“350 ரூபாய் தான். அதையும் குறைக்காதீர்கள். கரோனாவால் நாங்கள் ஏற்கனவே வருமானமின்றி தவிக்கிறோம்,“ என்று பேரம் பேச முயற்சிக்கும் ஒருவரிடம் சொல்கிறார் பிரகாஷ் கொக்ரி. வெள்ளை நிற கடா ஆட்டுக்குட்டியை எடை பார்க்கும் இயந்திரத்தின் மீது அவர் வைக்கிறார். “மூன்று கிலோ,“ என்று அறிவித்ததும் வாடிக்கையாளர்களில் இருவர் கிலோ ரூ.200க்கு தருமாறு வலியுறுத்துகின்றனர். “இது மிகவும் குறைவு, ஆனால் எனக்குப் பணம் வேண்டும்,“ என்று சொல்லிக் கொண்டே குட்டிகளின் புதிய உரிமையாளரிடம் அவற்றை ஒப்படைக்கிறார் பிரகாஷ்.
“அப்படியே போகட்டும், நம்மால் என்ன முடியும்?“ என்று வாடா தாலுக்காவில் உள்ள தேசைபாடா எனும் குக்கிராமத்தில் ஜூன் மாத இறுதி வாரத்தின் மதிய வேலையில் அக்குடும்பத்தை சந்தித்தபோது என்னிடம் அவர் கூறினார். கோவிட்-19 ஊரடங்கு அறிவித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
பிரகாஷ் குடும்பம் உள்ளிட்ட ஏழு குடும்பங்களும் நாடோடி மேய்ப்பர்களான தன்கர் சமூகத்தைச் சேர்ந்தவை. மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்ட திடலில் இரண்டு நாட்களுக்கு தங்கினர். தங்களின் வளர்ப்பு பிராணிகள் வெளியில் சுற்றுவதை தடுக்க சில பெண்கள் நைலான் வலை அமைத்தனர். மூட்டைகள் நிறைய தானியங்கள், அலுமினிய பானைகள், நெகிழி வாலிகள் மற்றும் பிற பொருட்கள் அத்திடலில் சிதறிக் கிடந்தன. சில குழந்தைகள் ஆட்டுக்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆட்டுக்குட்டிகள், செம்மறி ஆடுகள், ஆடுகளை, கேட்கும் விலைக்கு பிரகாஷ் விற்கிறார். அதுவே தன்கர் குழுவின் முதன்மை வாழ்வாதாரமாக உள்ளது. ஏழு குடும்பங்களும் 20 குதிரைகள் உட்பட சுமார் 500 விலங்குகளை சொந்தமாக வைத்துள்ளன. செம்மறி ஆடுகளை வளர்த்து பணம் அல்லது தானியங்களுக்காக விற்கின்றனர். ஆடுகளை மட்டும் பால் எடுப்பதற்காக குடும்ப பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்கின்றனர். அவ்வப்போது இறைச்சி வியாபாரிகளுக்கு அவற்றை விற்கின்றனர். சில சமயங்களில் உரத்திற்காக தங்களின் விளைநிலங்களில் இந்த விலங்குகள் மேய்வதற்கு நில உரிமையாளர்கள் அனுமதிக்கின்றனர். இதற்காக இக்குடும்பங்களுக்கு அவர்கள் உணவு, குடிநீர், தங்குமிடத்தையும் சில நாட்களுக்கு அளிக்கின்றனர்.
“நாங்கள் கடா செம்மறி ஆடுகளை தான் விற்கிறோம், பெட்டை செம்மறி ஆடுகளை வைத்துக் கொள்கிறோம்,“ என்கிறார் 55 வயதாகும் இந்த ஆயர்குழுவின் தலைவர் பிரகாஷ். “தங்கள் நிலங்களில் மேய்ச்சலுக்காக விவசாயிகள் எங்களிடம் ஆடு வாங்குகின்றனர். அவற்றின் உரம் மண்ணை வளமைப்படுத்துகிறது.“
தன்கர் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஏழு குடும்பங்களையும் மகாராஷ்டிரைவில் நாடோடி பழங்குடியினராக பட்டியலிடுகின்றனர் – சம்பா சாகுபடிக்குப் பிறகு நவம்பர் மாத வாக்கில் தங்களின் ஆண்டு பயணத்தை தொடங்குகின்றனர். (இந்தியாவில் தோராயமாக 36 லட்சம் தன்கர்கள் உள்ளனர் – மகாராஷ்டிரா தவிர பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கத்திலும் அதிகம் உள்ளனர்.)
