என் மக்களின் மரணங்களை பற்றி எழுத நினைத்த ஒவ்வொரு முறையும் என் மனநிலை சீராக இருந்ததில்லை, அது உயிரற்ற உடலாகவே இருக்கும்.

நம்ம எவ்ளோ வளர்ச்சி அடைந்தாலும் ஒரு மனித உயிரை காப்பாற்ற எந்த ஒரு செயலும் செய்வதில்லை. மத்திய அரசு இதுவரை மலக்குழி மரணங்கள் நிகழவே இல்லனு சொல்லுது. ஆனால் இந்த வருஷம் மக்களவையில் கேட்ட ஒரு கேள்வி க்கு சமூக நீதிக்கான அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, 2019-2023ல 377 பேருக்கு மேல இறந்திருக்கறதா பதில் சொல்லி இருக்கார்.

கடந்த ஏழு வருடங்களில் நான் சந்தித்த மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை பல. கடந்த 2022 வருடம் முதல் இன்று வரை சென்னை ஆவடியில் மட்டும் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆகஸ்ட் 11 அன்று ஆவடியில் ஹரி என்ற நகராட்சி ஒப்பந்த ஊழியர் பாதாள சாக்கடை கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த போது கால்வாயில் விழுந்து இறந்துள்ளார். இவர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரெண்டு நாட்கள் கழித்து, ஹரி அண்ணா மலக்குழியில் கொல்லப்பட்ட செய்தியை சேகரிக்க சென்றேன். ஹரி அண்ணாவின் உடல் ஐஸ் பெட்டியில் பூட்டப்பட்டிருந்தது. அந்த தருணம் தமிழ் செல்வி அக்காவிற்கான சடங்குகள் நடைபெற்றது. மஞ்சள் பூசி, தண்ணீர் ஊற்றி, தாலி அறுக்கும் வரை சடங்கு முழுவதும் அவர் எந்த அசைவும் இன்றி இறுக்கமாகவே இருந்தார். அந்த ஈரப் புடவையில் கூட அவர் சிறிதும் நடுங்கவில்லை.

PHOTO • M. Palani Kumar

ஹரி மலக்கழியில் மரணமடைந்தார். அவரும் மாற்றுத்திறனாளியான அவரது மனைவி தமிழ்செல்வியும் காதல் மணம் புரிந்தவர்கள் தமிழும் அவர்களின் மகளும் உடலுக்கு முன் அழுது கொண்டிருந்தனர்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: இறந்து போன கோபியின் மனைவிதான் தீபா அக்கா. கணவரின் பெயரை வலது கையில் பச்சை குத்தியிருக்கிறார். வலது: ஆகஸ்ட் 11, 2024 அன்று கோபி இறந்தார். ஆகஸ்ட் 20ம் தேதி அவரது மண நாள். அவரின் மகளின் (இங்கிருப்பவர்) பிறந்தநாள் ஆகஸ்ட் 30ம் தேதி

அவரை உடைமாற்ற அழைத்து செல்லும்போது அந்த இடமே அமைதியாக இருந்தது. அவர்களின் வீடு பூசப்படாத செங்கற்களால் மட்டுமே நிரம்பியிருந்தது. ஒவ்வொரு செங்கலும் அரிந்து போய் அந்த வீடே இடிந்து விழும் நிலையில் இருந்தது.

தமிழ் செல்வி அக்கா சேலையை மாற்றிவிட்டு வெளியே வரும்போது சத்தமாக அழுது கொண்டே ஹரி அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஓடினார். ஐஸ் பெட்டியின் அருகில் அமர்ந்து மனமுடைந்து ஐஸ் பெட்டியை ஓங்கி அடித்து அடித்து அழுதார். தமிழ்செல்வி அக்காவின் அழுகை சத்தம் கூட்டத்தை அமைதியாக்கியது. அந்த இடம் முழுவதும் அவரின் அழுகை சத்தம் தான் நிரம்பியிருந்தது.

“மாமா எந்திரி மாமா… ஹரி மாமா எந்திரி மாமா… என்ன பாரு மாமா… என்னை சேலை கட்ட சொல்றாங்க… நான் சேலை கட்டுனா உனக்கு பிடிக்காதுல மாமா… எந்திரிச்சு கேளு மாமா,” என்று அந்த அக்கா கத்தி கத்தி அழுதார்.

அவரின் அழுகை சத்தம் இன்னும் என்னுள் கேட்டு கொண்டே உள்ளது. தமிழ் செல்வி அக்கா ஒரு கை இழந்த மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு சேலை கையில் நிற்காது. அதனால் ஹரி அண்ணா எப்போதும் அவர் சேலை கட்டுவதை விரும்பியதில்லை. இதுவரை எப்பொழுது யோசித்தாலும் அந்த அழுகையை எனக்குள் நிறையும்.

