"ஆண்டுதோறும் கோடையில் ஒரு மாதம் இங்கு வந்து பணம் சம்பாதிப்போம்," என்று சாந்தி தனது வண்ணமயமான துப்பட்டாவை நெற்றிக்கு அருகில் இழுத்து, தனது ஒன்பது வயது பேரன் அமர்ஜீத்தை ராவணஹதா வாசிப்பைத் தொடருமாறு கூறுகிறார். "பஜாவோ, பஜாவோ [வாசி, வாசி]," என்று அவர் அவனிடம் சொல்கிறார். அவன் பெரிய ஆர்வமின்றி கம்பிகளுக்கு இடையே வில்லை அசைத்து இசைக்கிறான்.

மலையின் வியூ பாயிண்டிற்கு செல்லும் வழியில் சாந்தியையும், அமர்ஜீத்தையும் (மேலே முகப்புப் படத்தில் இருப்பவர்) சந்திக்கிறோம். தர்மசாலாவுக்கு சற்று மேலே இமாச்சல பிரதேசத்தின் மெக்லியோட்கஞ்சிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடி கிராமத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள உயரமான மேடையில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

சாந்தி கொஞ்சம் மன்னிப்புக் கோரும் தொனியில், "சிறுவனின் [அமர்ஜீத்]  தாத்தா ராவணஹதா வாசிப்பதில் மிகவும் தேர்ந்தவர். ஆனால் இன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரால் வர முடியவில்லை. நாங்கள் எப்போதும் இந்த கருவியை வாசித்து, பாடல்களை பாடுவோம். ஆனால் என் பேரனுக்கு அதில் ஆர்வமில்லை. இப்போதெல்லாம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்கிறார்கள். எனவே அவன் [எங்கள் கிராமத்தில்]  உள்ள பள்ளிக்குச் செல்கிறான்," என்று அவர் கூறுகிறார்.

நீ எந்த வகுப்பு படிக்கிறாய் என்று அமர்ஜீத்திடம் நான் கேட்டேன். "சௌதி மே [நான்காவதில்]," என்று புன்னகையுடன் அவன் பதிலளிக்கிறான்.

இராவணஹதா - அதாவது 'ராவணனின் கை' - இரண்டு நரம்புகள் கொண்ட இசைக்கருவி ஆகும். இதன் ஒரு முனையில் தேங்காய் ஓடு மற்றும் ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட ஒரு கிண்ணம் உள்ளது. வாசிப்பவர் அரை தேங்காய் முனையை தனது நடுப்பகுதிக்கு எதிராக பிடித்து, நீண்ட மூங்கில் குச்சியை வெளிப்புறமாக சுட்டிக்காட்டுகிறார். ஒரு உலோகக் கம்பியும், விலங்குகளின் முடியால் ஆன கம்பியும் நீளமாக கட்டப்பட்டுள்ளன. இசை உருவாக்க வில் அவற்றின் குறுக்கே நகர்த்தப்படுகிறது.

அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களிலிருந்து இறங்குவார்கள். அல்லது கால்நடையாக நடந்து செல்பவர்கள் சிறிது நேரம் கேட்டுச் செல்வார்கள். கொஞ்சம் பணம் கொடுப்பார்கள்

காணொலி: ராஜஸ்தான் முதல் இமாச்சல பிரதேசம் வரை ராவணஹதா வாசித்தல்

இராமாயணத்தில் இக்கருவி குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக ராவணன் தனது 10 தலைகளில் ஒன்று, தனது கை மற்றும் சில முடிகளுடன் இராவணஹதாவை உருவாக்குகிறார் என்று புராணக்கதை கூறுகிறது. அனுமன் அதை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருகிறார். இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளரும் வயலின் கலைஞருமான தினேஷ் சுபசிங்க இப்போது இந்த கருவியை புதுப்பித்து வருவதாகவும், தனது பல பாடல்களில் அதைப் பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஜஸ்தானில், நாட்டுப்புற இசைக்கலைஞர்களில், பலர் நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், ராவணஹதா வாசிக்கின்றனர். சாந்தியின் விவசாயத் தொழிலாளர் குடும்பம், மாநிலத்தின் மார்வார் பிராந்தியத்தில் உள்ள நாகவுர் மாவட்டத்தின் முண்ட்வா கிராமத்தில் வசித்து வருகிறது. அவரது மகன் ராஜு, அவரது கணவர், மருமகள் சுக்லி மற்றும் அவரது பேரன் அமர்ஜீத் ஆகியோருடன், அவர் ஆண்டுதோறும் ஏப்ரல் மத்தியில் இமாச்சல பிரதேசத்திற்கு வந்து மே மாதம் பாதி வரை அங்கு தங்கியிருப்பார். அவர்கள் பேருந்தில் ஜோத்பூருக்குச் சென்று, அங்கிருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு ரயிலில் இறங்கி, அங்கிருந்து தர்மசாலாவுக்கு பேருந்தில் செல்கின்றனர். இந்த ஒரு வழிப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.300 செலவாகிறது.

தர்மசாலாவுக்கு வரும்போது அவர்கள் எங்கே தங்குகிறார்கள்? "எங்களுக்கு மாதம் ரூ.2,500க்கு அறை கிடைக்கிறது. நாங்கள் ஐந்து பேரும் அங்கேயே தங்கி உணவு சமைக்கிறோம்." இந்தி சினிமா பாடல்களை பாடி இசைக்கலைஞர்கள் தினமும் ரூ.400 முதல் 500 வரை சம்பாதிக்கலாம். இன்று, அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர்: சாந்தி மற்றும் அமர்ஜீத் ஓரிடத்திலும், ராஜு மற்றும் அவரது மனைவி சுக்லி வேறு இடத்திலும்.

தௌலாதர் மலைத்தொடர் மற்றும் மயக்கும் புத்த மடாலயங்களின் மூச்சுமுட்டும் இயற்கை காட்சிகளுடன் இசைக்கலைஞர்கள் போட்டியிடுகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறார்கள். கார்கள், டாக்சிகள் அல்லது இருசக்கர வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வரும்போது அவர்களைக் கடந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், அவர்கள் தங்கள் இசை கருவியை ஓரிடத்தில் நின்றபடி, வழக்கமாக ஒரு பிரபலமான தளத்திற்கு செல்லும் வழியில் அல்லது அதற்கு மிக அருகில் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் வேகமான வாகனங்களிலிருந்து இறங்குவார்கள., அல்லது கால்நடையாக நடந்து செல்பவர்கள் கேட்க சிறிது நேரம் காத்திருப்பார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுப்பார்கள்.

A man and his wife sitting on the side of the road in the moutains. the man is holding an instrument called ravanahatha in his hands
PHOTO • Namita Waikar

அமர்ஜீத், மஞ்சு மற்றும் அவர்களின் இரண்டு வயது மகன் ராஜு,   ஆகியோரை நம்க்யால் மடாலயத்திற்கு செல்லும் சாலையில் நாம் சந்திக்கிறோம்

தலாய் லாமாவின் வீட்டைக் கொண்ட சுக்லகாங் வளாகத்தில் உள்ள நம்க்யால் மடாலயத்திற்கு செல்லும் சாலையில் ராஜஸ்தானிலிருந்து வந்துள்ள மற்றொரு குடும்பத்தை நாங்கள் சந்திக்கிறோம். இந்தக் குடும்பத்திலும் ஒரு அமர்ஜீத் இருக்கிறார். ஆனால் அவர் ராவணஹதாவில் இனிமையான பாடல்களை வாசிப்பார். அவரது மனைவி மஞ்சு மற்றும் அவர்களது இரண்டு வயது மகன் ராஜு ஆகியோர் பச்சை நிற பிளாஸ்டிக் விரிப்பில் அவருக்கு அருகில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு முன்னால் இருக்கும் ஸ்டீல் தட்டில் சில 10 ரூபாய் நோட்டுகளும், சில நாணயங்களும் இருந்தன - இது அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அவர்கள் சம்பாதித்தது. அவர்களுக்கு சில அடிகள் பின்னால் சாலையின் விளிம்பு, காங்க்ரா பள்ளத்தாக்கின் செங்குத்தான சரிவில் முடிகிறது.

அமர்ஜீத் மற்றும் மஞ்சு ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள கோமாபரி குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். இந்த ஆண்டு தங்கள் வீட்டிலிருந்து தர்மசாலாவுக்கு திரும்பும் மூன்று நபர்களின் பயணக் கட்டணத்தில் அவர்கள் ரூ.1,200 செலவிட்டனர். இங்குள்ள அவர்களின் அறைக்கான மாத வாடகை ரூ.3,000. "நாங்கள் அறையில் உள்ள ஹீட்டரில் சமைக்கிறோம். நாங்கள் இங்கு அதிகம் செலவழிக்க கூடாது என்று  மளிகைப் பொருட்களை கொண்டு வந்தோம்," என்று மஞ்சு கூறுகிறார். நாளொன்றுக்கு சுமார் ரூ.500 வருமானம் பெறும் இவர்கள், பயணம் மற்றும் தங்குமிட செலவுகள் போக மாதம் ரூ. 10,000 சம்பாதிக்கின்றனர்.

"நாங்கள் கங்காநகருக்கு திரும்பிச் செல்லும்போது கெத் மஜூரி செய்வோம்," என்று அமர்ஜீத் சற்றே ஏக்கத்துடன் கூறுகிறார். சுற்றுலாப் பயணிகள் திரளத் தொடங்கியவுடன் அவர் பேசுவதை நிறுத்துகிறார். பிறகு வில்லை ராவணஹதாவின் தந்திகளுக்கு குறுக்கே அசைத்து, பிரபலமான இந்தித் திரைப்படப் பாடல் ஒன்றின் ராகத்தை வாசிக்கிறார்.

பர்தேசி, பர்தேசி, ஜானா நஹீ
முஜே சோடுகே ...

ஓ அந்நியனே, அந்நியனே, போகாதே
என்னை விட்டு போகாதே...
அவர்களிடம் தயக்கத்துடன், நாங்கள் விடைபெறுகிறோம்.

தமிழில்: சவிதா

नमिता वाईकर लेखक, अनुवादक आणि पारीच्या व्यवस्थापकीय संपादक आहेत. त्यांची ‘द लाँग मार्च’ ही कादंबरी २०१८ मध्ये प्रकाशित झाली आहे.

यांचे इतर लिखाण नमिता वाईकर
Editor : Sharmila Joshi

शर्मिला जोशी पारीच्या प्रमुख संपादक आहेत, लेखिका आहेत आणि त्या अधून मधून शिक्षिकेची भूमिकाही निभावतात.

यांचे इतर लिखाण शर्मिला जोशी
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha