மல்லிகை கொஞ்சம் உரத்துப் பேசும் பூ! முத்துப் போன்ற மல்லிகை மொட்டுக்கள் சாக்குகளில் கட்டப்பட்டு, காலை ஐந்து மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி மல்லிகைச் சந்தையில், ‘தொப்’, என்ற சத்தத்துடன் வண்டியில் இருந்து விழுகிறது. ‘வழி. வழி’, என்ற சத்தத்துடன், சாக்குப் பைகள் பிரிக்கப்பட்டு, மல்லிகை மொட்டுக்கள் தரையில் விரிக்கப்பட்ட ப்ஸாடிக் ஷீட்கள் மீது கொட்டப்படுகின்றன. இரும்புத் தராசில், ஓசையுடன் ஒரு பக்கம் ஒரு கிலோ எடைக்கல் ஏற்றப்படுகிறது.. மறு பாக்கம் தராசில் மல்லிகை மொட்டு குவிக்கப்பட்டு, எடை போடப்பட்டு, வாங்குபவரின் ப்ளாஸ்டிக் பையில் கொட்டப்படுகிறது. கூட்டத்தில் யாரோ விலை கேட்கிறார்கள்.. யாரோ விலை சொல்கிறார்கள்.. தார்ப்பாய் மிதிபடும் ஓசை.. தரையில் மிதிந்து சிதைந்த பூக்களின் மிச்சம்.. விற்பனையைக் கூர்ந்து கவனிக்கும் ஏஜெண்டுகள், விற்பனை விவரங்களை கணக்குப் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறார்கள். ‘அஞ்சி கிலோ வேணும்’, என்றொரு குரல் கேட்கிறது.
பெண் வணிகர்கள், சந்தையில் நல்ல பூக்களைத் தேடி அலைகிறார்கள். மொட்டுக்களைக் கையில் அள்ளி, பூக்களின் தரத்தைச் சோதிக்கிறார்கள்.. அவர்கள் கைகளில் இருந்தது மழைச்சாரல் போல மொட்டுக்கள் மீண்டும் குவியலின் மீது விழுகின்றன. பெண் வணிகர் ஒருவர், ஒரு ரோஜாவையும், சாமந்தியையும் சேர்த்துப் பிணைத்து, ஹேர்பின் உபயோகித்துத் தன் கூந்தலில் இட்டுக் கொள்கிறார். வாங்கிய மல்லிகை மொட்டுக்களைக் கூடையில் போட்டு, தலை மீது ஏற்றிக் கொண்டு, சந்தடி நிறைந்த சந்தையை விட்டு வெளியேறிச் செல்கிறார்.
சந்தையை ஒட்டிய சாலையில், குடைநிழலில் அமர்ந்து, ஒரு பெண், மொட்டுக்களைச் சரமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறார். பச்சை நூலின் வழித் தொடுக்கப்படும் மொட்டுக்களினுள்ளே அதன் மணம் அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறது. சில மணி நேரத்தில், ஒரு பெண்ணின் கூந்தலிலோ, வாகனத்தினுள்ளோ அல்லது ஒரு கடவுள் படத்தின் மீதோ வைக்கப்பட்டு, மலர்கையில், அவற்றினுள் இருக்கும் மணம் வெளியாகி, நான் மதுரை மல்லி என உரத்து அறிவிக்கும்!
பரியின் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று முறை மாட்டுத்தாவணிச் சந்தைக்கு வந்திருக்கிறோம். முதன்முறை, செப்டெம்பர் 2021 ல் வந்தோம். விநாயகர் சதுர்த்திக்கு நான்கு நாட்கள் முன்பு. இரண்டாம் முறை கோகுலாஷ்டமி பண்டிகையன்று. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் பின்புறத்தில், கொரோனா காலக் கெடுபிடிகள் இருந்தன அப்போது. சமூக விலக்கம் அமுலில் இருந்தாலும், சந்தையில் நெருக்கடி இருந்தது.
எனக்கு மல்லிகையைப் பற்றி வகுப்பெடுப்பதற்கு முன்பு, மதுரை பூக்கடைச் சந்தையின் தலைவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ‘என் பெயர் பூக்கடை இராமச்சந்திரன். இந்தச் சந்தைதான் என் பல்கலைக்கழகம்.
தனது இளம் வயதிலேயே மல்லிகைப்பூ வணிகத்துள் இறங்கிய 63 வயதான இராமச்சந்திரன், கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக மல்லிப்பூ வணிகத்தில் இருக்கிறார். பதின் பருவத்திலேயே இந்தத் தொழிலில் இறங்கிவிட்டார். அதனால், என் பெயரே பூக்கடை இராமச்சந்திரன் என ஆகிவிட்டது எனச் சிரித்துக் கொண்டே சொல்கிறார். ‘என் வேலைதான் நாம் கும்பிடும் கடவுள். நான் உடுத்தியிருக்கும் துணி முதல் எல்லாமே எனக்கு இந்தத் தொழில்தான் தந்தது. விவசாயிகள், வியாபாரிகள் எல்லாருமே நல்லா இருக்கனும்கறதுதான் என் விருப்பம்’ என்கிறார்.
ஆனால், இது அவ்வளவு எளிதான தொழிலல்ல இது. இதில் விலை ஏற்ற இறக்கங்கள் அதிகம்.. சீரான வரத்து இருக்காது..திடீரென மிக அதிகமாக வரும்.. திடீரென வரத்து குறையும்.. அது மட்டுமல்ல, சரியான மழை இல்லாமை, வேளாண் இடுபொருள் விலையேற்றம், வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் போவது என இத்தொழிலில் சிரமங்கள் அதிகம்.
கரோனாத் தொற்று இத்தொழிலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது அத்தியாவசியத் தொழில் இல்லை என்பதால், பாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள், வணிகர்கள் என இரு தரப்புமே கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல உற்பத்தியாளர்கள், காய்கறி, பயறு உற்பத்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், இராமச்சந்திரன், அது பெரிய பிரச்சினையில்லை. சரி செய்யக் கூடியதுதான் என்கிறார். செயல்திறன் மிக்க வணிகரான அவர் நம்மிடம் பேசிக் கொண்டே, பூக் கொண்டு வந்திருக்கும் விவசாயிகளையும், பூ வாங்க வந்திருக்கும் மாலை கட்டுபவர்களையும் கவனித்துக் கொள்கிறார். வேலையில் யாரேனும் சுணங்கினால், ‘டேய்’, என அதட்டி, மீண்டும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கிறார். மல்லிப்பூ வியாபாரம் சீராகச் செல்ல அவர் சொல்லும் தீர்வு என்பது, மதுரையில் ஒரு நறுமணத் தைலம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், ஏற்றுமதிக்கான ஆதரவும்.
‘அதை மட்டும் அரசு செஞ்சு குடுத்தா, மதுரை மல்லி, மங்காத மல்லியாகிரும்’, என்கிறார். மல்லிகை வணிகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை இது உறுதி செய்யும் என நம்பும் அவர், இந்தத் தீர்வைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
*****
காலை 8-9 மணிக்கு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. நாம் சொல்வதை பிறர் கேட்க, சந்தையில் எழும் கூக்குரல்களை விடச் சத்தமாகப் பேச வேண்டியிருக்கிறது.
