"முதல் நாள், மஜிதான் என் கையை இப்படி அடித்தார்," என்று 65 வயதான கர்சாத் பேகம், அந்த தருணத்தை விளையாட்டாக நடித்துக் காட்டுகிறார். அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் மஜிதான் பேகம், அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்து, என்று தனது செயல்களை நியாயப்படுத்துகிறார். "ஆரம்பத்தில் நூல்களுடன் எவ்வாறு வேலை செய்வது என்று கர்சாத்திற்கு தெரியாது. நான் அவளை ஒரே ஒரு முறை அடித்தேன்," என்று கூறும் அவர், "பின்னர் அவள் விரைவாக கற்றுக்கொண்டாள்," என்கிறார்.

பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தின் கண்டா பானா கிராமத்தில், மஜிதான் மற்றும் கர்சாத் ஆகிய வயதான பெண்கள் இருவரும் பருத்தி, சணல் மற்றும் பழைய துணிகளிலிருந்து கூட கண்கவர் துர்ரிகள் [கம்பள  விரிப்புகளுக்கு] நெசவு செய்வதில் நன்கு அறியப்பட்டவர்கள்.

"35 வயதில் மஜிதானிடம் இருந்து துர்ரிகளை நெசவு செய்வது எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன்," என்கிறார் கர்சாத். "அப்போதிருந்து, நாங்கள் ஒன்றாக விரிப்புகளை நெசவு செய்து வருகிறோம்," என்கிறார் 71 வயதான மஜிதான். "இது ஒருவர் செய்யும் வேலை கிடையாது, இருவர் தேவை."

இரண்டு சகோதரர்களை திருமணம் செய்து கொண்டதால், இருவரும்  சகோதரிகள் எனும் உறவு முறையில் குறிப்பிடப்படுகிறார்கள். "நாங்கள் உண்மையான சகோதரிகளை போலவே உணர்கிறோம்," என்கிறார் கர்சாத். மஜிதான் சட்டென்று, "எங்கள் இயல்புகள் முற்றிலும் எதிரானவை என்றாலும்." அதற்கு கர்சாத் உடனடியாக பதிலளிக்கிறார், "அவள் வெளிப்படையாக இருப்பவள். நான் அமைதியானவள்," என்கிறார்.

மஜிதானும், கர்சாத்தும் நெசவு வேலையில் மணிக்கணக்கில் செலவழித்தாலும், தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாதத்திற்கு சில ஆயிரம் ரூபாய்க்கு வீடுகளில் பணிப்பெண்களாகவும் வேலை செய்கிறார்கள். குறிப்பாக இந்த வயோதிகத்தில் இரண்டுமே உடல் உழைப்புக் கொண்ட வேலைகள்.

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

பதிண்டாவின் கண்டா பானா கிராமத்தில் மஜிதான் பேகம் (இடது) மற்றும் அவரது மைத்துனி கர்சாத் பேகம் (வலது) ஆகியோர் பருத்தி, சணல் மற்றும் பழைய துணிகளிலிருந்து கூட விரிவான, கண்கவர் விரிப்புகளை நெய்வதற்கு நன்கு அறியப்பட்டவர்கள். '35 வயதில் மஜிதானிடம் விரிப்புகள் நெய்வதை கற்றுக்கொண்டேன்' என்கிறார் 65 வயதாகும் கர்சாத். "அப்போதிலிருந்து, நாங்கள் ஒன்றாக துர்ரி நெசவு செய்து வருகிறோம்," என்கிறார் 71 வயதான மஜிதான். 'இது ஒருவருக்கான வேலை அல்ல, இருவருக்கானது'

ஈத் கால ஈரப்பதமான காலையில், கண்டா பானாவின் குறுகிய பாதைகளில் கர்சாத்தின் வீட்டை நோக்கி செல்கிறார் மஜிதான். "இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடும் என்னை திறந்த கதவுகளுடன் வரவேற்கும்," என்று அவர் பெருமையுடன் கூறுகிறார். "இத்தனை வருஷமா நான் எவ்ளோ வேலை செஞ்சிருக்கேன்."

அக்கிராமத்தை தாண்டியும் அவர்களின் புகழ் பரவியுள்ளது. தொலைதூரங்களிலிருந்து விரிப்புகளை கேட்டு மக்கள் ஆட்களை மஜிதானிடம் அனுப்புகின்றனர். "ஆனால் ஃபுல், தபாலி மற்றும் ராம்பூர் ஃபுல் போன்ற நகரங்கள்  அல்லது கிராமங்களில் நெசவுக்காக என்னை நன்கு அறிந்தவர்கள், நேரடியாக வீட்டிற்கே வருகிறார்கள்," என்று மஜிதான் கூறுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு (ஏப்ரல் 2024) பாரி அவர்களை சந்தித்தபோது, இரண்டு கைவினைஞர்களும் கண்டா பாணாவில் வசிக்கும் ஒருவருக்காக ஃபுல்காரி துர்ரி எனப்படும் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட விரிப்பை நெய்து கொண்டிருந்தனர். விரைவில் திருமணமாக உள்ள தங்கள் மகளுக்கு கம்பளத்தை பரிசளிக்க குடும்பத்தினர் விரும்பினர்.  "இந்த துர்ரி அவளது தாஜ் [திருமண அலங்காரத்திற்கானது]," என்று மஜிதான் கூறினார்.

வாடிக்கையாளர் வழங்கிய இரண்டு வெவ்வேறு வண்ண நூல்களின் கலவைகளைப் பயன்படுத்தி பூக்கள் உருவாக்கப்பட்டன. "ஒரு மலர் வடிவத்தை நெசவு செய்யும் போது, இடையில் பல்வேறு வண்ண  நூல்களை இணைக்கிறோம்," என்று மஜிதான் விளக்குகிறார், ஒரு மஞ்சள் வெஃப்ட் (கிடைமட்ட) நூலை கடந்து செல்ல 10 வெள்ளை நூல்களை (செங்குத்து) உயர்த்தி, பின்னர் நீல நிறத்திற்கான செயல்முறையை மீண்டும் செய்கிறார். இடைவெளி விட்டு அவர் மீண்டும் இச்செயல்முறையை தொடர்கிறார். இந்த செயல்முறைகளில் ஒரு பச்சை மற்றும் கருப்பு பூவை அவர் உருவாக்குகிறார்.

"பூக்கள் முடிந்ததும், சிவப்பு வெஃப்ட் நூல்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு அடி விரிப்பை நெசவு செய்வோம்," என்று மஜிதான் கூறுகிறார். துணியை அளவிட டேப் பயன்படுத்தாமல், மஜிதான் தனது கைகளைப் பயன்படுத்துகிறார். இருவருமே பள்ளிக்குச் செல்லாததால்  ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான் அளக்கின்றனர்.

இருவரும் ஹத்தாக்களைப் [சீப்பு நாணல்கள்] பயன்படுத்தி நெசவு நூல்களை சரியான இடத்தில் தள்ளும்போது, மஜிதான் மீண்டும் குறிப்பிடுகிறார், "வடிவமைப்பு அனைத்தும் என் தலையில் உள்ளது," என. இதுவரை அவர் நெய்த துர்ரிகளில், ஒன்று மயிலுடனும், மற்றொன்று 12 பரியான்களுடனும் [தேவதைகள்] நெய்ததைப் பற்றி அவர் பெருமைப்படுகிறார். இவை அவரது இரு மகள்களுக்கும் அவர்களின் தாஜுக்காக வழங்கப்பட்டன.

