ஜகதீஷ் சோனியும் அவரது மூன்று மகன்களும் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு வந்தனர். இதுவே அவர்களின் முதன்மை வருவாய் ஆதாரமாக இருந்தது.  வறட்சியால் பாதிக்கப்பட்ட பிறகு நிலத்தில் ஒரு நெல் மணியைக் கூட பயிரிட முடியவில்லை. இதனால் அக்குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் கடன் சுமை.

பிறகொரு நம்பிக்கை ஒளி வந்தது. 2016 ஜனவரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்தது. ஆனால், அந்த பட்டியலில் சோனியின் பெயர் இடம்பெறவில்லை.

"பட்வாரி [கிராம பதிவேடுகளின் காப்பாளர்] வயல்களை ஆய்வு செய்ய வரவில்லை. பாதிக்காதவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். வாய்ப்பு கிடைத்தால் அவரை சுட்டுக் கொல்வேன். எப்படியும் நாங்களும் உயிர் பிழைக்கப் போவதில்லை," என்று 80 வயதான அந்த விவசாயி புலம்புகிறார்.

PHOTO • Shirish Khare

அச்சோட்டி கிராமத்தில் 80 வயதாகும் ஜகதீஷ் சோனியும் அவரது குடும்பத்தினரும் வறட்சியால் மொத்த நெற்பயிரையும் இழந்தனர். ரூ.1 லட்சம் கடன் சுமை உள்ள நிலையில், அரசிடமிருந்து தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். ஆனால் நிவாரண நிதிக்கான கணக்கெடுப்பில் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. புகைப்படம்: ஷிரிஷ் கரே

அரசின் அலட்சியத்தால் ஏமாற்றப்பட்டதாக உணரும் அச்சோட்டி கிராம விவசாயிகளில் சோனியும் ஒருவர். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அச்சோட்டியில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இவற்றில் பாதி குடும்பங்கள் மட்டுமே  வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களாக மாநில அரசால் கருதப்படுகிறது.

"எங்கள் கிராமம் பாசனத்திற்கு தண்டுலா கால்வாயை நம்பியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், அச்சோட்டி, அதை சுற்றியுள்ள கிராமங்களான நர்தா, சேத்வா, முர்முண்டா, ஒட்டேபந்த், கோடி மற்றும் மால்புரி போன்றவற்றில் சுமார் 75 சதவீத பயிர் அழிந்துவிட்டன," என்று அச்சோட்டி கிராமத் தலைவர் ஹேம் சாஹு புகார் கூறுகிறார்.

ஆனால், துர்க் மாவட்ட ஆட்சியர் ஆர்.சங்கீதா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார். " சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஆனால் கணக்கெடுப்புக்கான விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டன," என்று அவர் கூறுகிறார்.

மாவட்ட ஆட்சியரின் கூற்று ஒருபுறம் இருக்க, இழப்பீட்டை நிர்ணயித்து விநியோகிக்கும் செயல்முறை சத்தீஸ்கர் விவசாயிகளின் முதுகெலும்பை இன்னும் நொறுங்கச் செய்துள்ளது. நிவாரணத் தொகை மிக குறைவு என்பதோடு, விநியோகத்திலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவது, அவர்களை இன்னும் வேதனையடைச் செய்துள்ளது. மோசடி செய்யும் அதிகாரிகள் மீதான புகார்கள் குவிந்து வருகின்றன.

PHOTO • Shirish Khare

கோர்பி கிராம விவசாயிகள் கவலையில் உள்ளனர். உமேத் ராம் உதவி கேட்டு பல அரசு அலுவலகங்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் அவரது துயரங்களைக் கேட்க யாரும் முன்வரவில்லை. புகைப்படம்: ராஜேந்திர ரத்தோர்

நிவாரணத்திற்கான அளவுகோல்களில் குறைபாடுகள் உள்ளன, அவற்றை  செயல்முறைப்படுத்துவதிலும் சிக்கல்கள் உள்ளன. 25 ஏக்கருக்கும் குறைவாக கூட்டு உடைமைகளைக் கொண்ட குடும்பங்கள், 70 சதவீதம் அல்லது அதற்கு மேல் பயிர் சேதம் சந்தித்த குடும்பங்கள் மட்டுமே இழப்பீடு கோர முடியும். எனவே அந்த வரம்பிற்கு கீழே 20-30 சதவீத பயிர் சேதத்தை சந்தித்த குடும்பங்கள் இழப்பீடு பெற முடியாது. உண்மையில், ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் கூட இழப்பீடு பெற முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர். இதற்கிடையில், பட்டியலில் இடம்பெற்றவர்கள் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில், 20 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் கூட பரம ஏழைகளாக இருக்கின்றனர். ஏனெனில் இவை பல உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களின் கூட்டு நிலம்.