இராமச்சந்திரன் நமக்கு டீ வாங்கித் தருகிறார். வெம்மையும் வியர்வையும் சூழும் அந்தக் காலை நேரத்தில், சூடான, இனிப்பான டீயைக் குடிக்கத் தொடங்குகிறோம். சில விவசாயிகள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பூ கொண்டு வருவார்கள்.. ஒரு சிலர் ஐம்பதாயிரம் வரை விற்றுப் போவதுண்டு. கொஞ்ச நாள் முன்னாடி, மல்லிகை கிலோ ஆயிரம் ரூபாய்க்குப் போச்சு.. அன்னிக்கு ஒரு விவசாயி 50 கிலோ கொண்டு வந்திருந்தார்.. அன்னிக்கு மட்டும் அவருக்கு 50 ஆயிரம் கிடைச்சிச்சு.. லாட்டரி மாதிரி’, என்கிறார்.
’இந்த மல்லிப்பூ சந்தை எவ்வளவு பெரிசு? தினசரி எவ்வளவு ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்?’, எனக் கேட்கிறோம். ’50 லட்சம் முதல் 1 கோடி வரை இருக்கும்’, என மதிப்பிடுகிறார் இராமச்சந்திரன். ‘இது தனியார் மண்டி. இங்கே சுமாரா 100 கடை இருக்கு.. கடைக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வியாபாரம் நடக்கும்.. நீங்களே கணக்குப் போட்டுப் பாத்துக்கங்க’, என்கிறார்.
’வியாபாரிக்கு, விக்கிற விலைல 10% கமிஷன்.. இது பல வருஷமா அப்படியே இருக்கு’, என விளக்குகிறார் இராமச்சந்திரன். ‘ரொம்ப ரிஸ்க்கான பிசினஸ்.. வாங்கிட்டுப் போற வியாபாரி காசு குடுக்கலன்னா. நஷ்டம் நம்ம மேலதான் விழும்.. அதே மாதிரி, அட்வான்ஸ் வாங்கிட்டு, விவசாயி திரும்பத் தரலன்னா, அதுவும் வியாபாரி தலைலதான் விடியும்’. ‘கரோனா சமயத்துல இது அடிக்கடி நடந்துச்சு’, என்கிறார்.
இரண்டு அகலமான நடைபாதைகள் கொண்டு, இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட பூக்கடைகளைக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூ மண்டிக்கு, 2022 ஆகஸ்டு மாதம் (விநாயகர் சதுர்த்திக்கு முன்பு) இரண்டாம் முறை சென்றோம். வழக்கம் போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மல்லிகைப் பூ சாக்குப் பைகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டு, விரைவில் விற்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. கடைகளுக்கிடையே உள்ள நடைபாதையில், பழைய பூக்கள் கொட்டப்பட்டிருந்தன. மக்களின் கால்கள் பட்டு நசுங்கும் பூக்களிலிருந்து ஒரு மோசமான வாடை எழுந்து வந்தது. இது, ‘இண்டோல்’, என்னும் வேதிப் பொருள் மல்லிகையில் உருவாவதால் எழும் நாற்றம் என அறிகிறோம். இந்த வேதிப்பொருள், மல்லிகை தவிர, புகையிலைப் புகை, சாலையில் போடப்படும் தார் மற்றும் மனிதக் கழிவுகளிலும் இருக்கும் என அறிகிறோம். இந்த இண்டோல் குறைவான அளவில் ஒரு பொருளில் இருக்கையில், பூவின் நறுமணம் போல இருக்கும். அளவு அதிகமானால், அழுகின நாற்றம் போல மாறும்.
*****
மல்லிகை வணிகத்தையும், விலைகளையும் நமக்கு விளக்குகிறார் இராமச்சந்திரன். மல்லிகை ஃபிப்ரவரி மாத மத்தியில் பூக்கத் தொடங்கும். ஏப்ரல் வரை மகசூல் நல்லா இருக்கும், ஆனா விலை கம்மியா இருக்கும். கிலோ 100-300 வரை விலை போகும். மே மாசம் 15 தேதிக்கப்பறம், சீசன் மாறிடும். காத்து அடிக்க ஆரம்பிக்கும். ஆனாலும் மகசூல் நல்லா இருக்கும். ஆகஸ்டு செப்டம்பர் மாசத்துல மகசூல் குறையும்.. விலை ரெண்டு மடங்கா ஆகும். கிலோ ஆயிரம் ரூபாய் வரை போகும். நவம்பர் டிசம்பர் மாதங்கள்ல, மகசூல் 25% ஆ குறைஞ்சிரும்.. அப்ப விலை 3,4 5 ஆயிரம் வரை கூடப் போகும்.. தை மாசம் கல்யாண சீசன் வேறயா.. டிமாண்ட் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்.. ஆனா, சப்ளை ரொம்பக் குறைவா இருக்கும்.
மதுரை மாட்டுத்தாவணிச் சந்தைக்கு, சராசரியா 20 டன் மல்லிப்பூ வரும். விவசாயிகளே நேரடியாக் கொண்டு வந்துருவாங்க. மத்த பூவெல்லாம் சேத்தா 100 டன் வரை இருக்கும்.. இங்கிருந்து பூ, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கைன்னு பக்கத்து மாவட்டங்களுக்குப் போகும் என்கிறார் இராமச்சந்திரன்
ஆனா, பூக்களோட வரத்து என்பது ஒரு சீரா இருக்காது.. ‘அது மழையையும், நீர்ப்பாசனத்தையும் பொறுத்தது.. விவசாயி, ஒரு ஏக்கர் நிலம் இருந்துச்சின்னா, அத மூணாப் பிரிச்சி, ஒவ்வொரு வாரமா நீர் பாய்ச்சுவார்.. மகசூல் சீரா வரும். ஆனா, திடீர்னு மழை பேஞ்சுச்சுன்னா, எல்லாச் செடியும் ஒரே சமயத்துல பூத்துரும்.. ஒரே சமயத்துல சந்தைக்கு வரும்.. விலை சரிஞ்சிரும்.
சுமார் 100 விவசாயிகள் இராமச்சந்திரனின் கடைக்கு மல்லிப்பூ கொண்டு வருகிறார்கள். ‘நான் நெறய மல்லிப் பூ உற்பத்தி செய்யறதில்ல.. அதுக்கு நெறைய ஆள் தேவைப்படுது.. பூவைப் பறிச்சு ஏத்தி மார்க்கெட்டுக்குக் கொண்டு வர்றதுக்கே கிலோவுக்கு 100 ரூபாய் செலவாகுது.. மல்லிப்பூ விலை கிலோ 100 ரூபாய்க்குக் கீழ கொறஞ்சா, விவசாயிக்குப் பெரும் நஷ்டமாகும் என்கிறார் இராமச்சந்திரன்.
மல்லிகை உற்பத்தியாளருக்கும் வணிகருக்கும் உள்ள உறவு கொஞ்சம் சிக்கலானது. திருமங்கலம் தாலூக்கா மேலப்பிலிகுண்டு கிராமத்திலிருந்து வரும் மல்லிகை உற்பத்தியாளர் 51 வயதான திரு.கணபதி இதை விளக்குகிறார்.. மல்லிகை உற்பத்த்தி மிக அதிகமாக இருக்கும் சீசனில், ஒரே நாளில் பலமுறை பூக்களை எடுத்துக் கொண்டு வர வேண்டியிருக்கும். அப்படியிருக்கும் போது, வணிகர்களிடத்தில் தாம் நாம் அடைக்கலம் தேட வேண்டியிருக்கும் என்பது அவர் கருத்து. வாசிக்க: In TN: the struggles behind the scent of jasmine
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இராமச்சந்திரனிடமிருந்து, விவசாயத்துக்காக சில லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறார் திரு.கணபதி. மல்லிகைப் பூவை இராமச்சந்திரன் மூலமாக விற்பதன் வழியாக அந்தக் கடனை அடைத்து வருகிறார். இதற்காக இராமச்சந்திரன் கூடுதலாக 2.5% கமிஷன் – 12.5% எடுத்துக் கொள்கிறார்.
மல்லிகைக்கான விலையை யார் நிர்ணயிக்கிறார்கள்? ‘மக்கள்தான் சந்தை விலையை நிர்ணயிக்கிறார்கள்.. அது நிலையாக இருக்காது. சில சமயம் விலை கிலோ 500 ந்னு ஆரம்பிக்கும்.. வேகமா வித்துச்சின்னா, விலைய 600 ந்னு ஏத்திருவோம்.. அப்பவும் நல்ல டிமாண்ட் இருந்துச்சுன்னா 800 ஆக்கிருவோம்’, என்கிறார் இராமச்சந்திரன்
அவரின் சிறுவயதில், ’100 மல்லிகைப் பூ, 2 அணா, 4 அணா, 8 அணான்னு விக்கும்’, என்கிறார்
’அந்தக்காலத்தில் மல்லிகைப் பூ குதிரை வண்டியில வரும்.. திண்டுக்கல் ஸ்டேஷன்ல இருந்தது ரெண்டு பாசஞ்சர்ல வரும்.. மூங்கில் இல்லன்னா பனையோலைக் கூடைல வரும்.. அதனால பூவுக்கு நல்லா காத்து கிடைக்கும். அதிகம் கசங்காம வந்து சேரும். அப்ப கொஞ்ச பேருதான் மல்லிகை விவசாயம் செஞ்சாங்க.. அதிலும் பெண்கள் ரொம்பக் குறைவு’.
‘அந்தக் காலத்தில பன்னீர் ரோஜான்னு ஒரு ரகம் இருக்கும்’, என தன் இளம்வயதில் தான் கண்ட மணம் வீசும் ரோஜாப்பூக்களைப் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் இராமச்சந்திரன். ‘இப்பல்லாம் கிடைக்கிறதே இல்லை.. பூவச் சுத்தி எப்பவுமே தேனீக்கள் பறக்கும்.. பல வாட்டி கொட்டியிருக்கு’, என்கிறார். அவர் குரலில் அது பற்றிய வருத்தம் இல்லை.
விழாக்காலங்களில், மதுரையின் பல கோவில் திருவிழாக்களுக்கு, தான் அன்போடு அளித்த வித விதமான மலர் மாலைகளின் படங்களைத் தன் அலைபேசியில் சேமித்து வைத்திருக்கிறார்.. தேர்கள், பல்லக்குகள், கடவுள் அலங்காரங்கள் என பலவகையான புகைப்படங்கள். அவற்றை நமக்கு மிகவும் பக்தியோடு காண்பிக்கிறார்.
ஆனால், வருங்காலத்தைப் பற்றிப் பேசுகையில், பழங்காலத்தில் அவர் உறைந்து விடுவதில்லை. ‘இங்க புத்தாக்கமும், லாபமும் வரணும்னா, படிச்சவங்க இந்தத் தொழிலுக்கு வரணும்’, என மிகத் தெளிவாகச் சொல்கிறார். இராமச்சந்திரன் கல்லூரி சென்று படித்தவரல்ல.. இளைஞருமல்ல.. ஆனால், தொழில் தொடர்பான அருமையான கருத்துகள் அவர் பேச்சில் மிகச் சரளமான வந்து விழுகின்றன.
*****
முதல் பார்வையில், பூச்சரம், மாலை, வாசனைத் திரவியம் என்பது ஒரு புரட்சிகரமான தொழில் என்பது போலத் தோணாது. சாதாரணமாக யாருமே செய்யக் கூடிய ஒன்றுதானே எனத் தோன்றும். ஆனால், இது சாதாரணமான தொழில் அல்லது. ஒவ்வொரு மாலையின், சரத்தின் உருவாக்கத்திலும் கற்பனையும் புத்திசாலித்தனமும் உள்ளீடாக இருக்கின்றன.. மலர்கள் சரங்களாக, மாலைகளாகத் தொடுக்கப்பட்டு, வியந்து அணியப்படுகின்றன. இந்த மாற்றத்தின் மதிப்பு என்பது அழகியலோடு, பண்பாட்டோடு தொடர்புடையது. இதன் மதிப்பு என்பது, சூழலின் அழகை மேம்படுத்துவது. விலை மதிப்பற்றது.
38 வயதான எஸ்.ஜெயராஜ் சிவகங்கையில் இருந்தது மதுரைக்கு பஸ்பிடித்து வந்து சேர்கிறார். பூமாலை தொடுத்தல் பற்றிய எல்லா விஷயங்களையும், நுட்பங்களையும் அறிந்தவர். 16 வருடங்களாக நுட்பமான அழகிய மாலைகளை உருவாக்கி வருபவர். எந்த விதமான மாலையையும் தன்னால் ஒரு புகைப்படத்தைப் பார்த்து உருவாக்கி விடமுடியும் எனப் பெருமையுடன் கூறுகிறார்.
இரண்டு நாட்கள் முன்பு பூமாலை தொடுப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை எனச் சொல்கிறார் இராமச்சந்திரன். ’பூ தொடுப்பதற்கு நல்ல ட்ரெயினிங் வேணும், இருந்தா, கொஞ்சம் பணம் போட்டு 2 கிலோ பூவ வாங்கி, தொடுத்து வித்தா, ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம்’, என்கிறார். ‘ஒரு கிலோ மல்லிகைப் பூவில 4000-5000 மொட்டு இருக்கும். தொடுத்து வித்தா 150 ரூபாய் லாபம் கிடைக்கும்.. அப்பறம் உதிரிப்பூவக் கூறு போட்டு வித்தாலும் லாபம் கிடைக்கும்’, என்கிறார் மேலும்.
மாலை தொடுப்பதற்கு நுட்பமும் வேகமும் அவசியத் தேவை எனச் சொல்லும் இராமச்சந்திரன், நமக்கு அதைச் செயல்முறை விளக்கமாகக் காண்பிக்கிறார். வாழை நாரை இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் மல்லிகை மொட்டுக்களை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மொட்டுக்கள் வெளியே பார்க்குமாறு வைத்து, நாரால் பிணைக்கிறார். இதையே மீண்டும் மீண்டும் செய்யச் செய்ய, மாலை அவர் கரங்களில் வளர்கிறது.
’இதை ஏன் தொழில்கல்வி நிலையங்கள்ல, கல்லூரிகள்ல சொல்லிக் கொடுக்கக் கூடாது? இது வாழ்க்கைக் கல்வி.. நான் கூடச் சொல்லிக் குடுக்க முடியும்’, என்கிறார் இராமச்சந்திரன்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை பூ மார்க்கெட்டில், பூத்தொடுப்பது ஒரு குடிசைத் தொழில் போலச் செயல்படுகிறது என்கிறார் இராமச்சந்திரன். ‘தொடுக்கப்பட்ட பூமாலைகள் தோவாளையில் இருந்தது திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்குப் போகிறது.. இந்த மாதிரி இங்கே ஏன் செய்யக் கூடாது. நிறைய பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து ஏற்பாடு செஞ்சா இது ஒரு நல்ல மாடலா இருக்கும்.. மல்லிகை பெருமளவில் விற்பனையாகும் மதுரையில் ஏன் இது இருக்கக் கூடாது?’
2023 ஃபிப்ரவரி மாதம், தோவாளை மல்லிகை மார்க்கெட்டின் பொருளாதாரக் கூறுகளை அறிந்து கொள்ள, ‘பரி’, யின் சார்பில் பயணித்தோம். நாகர்கோவிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள தோவாளை என்னும் அழகிய சிறுநகரம் மலைகளாலும், பசுமையான வயல்களாலும் சூழப்பட்டுள்ளது.. பின்னணியில் பெரும் காற்றாலைகள் அமைந்துள்ளன. நகரின் பெரும் வேப்ப மரத்தின் அடியில் இந்த மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டுக்கான மல்லிகைப்பூக்கள் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தலங்களில் இருந்தது வருகின்றன. நாரில் தொடுக்கப்பட்ட மல்லிகைப் பூமாலைகள் தாமரை இலைகளில் பொதியப்பட்டு, பனையோலைக் கூடைகளில் வைக்கப்படுகின்றன. நாம் சென்ற அன்று மல்லிகையில் விலை கிலோ ஆயிரம் என விலை போனது. இங்கே பெரும் வணிகம் தொடுக்கப்பட்ட மாலைகள். ஆனால், மார்க்கெட்டில், பூத்தொடுக்கும் பெண்கள் இல்லை. எங்கே எனக் கேட்டோம். ‘எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள்’, என மார்க்கெட்டுக்குப் பின்னால் இருக்கும் வீதியைக் காட்டுகிறார்கள்.
அந்த வீதிக்குச் சென்று, 80 வயதான மீனா என்னும் மல்லிகைப் பூ மாலைகளை (பிச்சிப்பூ மற்றும் ஜாதிமல்லி) உருவாக்கும் பெண்மணியைச் சந்தித்தோம். அவர் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கவில்லை. அது வியப்பாக இருந்தது. ஏன் என வியப்பாகக் கேட்டோம். ‘எனக்குப் பூ தெரியும்.. ஆனா ஆட்கள்தான் கிட்டே வரும் வரையில் தெரிவதில்லை’. அவர் விரல்கள் அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் இயங்குகின்றன.
மீனாவின் இந்தத் திறனுக்கேற்ற கூலி கிடைப்பதில்லை. 200 கிராம் பிச்சிப் பூவை சரமாமக் கட்டினால், அவருக்கு ரூபாய் 30 கூலியாகக் கிடைக்கிறது. இதைச் செய்ய அவருக்கு ஒரு மணிநேரம் பிடிக்கிறது. மதுரை மல்லிகையை சரமாகக் கட்டினால், கிலோவுக்கு ரூபாய் 75 கூலியாகக் கிடைக்கிறது. இதே வேலையை அவர் மதுரையில் செய்தால், அவருக்கு இரண்டு மடங்கு கூலியாகக் கிடைக்கும். இங்கே நல்ல நாளில், 100 ரூபாய் கூலியாகக் கிடைக்கும் என்கிறார் மீனா, தன் கையில் இருக்கும் மல்லிகை சரத்தைப் பந்தாக உருட்டியபடி.
மாற்றாக மாலைகளைக் கட்டினால், அதற்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்.
மதுரைப்பகுதியில், தினமும் சராசரி 1000 கிலோ மல்லிகை, சரங்களாகவும், மாலைகளாகவும் உருவாக்கப்படுகின்றன என ஊகிக்கிறார் இராமச்சந்திரன். இந்தப் பணியில் பெரும் சவால்கள் உள்ளன. மாலைகளும், சரங்களும் மிக விரைவாகக் கட்டப்பட வேண்டும். ‘இல்லன்னா, மொட்டு வெடிச்சிரும்.. பூ வெடிச்சிருச்சின்னா, அதன் மதிப்பே குறைந்து விடும்’, எனச் சுட்டிக் காட்டுகிறார்.. ‘இந்தப் பூ மாலைகளை, சரங்களைத் தொடுக்கும் பெண்களுக்கென ஏன் தனியான இடங்களை சிக்பாட் தொழிற்பேட்டையில் ஒதுக்கக் கூடாது? குளிர்பதன இடங்களை ஒதுக்கினால், மொட்டு வெடிக்காது.. சரம் தொடுப்பதும் வேகமாக நடக்கும் இல்லையா?’. இதில் வேகம் மிகவும் முக்கியம்.. அப்போதுதான் மல்லிகை மொட்டுக்கள் வெடிக்காமல், வெளிநாடு வரை போக முடியும்’.
’நான் மல்லிப்பூவ கனடாவுக்கும் துபாய்க்கும் ஏற்றுமதி செஞ்சிருக்கேன்.. அங்கே போற வரைக்கும் ஃப்ரெஷ்ஷா இருக்க வேணாமா?’ என்று சொல்பவர், இதிலுள்ள போக்குவரத்துப் பிரச்சினைகளைப் பேசுகிறார். மதுரையில் இருந்து பூக்கள் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. மாறாக, மதுரையிலிருந்தே ஏற்றுமதி செய்யும் வசதிகள் வேண்டும் என வலியுறுத்திச் சொல்கிறார்.
‘நமக்கென ஏற்றுமதி வளாகம் தனியாக வேண்டும். இந்த வணிகத்தை முன்னெடுக்க, சந்தைப்படுத்த உதவிகள் வேண்டும். இங்கே ஏற்றுமதிச் சந்தைகளுக்குத் தேவையான வகையில் பேக் செய்து தருபவர்கள் இல்லை. கன்னியாகுமரிக்கோ சென்னைக்கோ செல்ல வேண்டியிருக்கிறது. அது தவிர, ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தளங்களில் உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சி கிடைத்தால் நன்றாக இருக்கும்’, என அவர் மகன் பிரசன்னா குறுக்கிட்டுச் சொல்கிறார்
மதுரை மல்லிகைப் பூவுக்கு புவியியல் சார் குறியீடு 2013 ஆம் ஆண்டிலேயே கிடைத்து விட்டது. ஆனால், அதனால் பெரிதான பயனில்லை.. மற்ற பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்களையும் மதுரை மல்லி என ஏற்றுமதி செய்கிறார்கள். இதைப் பற்றி பலமுறை பேசியுள்ளேன்.. ஆனால், உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை’, என்கிறார் பிரசன்னா வருத்தத்துடன்.