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

மஜிதான் ஒரு ஃபுல்காரி துர்ரி எனப்படும் பூ வேலைப்பாடு கொண்ட கம்பளத்தை ஒரு வாடிக்கையாளருக்காக நெசவு செய்கிறார். 'ஒரு மலர் வடிவத்தை நெசவு செய்யும்போது, இடையில் பல்வேறு வண்ண நெசவு நூல்களை இணைக்கிறோம்,' என்று மஜிதான் விளக்குகிறார். 10 வெள்ளை வார்ப் (செங்குத்து) நூல்களை எடுத்து ஒரு மஞ்சள் நெசவு (கிடைமட்ட) நூலைக் கடந்து, பின்னர் நீல நிறத்திற்கான செயல்முறையை மீண்டும் செய்கிறார்

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இடது: இரண்டு கைவினைப் பெண்களும் ஹத்தாக்களைப் [சீப்பு நாணல்] பயன்படுத்தி நூல்களை நெய்வதற்கு தள்ளுகிறார்கள். வலது: மஜிதான் சிவப்பு நூலை ஒரு மரக் குச்சியில் முறுக்குகிறார், அதை அவர் நெசவு நூலாகப் பயன்படுத்துவார். கர்சாத் தனது பேத்தி மன்னத்துடன் 10 அடி உலோக சட்டத்தில் வேலை செய்கிறார். அங்கு அவர்கள் விரிப்புகளை நெசவு செய்வார்கள்

*****

மஜிதானின் பக்கா வீட்டில், அவர்களின் பணிமனை மிக கவனமாக  வடிவமைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. பணிமனை அமைந்துள்ள அறையை  தனது 10 வயது பேரன் இம்ரான் கானுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். 14 x 14 அடி இடத்தில் 10 அடி நீளமுள்ள உலோக சட்டகம் அதிக இடத்தை பிடித்துள்ளது. இது உள்ளூர் மொழியில் 'அடா' என்று அழைக்கப்படுகிறது. இது திரைச்சீலைகளை நெசவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள அறையில் பல சார்பாய்கள் (கயிற்று கட்டில்கள்) உள்ளன. சில சுவரில் சாய்ந்துள்ளன, ஒன்று சட்டகத்திற்கு அருகில்; துணிகள் மற்றும் உடைமைகள் நிறைந்த ஒரு பெரிய எஃகு பெட்டி பக்கவாட்டில் கிடக்கிறது. ஒற்றை ஒளி விளக்கு அறையை ஒளிரச் செய்கிறது. ஆனால் மஜிதானும், கர்சாத்தும் கதவு வழியாக  சூரிய ஒளியை வெளிச்சத்திற்கு நம்பியுள்ளனர்

கிட்டத்தட்ட 10 அடி உலோக சட்டகத்தின் குறுக்கே வார்ப்பை - செங்குத்து நூல்களை - முறுக்குவதன் மூலம் அவை தொடங்குகின்றன. "வார்ப் நூல்களை முறுக்குவது விரிப்புகளை நெய்வதில் மிகவும் கடினமான பணி," என்று மஜிதான் குறிப்பிடுகிறார். இறுக்கமாக சுற்றப்பட்ட வார்ப் ஒரு உலோக கற்றையைச் சுற்றி நீளமாக வைக்கப்படுகிறது.

இரண்டு நெசவாளர்களும் அவர்கள் உருவாக்கும் திரைச்சீலையை ஆதரிக்கும் உலோக சட்டத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ள ஒரு பலகையில் அமர்ந்திருக்கிறார்கள். தறியின் கொட்டகையைத் திறக்கவும் மூடவும் வேகமான மற்றும் எளிமையான நெசவுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பட்டியான ஹெடில் கையாளுவதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. கொட்டகை தான் வார்ப் நூல்களை ஒருவருக்கொருவர் பிரிக்கிறது. இது கம்பளத்திற்கான இறுதி வடிவங்களை உருவாக்குகிறது.

இரண்டு கைவினைஞர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி, கிடைமட்ட நெசவு நூல்களை [பானா] ஒரு மரக் குச்சியைப் பயன்படுத்தி வார்ப் நூல்கள் (டானா) வழியாக அனுப்பி, சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள். மஜிதான் "வடிவங்கள் யாவும் தனது எண்ணத்தில் தோன்றும் ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டவை," என்று அவர் கூறுகிறார். பல்வேறு மையக்கருத்துகளை உருவாக்க வார்ப்பை காற்றில் சுற்றுகிறார். வடிவமைப்பைப் பிரதி எடுக்க அவரிடம் குறிப்பிட்ட வடிவம் அல்லது அச்சு கிடையாது.

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இரண்டு நெசவாளர்களும் அவர்கள் உருவாக்கும் திரைச்சீலையை ஆதரிக்கும் உலோக சட்டத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ள ஒரு பலகையில் அமர்ந்திருக்கிறார்கள். உள்நாட்டில் அடா என்று அழைக்கப்படும் கிட்டத்தட்ட 10 அடி உலோக சட்டத்தில் வார்ப்பை - செங்குத்து நூல்களை - முறுக்குவதன் மூலம் அவை தொடங்குகின்றன மற்றும் திரைச்சீலைகளை நெசவு செய்ய பயன்படுத்தப்படுகின்றன. 'வார்ப் நூல்களை நெய்வதில் மிகவும் கடினமான பணி வார்ப் நூல்களை முறுக்குவது,' என்கிறார் மஜிதான்

கடினமாகத் தெரிந்தாலும், வேலை இப்போது மிகவும் எளிதாகிவிட்டது.  "இதற்கு முன்பு நாங்கள் நான்கு மூலைகளிலும் நான்கு பெரிய இரும்புக் கில்களை [ஆணிகளை] தரையில் சுத்தியலால் அடித்து வந்தோம். நாங்கள் அவற்றின் மீது மர உத்தரங்களை வைத்து ஒரு சட்டத்தை உருவாக்குவோம். பின்னர் அவற்றை காற்றில் சுற்றி நெசவு செய்வோம்," என்று கர்சாத் கூறுகிறார். "அந்த அடா இந்த அடா போன்று இல்லாமல் அசைந்தது," என்கிறார் மஜிதான். எனவே அமைப்பை மாற்ற விரும்பினால், "நாங்கள் அதை முற்றத்திற்கு இழுத்துச் செல்கிறோம்."

இரண்டு பெண்களும் தங்கள் குடும்பங்களிடமிருந்து போதிய நிதியுதவி பெறவில்லை. மஜிதானின் இளைய மகன் ரியாசத் அலி லாரி ஓட்டுநராக இருந்தார், ஆனால் இப்போது ஒரு பசு கொட்டகையில் நாளொன்றுக்கு ரூ.500 சம்பளத்திற்கு வேலை செய்கிறார், மூத்த மகன் பர்னாலாவில் உள்ளூர் செய்தியாளராக உள்ளார்.  கர்சாத்தின் இரண்டு மகன்கள் வெல்டர்களாக வேலை செய்கிறார்கள், மூன்றாவது மகன் தினக் கூலித் தொழிலாளி.

மஜிதான் கர்சாத்துக்கு முன்பே நெசவு செய்யத் தொடங்கிவிட்டார். ஆனால், அவருக்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்க உத்திகளில் பெரிய வித்தியாமில்லை. "எனக்கு நெசவு கற்றுக் கொடுத்த என் பர்ஜாயி [மைத்துனி] துய் [பிட்டம்] மீது அடித்தார்," என்று மற்றொரு மைத்துனிக் குறித்து மஜிதான் கூறுகிறார்.

"நான் முன்கோபக்காரப் பெண்ணாக இருந்தாலும், கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததால் அமைதியாக இருந்தேன்."  ஒரு மாதத்திற்குள், "என் ஆரம்ப விரக்தியையும் கண்ணீரையும் மீறி அதை கற்றேன்.”

தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது தாயார் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினராக மாறியபோது மஜிதானின் உறுதியான தன்மை வெளிப்பட்டது. 14 வயதான மஜிதான் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய போதிலும், தனது தாய்க்கு உதவ வேண்டும் என்று விரும்பினார். "பெபே [அம்மா] மென்மையாக மறுத்து, 'நான் ஒரு பெண்' என்றும் [என்னால் முடியாது]," என்றும் அவர் கூறியதை மஜிதான் நினைவுக் கூர்ந்தார். "ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன், ஒரு பெண்ணாக இருப்பது ஏன் குடும்பத்திற்கு உதவுவதைத் தடுக்கிறது என்று கேள்வி எழுப்பினேன்."

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இரண்டு கைவினைஞர்களும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி கிடைமட்ட நெசவு நூல்களை (பானா) ஒரு மரக் குச்சியைப் பயன்படுத்தி வார்ப் நூல்கள் (டானா) வழியாக அனுப்பி, சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள். மஜிதன் 'தன் மனதில் இருக்கும் ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டவை' என்று அவர் கூறும் பல்வேறு மையக்கருத்துகளை உருவாக்க வார்ப்பை காற்றில் சுற்றுகிறார். வடிவமைப்பை பிரதி எடுக்க அவரிடம் குறிப்பிட்ட வடிவம் அல்லது அச்சு கிடையாது

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

மஜிதான் மற்றும் கர்சாத் மஞ்சள், நீல நிற நூல் நூல்கைளைப் பயன்படுத்தி இரண்டு மலர் வடிவங்களின் கலவையை நெசவு செய்கிறார்கள் . இடைவெளி விட்டுவிட்டு , இருவரும் பச்சை மற்றும் கருப்பு பூக்களை உருவாக்குவதைத் தொடர்கிறார்கள் . ' பூக்கள் முடிந்தவுடன் , சிவப்பு நெசவு நூல்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு அடி தூரத்தை நெசவு செய்வோம், ' என்கிறார் மஜிதான் . அவர் துணியை அளவிட தனது கைகளைப் பயன்படுத்துகிறார் . இருவருமே பள்ளிக்குச் செல்லவில்லை என்பதால் இம்முறையில் அவர் அளக்கின்றனர்

இந்தியப் பிரிவினையால் இந்த குடும்பம் மோசமாக பாதிக்கப்பட்டது - அவரது தாய்வழி தாத்தா பாட்டியின் குடும்பம் பாகிஸ்தானில் வசித்து வந்தது. இது இன்னும் மஜிதானை ஏக்கத்துடன் வைத்திருக்கிறது. 1980 களில் அவர்களைச் சந்திக்க அவர் பரிசுகளுடன் சென்றார் - கையால் நெய்யப்பட்ட இரண்டு கம்பளங்கள் "அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது," என்று அவர் கூறுகிறார்.

*****

பல மணி நேரம் உழைத்தாலும், பெண்கள் ஒரு விரிப்புக்கு தலா ரூ.250  மட்டுமே சம்பாதிக்கின்றனர். "நாங்கள் வழக்கமாக ஒரு துர்ரி நெசவு செய்ய ரூ.1,100 வசூலிக்கிறோம். வாடிக்கையாளர் நூல் கண்டுகளை வழங்கினால், எங்கள் உழைப்புக்கு 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறோம்," என்று மஜிதான் விளக்குகிறார். "நான் முதன்முதலில் தொடங்கியபோது, ஒரு முழு துர்ரி ரூ.20 என நெய்யப்பட்டது. இப்போது, நாங்கள் போதுமான அளவு சம்பாதிப்பதில்லை," என்று மஜிதான் நினைவு கூர்ந்தார். "கிராமத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.60 என்றால், ஒரு மாதத்தில் என்னுடைய செலவுகளை கற்பனை செய்து பாருங்கள்," என்று கர்சாத் புலம்புகிறார்.

