பன்னா மாவட்டத்தில் ஆகஸ்ட் தொடங்கி மழை பெய்து வருகிறது. கைதாபாரோ அணை கொள்ளளவை எட்டி விட்டது. இது அருகிலுள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள மலைகளில் இருந்து ஓடுகிறது.

சுரேன் பழங்குடி ஒரு சுத்தியலுடன் அணைக்கு வருகிறார். வேகமாக ஓடும் நீரை கவனமாக பார்க்கிறார். புதிய கற்களோ, உடைந்த பாகங்களோ ஓட்டத்தை தடுக்கிறதா என பார்க்கிறார். சுத்தியலை வைத்து கற்களை சற்று ஒதுக்கி நீர் ஓடுவதற்கான நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

“நீர் சரியாக ஓடுகிறதா என பார்க்க நான் வந்திருக்கிறேன்,” என்கிறார் அவர். “ஆமாம், சரியாக ஓடுகிறது,” எனத் தலையசைக்கிறார் பில்புரா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி. சில மீட்டர் தூரத்தில் இருக்கும் தன் நிலத்தின் நெற்பயிர் வாடாது என நிம்மதி கொள்கிறார்.

சிறு அணையை முழுமையாக பார்க்கும் அவர், “இது பெரிய ஆசிர்வாதம். நெல்லும் வளரும், கோதுமையும் வளரும். இதற்கு முன் நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை. எனக்குள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்க முடியாதிருந்தது,” என்கிறார்.

பில்புரா மக்களின் ஆசிர்வாதம்தான், இந்த அணை கட்ட உதவ வைத்து, ஆதாயத்தை விளைவித்திருக்கிறது.

தோராயமாக ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பில்புராவில் பெரும்பாலும் கோண்ட் பழங்குடி விவசாயிகள் வசிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் சில கால்நடைகள் இருக்கின்றன. இந்த கிராமத்தில் அடிகுழாயும் கிணறும் மட்டும்தான் இருந்ததாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு பதிவு செய்திருக்கிறது. மாநில அரசு மாவட்டத்துக்கு உள்ளும் வெளியேயும் குளங்களை கட்டியிருக்கிறது. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதி இல்லை என்னும் உள்ளூர்வாசிகள், “நீர் நிற்பதில்லை,” என்கின்றனர்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: சுரேன் பழங்குடி, நிலங்களை நோக்கி அணை நீர் ஓடுகிறதா என்பதை உறுதி செய்ய சுத்தியலுடன் சென்று அணையைப் பார்க்கிறர. வலது: மகாராஜ் சிங் பழங்குடி சொல்கையில், ‘தொடக்கத்தில் இங்கு விவசாயம் இல்லை. கட்டுமான தள வேலைக்காக டெல்லிக்கும் மும்பைக்கும் நான் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறேன்,’ என்கிறார்

அணைக்கும் கிராமத்துக்கும் இடையே இருக்கும் சுமார் 80 ஏக்கர் நிலம் கிராம மக்களுக்கு சொந்தமாக இருக்கிறது. “தொடக்கத்தில் ஒரு சிறு ஓடை இருந்தது. சில ஏக்கர்களில் அது பயன்படுத்தப்பட்டது,” என்கிறார் மகாராஜ் சிங். “அணை இங்கு வந்த பிறகுதான் நாங்கள் அனைவரும் நிலங்களில் விவசாயம் பார்க்க முடிந்தது.”

சுய பயன்பாட்டுக்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் விதைத்திருக்கும் கோதுமை, சன்னா, நெல் மற்றும் சோளம் ஆகியவற்றுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்யத்தான் மகாராஜும் அணைக்கு வந்திருந்தார். நல்ல விளைச்சலுள்ள வருடத்தில், விளைச்சலின் ஒரு பகுதியை அவர் விற்பார்.

“இந்த நீர் என்னுடைய நிலத்துக்கு செல்கிறது,” என்கிறார் நீரை சுட்டிக் காட்டி. “தொடக்கத்தில் இங்கு விவசாயம் இல்லை. கட்டுமான வேலை தேடி டெல்லிக்கும் மும்பைக்கும் நான் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறேன்.” அவர் பிளாஸ்டிக் மற்றும் நூல் ஆலைகளிலும் வேலை பார்த்திருக்கிறார்.

2016ம் ஆண்டில் அணை கட்டப்பட்ட பிறகிலிருந்து, அவர் புலம்பெயரவில்லை. விவசாய வருமானமே அவருக்கும் குடும்பத்துக்கும் போதுமானதாக இருந்தது. அணையின் நீர் இப்போது வருடம் முழுக்க வருகிறது. கால்நடைகளுக்கும் பயன்படுகிறது.

அணையை மீண்டும் கட்டுவதற்கான நகர்வு, மக்கள் அறிவியல் நிறுவனம் (PSI) என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கூட்டங்களின் விளைவாக நேர்ந்தது. “உள்ளூர்வாசிகளுடன் பேசுகையில், அவர்களிடம் நீர்ப்பாசனம் இன்றி நிலம் இருப்பது தெரிய வந்தது. அதனால் நிலத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதும் தெரிய வந்தது,” என்கிறார் அப்பகுதியின்  தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளரான ஷரத் யாதவ்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: மகாராஜ் சிங் பழங்குடி சொல்கையில், ‘தொடக்கத்தில் ஒரு சிறு ஓடை இருந்தது. சில ஏக்கர்களில் அது பயன்படுத்தப்பட்டது. அணை இங்கு வந்த பிறகுதான் நாங்கள் அனைவரும் நிலங்களில் விவசாயம் பார்க்க முடிந்தது’

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: அரசாங்கம் இது போல அணைகளை அருகே கட்ட முயற்சித்ததாகவும் ஆனால் நீர் தங்கவில்லை என்றும் ஷரத் யாதவ்  கூறுகிறார். வலது: உள்ளுர்வாசிகள் அவ்வப்போது அணைக்கு வந்து நீர் இருப்பதை உறுதி செய்து கொள்கின்றனர்

விளாம்பழ மரத்தோப்புக்கு அருகே உள்ள குளத்தின் மீது அரசாங்கம் அணை கட்டியது. ஒருமுறை அல்ல, மூன்று முறை கடந்த 10 வருடங்களில் கட்டியது. கடந்த வருட மழைக்காலத்தில் அது உள்வாங்கி விட்டது. எனவே அரசு அதிகாரிகள், அணையின் அளவை குறைப்பது என முடிவெடுத்தனர்.

சிறு அணை போதவில்லை: “நீர் வயல்களுக்கு வந்ததே இல்லை. கோடைக்கும் முன்பே காய்ந்தும் விட்டது. நீர்ப்பாசனத் தேவைகளுக்கு பயன்படாமல் இருந்தது,” என்கிறார் மகாராஜ். “வெறும் 15 ஏக்கரில் மட்டும்தான் விவசாயம் பார்க்க முடியும். அதுவும் ஒரு பயிர்தான் விளைவிக்க முடியும்.”

2016ம் ஆண்டில் கிராம மக்கள் தாங்களே முன் வந்து தங்களின் உழைப்பை செலுத்தி அணையை மீண்டும் கட்டத் தொடங்கினர். “மண் சுமந்தோம். நிலத்தை தோண்டினோம். கற்களை உடைத்தோம். ஒரு மாதத்தில் அணையைக் கட்டி முடித்தோம். அனைவரும் எங்களின் கிராமத்தை சேர்ந்தவர்கள்தான். பெரும்பாலானோர் பழங்குடிகளும் ஓரளவுக்கு இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் சேர்ந்து செய்தோம்,” என்கிறார் மகாராஜ்.

புதிய அணை அளவில் பெரியது. நீரை சமமாக வெளியேற்றவும் அணை உடைந்திடாமல் இருக்கவும் இரு மதகுகள் இருக்கின்றன. அணை பாதுகாப்பாக இருக்கும் நிம்மதியோடு மகாராஜும் சுரேனும் தம் வீடுகளுக்கு ஒரு மழை வரும் முன்பு சென்று விட்டனர்.

தமிழில் : ராஜசங்கீதன்

Priti David

प्रीती डेव्हिड पारीची वार्ताहर व शिक्षण विभागाची संपादक आहे. ग्रामीण भागांचे प्रश्न शाळा आणि महाविद्यालयांच्या वर्गांमध्ये आणि अभ्यासक्रमांमध्ये यावेत यासाठी ती काम करते.

यांचे इतर लिखाण Priti David
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

यांचे इतर लिखाण Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan