மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் அமிதாப் பச்சனிடம், எப்போது சாதி குறித்து கேட்டாலும், அவரது பதில்: சாதி- இந்தியன், என்பதாகவே இருக்கும் என முன்புத் தெரிவித்திருந்தார். பாலிவுட் ஊடகங்கள் உணர்ச்சியை தூண்டும் விதத்தில், இதனை விட கொஞ்சம் கூடுதலாகவே இவ்வாறு மீண்டும் செய்யக்கூடும். ஆனால், ஷ்யாம் மகாராஜ் ஒன்றும் பச்சன் இல்லை, அவரது தம்பி சைதன்ய பிரபுவும் இல்லை. ஆனால், இவர்களும், இவர்களின் சகோதரத்துவ சிந்தனையின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களும், இதை விட சிக்கலான பதில்களையும் கேள்விகளையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களிடம் எழுப்புகிறார்கள். “எங்களின் பதில்: நாங்கள் அஜாத்துகள். இதோ என் பள்ளிச் சான்றிதழ் அதனை நிருபிப்பதற்கானச் சான்று. ஆனால், நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதனையே எழுதிக் கொள்ளுங்கள்,” என மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மங்கருள்(தாஸ்தகிர்) கிராமத்தில் தனது வீட்டில் அமர்ந்தபடி பிரபு தெரிவித்தார்
அஜாத் என்றால் சாதியற்ற மனிதர்கள் என்று பொருள். அஜாத் 1920களில் செயல்பட்ட ஆற்றல்மிக்க சமூக இயக்கமாகும். 1930 களில் இந்த இயக்கம் உச்சத்தில் இருந்த சமயத்தில், தற்போதுள்ள மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பத்தாயிரக்கணக்கான ஆத்மார்த்தமான ஆதரவாளர்கள் இந்த இயக்கத்துக்கு இருந்தனர். இந்த இயக்கம் வண்ணமயமான சிந்தனையும் தனித்துவமான போக்குமுடைய சமூக சீர்திருத்தவாதி கணபதி மகாராஜ் என்றழைக்கப்பட்ட கணபதி பாபுத்கரால் வழிநடத்தப்பட்டது. சைதன்ய பிரபு மற்றும் ஷ்யாம் மகாராஜ் அவரது பேரன்கள் ஆவர். எப்போதும் மதுவிற்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும் செயல்படுவதையே கொள்கையாகக் கொண்டுள்ள அமைப்புகளுக்கு பதிலாக, கணபதி மகாராஜ் பிற பிரச்சனைகளை எதிர்த்தார். முதன்மையாக சாதியை எதிர்த்தார். அவர் கூறியதை ஏற்று பலர் உருவ வழிபாட்டை நிறுத்தினர். அவர் பாலின சமத்துவத்திற்காகவும், ஏன் தனி உடைமைக்கு எதிராகவும் கூட உழைத்தார். 1930 ஆம் ஆண்டு இவரும், இவரது ஆதரவாளர்களும் தங்களை ‘அஜாத்’ என அழைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
அவரது சமபந்தி போஜன முன்னெடுப்புகள், அவர் பணிபுரிந்த கிராமங்களில் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் குறித்து அவரது கொள்கையைப் பின்பற்றியவர்களில் ஒருவரான பி.எல்.நிம்கர்: “அவர், அவரை பின்தொடர்ந்த அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இருந்தும் சமைத்த உணவை எடுத்து வர சொல்லுவார். இவை அனைத்தும் மொத்தமாக கலக்கப்பட்டு, அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும்.” என்று கூறியுள்ளார். சாதி ஒழிப்பே அவரது மிகமுக்கிய இலக்காக இருந்துள்ளது. “சாதி மறுப்பு திருமணங்கள், கைம்பெண் திருமணம் ஆகியவற்றையும் முயன்று சாதித்தார்,” என்று கூறிய பிரபு, மேலும், “எங்கள் குடும்பத்திற்குள், எங்கள் தாத்தா முதல் நாங்கள் வரை, பார்ப்பனர்கள் முதல் தலித்துகள் வரை 11 வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களை நாங்கள் மணந்துள்ளோம். எங்கள் கூட்டுக் குடும்பத்தில் இதுபோன்ற திருமணங்கள் பல நடந்துள்ளன.” எனக் குறிப்பிட்டார்.
கணபதி மகாராஜும் இவ்வாறே திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், “உயர் சாதி இந்துக்களுக்கு எதிராக, இங்கு தலித்துகளுக்கான கோவிலையும் திறந்து, ‘மானவ்’ (மனிதநேயம்) என்ற மதத்தையும் உருவாக்கினார்” என்றார் ஷ்யாம் மகாராஜ். “உயர் சாதி இந்துக்கள் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். அப்போது இங்கிருந்த எல்லா வழக்கறிஞர்களும் பார்ப்பனர்கள். எனவே, யாரும் அவரது வழக்கை எடுக்கவில்லை.” என்றார்.
