“கேமரா துளையோடு கூடிய ஒரு உலோகக் கட்டி. படம் உங்களின் இதயத்தில் இருக்கிறது. நோக்கம்தான் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது.”
பி. சாய்நாத்
வளைதல், சமநிலை கொள்ளுதல், கட்டுதல், தூக்குதல், கூட்டுதல், சமைத்தல், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுதல், விலங்குகளை மேய்த்தல், வாசித்தல், எழுதுதல், இசை உருவாக்குதல், ஆடுதல், பாடுதல், கொண்டாடுதல் என கிராமப்புற மக்களின் வாழ்க்கைகளையும் வேலைகளையும் இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள புகைப்படங்களுடன் இயைந்த எழுத்துகள் உதவுகின்றன.
கூட்டு நனவின் காட்சி பெட்டகமாக இருக்க பாரி புகைப்படங்கள் உழைக்கிறது. நாம் வாழும் காலத்தை பற்றிய அசிரத்தையான பதிவுகள் அல்ல அவை. நம்முடனும் நம்மை சுற்றி உலகுடனும் நம்மை இணைக்கும் ஒரு நுழைவாயிலாக அவை செயல்படுகின்றன. வெகுஜன ஊடகத்தில் இடம்பெறாத இடங்கள், நிலம், வாழ்வாதாரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றையும் விளிம்புநிலை மக்களையும் கதைகளையும் நமது விரிவான புகைப்படப் பெட்டகம் பேசுகிறது.
புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, அழகு, சந்தோஷம், சோகம், துயரம் மற்றும் கொடும் உண்மைகள் ஆகியவற்றின் வழியாக மனிதர்களின் எளிதில் பாதிக்கப்படும் தன்மையும் பலவீனங்களும் வெளிப்படுகின்றன. கட்டுரையில் இருக்கும் நபர், வெறும் புகைப்பட மாந்தர் இல்லை. புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயரை தெரிந்து கொள்வது பரிவை தருகிறது. ஒற்றை வாழ்க்கைக் கதை பல பெரும் உண்மைகளை பேசும்.
ஆனால் இவை யாவும் புகைப்படக் கலைஞருக்கும் புகைப்படத்தில் இடம்பெறுபவருக்கும் இடையே இயைபு இருந்தால்தான் சாத்தியம். கதை மாந்தர்கள் ஆழமான இழப்பையும் விளக்கமுடியா துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை படம்பிடிப்பதற்கான ஒப்புதல் நமக்கு இருகிறதா? மிகவும் விளிம்பு நிலையில் வாழும் மக்களை எப்படி மதிப்புடன் நாம் புகைப்படம் எடுப்பது? நபரோ மக்களோ புகைப்படம் எடுக்கப்படும் பின்னணி என்ன? அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைக் கதைகளை சொல்ல புகைப்படத் தொடரை உருவாக்குவதற்கான நோக்கம் என்ன?
களத்தில் சென்று நம் புகைப்படக் கலைஞர்கள் உறுதியாக பிடித்துக் கொள்ளும் முக்கியமான கேள்விகள் இவை. சில நாட்களோ சில வருடங்களிலோ எழுதப்படும் கட்டுரைக்கு எடுக்கப்பட்டாலும் அற்புதமான நடிகர்களையும் பழங்குடி விழாக்களையும் போராட்டத்தில் விவசாயிகளையும் எடுத்தாலும் இக்கேள்விகளே பிரதானம்.
உலக புகைப்பட நாளன்று, பாரியின் கட்டுரைகளுக்காக நம் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்பட தொகுப்பை உங்களுக்கு அளிக்கிறோம். புகைப்படம் எடுத்த விதம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் புகைப்படக் கலைஞர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அவை பெயர்களின் வரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன.






