இதுபோல் நான் சந்தித்த ஒவ்வொரு மரணமும் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது போல மலக்குழி மரணங்கள் நிகழும் ஒவ்வொரு இடத்திற்கு பின்பும் பல கதைகள் உள்ளன. ஆவடியில் இருக்கும் 22 வயது தீபாவுடைய கணவர் சமீபத்தில் மலக்குழியில் இறந்து போனார். 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா எனக் கேட்கிறார் அவர். ”ஆகஸ்ட் 20ம் தேதி எங்க கல்யாண நாள். ஆகஸ்ட் 30, எங்க குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள். அவரும் அதே ஆகஸ்ட் மாத்தில் இறந்து போய் விட்டார்,” என்கிறார். அவருக்குக் கொடுக்கப்படும் நிவாரணம் அவரின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: கோபியின் உடலை தெருவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, காய்ந்த ஆல மர இலைகளை கொண்டு குடும்ப உறுப்பினர்கள் தீ மூட்டுகின்றனர். வலது: சடங்கின் ஒரு பகுதியாக அவர்கள் பூக்களை தரையில் வைக்கின்றனர்

PHOTO • M. Palani Kumar

இடது: கோபியின் உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்படுகிறது. மலக்குழியில் இறங்குவதை தடை செய்யும் சட்டம் 2013ம் ஆண்டு வந்த பிறகும் கூட, அந்த வேலை தொடர்கிறது. மலக்குழிகளுக்குள் இறங்கும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சொல்லும் ஊழியர்கள், மறுத்தால் ஊதியத்தை கொடுக்க முடியாதென அதிகாரிகள் மிரட்டுவதாகவும் சொல்கின்றனர்

PHOTO • M. Palani Kumar

கோபியின் உடலை கொண்டு செல்ல விடாமல் பிடித்திருக்கும் தீபா அக்கா

முக்கியமாக பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  விழுப்புரத்தின் மாதம்பட்டு கிராமத்தில் நடந்த மலக்குழி மரணத்தின் போது அனுஷியா அக்காவின் கணவர் மாரி மலக்குழியில் இறந்தபோது, அவரால் கத்தி அழக் கூட முடியவில்லை. அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருந்தன. முதல் இரண்டு குழந்தைகளும் அங்கு நடப்பவை புரிந்து கத்தி அழுதன. ஆனால் மூன்றாவது குழந்தை, அங்கு நடப்பவை அறியாமல் அந்த இடத்தையும் தன் அப்பாவின் உடலையும் சுற்றி சுற்றி வந்தது.

அரசு நிவாரணத் தொகையை பத்தி அனுஷியா அக்காவுக்கு ஒரு தயக்கம் இருக்கு. “இந்தப் பணத்தை எங்களால் செலவு பண்ணவே முடியல. இது எங்களுக்கு உளவியலா சிக்கலை ஏற்படுத்துது. இந்த காச செலவு பண்றது என் கணவரோட ரத்தத்தை குடிக்கிற மாதிரி இருக்கு,” அப்படின்னு சொல்றாங்க..

அதன்பிறகு நான் கரூரில் மலக்குழியில் இறந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தை சந்திச்சேன். பாலகிருஷ்ணன் மனைவி உளவியலா பாதிக்கப்பட்டிருந்தாங்க. எப்படினா வேலை பார்த்து கொண்டு இருக்கும் போதே அப்படியே நின்னுடுவாங்களாம். கொஞ்ச நேரத்துக்கு பிறகுதான் அவங்களோட நிலை அவங்களுக்கு தெரிய வருமாம்.

ஒரு இறப்புக்குப் பிறகு வாழ்க்கை மிக கொடூரமானதாக மாறிடுது. இந்த இறப்புகள் எல்லாமே அனைவரும் தினமும் கடந்து போற செய்தியா தான் பார்க்கப்படுது.

PHOTO • M. Palani Kumar

விழுப்புரம் மாதம்பட்டு கிராமத்தில் மலக்குழியில் மாரி இறந்தபோது அவரின் மனைவி அனுசியா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்

PHOTO • M. Palani Kumar

மாரியின் உடல் வீட்டிலிருந்து அவரது சமூகத்தினருக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது

2023 செப்டம்பர் 11 அன்று ஆவடியில் மோசஸ் என்ற துப்புரவு பணியாளர் இறந்து போறாரு. அங்கிருக்கும் மொத்த வீடுகளில் அவரது வீடு மட்டுமே குடிசை வீடு. அவரின் இரண்டு பெண் குழந்தைகளுக்குமே விபரம் தெரிந்திருந்தது. அவர்களால் நடப்பதை புரிந்து கொள்ளவும் முடிந்தது. மோசஸ்ஸின் உடல் வருவதற்கு முன்பே நான் அங்கு சென்று விட்டேன். அந்த இரு குழந்தைகளும் “Dad loves me” மற்றும் “Dad’s little princess” என்று எழுதப்பட்டிருந்த டி ஷர்ட்களை அணிந்திருந்தார்கள். தற்செயலா அப்படி போட்டுருந்தாங்களா, இல்ல அந்த நாளுக்காக போட்டிருந்தாங்களான்னு தெரியல.

அன்றைய நாள் முழுவதும் அந்த குழந்தைகள் அவ்வளவு அழுதாங்க.

