ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தின் துசாமுண்டா கிராமத்திற்கு வெளியிலிருக்கும் குடிசை வீட்டில் தனது நான்கு குழந்தைகளுடன் விதவையான ஆதிவாசிப் பெண்ணான கமலா பஹாரியா வசித்து வருகிறார், நாங்கள் அவரைச் சந்தித்து 16 வருடங்கள் ஆகின்றது. அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு செங்கல் சூளை உரிமையாளர் வலுக்கட்டாயமாக வைத்திருந்த அவரது இரண்டு வயது மகனான கௌதக்கை மீட்க உத்தரவிடுமாறு கந்தபஞ்சியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் கமலா முறையிட்டார்.

இக்குடும்பம் பஹாரிய பழங்குடி இனத்தை சேர்ந்தது, இவர்கள் பாரம்பரியமாக கூடைகள் தயாரித்து வந்தனர். அவர்கள் வேலை தேடி நகரத்திற்கு புலம்பெயர்ந்தனர் ஆனால் கமலா கர்ப்பமானார் மற்றும் நோய்வாய்பட்டார், அதனால் அவர்கள் கிராமத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்குடும்பத்தினர் சூளை உரிமையாளரிடமிருந்து வாங்கிய முன்பணத்தை மீட்டெடுப்பதற்காக அவர்களின் ஒரு குழந்தையை அவர் வலுக்கட்டாயமாக வைத்திருந்தார்.

நீதிமன்றம் குழந்தையை மீட்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது, கௌதக் வீடு திரும்பினான்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழிந்தாலும் பஹாரியா மக்களுக்கு எதுவும் மாறவில்லை, இச்சமூகத்தினரை கம்மர் சமூகம் என்றும் அழைப்பர், கிழக்கு ஒடிசாவில் இருக்கும் இவர்களுக்கு பழங்குடியினர் என்ற அந்தஸ்து கிடைக்க போராடி வருகின்றனர், இதே சமூகத்தைச் சேர்ந்த சத்தீஸ்கரில் இருக்கும் மக்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினராக அங்கிகரிக்கப்பட்டுள்ளனர். தற்போது 18 வயதாகும் கௌதக்கிற்கு வேறு வழியில்லாமல் புலம்பெயர் தொழிலாளியாக இருக்கிறார். அவர் மும்பையில் உள்ள கட்டுமான தளங்களில் வேலை செய்து வருகிறார்.

"எட்டாம் வகுப்பிற்கு பிறகு வேலைக்காக அவன் நகரத்திற்கு செல்வது இது இரண்டாவது முறை", என்கிறார் கமலா. "நான் அவனிடம் கல்வியை தொடருமாறு கெஞ்சினேன், ஆனால் அவன் என் பேச்சை கேட்கவில்லை". இப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் கட்டுமான தளத்தில் வேலை செய்வதை விரும்புகின்றனர், இது அவர்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கிறது மேலும் செங்கல் சூளையில் அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதையை விட இது குறைவானதே.

கௌதக் தான் கமலாவின் நான்கு பிள்ளைகளில் மூத்தவர். அவரது மகள்கள் அனைவரும் பள்ளிக்கு செல்கின்றனர். 14 வயதாகும் சக்கரபத்தி 9ஆம் வகுப்பு படிக்கிறார், 13 வயதாகும் சந்திரகாந்தி 8ஆம் வகுப்பு படிக்கிறார் மற்றும் 10 வயதாகும் பிரேமலதா 4ஆம் வகுப்பு படிக்கிறார். சந்திரகாந்தி மற்றும் பிரேமலதா ஆகியோர் கஸ்தூர்பா காந்தி ஆசிரம பள்ளியில் படிக்கின்றனர், இப்பள்ளி குறிப்பாக பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கானது. முதலில் சக்கரபத்தியும் ஆசிரம பள்ளியில் தான் படித்தார் இப்போது வீட்டிலிருப்பதால் அருகிலிருக்கும் கிராமத்திலிருக்கும் உயர்நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் செல்கிறார்.