நாம் சந்தித்த ஒவ்வொரு உற்பத்தியாளரும், வணிகரும் சொல்வதையே இராமச்சந்திரனும் முடிவாகச் சொல்கிறார் – மதுரைக்கென ஒரு மல்லிகை செண்ட் தொழிற்சாலை வேண்டும். அது அரசு நடத்துவதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திச் சொல்கிறார் இராமச்சந்திரன். அனைவரும் தீர்வாக முன்வைக்கும் இந்த சென்ட் ஃபேக்டரி உண்மையிலேயே சரியான தீர்வுதானா?
2022 ஆம் ஆண்டு, நாம் சந்தித்த ஒரு ஆண்டுக்குப் பின்னர், இராமச்சந்திரன், அமெரிக்காவிலுள்ள தன் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தார். ஆனாலும் மல்லிகை வணிகம் மீதான தன் கவனத்தை இம்மியும் குறைத்துக் கொள்ளவில்லை. அவரது ஊழியர்களும், அவருடன் வணிகத் தொடர்பிலுக்கும் உற்பத்தியாளர்களும், அவர் மல்லிகைப்பூ ஏற்றுமதிக்காக கடுமையாக உழைத்து வருகிறார் எனச் சொல்கிறார்கள்.
*****
’சந்தை என்னும் நிறுவனம், பல நூற்றாண்டுகளாக, வணிகப் பரிவர்த்தனைக்கான மிக முக்கியமான இடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில்தான், இது நடுநிலையான, தன்னைத்தானே நடுநிலையாக நிர்வகித்துக் கொள்ளும் ஒன்று என்னும் சொல்லாடல் வலுவாக முன்வைக்கப்படுகிறது. சொல்லப் போனால், இன்று சந்தை ஒரு உயர்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறது’, என்கிறார் ரகுநாத் நாகேஸ்வரன். இவர் ஜெனிவா பல்கலைக்கழகத்தில், சுதந்திர இந்தியாவில் பொருளாதாரப் பொது நலக் கொள்கைகள் பற்றிய முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
’சந்தை என்பது சுதந்திரமாக, அரசு இடையீடல்களின்றி இயங்க வேண்டும். அப்போதுதான் அது செயல்திறன் மிக்க வகையில் இயங்க முடியும். சந்தையில் செயல்திறன் குறைந்த விளைவுகள் ஏற்பட்டால், அது தேவையற்ற, தவறான அரசின் இடையீடல்களின் விளைவு என எளிதாக மடைமாற்றப்படுகிறது. இந்தச் சித்திரம், வரலாற்று ரீதியாக துல்லியமற்ற ஒன்று’.
‘சுதந்திரச் சந்தையில் பங்குபெறும் பல தரப்புகளுக்கும், பல்வேறு அளவுகளில் சுதந்திரம் உள்ளது. அனைத்து தரப்புகளும் சமத்துவமான வகையில் பங்கெடுக்க முடிந்தால், நல்லது. ஆனால், சந்தையில் இயங்கும் தரப்புகளில் சிலரால், தங்கள் பலத்தை வெளிப்படையாகச் செலுத்த முடிகிறது. சந்தை வெற்றிகரமாக நடக்க வணிகர்கள் முக்கியமாகத் தேவைப்படும் சக்தி. ஆனால் அவர்களிடம் இருக்கும் முக்கியமான வணிகம் தொடர்பான தரவுகள் சந்தையின் போக்கை மாற்றிவிடும் சக்தி கொண்டவை. அவை அவர்களிடம் இருப்பதாலேயே அவர்கள் வலுவான தரப்பாக விளங்குகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்’, என விளக்குகிறார் இரகுநாத்.
’வணிகத்தில் முக்கியமான தரவுகள் எல்லாத் தரப்புகளுக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை. இந்த சமத்துவமின்மைதான் ஒரு தரப்புக்குப் பலமாக உள்ளது என்பதை உணர பெரும் ஆராய்ச்சிகள் தேவையில்லை என்கிறார் இரகுநாத். இந்த சமத்துவமின்மை சாதி, வர்க்கம் மற்றும் பாலின வேறுபாடுகளால் உருவாகிறது. இதை நாம் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து வாங்குகையில், பொருட்களை தொழிற்சாலையில் இருந்தது வாங்குகையில், நமது திறன் பேசிகளில் இருந்து தரவிறக்குகையில், மருத்துவ வசதிகளைப் பெறுவதில் புரிந்து கொள்ள முடியும்.
‘சந்தையில், பொருள் மற்றும் சேவைகளுக்கான விற்பனை விலையை நிர்ணயிப்பதில், உற்பத்தியாளர்களுக்கும் பங்கிருக்கிறது. ஆனால், அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
“விவசாயிகளிலும் வர்க்க வேறுபாடுகள் உள்ளன. நாம் அந்த தரவுகளையும், சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மல்லிகைத் தொழிலையே உதாரணமாக எடுத்துக் கொண்டால், இங்கே அரசே முன்வந்து ஒரு செண்ட் தொழிற்சாலை தொடங்க வேண்டுமா? அல்லது இங்கே ஏற்றுமதிக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, மதிப்புக்கூட்டலைச் செய்து சிறு சிறு உற்பத்தியாளர்களுக்கும் பலனளிக்கும் வகையில் திட்டங்களைத் தீட்ட வேண்டுமா என்பது போன்ற தீர்வுகளை யோசிக்க வேண்டும்’.
*****
மல்லிகை ஒரு விலையுயர்ந்த மலர். பன்னெடுங்காலமாகவே வாசனைத் திரவியங்கள் – மொட்டு, மலர், தோல், வேர், எண்ணெய் போன்றவை பூசையறைகளில் பக்தியுணர்வைக் கூட்ட, சமையலறையில் உணவின் சுவையைக் கூட்ட, படுக்கையறையில் ஆசையை அதிகரிக்க என உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. சந்தனம், கற்பூரம், ஏலக்காய், குங்குமப்பூ, ரோஜா, மல்லிகை போன்ற வாசனைத் திரவியங்களில் முக்கியமானவை. மக்களுக்குப் பரிச்சயமானவை. இவை பொதுவெளிகளில் எளிதாகக் கிடைப்பதால், நமக்கு விசேஷமானவையாகத் தோன்றுவதில்லை. ஆனால், வாசனைத் திரவியத் தொழில்நிபுணர்கள் அவ்வாறு கருதுவதில்லை.
வாசனைத் திரவியத் தொழில் பற்றிய அறிமுகம் நமக்கு இந்திருந்து தொடங்குகிறது
வாசனைத் திரவியம் தயாரிப்பதில், முதல் நிலை ‘காங்க்ரீட்’, என அழைக்கப்படுகிறது. பூக்களில் உள்ள மணம் தரும் எசன்ஸ், கரைப்பான்கள் வழியே அரைத் திட நிலையில், மெழுகு போன்ற பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் இதிலுள்ள மெழுகு போன்ற பொருளும் பிரித்தெடுக்கப்பட, திரவ நிலையில் முழுமையான வாசனைத் திரவம் (absolute) கிடைக்கிறது. இதை நேரடியாகப் பயன்படுத்த முடியும்.
