கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின் சூரியன் மறையும் வேளையில், அருகே இருக்கும் காடுகளுக்குள் இருந்து எழும் மைனாவின் குரலை அடங்கச் செய்கின்றன துணை ராணுவப்படையின் காலடி சப்தங்கள். கிராமங்களை சுற்றி அவர்கள் மீண்டும் ரோந்து வருகிறார்கள். மாலை நேரங்கள்தாம் அவளுக்கு அச்சத்தை கொடுக்கின்றன.

தேமதி என தனக்கு ஏன் பெயர் சூட்டப்பட்டது என்பது அவளுக்கு தெரியாது. “அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த வீரம் நிறைந்த பெண். ஒற்றையாய் நின்று பிரிட்டிஷ் படையை விரட்டி அடித்தவர்,” என ஆர்வத்துடன் தாய் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அவள் தேமதியை போல் கிடையாது. எல்லாவற்றுக்கு பயம் கொள்பவள்.

வயிற்று வலி, பசி, குடிநீர் தட்டுப்பாடு, பணத்துக்கு தட்டுப்பாடு, சந்தேகப் பார்வை, மிரட்டும் பார்வை, கைதுகள், துன்புறுத்தல்கள், இறப்புகள் போன்ற விஷயங்களுடன் வாழ அவள் பழகிக் கொண்டாள். அவளுக்கென காடும் மரங்களும் வசந்தகாலமும் எப்போதும் இருக்கிறது. தாயின் மணத்தை குங்கிலியப் பூவில் அடைகிறாள். பாட்டி பாடிய பாடல்களின் எதிரொலிகளை காடுகளில் கேட்கிறாள். அவை எல்லாமும் இருக்கும் வரை அவளுக்கு பிரச்சினைகளே இல்லை.

ஆனால் இப்போது அவளை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். அவளின் குடிசையிலிருந்து, கிராமத்திலிருந்து, நிலத்திலிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள். வெளியேறாமல் இருக்க ஒரு துண்டு காகிதத்தை காட்டச் சொல்கிறார்கள். குணப்படுத்தும் சக்தி கொண்ட பல்வேறு மரங்கள், மூலிகைகள், மரப்பட்டைகள், இலைகள் ஆகியவற்றை பற்றி அவளின் தந்தை சொல்லிக் கொடுத்திருந்தது போதவில்லை. பழங்களையும் சுள்ளிகளையும் சேகரிக்க ஒவ்வொரு முறை காட்டுக்குள் செல்லும்போதும் அவள் பிறந்த இடத்தை தாய் காட்டியிருக்கிறார். காடுகள் பற்றிய பாடல்களை பாட்டி கற்று கொடுத்திருக்கிறார். மொத்த இடத்தையும் சகோதரனுடன் ஓடியாடி சுற்றியிருக்கிறாள். பறவைகளை வேடிக்கை பார்த்திருக்கிறாள். அவை கத்தும் விதங்களை திரும்ப கத்தியிருக்கிறாள்.

இந்த அறிவும் இத்தகைய கதைகளும் பாடல்களும் பால்யகால விளையாட்டுகளும் எதற்கேனும் ஆதாரமாக இருக்க முடியுமா? அங்கே அமர்ந்து அவளுக்கு சூட்டப்பட்டிருந்த பெயரை பற்றி யோசித்தாள். அப்பெயருக்குரியவரை பற்றியும் சிந்தித்தாள். காடுகளுக்கு உரியவள் என்பதை தேமதி  எப்படி உறுதிபடுத்தியிருப்பார்?

சுதனவா தேஷ்பாண்டே இந்த கவிதையை வாசிப்பதை கேட்கவும்

நுவபாடா மாவட்டத்தில் உள்ள சலிகா கிராமத்தில் பிறந்ததால் தேமதி தேய் சபார், சலிகன் என அழைக்கப்படுகிறார். P.சாய்நாத் அவரை 2002ம் ஆண்டில் சந்தித்தபோது (கட்டுரைக்கான சுட்டி கீழே உள்ளது) 90 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரின் அற்புதமான வீரம் பொருட்படுத்தப்படாமல், கிராமத்தை தாண்டி வெளியே இருப்போரால் பல காலத்துக்கு முன்னமே மறக்கப்பட்டு, வறுமையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் அவர்

விஸ்வரூப தரிசனம்*

களிமண் பூசப்பட்ட
அவளின் குடிசைக் கதவருகே
அமர்ந்து படத்தில்
அவள் சிரித்தாள்
அவளின் சிரிப்புதான்
அசிரத்தையுடன் போர்த்தப்பட்டிருந்த
குங்கும நிற சேலைக்கு
அடர்நிறத்தை கொடுத்தது.
அவளின் சிரிப்புதான்
தோள் பட்டையிலும் கழுத்திலும்
வெள்ளிபோல பளபளத்தது.
அவளின் சிரிப்புதான்
கையில் பச்சை குத்தப்பட்டிருந்த
படத்தை பிரதியெடுத்தது.
அவளின் சிரிப்புதான்
சீவப்படாத அவளின்
சாம்பல் நிற கேசத்தை
கடலலைகள் போல்
அலைபாய வைத்தது.
அவளின் சிரிப்புதான்
புரைக்கு பின் மறைந்திருந்த
நினைவுகளை கண்களுக்குள்
ஒளிரச் செய்தது.

வயதான தேமதி சிரிப்பதையும்
ஓட்டைப் பல் வரிசையையும்
ரொம்ப நேரம் பார்த்திருந்தேன்.
இரண்டு பெரிய பற்களுக்கிடையே
இருந்த இடைவெளி வழியாக
வயிறு கொண்டிருந்த
பசி என்னும் நரகத்தை காண
இழுத்துச் சென்றாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
வெப்பம் நிறைந்த இருள்
க்ரீடங்கள் இல்லை
பரிவட்டங்கள் இல்லை
கோல்கள் இல்லை
கண்களை குருடாக்கும்
பல்லாயிர சூரியன்களின் வெளிச்சத்தில்
கைத்தடியுடன் நிற்கும்
தேமதியின் புகைப்படம்.
பதினொரு ருத்ரர்களும்
பன்னிரெண்டு ஆதித்யாக்களும்
இரண்டு அஸ்வினி குமார்களும்
நாற்பத்து ஒன்பது மாருதிகளும்
கந்தர்வ கணமும்
யக்‌ஷ கணமும்
அசுரர்களும்
இன்னும் பிற ரிஷிமார்களும்
அவளுள்ளிருந்து வந்து
அவளுள்ளேயே மறைந்து கொண்டிருந்தனர்.

அவளிடமிருந்து பிறந்து
அவளுக்குள்ளேயே மறையும்
நாற்பது சலிகா பெண்களும்
எண்பது லட்ச நானூறாயிரம் சரண் கன்யர்களும்**
எல்லா புரட்சிகளும்
எல்லா புரட்சியாளர்களும்
எல்லா கனவு காண்பவர்களும்
எல்லா போராட்ட கோபக் குரல்களும்
ஆரவல்லிகள்
கிர்னர் சிகரம்
முதலிய எல்லா மலைகளும்
தாயாகும். தந்தையாகும்.
என்னுடைய மொத்த பிரபஞ்சமுமாகும்!

எழுதியவரால் அவருடைய குஜராத்தி மூலக் கவிதையிலிருந்து மொழிபெயர்க்கபட்டிருக்கிறது.

உண்மையான தேமதி பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Audio: சுதன்வ தேஷ்பாண்டே, ஜன நாட்டிய மஞ்ச்சில் ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். LeftWord Books-ன் ஆசிரியர்.

முகப்பு விளக்கப்படம்: மேற்கு வங்க நடியா மாவட்டத்தை சேர்ந்த லபனி ஜங்கி வங்காள தொழிலாளர்களின் புலப்பெயர்வு பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல் படிப்புகளுக்கான மையத்தில் படித்து வருகிறார். சுயாதீன ஓவியர். பயணத்தில் நாட்டம் கொண்டவர்.

*பகவத் கீதையின் 11வது அத்தியாயத்தில் கிருஷ்ணன் தன் உண்மையான ரூபத்தை எடுத்து அர்ஜுனனுக்கு காட்டுவதே விஸ்வரூப தரிசனம். பல கோடி கண்களும் வாய்களும் ஆயுதம் தாங்கிய கைகளும் கடவுளரின் அனைத்து ரூபங்களையும் உள்ளடக்கிய மொத்த பிரபஞ்சத்தையும் எல்லா உயிர்களையும் உள்ளடக்கிய ரூபமாக அத்தியாயம் இந்த ரூபத்தை விளக்குகிறது.

**தன் கிராமத்தை தாக்க வந்த சிங்கத்தை ஒரு குச்சி கொண்டு விரட்டி விட்ட குஜராத்தின் சரன் பழங்குடியை சேர்ந்த 14 வயது பெண்ணின் வீரத்தை குஜராத்தி மொழியில் கவிதைகளாக படைத்திருக்கிறார் சவெர்சந்த் மெகானி. அக்கவிதைகளில் ஒரு பிரபலமான கவிதையின் தலைப்பு சரன் கன்யா.

தமிழில்: ராஜசங்கீதன்

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்.

Pratishtha Pandya

பிரதிஷ்டா பாண்டியா அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார். குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார். பாரிக்கு எழுதவும் மொழிபெயர்க்கவும் செய்கிறார்.

Other stories by Pratishtha Pandya