இதே வேளையில், இந்த இயக்கத்தின் குரு கடந்த 1944 ஆம் ஆண்டு மரணித்ததாலும் (அவர், பத்து ஆண்டுகளுக்கு முன்னால், அவரால் கட்டப்பட்ட சமூக வளாகத்தில் புதைக்கப்பட்டார். இது பிரபுவின் வீட்டிற்கு எதிரே உள்ளது), இயக்கத்தைச் சார்ந்த சிலர் சாதி பிரச்சனைகளால் அமைப்பிலிருந்து விலகியதாலும், இயக்கமும் சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்தது. எனினும், சுதந்திரத்துக்குப் பிறகும் சில காலம் இந்த அமைப்பு அறியப்பட்டு மதிக்கப்பட்டு வந்தது. “எனது பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பாருங்கள்” என்று கூறி அவரது மாற்றுச் சான்றிதழை நம்மிடம் காண்பித்த பிரபு, “1960 களின் இறுதியில், ஏன் 70 களில் கூட, எங்களை அஜாத் என்று குறிப்பிட்டு நாங்கள் சான்றிதழைப் பெற்றோம். தற்போது, பள்ளிகளும், கல்லூரிகளும் எங்களை கேள்வி பட்டதே இல்லை என்றும் எங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்,” என்றார்.
எஞ்சியிருந்த அஜாத்தும் சிறப்பாக செயல்படவில்லை. ஷ்யாமும், பிரபுவும் சிறிய விவசாய வியாபாரியாக தற்போது வாழ்வை நடத்துகிறார்கள்.
70களின் இறுதியில் மறக்கப்பட்ட அஜாத் அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் நாக்பூரைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் அதுல் பாண்டே மற்றும் ஜெய்தீப் ஹர்திகரால் மறுபடியும் வெளிக்கொணரப்பட்டது. அவர்களின் கட்டுரைகளின் எதிரொலியால் மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு (அஜாத்துகளுக்கு) உதவ முன்வந்தது. ஆனால், இந்த விசயத்தில் ஆர்வம் காட்டிய மூத்த அதிகாரி ஒருவர் விலகவே இந்த விவகாரமும் முற்றுப் பெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சாதியற்றவர் என்று குறிப்பிடும் அவர்களது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அஜாத் உறுப்பினர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதில்லை. இதே வேளையில், “அஜாத்தைச் சார்ந்தவர்கள் கடுமையாக போராடாமல் ரேஷன் அட்டையை கூட பெற முடிந்தது இல்லை” என பிரபு தெரிவித்தார். மேலும், இதே காரணத்திற்காக கல்லூரி சேர்க்கை, உதவித்தொகை மற்றும் அரசு வேலைகள் ஆகியவற்றிலும் அவர்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவர்களது சாதி குறித்து உறுதியாகத் தெரியாததால் மற்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களும், இந்த குடும்பங்களில் திருமணம் செய்வதில்லை. சுருக்கமாகக் கூறினால், சாதிக்கு எதிராக செயல்பட்ட பெருமைமிக்க சீர்திருத்த அமைப்பு, தங்களைத் தாங்களே குறிப்பிட்ட சாதி என கூறிக்கொள்பவர்களைப் போன்ற ஏதோ ஒரு ஆயிரம் பேரைக் கொண்ட அமைப்பாக சுருங்கிவிட்டது.
“எனது மருமகள் சுனைனா கல்லூரியில் சேர முடியவில்லை,” என்று கூறிய பிரபு, “இந்த அஜாத் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முறையான சாதிச் சான்றிதழ் கொடுத்தால், கல்லூரியில் அவரை சேர்த்துக்கொள்கிறோம் என்றும் கல்லூரியில் தெரிவித்துவிட்டார்கள்.” எனக் கூறினார். இதே வேளையில், ஒருவழியாக கல்லூரியில் சேர்ந்துவிட்ட பிரபுவின் மருமகன் மனோஜ், கூறுகையில், ”அங்கு எங்களை அவர்கள் தனித்தே பார்த்தனர். எங்களில் யாருக்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை. அங்கு யாரும் அஜாத் என்று ஒன்று இருப்பதாக நம்பவில்லை.” என்றார்.
இந்நிலையில், இதுபோன்ற பிரச்சனைகளால் ஓய்வற்று இருக்கும் இளம் தலைமுறையினர் கடந்த காலத்தால் சிறைப்பிடிக்கப்பட்டது போன்று உணர்கின்றனர். இதனால், பிரபுவின் குடும்பம் உட்பட, பல அஜாத்துகள் தங்கள் சாதியை உறுதியாகத் தெளிவுபடுத்த தங்கள் மூதாதையரைக் கண்டுபிடிக்க வேண்டிய அவலத்தைச் சந்திக்க வேண்டி வந்தது.
“எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமென்ற எங்களது அவல நிலையை நினைத்து பாருங்கள்,” என்றார் பிரபு. தலைமுறை தலைமுறைகளாக இந்த குடும்பங்கள் செய்து வந்த சாதி மறுப்பு திருமணங்கள் விட்டுக்கொடுப்பது அவ்வளவு எளிதானவை அல்ல. ஏன் கிராமத்தின் கொத்வால் பட்டியல் ஆவணங்களில் கூட, இவர்கள் ‘அஜாத்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலர் தங்கள் சாதியைக் கண்டுபிடிக்க கொள்ளுத்தாத்தாவை கண்டுபிடிக்க வேண்டி வந்தது. இதுகுறித்து கூறிய பிரபு, “பழைய ஆவணங்ளை மீட்பதும், தகவல்களை மீள் கட்டுமானம் செய்வதும் கொடுமையான வேலை. நாங்கள் சில விஷயங்களை மூடிமறைத்து, எங்கள் சாதியை போலியாகக் குறிப்பிடுவதாக அதிகாரிகள் எங்களைச் சந்தேகிக்கின்றனர். இந்த சாதிச் சான்றிதழை பெறுவதைத் தாண்டி வேறெதுவும் எங்களுக்கு இத்தகைய வருத்தத்தை தரவில்லை. ஆனால், சாதிச் சான்றிதழ் இல்லாவிட்டால், எங்கள் குழந்தைகள் உண்மையில் முடங்கிவிடுவார்கள்”. கெடுவாய்ப்பாக, சாதி எதிர்ப்புப் போராளி கணபதி மகாராஜின் சாதி வழித்தோன்றல் என்ன என்று கண்டறிவதை விடுத்து, அவர்களுக்கு வேறு எந்த வழியுமில்லை. அது தான் அவரது கொள்ளுப் பேரக்குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது.
எஞ்சியுள்ள 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட அஜாத்துகள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம், கிராமத்தில் உள்ள சமூக வளாகத்தில் கூடுகின்றனர். “அஜாத்தியா மானவ் சன்ஸ்தா, என்கிற எங்கள் அமைப்பில் 105 பேர் மட்டுமே முறையாக பதிவு செய்துள்ளனர். ஆனால், அதை விட மிக அதிகமாக எங்கள் ஆண்டுக் கூட்டத்தில் கூடுகின்றனர். எவ்வாறாயினும், முன்பு எங்கள் இயக்கத்தில் 60,000 உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.” என இந்த அமைப்பின் இணைப்புப் பாலமாக இருக்கும் பிரபு கூறினார். மேலும், ”மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற ஒரே ஒரு குடும்பத்துடன் மட்டுமே தற்போது நாங்கள் தொடர்பில் உள்ளோம்” என்று கூறினார் அவர். எஞ்சிய உறுப்பினர்கள் மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர்.
“மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு கேள்வியாக இடம்பெறுவதை விட, சாதியை பற்றிய மிக விரிவான கண்கெடுப்பே நமக்கு தேவை” என இந்தத் துறையில் பணியாற்றிய பொருளியல் அறிஞர் முனைவர். கே. நாகராஜ் (மெட்ராஸ் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர்) தெரிவித்தார். மேலும், “சாதி குறித்த தகவல்கள் நமக்கு வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த தகவல்கள் பரந்துபட்ட பன்முகத்தன்மை கொண்டதாக, இடம்-சிறப்பியல்புத் தன்மை கொண்டதாக, சாதியின் பிற சிக்கல்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டிய தேவை உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறும் ஒற்றைக் கேள்வி அதனை பூர்த்தி செய்யாது. இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் மற்றும் அதன் பயிற்சி பெற்ற ஆய்வுக் குழுவுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டிய வேலையாக அமையும்.” என்று குறிப்பிட்டார்.
அப்படியென்றால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் சாதி பற்றிய கேள்வியுடன் உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன நடக்கும்? ”என்னை நம்புங்கள்” என்று கூறுவேன் எனக்கூறிய பிரபு, “இது அவர்களைக் குழப்பக்கூடும். எங்களைப் போன்றவர்களுக்கு அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேறு வகைப்பாட்டினை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் யார் என்பதை அறிவிக்க வேண்டும். சாதிக்கு துணையாக நின்ற அனைத்துக்கும் எதிராகவும் நாங்கள் போராடியுள்ளோம். ஆனால் இந்தச் சமூகத்தில் எல்லாவற்றிலும் சாதி இருக்கிறது.” என்றார்.
இந்தக் கட்டுரை (இங்கு சிறிது மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது) கடந்த ஜூன் 4 ,2010 ஆம் ஆண்டு தி இந்துவில் முதலில் வெளியானது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்.