தில்லி சலோ எனும் அறைகூவல் கேட்டதுதான் தாமதம்- மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்ட வார்லி பழங்குடியின விவசாயிகள் 2018 நவம்பர் 27 அன்று டெல்லியை நோக்கி பயணத்தைத் தொடங்கினர். தகனுவிலிருந்து விரார் தொடர்வண்டி நிலையம்வரை அவர்கள் புறநகர் மின் தொடர்வண்டியிலும் அங்கிருந்து மைய மும்பைக்கு இன்னொரு தொடர்வண்டியிலும் டெல்லிக்கு மூன்றாவதாக ஒரு தொடர்வண்டியிலும் பயணித்தனர்.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் 150- 200 அமைப்புகளின் கூட்டமைப்பான- அனைத்திந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்ட நவ.29-30 டெல்லி பேரணிக்கு அவர்கள் வந்துகொண்டிருந்தனர். அதில் முதன்மையானது அனைத்திந்திய விவசாயிகள் சபைதான். வரலாற்றுப் புகழ்பெற்ற வார்லி எழுச்சியின்போது அதற்குத் தலைமைவகித்த கோடுட்ட்டாய் பருலேக்கர்தான், இந்த அமைப்புக்கும் தலைமை. பழங்குடியினரிடையே பரவலான ஆதரவைப் பெற்றவர்.
அடக்க அளவைத் தாண்டி ஒரே பெட்டியில் இருபத்து நான்கு மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணம்செய்த பின்னர், பால்கரின் 100 பேர் குழு அசரத் நிஜாமுதீன் நிலையத்தை அடைந்தது. இது அந்தப் பயணத்தில் முக்கிய அம்சம்.
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்