"நாம் இப்படித்தான் கஷ்டப்படறோம், நம்ம குழந்தைகளும் இப்படி கஷ்டப்படணுமா? நாம் ஓரளவு சம்பாதித்தால் நம் குழந்தைகள் பயனடையலாம். ஆனால் இப்போது, எங்கள் வயிற்றை எவ்வாறு நிரப்புவது என்று எனக்குப் புரியவில்லை" என்று தேவிதாஸ் பெண்ட்குலே கூறுகிறார்.
மார்ச் 11 அன்று, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 40,000 விவசாயிகள் மும்பைக்குள் நுழைந்தனர். நாசிக்கில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரம் 6 நாட்களுக்கு நடந்தே சென்றுள்ளனர். அவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பேரணியைத் தொடர்ந்தனர். கடைசி 15-20 கிலோமீட்டர் தூரத்தை மௌனத்திலும், இருளிலும் நடந்து, இறுதியாக நகரின் தெற்கில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஒன்றுகூடி, கடன் தள்ளுபடி, தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் உள்ளிட்டவற்றை முன்வைத்து அரசு தங்களுக்கு துரோகம் செய்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பாரி போட்காஸ்ட்களின் எங்கள் முதல் அத்தியாயத்தில், இந்த அணிவகுப்பில் அரசு தங்களை மீண்டும் மீண்டும் கைவிட்டதால் கோபத்தில் உள்ள பென்ட்குலே போன்ற விவசாயிகளுடன் நாங்கள் பேசியிருக்கிறோம். அவர்கள் தங்கள் போராட்டங்கள், அவசர கோரிக்கைகள் மற்றும் எங்களிடம் உள்ள நம்பிக்கைகள் குறித்து பேசினர்.
இந்த போராட்டம் ஏன் ஆயிரக்கணக்கானோரை நெடுஞ்சாலைகளுக்கும், தெருக்களுக்கும் கொண்டு வந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் நமது நிறுவன ஆசிரியரும், கிராமப்புற விவகார செய்தியாளருமான பி.சாய்நாத். மும்பையில் மிகவும் ஒழுக்கமான முறையில் நடைபெற்ற அணிவகுப்பு, நகர்ப்புற தொழிலாள வர்க்கம், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடமும் எவ்வாறு ஈர்ப்பை ஏற்படுத்தின என்பதைப் பற்றி அவர் பேசுகிறார். இறுதியாக, இந்த நிகழ்வு ஏன் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதையும் விவரிக்கிறார்.
மார்ச் 12 அன்று விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர அரசு ஏற்றுக்கொண்டாலும், அவற்றில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை.
ஆனால் இது போன்ற அமைதியான போராட்டங்கள் முக்கியம். ஏழைகளின் குரல்களும் கேட்கப்படுகின்றன. இந்த அத்தியாயத்திலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையிலும், சாய்நாத் ஒரு மிகப் பெரிய, ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அத்துடன் விவசாய நெருக்கடி மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட மூன்று வார அல்லது 21 நாள் சிறப்பு அமர்வை நாடாளுமன்றம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம்.
களத்தில் பல விவசாயிகளுடன் பேசி அவர்களின் போராட்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புகைப்படக் கலைஞரும், செய்தியாளருமான சர்தக் சந்த், பேரணி குறித்த கட்டுரைகளுக்காக பாரியின் மானியப் பணியாளர் பார்த் எம்.என் மற்றும் இந்த அத்தியாயத்தை உருவாக்க எங்களுக்கு உதவிய ஹிமான்ஷு சைக்கியா, சித்தார்த் அடெல்கர், ஆதித்யா தீபங்கர் மற்றும் கவுரவ் சர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
தமிழில்: சவிதா