யானை எப்போதும் தன் ஃபண்டி யை (பயிற்சியாளர்) மறப்பதில்லை என்கிறார் சரத் மொரன். அவர் 90 யானைகளுக்கு மேல் பயிற்சி கொடுத்திருக்கிறார். காட்டுக்குள் தன் மந்தையுடன் இருந்தாலும் கூட தனக்கான ஃபண்டி யை பார்த்தால் மந்தையை விட்டு அவரிடம் ஓடி வந்து விடும் என்கிறார் அவர்
பில்கானாவில் - தற்காலிக பயிற்சி முகாம் - யானைக் கன்று மனித ஸ்பரிசத்துக்கு பரிச்சயப்படுத்தப்படுகிறது. வழக்கமாக மாறும் வரை பல நாட்களுக்கு அந்த பயிற்சி அளிக்கப்படும். “பயிற்சியில் சிறு வலி ஏற்பட்டாலும் பெரிய விஷயமாகக் கருதப்படும்,” என்கிறார் சரத்.
நாளடைவில் யானைக் கன்றை சுற்றியிருக்கும் மக்களால் அச்சுறுத்தல் உணர்வு ஏற்படாத வரை மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
விலங்குக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலுள்ள நட்பை குறிக்கும் பாடல்களை சரத்தும் பிற பயிற்சியாளர்களும் யானையிடம் மென்மையாக பாடுகின்றனர்.
”மலையில் நீ பெரிய காகோ
மூங்கிலை உண்டு கொண்டிருந்தாய்.
பயிற்சியாளரின் விருப்பத்தில்
நீ பள்ளத்தாக்குக்கு வந்தாய்.
நான் உனக்கு கற்றுக் கொடுக்கிறேன்
வழி சொல்லி கொடுக்கிறேன்.
கற்றுக் கொள்வதற்கான நேரம் இது!
இந்த ஃபண்டி
உன் முதுகில் ஏறி
வேட்டைக்கு செல்வேன்.”
கொஞ்ச நாட்களுக்கு பிறகு, யானையின் இயக்கத்தை கட்டுப்படுத்தவென போடப்பட்டிருக்கும் கயிறுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அகற்றப்பட்டு விடும். ஒரு யானைக்கு பயிற்சி கொடுக்க பல கயிறுகள் பயன்படும் என்கிறார் பயிற்சியாளர். ஒவ்வொரு கயிறுக்கும் ஒவ்வொரு பயன்பாடு இருக்கும். ஒவ்வொரு யானைக்குமென ஒவ்வொரு பாடலும் பழக்கப்படுத்தப்படும். நம்பிக்கை இருக்கும் இம்முறைதான் தொடக்ககாலத்தில் காட்டு யானைகளை பிடிக்கவும் வேட்டையாடவும் பயன்பட்டது.
“என்னுடைய ஊர் யானைகள் அதிகம் இருக்கும் காட்டுக்குள் இருக்கிறது. இளம் வயதிலிருந்து நாங்கள் அவற்றுடன் விளையாடியிருக்கிறோம். அப்படித்தான் பயிற்சி தர நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் பயிற்சியாளர் சரத் மொரன்.
யானைகளுக்கு பயிற்சி கொடுக்க குழுவாக இயங்க வேண்டும். “குழுவின் தலைவர் ஃபண்டி என அழைக்கப்படுவார். பிறகு லுகோதியா, மாஹூத் மற்றும் காசி என அழைக்கப்படும் உதவியாளர்கள் இருப்பார்கள். யானை போன்ற பெரிய விலங்கை கட்டுப்படுத்த குறைந்தது ஐந்து பேர் தேவை. உணவும் நாங்கள் சேகரிக்க வேண்டும்,” என்கிறார் சரத். ஊர் மக்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள்.
அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தின் சிறு ஊரான தொரானியில் வாழ்கிறார் அவர் . அருகேயே டிகிங் காப்புக் காடு இருக்கிறது. மொரன் சமூகத்தின் பயிற்சித் திறன்கள் பல நூற்றாண்டுகள் பெயர் பெற்றவை. ஒரு காலத்தில் யானைகளை பிடித்து போருக்கு பயிற்சி அளித்தவர்கள் அவர்கள். பூர்வக்குடியான அவர்கள் அஸ்ஸாமின் மேற்கு பகுதி மாவட்டங்களிலும் பக்கத்து அருணாசல பிரதேசத்திலும் வாழ்கின்றனர்.
காட்டு யானைகளை பழக்கப்படுத்துவது சட்டவிரோதம் என்றாலும் புதிய யானைக் கன்றுகளுக்கு மனித பழக்கத்தை அறிமுகப்படுத்தவும் வேண்டும். சரத் மற்றும் குழுவினர் போன்ற ஃபண்டி கள் இந்த வேலை செய்ய ஒரு லட்சம் வரை ஊதியம் கொடுக்கப்படுகிறது. மூன்று மாதங்கள் வரை வேலை இருக்கும்.
கிராமத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் முகாம் கவனத்தை ஈர்க்குமிடமாக இருக்கிறது. யானையை கடவுளாக நினைத்து ஆசிர்வாதம் வாங்க மக்கள் வருகின்றனர். யானையின் பயிற்சியாளர், பூசாரியாக கருதப்படுவதால் எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டுக்கு கூட செல்ல முடியாது. பிறர் சமைத்த உணவை உண்ணுவதில்லை. இம்முறைக்கு சுவா என பெயர். யானையை பார்க்க வரும் குழந்தைகளிடம் தன் வீட்டுக்கான பணத்தை கொடுத்தனுப்புவதாக சொல்கிறார் சரத்.
இந்த ஆவணப்படம், அறுவடை விழாவான மக் பிகு காலத்தில் எடுக்கப்பட்டது. வெண்பூசணியுடன் வாத்து சமைக்கப்படுவது கொண்டாட்டத்தின் ஒரு பகுதி ஆகும். “இரண்டு பறவைகளை ஒரு கல்லில் அடிக்கிறோம். யானைக்கு பயிற்சி கொடுப்பதாகவும் ஆகி விடும், மாக் பிகு விழாவை கொண்டாடியதாகவும் ஆகி விடும். வாத்துக் கறி வறுத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றாக உண்ணுவோம்,” என்கிறார் சரத்.
சுற்றி கொண்டாட்டம் நிறைந்திருந்தாலும் இந்த பாரம்பரியம் விரைவில் அழிந்து விடுமோ என்கிற பயம் அவருக்கு ஆழ்மனதில் இருக்கிறது. கற்பதற்கான காலம் அதிகம் என்பதால் இளைஞர்கள் இந்த வேலையில் ஈடுபடுவதில்லை. இளைஞர்கள் இந்த வேலையைக் கற்று பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஊக்கமளிக்க அவர் முயலுகிறார். “கொஞ்ச கொஞ்சமாக நான் பலவீனமாகிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலையை கற்கும்படி கிராமத்து சிறுவர்களிடம் நான் சொல்கிறேன். எனக்கு பொறாமை கிடையாது. அனைவரும் கற்க விரும்புகிறேன். இந்த அறிவு அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும்,” என்கிறார் அவர்.
தமிழில் : ராஜசங்கீதன்