"கமலா நிறைய போராடியிருக்கிறார், ஆனால் அவர் எப்போதும் கைவிட்டதில்லை", என்கிறார் உள்ளூர் வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலரும், இப்பகுதியிலிருந்து புலம்பெயந்தோருக்கான அதிகாரியான பிஷ்ணு சர்மா. அவர் தனது மகள்களை ஆசிரமப் பள்ளியில் சேர்ப்பதற்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடினார். அதிகாரிகள் முதலில் பஹாரியாக்கள் பழங்குடியினர்கள் அல்ல என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்".

PHOTO • Purusottam Thakur

"கமலா நிறைய போராடியிருக்கிறார் ஆனால் அவர் எப்போதும் கைவிட்டதில்லை", என்கிறார் உள்ளூர் வழக்கறிஞர் மற்றும் ஆர்வலருமான பிஷ்ணு சர்மா

சத்தீஸ்கரில் இருக்கும் இதே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினராக காட்டும் ஆவணங்களை கமலா சேகரித்தார். ஒடிசா அரசின் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை மேற்கோள் காட்டி பழங்குடியினருக்கான பலன்களை பஹாரியாக்களுக்கும் நீட்டித்து தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அளிக்குமாறு  நௌபதாவின் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுப்பெற்றார். இந்த ஆவணங்களைப் பார்த்த அதிகாரிகள் அமைதியாக அச்சிறுமிகளை சேர்த்துக் கொண்டனர்.

"அரசு வழங்கும் சலுகைகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் எனது பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன் அதனால் நான் தொடர்ந்து போராடினாலும் பரவாயில்லை", என்று 6ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் 40 வயதாகும் கமலா கூறுகிறார்.

துசாமுண்டா கிராமத்தில் சுமார் 500 மக்கள் வசிக்கின்றனர் அதில் மூன்று அல்லது நான்கு பஹாரியா குடும்பங்களும் இருக்கிறது மற்றவர்கள் யாதவர் மற்றும் குயவர்கள். இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கிராமமாக அறியப்படுகிறது தங்களது வாழ்வாதாரத்திற்காக விவசாயம் மற்றும் வன பொருட்களை சேகரிப்பதைச் ஒருசிலரே சார்ந்திருக்கின்றனர்.

விவசாயம் செய்வதற்கு கமலாவிடம் நிலம் இல்லை அவரிடம் இருப்பது 3000 ரூபாய்க்கு வாங்கிய வீட்டு மனையின் சிறிய நிலமே. பழைய வீடு சேதம் அடைந்த பிறகு அந்த நிலத்தில் புதிய மண் வீடு ஒன்றை கட்டினார். இதற்கு அவர் (மத்திய அரசின் ஊரக ஏழை மக்களுக்கான வீட்டு வசதி வழங்கும் திட்டமான) இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திலிருந்தோ அல்லது ஒடிசா மாநில அரசு வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டமான மோ குடியா திட்டத்திலோ பயன்பெறவில்லை.

PHOTO • Purusottam Thakur

'எனது பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன் அதனால் நான் தொடர்ந்து போராடினாலும் பரவாயில்லை'

“மோ குடியா திட்டத்தின் கீழ் நாங்கள் விண்ணப்பித்து வீடு பெற முயற்சித்து வருகிறோம், ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் எனக்கு விதவை ஓய்வூதியமான 300 ரூபாய் கிடைத்து வருகிறது. எங்களிடம் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர் என்ற அட்டை இல்லை. முன்னர் எங்களிடம் இருந்தது ஆனால் இப்போது ஏனோ எங்களுக்கு வறுமைக் கோட்டிற்கு மேலிருப்பவர் என்று அட்டை வழங்கப்பட்டிருக்கிறது", என்று கமலா கூறுகிறார்.

கமலாவிடம் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் அட்டை இல்லை என்பது முரண்தான். அவர் நிலமற்ற பழங்குடியின விதவைப் பெண். அவருடைய ஒரே வருமானம் மூங்கில் கூடைகளை தயார் செய்து விற்பதன் மூலம் வருவதுதான். "மூங்கில் மூலப்பொருட்களை பெறுவதும் ஒரு பிரச்சனை தான்", என்கிறார். "கிராமத்தினர் சிலர் தங்கள் நிலத்தில் மூங்கில் வளர்க்கின்றனர் ஆனால் அவர்கள் ஒரு மூங்கிலுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர்".

நாங்கள் கமலாவின் அண்ணியான சுமித்ரா பஹாரியாவையும் சந்தித்தோம். சுமித்ராவின் குடும்பத்தினரும் பாரம்பரியமாக மூங்கில் கூடைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்களும் கமலாவின் குடும்பத்தினருடன் ஹைதராபாத்திற்கு சென்றனர், கமலாவும் அவரது குடும்பத்தினரும் வந்தபிறகும் கூட ஆறு வருடங்களுக்கு அவர்கள் அந்த செங்கல் சூளையில் வேலை செய்திருக்கின்றனர்.

செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பொதுவாக பருவ மழைக்கு முன்பே தங்களது கிராமங்களுக்கு திரும்புவார்கள். ஆனால் கிராமத்தில் எந்த வேலையும் இல்லை என்பதால் பருவமழைக்கு பிறகும்கூட சுமித்ராவின் குடும்பத்தினர் சூளையிலேயே தங்கி வண்டிகளில் செங்கல் ஏற்றும் வேலையை செய்துவந்தனர். "நாங்கள் எங்களது மகள் ஊர்பசி பெரியவளான பிறகு தான் கிராமத்திற்கு திரும்பி வந்தோம் மேலும் நாங்கள் இது தான் அவளுக்கு திருமணம் செய்வதற்கான நேரம் என்று நினைத்தோம்", என்றார்.

மகான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜல்தார் பஹாரியாவை 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்பசி திருமணம் செய்து கொண்டார் மேலும் அவருக்கு ஒரு வயதில் குழந்தையும் இருக்கிறது. ஜல்தாரும் புலம்பெயர் தொழிலாளர் என்பதால் அவர் நகரத்தில் இருக்கிறார் ஊர்பசி தனது தாயுடன் வசிக்கிறார். அவரது மாமனார், மாமியார் மிகவும் ஏழையான தினக்கூலிகள்.

சுமித்ரா மற்றும் அபி பஹாரியா ஆகியோருக்கு மேலும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர், 10 வயதாகும் நீலேத்ரி மற்றும் 4 வயதாகும் லிங்கராஜ். அவர்கள் யாரும் படிக்கவில்லை. "ஊர்பசி படிக்க வைக்காததற்காக இன்னமும் எங்களை திட்டுகிறாள்", என்று சுமித்ரா ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் ஆறு வருடங்களாக ஆந்திரப் பிரதேசத்தில் இருந்ததால் எங்களது குழந்தைகள் யாரையும் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. ஆனால் எங்களது இளைய மகனை நிச்சயம் படிக்க வைப்போம். நாங்கள் நீலேதிரியையும் பள்ளியில் சேர்க்க விரும்புகிறோம் ஆனால் அவள் மறுத்துவிட்டாள், இப்போது அவளுக்கு வயதாகிவிட்டது", என்று கூறுகிறார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்பது, சுமித்ராவின் கணவர் அபி இரண்டு சிறிய மீன்களுடன் வருகிறார். "குளத்தில் மீன் பிடிக்க உதவியதற்காக கிராம மக்கள் இதை எனக்கு கொடுத்தனர்", என்று அவர் கூறுகிறார்.

ஊர்பசியின் கணவர் ஜல்தரும் புலம்பெயர் தொழிலாளராக இருப்பதில் சுமித்ராவுக்கு மகிழ்ச்சியில்லை. ஆனால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? "அனைத்துப் புலம்பெயர்ந்தோரும் தெருநாய்களை போன்றவர்கள் தான், தெருக்களில் சுற்றித் திரிந்து அவர்களது வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும்", என்று அவர் கூறுகிறார். "உங்களது ரத்தம் கருப்பாக மாறும் வரை நீங்கள் உழைக்க வேண்டும்", என்கிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Purusottam Thakur

پرشوتم ٹھاکر ۲۰۱۵ کے پاری فیلو ہیں۔ وہ ایک صحافی اور دستاویزی فلم ساز ہیں۔ فی الحال، وہ عظیم پریم جی فاؤنڈیشن کے ساتھ کام کر رہے ہیں اور سماجی تبدیلی پر اسٹوری لکھتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پرشوتم ٹھاکر
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

کے ذریعہ دیگر اسٹوریز Soniya Bose