என்னோட புகைப்படம் மூலமாக அந்த இழப்புகளை நிறைய இடங்களில் கொண்டு போய் சேர்த்தாலும், இவை இன்னும் கண்டுகொள்ளாத நிலையில் தான் உள்ளது.  வெறும் செய்திகளாக, அவற்றை இயல்பாக கடந்து போகும் மனநிலை தான் எல்லோருக்கும் இருக்கிறது.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: ஆவடியின் பீமா நகரில் இன்னொரு இறுதி அஞ்சலி நிகழ்வில், கலங்கிப் போயிருக்கும் மோசஸின் குடும்பம் அவரது உடலின் மீது பூக்கள் வைக்கிறது. வலது: அவரின் உடலின் முன் குடும்பம் பிரார்த்திக்கிறது

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: மோசஸின் உடலில் நாற்றம் வரத் தொடங்கியதும், உடலை கொண்டு போக கூட்டம் செயலாற்றியது. வலது: ஆவடி மோசஸின் வீடு

ஸ்ரீபெரும்புதூரின் காஞ்சிபட்டு பக்கத்துல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, துப்புரவு தொழிலாளர்கள் மூன்று பேர் இறந்தனர். திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆன 25 வயது நவீன் குமார், திருமணமாகி மூன்று மாதங்கள் ஆன 20 வயது திருமலை, இரண்டு குழந்தைகளின் தந்தையான 50 வயது ரங்கநாதன் ஆகியோர் இறந்துள்ளனர். மலக்குழி மரணங்கள் நிகழ்வதால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கல்யாணம் ஆகி இரண்டு மாதம் தான் இருக்கும், மூன்று மாதம் தான் இருக்கும், கைக்குழந்தை இப்போதுதான் பிறந்திருக்கும், கர்ப்பிணியாக இருப்பாங்க. அப்போ கணவரை இழப்பது என்பது மிகப்பெரிய கஷ்டம். கணவர் இறந்த கொஞ்ச மாதங்கள்ல முத்துலஷ்மிக்கு வளைகாப்பு நடத்துனாங்க.

மலக்குழி வேலை சட்டவிரோதமான வேலை. ஆனாலும் மலக்குழி மரணங்களை குறைக்க முடியலை. இந்தப் பிரச்சினைய என்ன செய்றதுன்னும் எனக்கு தெரியலை. என் எழுத்து, புகைப்படங்கள் வழியா இந்த கொடுமையான வேலைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்னு நம்பறேன்.

இந்த ஒவ்வொரு மரணமும் என்னை கடுமையாக பாதிக்கிறது. இந்த மாதிரி மரண வீடுகள்ல அழுவது சரியான்னு எனக்கே நான் கேட்டுப்பேன். தொழிலுக்காக துயரம் கொள்வதுன்னு ஒண்ணும் இல்லை. எல்லாமே நம்மை சார்ந்த விஷயம்தான். குறிப்பா, இந்த மரணங்களாலதான் நான் புகைப்படக் கலைஞனாவே ஆனேன். இன்னொரு மலக்குழி மரணம் நடக்காம இருக்க நான் என்ன செய்யணும்? நாம எல்லாம் என்ன செய்யணும்?

PHOTO • M. Palani Kumar

ஆகஸ்ட் 2, 2019 அன்று சென்னை புளியந்தோப்பில் மலக்குழியில் மோசஸ் உயிரிழந்தார். அவரது மனைவி மேரி நீல நிறப் புடவையில்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: ரங்கநாதனின் வீட்டில், அவரது உறவினர்கள் சடங்கின் ஒரு பகுதியாக அரிசியை விநியோகித்தார்கள். ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே இருக்கும் காஞ்சி பட்டு கிராமத்தில் 2022ம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன், செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும்போது ரங்கநாதனும் நவீன் குமாரும் உயிரிழந்தனர். வலது: ஸ்ரீபெரும்புதூரில் மூன்று பேர் செப்டிங் டேங்க் சுத்தப்படுத்தும் போது இறந்ததால், இடுகாடு பிஸியாக இருந்தது

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: அக்டோபர் 2024-ல் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் ஊதிய முறைப்படுத்துதல் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார நோக்கம் (DAY-NULM) திட்டத்தின் கீழ் அவர்கள் வேலை பார்க்கின்றனர். நிரந்தர வேலைகளுக்காகவும் ஊதிய உயர்வுக்காகவும் இடது தொழிற்சங்க மைய (LTUC) உறுப்பினர்கள் போராடுகின்றனர். வலது: 5,6 மற்றும் 7 மண்டலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து போராடி, காவல்துறையால் தடுக்கப்பட்டனர்

M. Palani Kumar

एम. पलनी कुमार २०१९ सालचे पारी फेलो आणि वंचितांचं जिणं टिपणारे छायाचित्रकार आहेत. तमिळ नाडूतील हाताने मैला साफ करणाऱ्या कामगारांवरील 'काकूस' या दिव्या भारती दिग्दर्शित चित्रपटाचं छायांकन त्यांनी केलं आहे.

यांचे इतर लिखाण M. Palani Kumar
Editor : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan