"சட்னி, சட்னி வறுவல்!"
அருணாச்சல பிரதேசத்தில் பட்கை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கனுபாரியில் சிவப்பு எறும்புகள் கொண்டு சட்னி தயாரிக்கின்றனர். இலைகளில் கைப்பிடிகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள ஒளிரும் சிவப்பு எறும்புகள், இந்த ஈரமான, மழை பெய்யும் ஜூலை மாத காலை வாரச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்படுகின்றன.
"எறும்புகளில் பல வகைகள் உள்ளன", என்று கனுபாரியில் வசிக்கும் போபின் குர்மி கூறுகிறார். "கருப்பு எறும்புகளை விட அம்லோய் (சிவப்பு எறும்புகள்) பிடிக்க எளிதானது என்பதால் அவை பரவலாக விரும்பப்படுகின்றன. அவை கடித்தால் தீங்கு விளைவதில்லை. அவை மா, பலா மரங்களில் காணப்படுகின்றன. அருணாச்சல பிரதேசத்தில் ஆசிய நெசவாளர் எறும்பு என்று அழைக்கப்படும் Oecophyllasmaragdina வகை எறும்பு உள்ளது.
நான் சில வாரங்கள் ஆசிரியராக பணிபுரிந்த மகாபோதி பள்ளியைச் சேர்ந்த பத்து வயது நயன்ஷிலா, ஒன்பது வயது சாம் ஆகியோர் எறும்புகளைப் பிடிக்கும் செயல்முறையை எனக்கு விவரிக்கிறார்கள். "ஒரு மரத்தின் கிளையில் எறும்புகளின் கூட்டைக் கண்டறிந்த பிறகு, அதை வெட்டி கொதிக்கும் நீரில் போடுகின்றனர். இறந்த எறும்புகளிலிருந்து இலைகளும் மண்ணும் நீக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன." பின்னர் அவற்றை வறுத்து சட்னி செய்யலாம். இது கொஞ்சம் புளிப்பு சுவையாக இருக்கும் என்று அம்மாணவர்கள் என்னிடம் கூறுகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ள கனுபாரி வட்டத்தில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. கனுபாரி குடியிருப்பு வாசிகளுக்காக 70 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு பெரிய சந்தையும் உள்ளது. உள்ளூர்வாசிகள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இங்கே பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். இங்கிருந்து அசாம் எல்லை ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளது. மேலும் அண்டை மாநிலத்திலிருந்தும் தங்கள் விளைபொருட்களை வாங்கவும், விற்கவும் வருகை தருகின்றனர்.
நகரத்தில் உள்ள மகாபோதி பள்ளியில் ஆசிரியராக இருக்கும் திரு. சித்ரா, 1985 ஆம் ஆண்டு சிறு குழந்தையாக சந்தைக்குச் சென்றதை நினைவு கூருகிறார். "அப்போது விற்கப்பட்ட பொருட்கள் பண்ணைகளில் ரசாயனங்களின்றி தூய்மையாக விளைவிக்கப்படும்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
மழையையும் பொருட்படுத்தாமல், ஷூக்கள், செருப்புகள், குடைகள் ஆகியவற்றை பழுது பார்க்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ள செருப்பு தைக்கும் வியாபாரிகள். சந்தைப் பகுதிக்கு செல்லும் சிறிய சாலையில் காய்கறி, பழம், மீன், இறைச்சி விற்பனையாளர்களிடையே அவர்களும் அமர்ந்துள்ளனர்.
சந்தையின் ஒவ்வொரு மூலையிலும் பான் தேலாக்கள் [புகையிலை கடைகள்] இருக்கின்றன. அசாமின் சராய்டியோ மாவட்டத்தைச் சேர்ந்த புகையிலை விற்பனையாளர் ஜெயதோ பாஷின், உலர்ந்த புகையிலையின் பல்வேறு வகைகளை என்னிடம் சுட்டிக்காட்டுகிறார், "பழுப்பு நிற புகையிலை பொதுவாக சுனா [சுண்ணாம்பு] உடன் மென்று சாப்பிடப்படுகிறது, கருப்பு நிற புகையிலை பீகாரில் இருந்து கொண்டு வரப்படும் பான் [வெற்றிலை] உடன் சாப்பிடப்படுகிறது."
நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் போன்ற வழக்கமான விளைபொருட்களைத் தவிர, பல உள்ளூர் காய்கறிகளும் இங்கு வருகின்றன: பன்னம், கச்சு [டாரோ வேர்], மூங்கில் தண்டு, வாழைத் தண்டுகள், பூண்டு, பச்சை மற்றும் கருமிளகு, வெள்ளரிக்காய் மற்றும் புகழ்பெற்ற கிங் மிளகாய்.
மொத்த அளவில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் அசாமின் சபேகதி, சோனாரியின் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் சிறிய விற்பனையாளர்கள் உள்ளூர் விவசாயிகள். திறந்தவெளியிலோ அல்லது தகர கூரை கொண்ட வராண்டாவின் நிழலிலோ அமர்ந்து, தார்பாய்கள் அல்லது பழைய உர மூட்டை பைகளில் செய்யப்பட்ட விரிப்புகளில் தங்கள் பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்கின்றனர். உள்ளூர் காய்கறிகள் வேகமாக விற்பனையாகின்றன.
"பன்றி இறைச்சி மலிவானதும் சுவையானதும் என்பதால் இங்கு விருப்பத்துக்குரிய இறைச்சிகளில் ஒன்றாக அது உள்ளது", என்று என்னுடன் சந்தைக்கு வரும் 26 வயதான பொம்சென் லாப்ராம் கூறுகிறார். பன்றி இறைச்சி, வாத்து, இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட புதிய மற்றும் உலர்ந்த இறைச்சி மற்றும் மீன்கள் சந்தையில் ஏராளமாகக் காணப்படுகின்றன.
கட்டைவிரல் அளவுள்ள சிவப்பு மிளகாயின் கண் கவர் குவியல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது - அசாமிய மொழியில் பூத் ஜோலோக்கியா என்று அழைக்கப்படும் இந்த கிங் மிளகாய் அல்லது பேய் மிளகு லாங்டிங்கில் வசிக்கும் வாஞ்சோ பழங்குடியினரின் மொழியில் போங்கன் ஹிங்பு எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில் உலகின் மிக காரமானதாகவும், இப்போதும் இந்தியாவில் மிகவும் காரமானதாகவும் கருதப்படும் மிளகாய், பெரிய குவியல்களில் அல்லது 6-8 காய்கள் கொண்ட சிறு கூறுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
" டிசம்பர்-ஜனவரி மேன் லக்தா ஹைன் அவுர் 3-4 மஹினா பாத் உஸ்கோ மிர்ச் ஆத்தா ஹை [டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நாங்கள் மிளகாயை நடவு செய்கிறோம், அவை 3-4 மாதங்களில் மகசூல் கொடுக்கத் தொடங்குகின்றன]", என்று அசாமின் சராய்டியோ மாவட்டத்தைச் சேர்ந்த விற்பனையாளர் பசந்த் கோகோய் தெரிவிக்கிறார்.
விவசாயி கோகோய், தனது 11-12 பிகா (அல்லது 1.5 ஹெக்டேர்) நிலத்தில், ஒரு பிகாவில் கிங் மிளகாய் பயிரிடுகிறார். தாவரத்தின் காரம் மற்றும் வெப்பம் காரணமாக, விலங்குகள் பயிரை தீண்டுவதில்லை என்று அவர் பகிர்ந்து கொள்கிறார், "லேக்கின் பாரிஷ் ஹி ஜ்யாதா நுக்சன் கர்தா ஹை [ஆனால் மழை]." கன மழையால் இளம் பூக்கள் காய்ந்து மகசூல் பாதிக்கப்படுகிறது.
"கிங் மிளகாயில் பல வகைகள் உள்ளன," என்கிறார் பசந்த். "நாகாலாந்து வகை காரமானது. நாம் விளைவிக்கும் பழங்களின் நறுமணம் குறைந்துவிட்டது. எங்கள் குழந்தை பருவத்தில் இது மிகவும் காரமாக இருந்தது." வாரம் இருமுறை மிளகாயை பறித்து, 6 முதல் 8 காய்களை ரூ.20-க்கு அவர் விற்கிறார். இவை அவருக்கு வாரந்தோறும் சுமார் 300 முதல் 500 ரூபாய் வரை கொண்டு வருகின்றன.
பசந்த் தனது நிலத்தில் தேயிலை, தமுல் [பாக்கு], பேரிக்காய், துராய் [பீர்க்கங்காய்], பட் கரேலா [சுரைக்காய்], காஜி நெமு [அசாம் எலுமிச்சை] மற்றும் வேறு சில பொருட்களையும் பயிரிடுகிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும், அசாமில் உள்ள தனது கிராமமான போகா போத்தரில் இருந்து கனுபாரிக்கு 10 கிலோமீட்டர் சைக்கிளில் அவர் செல்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, ஒரு மணி நேரத்தில் சந்தையை அடைகிறார். தனது சிறிய கடையை அமைத்து, மதியம் ஒன்றரை மணி வரை காத்திருந்து விளைபொருட்கள் அனைத்தையும் விற்றுவிட்டு வீடு திரும்புகிறார்.
விளைபொருட்களை கெர்பாரி ஞாயிற்றுக்கிழமை சந்தையிலும் அவர் விற்கிறார். சராய்டியோவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய சந்தை அது. ஆனால் அவர் கனுபாரி சந்தைக்கு குறிப்பாக வர விரும்புகிறார்.
" ஜப் சே ஹமே சமாஜ்னே லகா தப் சே யஹா ஆதே ஹை. ஏக் பார் பி நஹி ஆயே தோ அச்சா நஹி லக்தா [எனக்கு நினைவுத் தெரிந்த நாள் முதல் இங்கு வருகிறேன். ஒருமுறை தவறினால் கூட விசித்திரமாக உணர்கிறேன்].
தமிழில்: சவிதா