமிதா

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Translator : Madhumitha