ஜார்கண்டின் பொரோதிகாவில் சிக்கலான பிரசவத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெண், மருத்துவரை சந்திக்கவே எல்லை கடந்து ஒடிசாவுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
அவர் மட்டுமல்ல - கிராமப்புற இந்தியாவை சேர்ந்த பெண்ணாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் மகளிர் நோய் மருத்துவரையோ ஓர் அறுவை சிகிச்சை மருத்துவரையோ சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இருக்கும் கட்டமைப்பில் இங்குள்ள சமூக சுகாதார மையங்களில் தேவைப்படும் மகளிர்நோய் மற்றும் மகப்பேறு மருத்துவர்களில் 74.2 சதவிகித இடங்கள் நிரப்பப்படவில்லை.
நோயுற்ற குழந்தை கொண்ட ஓர் இளம்தாயாக நீங்கள் இருந்தால், ஒரு சமூக சுகாதார மையத்தில் குழந்தை நோய் மருத்துவரை இங்கு நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கும் பொது மருத்துவர்களுக்குமான இடங்களில் 80 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளது.
இது போன்ற தரவுகளை நாம் Rural Health Statistics 2021-22 அறிக்கையில் கிடைக்கப் பெறுகிறோம். இவையும் இன்னும் பிற முக்கியமான அறிக்கைகள், ஆய்வறிக்கைகள் மற்றும் களத் தரவுகள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பாரியின் சுகாதாரப் பெட்டகத்தில் இருக்கின்றன. இந்தியப் பெண்களின் ஆரோக்கிய நிலையை புரிந்து கொள்ளவும் விளக்கவும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பெண்களின் ஆரோக்கியம், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், இருக்கும் ஆபத்தான நிலையை இப்பகுதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இனவிருத்தி ஆரோக்கியம் தொடங்கி பாலியல் அச்சுறுத்தல் வரை, மனநலம் தொடங்கி கோவிட் தொற்று தாக்கம் வரை பாரியின் சுகாதாரப் பெட்டகம் பெண்களது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை கொண்டிருக்கிறது. 'அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள்' என்கிற பாரியின் நோக்கத்தை அது வலுப்படுத்துகிறது.