ஒரு கிலோ மல்லிகை வாசனைத்திரவியத்தின் விலை கிட்டத்தட்ட 3.26 லட்சம் ஆகும்
இராஜா பழனிசாமி ஜாஸ்மின் சி.இ ப்ரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் இயக்குநர். மல்லிகை உள்ளிட்ட மலர்களில் இருந்தது வாசனைப் (Concrete and absolute) பொருட்களைத் தயாரிக்கும் உலகின் மிகப் பெரும் நிறுவனம் இதுவாகும். ஒரு கிலோ மல்லிகை வாசனைத் திரவம் (absolute) தயாரிக்க, ஒரு டன் குண்டு மல்லி (மதுரை மல்லி) தேவைப்படும் என நமக்கு விளக்கிச் சொல்கிறார். அவரது சென்னை அலுவலகத்தில் அமர்ந்தவாரே, நமக்கு உலக வாசனைத் திரவியத் தொழிலை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
‘நாம் தயாரிப்பது நுகர்வோர் உபயோகிக்கும் இறுதியான வாசனைத் திரவியமல்ல. நாம் தயாரிப்பது இயற்கையாக மலர்களில் இருந்தது பிரித்தெடுக்கப்படும் வாசனைப் பொருள் மட்டுமே. சந்தையில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள், நாம் இங்கே தயாரிக்கும் வாசனைப் பொருட்கள் போல பலவற்றை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் நாலுவகை மல்லிகை ரகங்களில் இருந்தாலும், குண்டு மல்லி மற்றும் ஜாதி மல்லி ரகங்களில் இருந்துதான் அதிகம் வாசனைப் பொருட்கள் தயாராகின்றன. ஜாதிமல்லியில் இருந்து தயாராகும் முழுமையான வாசனைப் பொருள் (absolute) கிலோவுக்கு 3000 அமெரிக்க டாலரும், ஜாதிமல்லி வாசனைப் பொருள் கிலோவுக்கு 4000 அமெரிக்க டாலரும் விலை போகிறது
’மல்லிகைப் பூவில் இருந்து தயாராகும் முதல் நிலை வாசனைப் பொருளான காங்ரீட் (concrete) மற்றும் முழுமையான வாசனைப் பொருள் (absolute) வகைகளில் விலைகள் உள்ளூர் பூக்களின் விலையைப் பொறுத்து மாறுபடுகின்றன. பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாசனைப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன’, என்கிறார் இராஜா பழனிசாமி. ‘என் தொழிற்சாலையில் வருடம் 1000-1200 டன் குண்டுமல்லிப் பூக்களில் இருந்தது 1 முதல் 1.2 டன் முழுமையான வாசனைப் பொருள் (absolute) தயாரிக்கிறோம். உலகத்தில் இப்பொருளுக்கான தேவை 3.5 டன்கள்’, என்கிறார் இராஜா பழனிசாமி. இராஜாவின் இரண்டு தொழிற்சாலைகளும், இன்னும் சிலரும் சேர்ந்து, உற்பத்தியாகும் பூக்களில் 5%த்தை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள்.
இது வியப்பான தகவலாக இருக்கிறது. நாங்கள் சந்தித்த ஒவ்வொரு வியாபாரியும், பூ உற்பத்தியாளரும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு, ‘செண்ட் தொழிற்சாலையே தீர்வு’, எனச் சொல்லியிருந்தார். இராஜா புன்னகைக்கிறார். ‘எங்களது கொள்முதல் மிகக் குறைவுதான் என்றாலும், பூக்களின் விலை வீழ்ச்சியை ஓரளவு தடுக்க உதவுகிறது’. ‘அழகுப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் ஒரு விலையுயர் பொருள் வணிகம், இலாபம் அதிகம் என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், இது அரிசி, கச்சா எண்ணெய் போன்ற வணிகப் பொருள் மட்டுமே (Commodity).
ராஜாவுடனான நமது உரையாடல் உலகின் பல இடங்களுக்குச் செல்கிறது. இந்தியாவிலிருந்து ஃப்ரான்ஸ் நாடு வரை. மதுரையின் மல்லிகை மார்க்கெட் தொடங்கி, உலகின் மிகப் பெரும் வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனங்களாகிய டியோ (Dior), கெயோலான் (Guerlain), லஷ் (Lush), புல்கரி (Bulgari) வரை நீள்கிறது. முற்றிலும் மாறுபட்ட இருவேறு உலகங்களாக இருந்தாலும், ஒருவகையில் அவைகளுக்கிடையே ஒரு தொடர்பும் இருப்பது பற்றி இந்த உரையாடல் வழி அறிந்து கொள்கிறேன்.
வாசனைத் திரவிய வணிகத்தின் தலைநகர் ஃப்ரான்ஸ். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து மல்லிகையில் இருந்தது பிரித்தெடுகப்படும் வாசனைப் பொருளை வாங்கி வருகிறார்கள். ‘முதலில் ஜாதிமல்லி வாசனைப் பொருளை வாங்கத்தான் வந்தார்கள். இங்கு வந்த பின்னர், பல்வேறு மல்லிகை ரகங்கள், பூக்கள் எனப் பெரும் புதையலைக் கண்டடைந்தார்கள்’, என்கிறார் இராஜா.
1999 ஆம் ஆண்டு, டியோ (Dior) நிறுவனம், ஜேடோ (J’adore) என்னும் வாசனைத் திரவியத்தைத் தயாரித்து வெளியிட்டது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. டியோ நிறுவனத்தின் இணைய தளத்தில், அதை உருவாக்கிய வாசனை திரவிய தொழில்நுட்பர். ‘லட்சிய வாசனை திரவியம்.. இல்லாத ஒரு மலரில் இருந்து உருவாக்கப்பட்டது போல’, என வர்ணிக்கிறார். இந்த வாசனை திரவியத்தில், மதுரை மல்லியின் ஒரு பகுதி அதன், புதிய, தனித்துவமான சாயல்களுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. ’அது ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியது’, என நமக்கு விளக்குகிறார் இராஜா. கழுத்தில் தங்கச் சரிகை சுற்றப்பட்ட கண்ணாடிக் குப்பிகளில் அடைக்கப்பட்டு அது, ’Opulent Jasmine Sambac’, என்னும் பெயரில் ஃப்ரான்ஸ் மற்றும் உலக வாசனை திரவியச் சந்தைகளைச் சென்றடைந்தது.
அதற்கு முன்பும், மதுரையைச் சுற்றியிருந்த சந்தைகளில் இருந்தது பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. ஆனால், தினமும் அல்ல. வருடத்தில் பெரும்பாலான நாட்கள், பூக்களின் விலை மிக அதிகமாக இருக்கும். வாசனைத் திரவிய உற்பத்தியாளர்களுக்கு அது கட்டுபடியாகாது.
‘சந்தையில் மல்லிகைப் பூக்களின் விலையைப் பாதிக்கும் எல்லா விஷயங்களையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். எங்கள் நிறுவனத்துக்காக மல்லிகை கொள்முதல் செய்யும் மேலாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், தினமும் மல்லிகை விலைகளை மிகவும் கவனமாகக் கவனித்து வருகிறார்கள். எங்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்கையில், கொள்முதலைச் செய்கிறார்கள். எங்களால் சந்தை விலையைக் கட்டுபடுத்த முடியாது. அதை சந்தைதான் முடிவு செய்யும்’, என்கிறார் இராஜா.
’எங்கள் வேலை சந்தையில் பூக்களின் விலையைக் கவனித்துக் கொண்டிருப்பது. இந்தத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் இருப்பதால், விலைகளை ஓரளவு ஊகிக்க முடியும். எப்போதெல்லாம் நல்ல மகசூல் கிடைக்கிறது, அப்போது தேவைப்படும் அளவுக்கு, கட்டுபடியாகும் விலையில் பூக்கள் கிடைக்கும். அப்போது நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்முதல் செய்து உற்பத்தியை அதிகரிப்போம்’.
’வேளாண் பொருள் உற்பத்தி என்பதால், இதன் உற்பத்தி சீராக இருப்பதில்லை. எனவே, தொழிற்சாலையின் உற்பத்தியும் அதைப் பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும். தினமும் இத்தனை டன் என பூக்களைக் கொள்முதல் செய்ய முடியாது. இது ஒரு ஸ்டீல் தொழிற்சாலை போலல்ல. தினமும் இத்தனை டன் உற்பத்தி என இயக்குவதற்கு. பூக்கள் வருவதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். திடீரென மிக அதிகமாக பூக்கள் வரும். அப்போது அதைக் கொள்முதல் செய்து உற்பத்தி செய்யுமளவுக்கு அதிகக் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களை வைத்திருக்கிறோம். இதனால், எதிர்பாராமல் வரும் அதிக வரத்தையும் நம்மால் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது.
’வருடத்தில் 20-25 நாட்கள் இப்படி அதீத வரத்து இருக்கும். அந்த நாட்களில் 12-15 டன்கள் வரை பூக்களை நாம் உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும். மற்ற நாட்களில் 1-3 டன்கள் வரையே பூக்கள் வரும். சில நாட்களில் வரத்து சுத்தமாகவே இருக்காது’, என்கிறார் இராஜா
மல்லிகைப் பூவுக்கான நல்ல விலை கிடைக்க வேண்டுமானால், அரசே மல்லிகை செண்ட் தொழிற்சாலை அமைப்பதுதான் தீர்வு என உற்பத்தியாளர்களும், வணிகர்களும் நம்புகிறார்களே, உங்கள் கருத்து என்ன என இராஜாவிடம் கேட்டோம். அதற்கு அவர், ‘மல்லிகை வாசனை திரவியத்துக்கான தேவையும் சந்தையும் சீரான ஒன்றல்ல. உற்பத்தியாளர்களும், வணிகர்களும் நம்பினாலும், சென்ட் ஃபேக்டரி என்பது லாபகரமான தொழில் அல்ல. எனவே இதில் அரசாங்கம் முதலீடு செய்ய வாய்ப்புகள் இல்லை’, என வாதிடுகிறார். மல்லிகை வாசனைத் திரவியத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை இதனால் மாறப் போவதில்லை. எனவே கொள்முதலும் அதிகரிக்காது. எனவே, அரசாங்கம் இன்னொரு ஃபேக்டரியை உருவாக்கினால், அவர்களும் ஏற்கனவே வாங்கும் அதே நிறுவனங்களுக்குத்தான் விற்க வேண்டியிருக்கும்’, என்பது அவர் வாதம்.
’மிகச் சிறந்த தரத்தில் வாசனை திரவியம் தயாரிக்க வேண்டுமானால், மல்லிகை மலர்ந்தவுடன் அதை உற்பத்திக்குப் பயன்படுத்தி விட வேண்டும். ஏனேனில், மல்லிகை மலரில் தொடர்ந்து இரசாயன மாற்றம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். மலர்ந்தவுடன் அதில் மிகச் சிறந்த நறுமணம் இருக்கும். நேரம் ஆக ஆக, இரசாயன மாற்றத்தால், நறுமணம் மாறி, நாற்றம் அடிக்கத் தொடங்கி விடும்’, என விளக்குகிறார் இராஜா.
மல்லிகை மலரில் இருந்து வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் முறையை நன்றாக அறிந்து கொள்ள, தன் தொழிற்சாலைக்கு வருமாறு நம்மை அழைத்தார் இராஜா
*****
2023 ஃபிப்ரவரி மாதத்தில் ஒருநாள், நமது பயணம் மீண்டும் மாட்டுத்தாவணி மல்லிகை மார்க்கெட்டில் தொடங்கியது. இது எமது மூன்றாவது பயணம். இன்று மார்க்கெட் மிகக் குறைவான மக்களுடன் அமைதியாக இயங்கியது ஆச்சர்யமாக இருந்தது. மல்லிகை மலர் வரத்து மிகக் குறைவாக இருந்தது. ஆனால், ஏராளமான மற்ற மலர்கள் இருந்தன. ரோஜா, ட்யூப்ரோஸ், சாமந்தி, தவனம் எனப் பலவகையான மலர்கள் இருந்தன. குறைவான வரத்து இருந்தாலும், மல்லிகை கிலோ 1000 ரூபாய்க்கே விலை போனது. இன்னிக்கு விஷேஷ நாள் இல்லை என வணிகர்கள் புலம்பினார்கள்.
நாம் மார்க்கெட்டை விட்டு நிலக்கோட்டை தாலூக்காவுக்குப் புறப்பட்டோம். அது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. திரு.இராஜா அவர்களின் தொழிற்சாலைக்குத் தேவையான குண்டு மல்லி மற்றும் ஜாதி மல்லி மலர்களை உற்பத்தி செய்து தரும் உழவர்கள் அங்குதான் இருக்கிறார்கள். இங்கு நான் கேட்ட கதை மிகவும் வியப்பானது
20 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை மலர் உற்பத்தியில் இருக்கும் மரிய வேளாங்கண்ணி ஒரு முற்போக்கு விவசாயி. மல்லிகை உற்பத்தி அதிகரிக்க வேண்டுமானால், ஆடுகளை விட்டு, மல்லிகை இலைகளைத் தின்றுவிடச் செய்து விட வேண்டும் என்னும் உற்பத்தி இரகசியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
’இது மதுரை மல்லிக்கு மட்டுமே சரியா வரும்’, என பசுமையாக சிறு நிலப்பரப்பில் நின்று கொண்டிருக்கும் தன் வயலைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். ‘உற்பத்தி ரெண்டு மடங்காக் கிடைக்கும்.. சில சமயம் மூன்று மடங்கு கூடக் கிடைக்கும்’, என மேலும் விளக்கினார். அவரது செய்முறை நம்பமுடியாத அளவுக்கு எளிமையாக இருந்தது. முதலில், சில வெள்ளாடுகளை விட்டு, வயலில் உள்ள மல்லிகைச் செடியின் இலைகளை மேய்ந்து விட வேண்டும். அடுத்த 10 நாட்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, பின்னர் உரமிட்டு நீர் பாய்ச்சினிஆல், 15 ஆம் நாள் செடிகள் மீண்டும் துளிர் விடும். 25 ஆவது நாளில், அதிக மகசூலைப் பெறலாம்.
இது இங்கே சாதாரணமாக நடக்கும் விஷயம்தான் எனச் சிரித்துக் கொண்டே சொல்கிறார். ‘வெள்ளாடுகளை மேயவிட்டு, மல்லிச் செடிகளைப் பூக்க வைப்பது நமது பாரம்பரிய அறிவு. இதை வருஷத்துக்கு மூணுவாட்டி செய்வோம். வெள்ளாடுகள் மேய்கையில் புழுக்கை போட்டுச் செல்வது செடிகளுக்கு உரமாகும். இதற்கு ஆடு வச்சிருக்கறவங்க காசு எதுவும் வாங்க மாட்டாங்க.. வெறும் டீயும், வடையும் வாங்கிக் கொடுத்தாப் போதும். ஆனா வயல்லியே கிடை போடனும்னா அதுக்கு 100 ஆட்டுக்கு 500 ரூவா கொடுக்கனும். இதனால மல்லிகை உற்பத்தியாளருக்கு லாபம்தான்’, என்கிறார் மரிய வேளாங்கண்ணி.
ஜேசீஈபிஎல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நமக்கு மேலும் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. காங்ரீட் மற்றும் வாசனைத் திரவியங்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் வழியே நம்மை அழைத்துச் சென்று உற்பத்தி முறைகளை விளக்குகிறார்கள். நாம் சென்ற போது மல்லிகை மலர்கள் அங்கே இல்லை. ஃபிப்ரவரி மாதத்தில் வரத்து குறைவு. விலை மிக அதிகம் என விளக்கம் சொன்னார்கள். ப எனவே வேறு மலர்களில் இருந்தது வாசனை திரவியம் தயாரிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருந்தன. இயந்திரங்கள் வழியே நீராவி எழும் சத்தம், ஆங்காங்கே மூடிகள் திறக்கும், மூடும் சத்தம் என தொழிற்சாலை, அதற்கே உரிய குணங்களோடு இயங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தளத்தின் பூக்களில் இருந்தது தயாராகும் மலர்களின் மணம் நம் மனதுள் ஒரு தெய்வீக உணர்வை உருவாக்கியது. மிகக் கூர்மையாக அந்த திரவிய வாசனைகள் எழுந்து வந்து நம் நாசிகளுக்குள் செல்கின்றன. முகம் மலர்கிறது.
51 வயதான வி.கதிரொளி, ஜேசிபீஈஎல் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறைத்தலைவராக இருக்கிறார். நாம் நுகர்ந்து அறிந்து கொள்ள பல்வேறு வாசனைத் திரவியங்களை நம் முன் ஒரு சிரிப்புடன் வைக்கிறார். மலர்கள் அடங்கிய பூக்கூடைகள் ஒரு நீண்ட மேசையின் மீது வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வாசனைத் திரவியங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கைகள் லேமினேட் செய்யப்பட்டு அவற்றின் அருகே வைக்கப்பட்டுள்ளன. அருகில், வாசனைத் திரவியங்கள் சிறு குப்பிகளில் வைக்கப்பட்டுள்ளன. வாசனைத் திரவியங்களை நாம் நுகர்ந்து அறிந்து கொள்ள, நீண்ட காகிதத் தாள்கள் உள்ளன. அவற்றை, திரவியம் உள்ள குப்பிகளுக்குள் நுழைத்து, கொஞ்சம் திரவியத்தை அந்தத் தாள்கள் உறிஞ்சக் கொடுத்து, பின்னர், அவற்றை நமக்குத் தருகிறார். நுகர்ந்து, நாம் சொல்லும் பதில்களை கவனமாகக் குறித்துக் கொள்கிறார்.
ஃபிரங்கிபானி, என்னும் திரவியம் இனிப்பான, கவர்ச்சியான ஒரு நறுமணத்தைத் தருகிறது. ட்யூப்ரோஸ் மலரின் நறுமணம் ஒரு வலுவான குத்து என்னும் உணர்வைத் தருகிறது. இருவேறு விதமான நறுமணங்களைத் தரும் ரோஜா ரகங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட திரவியங்கள் அடுத்து வருகின்றன. அடுத்து பிங்க் மற்றும் வெள்ளைத் தாமரையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் திரவியங்கள் – மென்மையான மலர்த் தன்மையுடன் இருக்கின்றன. கிரைசாந்திமம் மலர்களில் இருந்தது உற்பத்தி செய்யப்பட்ட திரவியம் இந்தியத் திருமண விழாக்களை நினைவுறுத்துகின்றன.
அந்த ஆய்வுக் கூடத்தில், மூலிகைகள், மசாலா வகைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கலும் இருந்தன. வெந்தயத்தில் இருந்து உருவான திரவியம், தாளிப்பு வாசனை கொண்டிருந்தது. கறிவேப்பிலையில் இருந்து உருவான திரவியம் என் பாட்டியின் சமையலை நினைவு படுத்தியது. ஆனால், மல்லிகையில் இருந்து உருவான திரவியம்தான் நான் அங்கு கண்டவற்றுள் மிகச் சிறந்ததாக இருந்தது. இந்தத் திரவிய வாசனைகளை நுகர்ந்து, அதை வார்த்தைகளில் சொல்ல சிரமப்பட்டேன். ‘பூவின் நறுமணம், இனிப்பான, க்ரீன், பழ வாசனை, மெல்லிய தோல் வாசனை’, என்னும் வார்த்தைகளைச் சொல்லி எனக்கு உதவ முயற்சிக்கிறார். உங்களுக்கு மிகவும் பிடித்த வாசனை எது எனக் கேட்கிறேன்.. ஏதாவது ஒரு பூவைச் சொல்வார் என்னும் எதிர்பார்ப்புடன்.
‘வெனிலா’, என சிரித்துக் கொண்டே சொல்கிறார். அவரும், அவரது குழுவும், அவரது நிறுவனத்துக்கே உரித்தான தனித்துவமான ஒரு வெனிலா திரவியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தனித்துவமான ஒரு வாசனைத் திரவியத்தை உருவாக்க வேண்டுமெனில், மதுரை மல்லியைத்தான் உபயோகிப்பேன் என்று கூறுகிறார். வாசனை திரவியம் மற்றும் அழகுப் பொருட்கள் துறைக்கான மிகச் சிறந்த வாசனைத் திரவியங்களை உருவாக்குவதில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் கதிரொளி.
ஜேசிபீஇஎல் தொழிற்சாலைக்கு அருகே, மதுரை நகருக்கு வெளியில், பசுமையான வயல்களில், உற்பத்தியாளர்கள் மல்லிகை மலர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வயலில் இருந்து உற்பத்தியாகும் மல்லிகை மலர்கள், கோவில்களுக்குள், திருமண மண்டபங்களுக்குள், கண்ணாடிக் குடுவைகளுக்குள், சாலைக் கடைகளில், பெண்களின் கூந்தலில் என எங்கும் நிறைந்திருக்கப் போகின்றன. தம் தெய்வீக மணத்தைப் பரப்பியபடி!
இந்த ஆராய்ச்சி 2020 ஆம் ஆண்டுக்கான அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சி நிதிநல்கையின் வழியே செய்யப்பட்டது.
தமிழில் : பாலசுப்ரமணியம் முத்துசாமி