சுமார் 40 பேர் கொண்ட ஏழு குடும்பங்களும் சாலை பயணத்தை தொடங்கிய பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாதம் வரை தங்குகின்றனர். 2-3 நாட்களுக்கு ஒருமுறை வயல் விட்டு வயல் மாறுகின்றனர். வசிப்பதற்கு தார்பாலின் கொட்டகை அமைத்துக் கொள்கின்றனர். கிராமங்களைவிட்டு வெளியே சாலையில் செல்லும்போது வனப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
பிரகாஷ் மற்றும் அவருடன் உள்ள குழுவினர் அகமத்நகர் மாவட்டம் தவல்புரி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களின் ஆண்டு புலம்பெயர்வு என்பது மாநிலம் முழுவதும் சுற்றி இறுதியில் நாசிக் மாவட்டத்தில் ஜூன் மாதம் முடிகிறது. அங்குள்ள தரிசு நிலங்களில் குடிசைகள் அமைத்து மழைக் காலங்களைக் கழிக்கின்றனர்.
மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 ஊரடங்கு தொடங்கிய பிறகு, தங்களின் வழக்கமான பாதையில் செல்வது என்பது கொக்ரி குடும்பத்திற்கு குதிரை கொம்பாகி போனது. “நாங்கள் தினமும் சுமார் 30 கிலோமீட்டர் நடப்போம், ஆனால் ஊரடங்கின்போது எங்களை தடுத்து நிறுத்திய மக்கள், வயல்களில் தங்க அனுமதித்தனர்,“ என்கிறார் பிரகாஷ்.
வாடா தாலுக்காவிற்கு வருவதற்கு முன்பு இக்குடும்பங்கள் வாடாவிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்கரின் வங்கான் கிராமத்தில் ஊரடங்கு தளர்வுக்காக 40 நாட்கள் தங்கியிருந்தன. ஜூன் மாதம் சில தளர்வுகளை அறிவித்தவுடன் அவர்கள் மீண்டும் பயணத்தை தொடங்கினர். “எங்கள் விலங்குகளுக்காக நாங்கள் நகர வேண்டும். போலீசும் எங்களை கண்டுகொள்ளாது,“ என்கிறார் பிரகாஷ். “மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு எங்களை வெளியேற்ற விரும்பினர்.“
ஏப்ரல் மாதம் வங்கானில் சில குடியிருப்புவாசிகள் தங்கள் குடும்பத்தை விரட்டியதை அவர் நினைவு கூர்கிறார். “அவர்கள் நிலத்திற்கு நாங்கள் வந்து ஆபத்து விளைவிக்கிறோம் என்றும் வீட்டிலேயே இருக்கும்படியும் எங்களிடம் அவர்கள் சொல்கின்றனர். நாங்கள் இப்படித் தான் எப்போதும் வாழ்கிறோம். என் தந்தை, அவரது தந்தை என அனைவரும் விலங்குகளுடன் சுற்றியவர்கள் தான். நாங்கள் ஒரே இடத்தில் வசித்தது கிடையாது. எங்களுக்கு தங்குவதற்கு என வீடு கிடையாது.“
ஒரு வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊரடங்கு அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. “எங்களுக்கு அப்படி வாழ்வது சிரமம் தான்,“ எனும் பிரகாஷ். ஒரே வீடு என்பது பிற பிரச்னைகளை எளிதாக்கிவிடும்…“ என்கிறார்.
எவ்வித போக்குவரத்து வசதியுமற்ற ஊரடங்கு காலத்தில் தன்கர் குடும்பங்கள் பிற போராட்டங்களையும் சந்தித்துள்ளன. சாதாரண காலத்தில் கூட இதுபோன்ற நாடோடி மேய்ப்பர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. தொடர்பில்லாத பகுதிகளில் வசிப்பது அல்லது நகர்ந்து கொண்டே இருப்பதும் இதற்கு காரணம். ஜூன் மத்தியில் பேசிய பிரகாஷ், “என் சகோதரனின் மகளும், அவளது குழந்தையும் இறந்துவிட்டார்கள். அவள் கர்ப்பமாக இருந்தாள்“ என்றார்.
அருகில் உள்ள குழாயில் நீரெடுக்க போன சுமன் கொக்ரியை பாம்பு தீண்டிவிட்டது. குழுவைச் சேர்ந்தவர்கள் அவளை கண்டுபிடித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ கூட கிடைக்கவில்லை. பல்கரில் உள்ள மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் நிரம்பியதால் அவளை அனுமதிக்கவில்லை. “ஒவ்வொரு மருத்துவமனையாக அவளை அழைத்துச் சென்றோம், ஆனால் யாரும் அவளை அனுமதிக்கவில்லை. இரவில் அவளை உல்ஹாஸ்நகர் [சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது] அழைத்துச் சென்றோம். ஆனால் செல்லும் வழியிலேயே அவள் இறந்துவிட்டாள். இரண்டு நாட்கள் கழித்து அவளது உடலை மருத்துவமனை ஒப்படைத்தது,“ என்றார் பிரகாஷ்.
“அம்மா எங்கே போயிருக்கிறாள் என என் மகன்கள் [3 மற்றும் 4 வயது] என்னிடம் கேட்கின்றனர், “ என்கிறார் சுமனின் 30 வயதாகும் கணவர் சந்தோஷ். “அவர்களிடம் நான் என்ன சொல்வது? என் மனைவியும், [பிறக்காத] குழந்தையும் இறந்துவிட்டார்கள். அதை எப்படி அவர்களிடம் சொல்வது?“
இந்த மேய்ப்பர்களுக்கு தொற்று காலத்திற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து தெரிந்துள்ளது. ஆனால் வனப்பகுதிகளில் அதிகம் வசிக்கும் இவர்களின் கைப்பேசிக்கு நெட்வொர்க் கிடைக்காததால் செய்தி மற்றும் பிற தகவல்களை எப்போதும் அறிந்து வைத்திருப்பதில்லை. “நாங்கள் வானொலி கேட்போம்,” என்று என்னிடம் சேய் கொக்ரி சொன்னாள். “கைகளை கழுவி, முகக்கவசம் அணியுமாறு அவர்கள் சொல்கின்றனர். நாங்கள் கிராமங்களுக்கு செல்லும்போது முகத்தை புடவை முந்தியால் மூடிக் கொள்கிறோம்.”
பல்கரில் தங்கிய போது பிரகாஷின் மருமகளான 23 வயதாகும் சேய் கல் அடுப்பில் தீ மூட்டி சோள ரொட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். அருகில் அவளது ஒரு வயது மகன் தானேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். “ஒருவேளை மட்டுமே உணவு கிடைத்தாலும் எங்களுக்குப் பரவாயில்லை, ஆனால் எங்கள் விலங்குகளை பார்த்துக் கொள்ள வேண்டும்,“ என்றாள். வங்கான் வாசிகள் தன்கர்களை வெளியேறும்படி கூறிய சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவள், “ஓரிடம் ஒதுங்க கொடுத்தால், எங்கள் ஆடுகளுடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோம். அது காடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால் எங்கள் ஆடுகளுக்கு தீவனமும், தண்ணீரும் வேண்டும்.“
இந்த ஏழு குடும்பங்களும் ஊரடங்கிற்கு முன், வாரத்திற்கு 5-6 செம்மறி ஆடுகள் வரை விற்று வந்தன. சில சமயங்களில் வாரத்திற்கு ஒன்றை விற்றுவிடுவோம் என்று சொல்லும் பிரகாஷ், விவசாயிகள் மொத்தமாக கால்நடைகளை வாங்கிச் செல்வதும் உண்டு. பொதுவாக மாதம் 15 ஆடுகளை விற்று வரவு, செலவுகளை பார்த்துக் கொள்வோம். “நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம். நாங்கள் ஒரே குடும்பம்,“ என்கிறார்.
ஊரடங்கால் விற்பனை சரிந்துவிட்டது – ஆனால் எவ்வளவு சரிவு என்பதை பிரகாஷ் கூறவில்லை, ஆனால் சேமிப்புகளைக் கொண்டு சமாளித்து வருவதாகக் கூறுகிறார் – கிலோ ரூ. 50க்கு விற்ற அரிசி இப்போது ரூ. 90, கோதுமை கிலோ ரூ. 30 ஆக இருந்தது. இப்போது ரூ. 60. ”இங்குள்ள [வாடாவில்] அனைத்து கடைகளும் எங்களிடம் கொள்ளையடிக்கின்றன,” என்கிறார் சேய். ”எங்களிடம் தானியங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அடுத்து வேறு இடத்திற்கு செல்லும் வரை மளிகைப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும். இப்போதெல்லாம் ஒரு நாளுக்கு ஒருமுறை தான் சாப்பிடுகிறோம்.”
அரசிடமிருந்து சில ரேஷன் பொருட்கள் கிடைத்ததாக அவர்கள் சொல்கின்றனர். ”ஏழு குடும்பங்களுக்கும் சேர்த்து 20 கிலோ அரிசி தருகின்றனர் [அகமத்நகர் அதிகாரிகள்],” என்கிறார் பிரகாஷ். “20 கிலோ எங்களுக்கு எப்படி போதும்? எங்கள் கிராமத்தில் [அடிக்கடி செல்லும் தவல்புரி கிராமம்] நாங்கள் குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை [நியாய விலை கடைகளில்] வாங்குவோம், ஆனால் மற்ற இடங்களில் முழு விலை கொடுக்க வேண்டி உள்ளது…“
பயணம் செய்யும்போது ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களை இக்குடும்பங்கள் குதிரைகள் மீது ஏற்றிச் செல்கின்றன. “வனப்பகுதிகளில் வசிக்கும்போது சிலசமயம் எண்ணெய் வேகமாக தீர்ந்துவிடும் அல்லது அரிசி 15 நாட்களில் தீர்ந்துவிடும். அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தான் வாங்கி வர வேண்டும்,“ என்கிறார் பிரகாஷ்.
“இந்நோயால் [கோவிட்-19] குழந்தைகளையும் எங்களுடன் அழைத்துச் செல்கிறோம். அவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருந்தார்கள்,“ என்கிறார் பிரகாஷின் சகோதரியான 30 வயதாகும் ஜகான் கொக்ரி. பொதுவாக சிறு குழந்தைகள் தான் பெற்றோருடன் பயணப்படுவார்கள், 6 முதல் 8 வயதை கடந்தவர்கள் தாவல்புரியில் உள்ள உறைவிடப் பள்ளிகளில் (ஆசிரம சாலைகள்) தங்கி படிப்பார்கள். கோடை விடுமுறைக் காலங்களில் பள்ளிகள் விடுமுறை விட்டதும் வளர்ந்த பிள்ளைகளும் பயணத்தில் இணைந்து கொள்வார்கள். “ஆடுகளுடன் இப்போது என் மகனும் திரிகிறான்,“ என்கிறார் ஜகான். “நான் என்ன செய்வது? கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் அவர்களையும் எங்களுடன் அழைத்து வந்தோம்.“
ஜகானின் மகன்களான சன்னியும், பர்சத்தும் தாவல்புரியில் 7 மற்றும் 9ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். அவரது ஆறு வயது மகள் திருப்தி இன்னும் பள்ளியில் சேரவில்லை. குதிரைகள் மீது பொருட்களை ஏற்றும் வேலைகளில் தாய்க்கு அவள் உதவி வருகிறாள். “வீடு இல்லாமல் எங்களைப் போன்று திரியும் நிலை எங்கள் பிள்ளைகளுக்கு வர வேண்டாம்,“ என்கிறார் ஜகன். “பயணம் செய்வது கடினமானது, எங்கள் விலங்குகளுக்காக இதை செய்கிறோம்.“
ஜூன் மாத இறுதியில் அவர்களை நான் சந்தித்தபோது ஏழு குடும்பங்களும் பல்கரிலிருந்து செல்ல தயாராகி வந்தனர். “இப்பகுதிகளில் பெய்யும் மழையில் எங்கள் ஆடுகளால் உயிருடன் இருக்க முடியாது. இங்குள்ள மண் பிசுபிசுப்புடன் உள்ளதால் ஆடுகளுக்கு நோய் ஏற்படும்,“ என்கிறார் பிரகாஷ். “எனவே நாங்கள் மழை குறைவான நாசிக் பகுதிக்குச் செல்கிறோம்.“
அண்மையில் தொலைப்பேசி வழியாக அவர்களிடம் பேசுகையில் பல தலைமுறைகளாக பயணித்த நாசிக் மாவட்டம் சின்னார் தாலுக்காவைச் சுற்றி ஆயர்கள் சென்று கொண்டிருந்தனர்.
தமிழில்: சவிதா