மஜிதான் மற்றும் கர்சாத் தங்கள் கணவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்ததால் குழந்தைகளை மிகவும் சிரமத்துடன் வளர்த்தனர். "நான் ஜாட் சீக்கிய குடும்பங்களுக்கு வீட்டு வேலைகளுக்குச் செல்வேன். அவர்கள் எனக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடுத்தனர். அதை வைத்து என் குழந்தைகளுக்கு உணவளித்தேன்," என்கிறார் கர்சாத். தனது இளைய மகனின் குடும்பத்துடன் வசிக்கும் மஜிதான் மற்றும் எட்டு பேர் கொண்ட தனது குடும்பத்துடன் வசிக்கும் கர்சாத் ஆகியோர் அந்த கடினமான காலங்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையிலான பருத்தி அறுவடை பருவத்தில் அவர்கள் பருத்தி பறிப்பார்கள். அவர்கள் இதை நூலாக நூற்பார்கள். இது அவர்களின் வருமானத்திற்கு துணையாக இருந்தது, 40 கிலோ பருத்தியை எடுக்க ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிப்பார்கள். "இப்போதெல்லாம், பெரும்பாலான விவசாயிகள் பருத்திக்கு பதிலாக நெல் விதைக்கிறார்கள்," என்று மஜிதான் குறிப்பிடுகிறார். இந்த மாற்றம் அவர்களின் வாழ்க்கையை கணிசமாக பாதித்துள்ளது.  பஞ்சாபில் பருத்தி சாகுபடி கடும் சரிவைக் கண்டுள்ளதை அரசு பதிவேடு காட்டுகிறது . இது 2014-15 ஆம் ஆண்டில் 420,000 ஹெக்டேரிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 240,000 ஹெக்டேராக குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில், மஜிதான் தயக்கத்துடன் நூல் நூற்கும் தனது ராட்டைக்கு ஓய்வு தருகிறார். அது ஒரு கொட்டகையில் கைவிடப்பட்டுக் கிடக்கிறது. துர்ரிகளுக்கான தேவையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது - அவர்கள் ஒரு காலத்தில் மாதத்திற்கு 10 முதல் 12 வரை வடிவமைத்தனர். இப்போது அவர்கள் இரண்டு மட்டுமே தயாரிக்கிறார்கள். அவர்களின் ஒரே நிலையான வருமானம் விதவைகளுக்கான ஓய்வூதியமான மாநில அரசின் மாதம் ரூ.1,500 ஆகும்.

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

தளர்வான நூல்களில் முடிச்சுகளைக் கட்டுவதன் மூலம் கையால் நெய்யப்பட்ட துர்ரிக்கு இறுதி வடிவம் கொடுக்கிறார் மஜிதான்

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

மஜிதான் கர்சாத்துடன் வடிவமைத்த ஒரு துர்ரியை ( இடது ) காட்டுகிறார் . மஜிதான் தனது 10 வயது பேரன் இம்ரான் கானின் ( வலது ) உதவியுடன் , ஊசியில் நூலைச் சேர்க்கிறார் . ஒரு மணி நேரத்திற்கும் மேலான வேலைக்குப் பிறகு , கர்சாத் மற்றும் மஜிதான் ஒரு சிறிய இடைவெளி எடுத்து கால்களை நீட்டுகிறார்கள் . இருவருக்கும் மங்கலான கண்பார்வையும், மூட்டுகளில் வலி இருப்பதாகவும் கூறுகின்றனர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலான வேலைக்குப் பிறகு, கர்சாத் மற்றும் மஜிதான் ஒரு சிறிய இடைவேளை எடுத்து கால்களை நீட்டுகிறார்கள். கர்சாத் தனது முதுகு வலியைக் குறிப்பிடுகிறார், மஜிதான் தனது முழங்கால்களை அழுத்தி, "இன்று என்னால் நடக்க முடியவில்லை.  மூட்டுகள் வலிக்கின்றன," என்கிறார். இருவருக்கும் கண்பார்வை மங்குவதாகவும் புகார் கூறுகின்றனர்.

"பண்டா பன் கே காம் கிதா ஹை [நான் ஒரு ஆணைப் போல வேலை செய்தேன்], இந்த வயதிலும் அதை தொடர்கிறேன்," என்று மஜிதான் கூறுகிறார். அவர் இந்த குறைந்த வருமானத்தில் வீட்டை நிர்வகித்து வருகிறார்.

வயதுடன் தொடர்புடைய வலிகள் இருந்தபோதிலும், மஜிதான் தனது ஓய்வூதியம் மற்றும் விரிப்புகளை வடிவமைப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தேவைகளை ஈடுகட்ட விரும்புகிறார். அவர் தினமும் காலை 7 மணிக்கு சில கிலோமீட்டர் தூரம் நடந்துச் சென்று ஒரு குடும்பத்திற்கு சமைத்து கொடுத்து மாதம் ரூ.2000 சம்பாதிக்கிறார். அவரும் கர்சாத்தும் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.70 சம்பாதிக்கின்றனர்.

நீண்ட நாட்கள் இருந்தபோதிலும், அவர்கள் விரிப்புகளை நெசவு செய்ய நேரம் ஒதுக்குகிறார்கள். "நாங்கள் தினமும் நெசவு செய்தால், ஒரு வாரத்தில் ஒரு துர்ரியை முடிக்க முடியும்," என்று கர்சாத் கூறுகிறார்.

மஜிதான் நெசவுத் தொழிலை விட்டுவிட நினைக்கிறார். "இந்த ஒன்னு முடிச்ச பிறகு, நான் நிறுத்திடுவேன். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கடினமாகிவிட்டது. இது எனக்கு இங்கே வலிக்கிறது, "என்று அவர் கூறியபடி, கடந்த ஆண்டு பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல்களை காட்டுகிறார். "இன்னும் சில வருடங்கள் எஞ்சியிருந்தாலும், அவற்றை நன்றாக வாழ நினைக்கிறேன்."

ஆனால், அடுத்த நாளே, ஓய்வு பெறும் எண்ணம் மறந்து போகிறது.  வயது எண்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் பல்பீர் கோர் எனும் மூதாட்டி வேறொரு கிராமத்திலிருந்து ஒரு துர்ரிக்கான ஆர்டருடன் வருகிறார். "அம்மா, இந்த துர்ரி அவர்கள் வீட்டு பயன்பாட்டிற்கா அல்லது மகளின் அலங்காரத்திற்கு பயன்படுத்தவா  என்பதை அக்குடும்பத்தினரிடம் கேளுங்கள்," என்று மஜிதான் அந்த வயதான பெண்மணிக்கு நூறு ரூபாயை கொடுத்தார்.

இந்தக் கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் (எம்.எம்.எஃப்) மானிய ஆதரவுப் பெற்றது.

தமிழில்: சவிதா

Sanskriti Talwar

संस्कृती तलवार नवी दिल्ली स्थित मुक्त पत्रकार आहे. ती लिंगभावाच्या मुद्द्यांवर वार्तांकन करते.

यांचे इतर लिखाण Sanskriti Talwar
Editor : Vishaka George

विशाखा जॉर्ज बंगळुरुस्थित पत्रकार आहे, तिने रॉयटर्ससोबत व्यापार प्रतिनिधी म्हणून काम केलं आहे. तिने एशियन कॉलेज ऑफ जर्नलिझममधून पदवी प्राप्त केली आहे. ग्रामीण भारताचं, त्यातही स्त्रिया आणि मुलांवर केंद्रित वार्तांकन करण्याची तिची इच्छा आहे.

यांचे इतर लिखाण विशाखा जॉर्ज
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha