மோன்பா மண விழாக்களில் கார்ச்சுங் பாடும்போது, சமைத்த ஆட்டுக்கறியை சன்மானமாக பெறுகிறார். அவரின் இசை, மண விழாவின் மதிப்பை கூட்டுவதாக சொல்லப்படுகிறது. மணமகளின் குடும்பம்தான் அவரை அழைக்கிறது.
மோன்பா சமூகத்தை சேர்ந்த இருவர், திருமணத்துக்கு ஒப்புக் கொண்ட பின், இருநாள் சடங்குகள் தொடங்கும். மணமகன் பெண் வீட்டுக்கு செல்வார். அங்கு அர மதுபானம் குடிக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மணத்தை உறுதி செய்வார்கள். பிறகு ஒரு பெருவிருந்தில் நடனமாடுவார்கள். இங்குதான் கார்ச்சுங் எந்த இசைக்கருவியும் இன்றி பாடுவார். அடுத்த நாள், மணமகன் தன் வீட்டுக்கு பெண்ணுடன் திரும்புவார்.
கார்ச்சுங்கின் இயற்பெயர் ரிஞ்சின் டாஷி. கார்ச்சுங் அவரின் புனைபெயர். அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமேங் மாவட்ட சங்க்பா சாலையில் ஒரு சிறு மளிகைக் கடையை அவர் நடத்துகிறார். அவர் வேலை செய்யும்போது பின்னணியில் பிடித்த இசையை ரேடியோவில் ஒலிக்க விடுவது, இசை மீதான அவரது ஆர்வத்தை காட்டுகிறது. அர பற்றியும் கார்ச்சுங் பாடுவார். “விவசாயம் செய்யும்போதும் நண்பர்களுடன் பேசும்போதும் பாடுவேன்,” என்கிறார்.
53 வயதாகும் அவர், மனைவி பெம் ஜோம்பாவுடன் வாழ்கிறார். மனைவிதான் குடும்பத்துக்கு ‘தலைவி’ என்கிறார் அவர். குடும்பத்துக்கு இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில் பெம்தான் விவசாயம் பார்க்கிறார். “நெல், சோளம், கத்திரிக்காய், கடுகுக் கீரை, வெங்காயம், காலிஃபிளவர் போன்றவற்றை விளைவிக்கிறோம்,” என்கிறார் அவர். பெரும்பாலான நெல், தானியம், காய்கறி ஆகியவற்றை சொந்த பயன்பாட்டுக்காக குடும்பம் பயன்படுத்திக் கொள்கிறது. சில நேரங்களில் அதிகமாக இருக்கும் விளைச்சலை, திராங் ஒன்றியத்தின் ரமா முகாமிலுள்ள வாரச் சந்தையில் விற்கிறார்கள்.
தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள். இரு மகள்கள், மூன்று மகன்கள். இரு மகள்களான ரிஞ்சின் வாங்மு மற்றும் சாங் ட்ரெமா ஆகியோருக்கு திருமணம் முடிந்து விட்டது. அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு வருவார்கள். மூத்த மகனான பெம் டோண்டுப் மும்பையில் வாழ்கிறார். ஹோட்டலில் செஃப்ஃபாக பணிபுரியும் அவர், இரு வருடங்களுக்கு ஒருமுறை வந்து செல்கிறார். இரண்டாவது மகனான லெய்கி கண்டு இசைஞராக இருக்கிறார். அப்பகுதியின் நிலைத்து நீடிக்கும் சுற்றுலா திட்டத்தின் அங்கமாக இருக்கிறார். திராங் டவுனில் அவரது தம்பி நிம் டாஷி பணிபுரிகிறார்.
மோன்பா சமூகத்தின் பூர்விகம் திபெத் ஆகும். பெளத்தர்களாக உள்ள பலரும் மர வேலை, நெசவு, ஓவியம் போன்ற வேலைகளில் சிறந்து விளங்குகின்றனர். 2013ம் ஆண்டின் அரசாங்க அறிக்கை யின்படி 43,709 பேர் இருக்கின்றனர்.
கார்ச்சுங் இசைஞர் மட்டுமல்ல. நேரம் கிடைக்கும்போது மேள வாத்தியங்கள் செய்கிறார். “ஒரு மேளம் (உள்ளூரில் சில்லிங் என அழைக்கப்படுகிறது) 10,000 ரூபாய். வேலைகளில்லா நேரத்தில், நான் எனக்கான மேளத்தை செய்வதுண்டு,” என்கிறார் அவர்.
அவரை பாடச் சொன்னதும், கடைக்கு பின் விளையும் காய்கறி மற்றும் சோளம் ஆகியவற்றின் நடுவே அமர்ந்து பாடுகிறார். இந்த வாய்மொழிப் பாடல்கள் தலைமுறைகள் கடந்து கையளிக்கப்பட்டவை. திபெத்திய மூல வார்த்தைகளை சில பாடலக்ள் கொண்டிருக்கின்றன. அவற்றின் அர்த்தத்தை நமக்கு விளக்க அவர் சிரமப்படுகிறார்.
மோன்பா மணவிழா பாடல்:
மசாங்கே போமோ ரோக்சாங் மோ
ரிசாங்கே போமோ ஜன்சாங்மு
லோன்போ ங்காலே யோவே தாதர் டே
துயிசாங் நகா நாங்கே தாதர்
சுக்சோ சகே நே
கெபா உம்சே செங்கே துங்வே
நுங்மா சிசுமா டெனே நே
சாரி லங்கோ நுங்மா
கோலா கார்வே க்ரோனே நே
தங்கார் கெபோய் க்ரோ யின்
கோலா கார்வே பும்பா நே
யேஷி காண்டோ மே க்ரு யின்
சுன் டாங்கா சுகி ஜாமோ யின்
டிரிங் லோன்போ ங்கலாங் ஜாமோ யின்
தோராயமான மொழிபெயர்ப்பு:
அழகான நல்ல தாயின் மகள்
அவளின் கண்கள் தங்கம் போன்றவை
பெண்
அழகாக ஆடை உடுத்தியிருந்தாள்
அனைவருக்கும் பெண்ணை பிடித்தது
பெண் உடுத்தியிருக்கும் தாதர்*
அவளை அழகாக்கியிருந்தது.
தாதர்
மீதான உலோகம் கடவுளால் செய்யப்பட்டது
அந்த ஆபரணத்தை அவள் அணிந்திருக்கிறாள்
தாதருக்கான மூங்கில்
லாசாவிலிருந்து (திபெத்) கொண்டு வரப்பட்டது
தாதரிலுள்ள
கல்
யஷி கந்த்ரோமாவின் பாலில் எடுக்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும்
உச்சம்
துங் துங் கர்மோ**
*தாதர் என்பது சம்பிரதாய அம்பு. வாழ்க்கைக்கான சக்திகள், நீண்ட ஆயுள், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் ஆகியவற்றை வேண்டும் ஒரு சடங்குரீதியிலான அம்பான தாதரை காட்டுகிறார். ஐம்பூதங்களை பிரதிபலிக்கவென வண்ண ரிப்பன்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. சடங்குகளிலும் பெளத்த கோவில்களிலும் ததார் அம்பு வலப்பக்கமாக திருப்பப்படும்
**துங் துங் கர்மோ அல்லது கறுங்கழுத்து நாரையின் இறகு. பெரும் உயரங்களில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் இமாலயப் பறவை அது
தமிழில் : ராஜசங்கீதன்