மாநில அரசின் கூற்றுப்படி, சத்தீஸ்கரில் 37.46 லட்சம் விவசாயிகள் உள்ளனர். அவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு விவசாயிகள். மாநிலத்தின் 46.85 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதம் நீர்ப்பாசனம் செய்யப்படவில்லை. பாசன வசதி உள்ள 30 சதவீதத்தில், பெரும்பாலானோர் பாதிக்கப்படவில்லை எனக்கூறி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நிலத்தடி நீர் பிரச்சினை, மின்வெட்டு போன்றவற்றால், அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண உதவிப் பெறுவதில் இருந்து ஏராளமானோர் விடுபட்டுள்ளதால், பல பகுதிகளில் மக்கள் புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியாது என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

" கிராமத்தில் ஒவ்வொரு விவசாயியும் கழுத்தளவு கடனில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலானவர்களிடம் அடுத்த பருவத்திற்கான விதைகள் இல்லை. அடுத்த ஆண்டு அவர்கள் தங்கள் வயல்களை காலியாக வைக்க வேண்டியிருக்கும்," என்று அச்சோட்டியில் வசிக்கும் ரிகிராம் சாஹு கூறுகிறார்.

PHOTO • Shirish Khare

துர்கின் வறட்சியால் பாதிக்கப்பட்ட அச்சோட்டி கிராமத்தைச் சேர்ந்த ரிக்ராம் சாகுவும், மற்ற சிறு விவசாயிகளும் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, தங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். புகைப்படம்: ஷிரிஷ் கரே

ராஜ்நந்த்கான், மகாசமுந்த், ஜஞ்ச்கிர்-சம்பா மற்றும் துர்க் மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்தால் அரசின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை அம்பலப்படுத்திவிட முடியும். இப்பகுதி விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொள்ள கவலை, துக்கம், அதிருப்தி, வேதனை மட்டுமே மிச்சம் உள்ளது.

ரமன் சிங் தலைமையிலான மாநில அரசு, நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசிடம் ரூ .6,000 கோடி நிதியுதவியை நாடியது. நரேந்திர மோடி அரசு ரூ.1,200 கோடி நிவாரணத் தொகுப்பை வழங்கியது. அதில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டது.

மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூற்றுப்படி, இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்டது. இனி எந்த உதவியும் செய்ய தேவையில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.

PHOTO • Shirish Khare

மகாசமுந்த் மாவட்டத்தின் நர்ரா கிராமத்தில் வசிக்கும் தினேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர்: அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்குள் இருந்து கொண்டு இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு நடத்தியதால், தன்னைப் போன்ற துயருற்ற விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்று தினேஷ் யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். புகைப்படம்: லலித் படேல்

எந்தவொரு மாவட்டமும் கூடுதலாக நிதி கோராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துறை செயலாளர் கே.ஆர்.பிஸ்டா கூறுகிறார். இதுவரை ரூ.380 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க இந்த தொகை போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

பல பகுதிகளில், விவசாயிகள் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதை அறிந்து, எஞ்சிய பயிர்களை கால்நடை தீவனத்திற்கு விட்டுவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோன்ற இழப்பிலும் அவர்களால் அரசின் அளவுருக்குள் இழப்பீடு பெற முடியவில்லை.

கொதித்துக் கொண்டிருக்கும் மக்களின் அதிருப்தி தெருக்களில் வெளிப்படுகிறது. இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

"மத்திய அரசின் 1,200 கோடி நிவாரணத் தொகுப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே விவசாயிகள் பெற்றுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் பல நியாயமற்ற நிபந்தனைகளை விதித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை இழப்பீட்டிலிருந்து மாநில அரசு விலக்கியுள்ளது. மீதமுள்ள ரூ. 820 கோடியை தானே வைத்துக் கொள்ள அரசு விரும்புகிறது," என்று விவசாயத் தலைவர் ராஜ்குமார் குப்தா குற்றஞ்சாட்டுகிறார்.

PHOTO • Shirish Khare

சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமன் சிங்கின் சொந்த மாவட்டமான ராஜ்நந்த்கானில், சுகுல் தைஹான் கிராமத்தில் அதிருப்தி விவசாயிகள்  பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அரசு விநியோகிக்கும் 7-8,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு என்று அவர்கள் கூறுகிறார்கள். படம்: மனோஜ் தேவங்கன்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த அரசின் புள்ளிவிவரங்களும், இந்த பருவத்தில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் நெல் விற்கவில்லை என்ற உண்மையுடன் முரண்படுகின்றன.

