அவர் ஒரு வேட்டைக்காரர், விவசாயி, கூடை முடைபவர், உள்ளூர் கவுன்சிலின் தலைவராக இருந்துள்ளார். மாகோ லிங்கி தற்பெருமை பேசவில்லை. அருணாச்சல பிரதேசத்தின் இடு மிஷ்மி பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த முதியவர் தனது வாழ்க்கையை அப்படித்தான் வாழ்ந்துள்ளார்.
அவரது தலைமுறையின் பெரும்பாலான உறுப்பினர்களைப் போலவே, அவரும் இந்தியாவின் கிழக்குக் கோடியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூர பகுதிகளில் உயிர்வாழ பல திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
"நாங்கள் கிராமத்தில் எதையும் வாங்கவில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. எல்லாவற்றையும் நாங்களே உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் விவசாயம் செய்தோம், வேட்டையாடினோம், பொருட்களை உருவாக்கினோம்", என்று இப்போது 60 வயதை கடந்துள்ள லிங்கி கூறுகிறார். பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது கைகள் ஒரு புதிய கூடையை முடைவதில் மும்முரமாக இருந்தன.
இடு மிஷ்மி சமூகம் அருணாச்சல பிரதேசம் முழுவதும் பரவியுள்ளது. சில குக்கிராமங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அனினி வட்டத்திற்கு அருகிலுள்ள திபாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அஹுன்லியைச் சேர்ந்தவர் லிங்கி.
அவரால் தனது தாவோ (கத்தி), கை, கால்களை மட்டுமே பயன்படுத்தி பல்வேறு கூடைகளை உருவாக்க முடியும். வேறு கருவிகள் தேவையில்லை. "இடு சமூகத்தினர் பயன்படுத்தும் சுமார் ஒரு டஜன் வகையான கூடைகள் உள்ளன," என்று அவர் விளக்குகிறார். "ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக ஒரு குறிப்பிட்ட வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன - உணவை எடுத்துச் செல்ல, விறகு எடுத்துச் செல்ல, அல்லது வேட்டையாட. ஒவ்வொரு கூடைக்கும் வெவ்வேறு வகையான மூங்கில் மற்றும் பிரம்புகளைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் காட்டுக்குச் சென்று, மூங்கில் அல்லது பிரம்பை வெட்டி, வீட்டிற்கு கொண்டு வந்து, அதை மெல்லிய கீற்றுகளாக கிழித்து, பின்னர் கூடையில் வேலை செய்யத் தொடங்குவோம்," என்று அவர் கூறுகிறார். சில கூடைகள் சில மணிநேரங்களில் தயாரிக்கப்படுகின்றன. சில வகைக்கு சில நாட்களும், மற்றவை வாரங்களும் கூட ஆகலாம்.
"ஒவ்வொரு இடுவும் [இன்னும் கிராமத்தில் வசிக்கும்] கூடைகள், தரைக்கு பாய்கள், தலைக்கவசம், அம்புகள் மற்றும் பலவற்றை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்," என்று இடு மிஷ்மி மற்றும் ரோயிங் ஜோமிண்ட் டேயெண்ட் அரசு மாதிரி பட்டப்படிப்பு கல்லூரியின் இணை பேராசிரியரும், அருணாச்சல பிரதேசத்தின் இன-வரலாற்று அம்சங்களில் முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர் ராஜீவ் மிசோ கூறுகிறார். "உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பயனுள்ளவை - பெரும்பாலும் குடும்ப பயன்பாட்டிற்காகவும், பிற தேவைகளுக்காக பண்டமாற்றுக்காகவும். சமூகத்தின் சில உறுப்பினர்கள் அறிவின் பாதுகாவலர்கள். உதாரணமாக, ஒரு வீட்டைக் கட்டுவதற்கான அளவீடுகளைச் செய்யும்போது அவர்களின் நிபுணத்துவம் கோரப்படுகிறது. அவர்களின் சேவைகள் தன்னார்வமானவை. எந்த பலனையும் எதிர்பார்ப்பது இல்லை."
இடு மிஷ்மிகள் தங்கள் சூழலுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். வேட்டைக்குப் பிறகு அவர்களின் தவ முறை சிக்கலானது. கடினமான, தொலைதூர சூழ்நிலைகளில் வாழ்வது அவர்களின் பல சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை வடிவமைத்துள்ளது - அவர்கள் வேட்டையாடும் விலங்குகளின் வகை, அவர்கள் கட்டும் வீடுகளின் பாணி, அவர்கள் பயன்படுத்தும் மூங்கில். இது அவர்களின் சமூக உணர்வையும் வலுப்படுத்தியுள்ளது. "இடு சமூகத்தில் உறவுகள் மிக முக்கியம்" என்று லிங்கி கூறுகிறார். "நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள், விஷயங்களை நாமே செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு காவல்துறை போன்ற எதுவும் இல்லை; எங்களுக்கு ஒருபோதும் அவை தேவைப்பட்டதில்லை."
இடு சமூகத்தின் ஒரு மரியாதைக்குரிய மூப்பராக, லிங்கி பெரும்பாலும் நாபா (தந்தை) என்று குறிப்பிடப்படுகிறார்; அவர் தனது கிராம பஞ்சாயத்தில் (உள்ளாட்சி அரசாங்கம்) 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். 1993 ஆம் ஆண்டில் ஜில்லா பரிஷத்தின் அஞ்சல் சமிதியில் (மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு) பதவி வகித்தார். "நான் எங்கள் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினேன். அஹுன்லியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எங்களால் முடிந்ததைச் செய்தோம். ஆனால் மாநில அரசு எங்களுக்கு உண்மையான அதிகாரத்தையோ,சிறந்த சாலைகள், பள்ளிகளை உருவாக்க எந்த நிதியையோ வழங்கவில்லை. எங்களுக்கு கிடைத்ததெல்லாம் ரூ.1 லட்சம். அதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? நாமே சிறந்த சாலைகளை உருவாக்க முடியும்," என்றார். அவர் தனது தலையை அசைக்கிறார். "எங்களால் ஒரு பாடசாலையை கட்ட முடிந்த போதும் கூட அது மண்சரிவில் அழிந்துவிட்டது."
ஒரு 'கலை' என்பதால் தான், மக்கள் இப்போதும் கைவினையைக் கற்றுக்கொள்கிறார்கள், என்று லிங்கி கருதுகிறார். 'இது கலை அல்ல. வாழ்க்கை'
தனது நிர்வாகப் பணிகளுடன், லிங்கி 10 - 15 ஏக்கர் மலைப்பகுதியில் பரந்து விரிந்திருக்கும் தனது நிலத்தில் அரிசி, சோளம் மற்றும் பருப்பு வகைகளையும் பயிரிட்டார். வேட்டையாடுதலையும் அவர் செய்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்பு நிகழ்ந்த புலி தாக்குதலில் கூட அவர் உயிர் பிழைத்தார். லிங்கி நினைவுகூர்ந்து சிரிக்கிறார்: "எனது உறவினர் ஒரு புலியால் தாக்கப்பட்டார். அப்போது அவரை காப்பாற்ற காட்டுக்குள் செல்லுமாறு என்னிடம் குடும்பத்தினர் கோரினர் [ இங்குள்ள புலிகள் மற்றவைப் போன்று கிடையாது]. நான் காட்டுக்குள் சென்றபோது, அதே புலி என் மீதும் பாய்ந்து, என்னை நகங்களால் கீறியது. ஆனால் என்னால் அதை சுட்டுக் கொல்ல முடிந்தது... எனக்கு ரொம்ப பயமாக இருந்தது."
கூடையின் பாதியிலேயே லிங்கி அதை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் தொடங்க முடிவு செய்கிறார். "இதோ பார், இந்த முடைதல் இறுக்கமாக இல்லை. உடைந்து போயிருக்கும்," என்று புன்னகைக்கிறார். அவர் சிந்தனையுடன், "நான் என் நேரத்தையும் மற்றவர்களுக்காக கொடுத்தேன், இறுதியில் தோற்றுவிட்டேன். மற்றவர்கள் பணம் சம்பாதிப்பதில் தங்கள் நேரத்தை செலவிட்டனர். எல்லோரிடமும் பணம் இருக்கிறது. ஆனால் என்னிடம் இல்லை," என்கிறார்.
பணத்திற்கான ஆசை அல்லது தேவை காரணமாக பல இடு மிஷ்மிகள் தங்கள் பண்ணைகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேறியுள்ளனர். கூடை முடைதல் போன்ற மரபுகள் மெதுவாக அரசு வேலைகள் அல்லது அலுவலக வேலைகளைப் பெற உதவும் திறன்களால் மாற்றப்படுகின்றன. பலர் வேலை தேடி கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அருணாச்சலத்தை விட்டும் வெளியேறியுள்ளனர். மாநிலத்தின் தொலைதூர கிராமங்களுக்குள் அதிகமான சாலைகள் மற்றும் பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது இயக்கத்தை எளிதாக்குகிறது. கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
காலப்போக்கில், இடு மிஷ்மிகளின் மக்கள்தொகையும் குறைந்து வருகிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10,000 இடு மிஷ்மிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியினருக்கான தனி மக்கள் தொகை எண்ணிக்கை பட்டியலிடப்படவில்லை). "பழங்குடியினருக்குள் உள்ள கதை என்னவென்றால், எங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது" என்று டாக்டர் மிசோ கூறுகிறார். "குடும்பங்களில் 6-7 குழந்தைகள் இருந்தனர். இப்போது அவர்களுக்கு 2-3 குழந்தைகள் மட்டுமே உள்ளனர் - எனவே மொழி மற்றும் கலாச்சாரத்தில் தாக்கத்தை நாம் காணலாம்."
மாகோ லிங்கின் மகனும், மகளும் கூட வெளியேறிவிட்டனர்; அவர்கள் அஹுன்லியில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோயிங் நகரில் தங்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். சாலை வழியாக 12 மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில் லிங்கி அடிக்கடி ரோயிங்கிற்கு வருகை தருகிறார்.
அவரது குடும்பத்தில் யாரும் இப்போது கூடை முடைவதைக் கற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் அது உயிர்வாழ்வதற்கு அவசியமில்லை. இந்த நாட்களில் கலை என்று கருதி தான் மக்கள் கைவினையைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது லிங்கியின் அசாதாரணக் கருத்து. "இடு குடும்பங்கள் ஒற்றை கைவினைத் தொழிலோடு நிற்பதில்லை. இடுக்கள் அனைவரும் கைவினைஞர்கள். நீங்களும் கூட. இப்போதுதான் நம் பிள்ளைகள் ஏதாவது ஒரு கைத்தொழிலைத் தேடுகிறார்கள். எதுவும் கிடைப்பதில்லை. இது கலை அல்ல. இதுதான் வாழ்க்கை."
லிங்கி குடும்பம், தேவராஜ் சாலிஹா மற்றும் Further and Beyond அறக்கட்டளைக்கு கட்டுரை ஆசிரியர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.
தமிழில்: சவிதா