அரசின் அலட்சியப் போக்கு இந்த விவசாயிகளை வாழ்வாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. அவர்களில் பலரும் வேறு வழியின்றி மேய்ச்சல் நிலங்களைத் தேடி அலைகின்றனர்.

மகாசமுந்த் மாவட்டத்தின் பாக்பஹ்ரா, பித்தோரா, பாஸ்னா, ஜாலாப், சராய்பாலி மற்றும் பன்வார்பூர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளன. ஜஞ்ச்கிர்-சம்பா பிராந்தியத்தின் பலோடா பகுதியிலும் இந்த போக்கு காணப்படுகிறது. அங்கு MNREGA தொழிலாளர்களும் மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை.

PHOTO • Shirish Khare

ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தின் கோர்பி கிராமத்தில் பல வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பலர் பழங்குடியினர், அவர்கள் வேலை தேடி நாக்பூர், மும்பை அல்லது புனேவுக்கு சென்றுவிட்டனர். படம்: ராஜேந்திர ரத்தோர் / மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பாக்பஹாரா கிராமத்தில், ஒவ்வொரு மூன்றாவது வீட்டிலிருந்தும் ஒரு  உறுப்பினர் வேலை தேடி வெளியே செல்கிறார். புகைப்படம்: லலித் படேல்

சில வாரங்களில் பிராந்தியத்தின் 30-40 சதவீத குடும்பங்கள் தங்கள் கிராமத்தை வெளியேறி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பிஸ்டா அத்தகைய செய்திகளை மறுக்கிறார். "ஆண்டுதோறும் புலம்பெயர்வு குறைவாகவே இருக்கிறது. இந்தாண்டு MNREGA கீழ் 13 லட்சம் பேர் வேலை கேட்டுள்ளனர். வறட்சி நிவாரண நடவடிக்கைகளின் கீழ் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. குடிநீர் மற்றும் பாசன வசதிகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், "என்று அவர் விளக்குகிறார்.

PHOTO • Shirish Khare

கோர்பி கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் பிசாஹின்பாய் யாதவுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. அவரது மகன் வினோத்துக்கு MNREGAல் மூன்று மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. படம்: ராஜேந்திர ரத்தோர்

பிஸ்டாவின் கூற்றுகள் இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு உதவுவதற்கான அரசின் முயற்சிகள் பெரும்பாலும் ஏட்டில் மட்டுமே உள்ளன.

"அரசின் கொள்கைப்படி, தகுதியான ஒவ்வொரு விவசாயிக்கும் நிர்வாகம் போதுமான இழப்பீட்டை விநியோகித்துள்ளது. சில மாவட்டங்களில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இழப்பீட்டுக் கொள்கையிலேயே பிரச்சினை இருந்தால் என்ன செய்வது?

பயிர் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டுவிட்டதால், வெற்று வயல்களில் இருந்து சேதத்தை கணக்கிட முடியாது. மழைப் பொழிவு மற்றும் நெல் பயிர் விற்பனையின் அடிப்படையில்  இழப்பை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

மாநில வேளாண்துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் கூறுகையில், "இழப்பீட்டுத் தொகையை விநியோகிக்கும் பணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. புகார்கள், எழுவது இயல்பு தான். ஆனால் விவசாயிகள் மத்தியில் பரவலான கோபம் இருப்பதாக கூறுவது தவறு.

ஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளரும், வேளாண் நிபுணருமான சங்கேத் தாக்கூர் இந்த கூற்றை மறுக்கிறார்.

"விவசாயிகளுக்கு உதவுவது போல் அரசு பாசாங்கு செய்கிறது. அது அதிகார வர்க்கத்தின் கைக்கு சென்றுவிட்டது. முதலில் நிவாரணப் பணம் போதுமானதாக இல்லை. விநியோகத்திலும் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன," என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

"நிலைமை சீராகவில்லை என்றால் மேலும் பல விவசாயிகள் தற்கொலை  நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு MNREGA மட்டும் போதும் என்று கூறி விடமுடியாது," என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கட்டுரை முதன்முதலில் ராஜஸ்தான் பத்திரிகாவின் ராய்ப்பூர் பதிப்பில் 2016, பிப்ரவரி 29, அன்று வெளியிடப்பட்டது.

தமிழில்: சவிதா

Shirish Khare

Shirish Khare is based in Raipur, Chhattisgarh, and works as a special correspondent for the Rajasthan Patrika.

यांचे इतर लिखाण शिरीष खरे
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha