ஜம்மு கஷ்மீரில் ஒரு தனி பகார்வாலை நீங்கள் பார்க்க முடியாது.
அந்த மேய்ச்சல் சமூகம் பெருங்குழுக்களாகதான் நகரும். இமயமலையில் தங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் தேடி செல்வார்கள். “மூன்று நான்கு சகோதரர்கள் அவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து பயணிப்பார்கள்,” என்கிறார் ஒவ்வொரு வருடமும் உயரப்பகுதிகளில் புல்வெளி தேடிச் செல்லும் முகமது லதீஃப். “ஆடுகளைம் செம்மறிகளையும் ஒன்றாக மேய்ப்பதால் மந்தையை கையாளுவது சுலபம்,” என்கிறார் அவர் வருடந்தோரும் அவர்களுடன் பயணிக்கும் கிட்டத்தட்ட 5000 செம்மறிகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் சில பகார்வாலி நாய்கள் குறித்து.
ஜம்மு சமவெளிகளிலிருந்து பிர் பஞ்சால் மற்றும் இமயமலையின் பிற மலைத்தொடர்கள் நோக்கி செல்லும் பகார்வால்களின் பயணம் 3000 மீட்டர் உயரத்துக்கான மெதுவான ஏற்றத்தைக் கொண்டது. மார்ச் மாத பிற்பகுதியில் கோடை தொடங்கும் காலத்தில் அவர்கள் ஏறத் துவங்குவார்கள், குளிர்காலம் தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் இறங்கத் தொடங்குவார்கள்.
ஒவ்வொரு முறையும் போக வர தலா 6-8 வாரங்கள் பிடிக்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சில ஆண்கள் முன்னோக்கி செல்வார்கள். “அவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று முக்கியமான நிலங்களில் முகாமிட்டு மந்தை வருவதற்குக் காத்திருப்பார்கள்,” என்கிறார் முகமது லதீஃப். அவரின் குழு ராஜவுரி அருகே இருக்கும் சமவெளிகளிலிருந்து கிளம்பி, லடாக்கின் சொஜிலா கணவாய் அருகே இருக்கும் மீனாமார்குக்கு செல்லும்.
30 வயதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ஷவுகத் அலி கண்டால், ஜம்முவின் கத்துவா மாவட்ட 20 பகார்வால் குடும்பங்களை கொண்ட இன்னொரு குழுவை சேர்ந்தவர். அது செப்டம்பர் 2022. அவரின் குழு கிஷ்ட்வார் மாவட்டத்தின் தொத்தாய் புல்வெளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது. பல தலைமுறைகளாக அதுதான் அவர்களின் கோடைகால வசிப்பிடமாக இருக்கிறது. வர்வான் சமவெளியின் பனி கணவாய்கள் வழியாக அவர்கள் வந்திருக்கின்றனர். “ஒரு மாதத்தில் நாங்கள் கத்துவாவை அடைந்து விடுவோம். இன்னும் ஐந்தாறு இடங்கள்தான் நிற்க வேண்டியிருக்கும்,” என்கிறார் ஷவுகத்.
செம்மறிகளை ஓரிடத்தில் வைத்து உணவளிக்க முடியாது என்பதால் பகார்வால்கள் வருடத்தின் பெரும்பாலான காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். செம்மறிகள் திறந்தவெளியில் மேய வேண்டும். பிரதான வருமானம் ஈட்டும் வழியாக இருப்பதால் மந்தையின் நலனே அவர்களுக்கு முக்கியம். கஷ்மீரிய விருந்துகளில் செம்மறி மற்றும் ஆட்டுக் கறிக்கு அதிக விலை கிடைக்கும். “செம்மறிகளும் ஆடுகளும் எங்களுக்கு முக்கியம். (உள்ளூர்) காஷ்மீரிகள் வருமானத்துக்கென ஆப்பிள் மற்றும் வாதுமைக் கொட்டை மரங்கள் வைத்திருக்கின்றனர்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ஷவுகத்தின் மூத்த உறவினர்களில் ஒருவர். குதிரைகளும் கழுதைகளும் கூட அவர்களின் பயணத்துக்கு மிகவும் முக்கியம். சுற்றுலாவாசிகளுக்கு மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தேவைப்படும் ஆட்டுக்குட்டிகள், கம்பளி, நீர் மற்றும் அன்றாட தேவைகளை சுமந்து வர அவை பயன்படுகிறது.
அந்த நாளின் தொடக்கத்தில் முகாமை அடைய ஷவுகத்தின் மனைவி ஷமா பானோவுடன் மலைச்சரிவில் ஏறிச் சென்றோம். அவரது தலையில் பெரிய பானையில் நீர் இருந்தது. கீழே இருந்த ஆற்றில் எடுத்த நீர். அன்றாடம் நீரெடுக்கும் வேலையை பெண் மேய்ப்பர்கள்தான் செய்ய வேண்டும். குழு நகர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களே அந்த வேலை செய்ய வேண்டும்.
பகர்வால் மேய்ச்சல் சமூகம் மாநிலத்தில் பட்டியல் பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. 2013ம் அறிக்கை ஒன்றின்படி அவர்களின் மக்கள்தொகை 1,13,198
“எங்களுக்கு சிறு மந்தை இருக்கிறது. எனினும் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இடம்பெயருகிறோம். ஏனெனில் எங்களின் ஆண்களுக்கு (பயணத்தின்போது) சில வேலைகள் கிடைக்கும். இளைஞர்கள் மரம் வெட்டவும் உள்ளூர் கஷ்மீரிகள் விளைவிக்கும் வாதுமை கொட்டை மற்றும் ஆப்பிள் அறுவடைக்கும் செல்வார்கள்,” என்கிறார் சோஹ்ரா. 70 வயதுகளில் இருக்கும் அவர், கைகளில் செய்து பூத்தையல் போடப்பட்டு பகர்வால் பெண்கள் அணியும் பாரம்பரிய தொப்பி அணிந்திருக்கிறார். ஜம்முவுக்கு செல்லும் வழியில் இருக்கும் மலைப்பாங்கான கந்தெர்பால் மாவட்ட கிராமமான கங்கனில் ஒரு நீரோடைக்கு அருகே குடும்பத்துடன் அவர் வசிக்கிறார். “ஒன்றுமே இல்லை என்றாலும் நாங்கள் அங்கு இடம்பெயருவோம். ஏன் தெரியுமா? கோடையில் இங்குள்ள வெயில் எனக்கு அதிகமாக இருக்கிறது,” என்கிறார் அவர் புன்னகையுடன்.
*****
“அந்த வேலியைப் பாருங்கள்.”
புகை வரும் ஆட்டுப் பால் தேநீரைப் பருகிக் கொண்டே குலாம் நபி கண்டல் கூறுகிறார், “பழைய காலம் போய்விட்டது,” என வேலி அடைக்கப்படாத அந்த காலத்து நிலங்களை நினைவில் கொண்டு. உயரங்களில் இருக்கும் புல்வெளிகளுக்கும் தற்காலிக முகாம்களுக்கும் நகர அவர்கள் தற்போது ஒரு நிச்சயமற்றதன்மயுடன் கூடிய அசூயை கொண்டிருக்கிறார்கள்.
“அடுத்த வருடத்தில் ராணுவம் இந்த இடத்தை எடுத்துக் கொள்ளும் எனக் கேள்விபட்டோம்,” என்கிறார் அவர் அடுத்த மலையில் போடப்பட்டிருக்கும் வேலிகளை சுட்டிக் காட்டி. அந்த மூத்தவர் சொல்லும் விஷயங்களை சுற்றியமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பிற பகர்வால்களின் முகங்களில் கவலையின் ரேகைகள் படர்கின்றன.
அவை மட்டுமல்ல. பல புல்வெளிகள் சுற்றுலாவுக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. சோனாமர்க் மற்றும் பகல்கம் போன்ற சுற்றுலா தளங்கள் இந்த வருடம் சுற்றுலா வாசிகளால் நிரம்பி வழிகிறது. இந்த தளங்கள் கோடைகாலத்தில் முக்கியமான மேய்ச்சல் நிலங்களாக கால்நடைகளுக்கு இருந்ததாக அவர்கள் சொல்கின்றனர்.
“சுரங்கங்களிலும் சாலைகளிலும் அவர்கள் (அரசு) எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் எனப் பாருங்கள். எல்லா இடங்களிலும் இப்போது நல்ல சாலைகள் வந்து விடும். சுற்றுலாவாசிகளுக்கும் பயணிப்பவர்களுக்கும் அவை பயன்படும். ஆனால் எங்களுக்கு பயன்படாது,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மூத்த குழு உறுப்பினர் ஒருவர்.
சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல குதிரைகளை வாடகைக்கு விட்டு பகர்வால்கள் ஈட்டும் வருமானத்தை பற்றி அவர் சொல்கிறார். “சுற்றுலா காலத்தில் எங்களுக்கு வருமானம் கிட்டும் முக்கியமான வழி அது,” என்கிறார் அவர். ஆனால் அவர்கள் குதிரை வாடகைக்கு விடவும் வழிகாட்டி வேலை செய்யவும் பிற வேலைகள் செய்யவும் உள்ளூர்வாசிகளுடனும் தரகர்களுடனும் போட்டி போட வேண்டும். 2013ம் அறிக்கை யின்படி 32 சதவிகித சராசரி படிப்பறிவு கொண்டிருக்கும் பகர்வால்களுக்கு பெரும்பாலான வேலைகள் கிட்டாத தூரத்தில்தான் இருக்கின்றன.
கஷ்மீரி சால்வைகள் மற்றும் கம்பளங்களுக்கு தேவைப்படும் கம்பளியை இச்சமூகம் விற்கிறது. கடந்த வருடங்களில் பூர்விக செம்மறி இனங்களான கஷ்மீர் வேளி மற்றும் குரேசி போன்றவை தரமான செம்மறிகளை பெறவென ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த மெரினோ போன்ற இனங்களுடன் கலப்பு சேர்க்கப்பட்டன. இங்கும் பகர்வால்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர். “சில வருடங்களுக்கு முன் கம்பளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது எங்களுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதிலை,” என பலரும் கூறினர்.
அவர்கள் குறிப்பிடும் கடும் விலைவீழ்ச்சி என்பது கம்பளி வெட்டும் கருவிகள் எளிதாக கிடைக்க அரசு காட்டும் அக்கறையின்மையால் ஏற்பட்டது என்கிறார்கள். அவர்கள் விற்கும் இயற்கையான கம்பளி, செயற்கையான அக்ரிலிக் கம்பளி போன்ற சிந்தடிக் வகைகளால் சிக்கலை சந்தித்திருக்கின்றன. வணிகர்களும் கடைகளும் இல்லாத புல்வெளிகள் பல இருப்பதால் பகர்வால்கள் கம்பளியை குதிரை மீதும் கழுதை மீதும் ஏற்றி பயணிக்கின்றனர். பிறகு ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி அவற்றை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வருடத்தில் செம்மறிகளை வெட்டிய பல பகர்வால்கள் கம்பளியை புல்வெளியிலேயே விட்டுவிட்டனர். ஏனெனில் அவற்றுக்கான போக்குவரத்து செலவு, விற்று கிடைக்கும் வருமானத்தை விட அதிகம்.
ஆட்டுமுடியை கூடாரமும் கயிறுகளும் தயாரிக்க அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே கயிறை இழுத்தபடி ஷவுகத், “இதற்கு ககானி ஆடுகள்தான் சிறந்தவை. அவற்றுக்கு நீண்ட முடி உண்டு,” என்கிறார். ககானி, விலைமதிப்பு கொண்ட கஷ்மீர் கம்பளி கொடுக்கும் ஆட்டினம் ஆகும்.
பகர்வால்கள் வேகமாக தங்களின் இடங்களை அடைய, 2022ம் ஆண்டில் அரசாங்கம் அவர்களுக்கு போக்குவரத்து அளிக்கவும் அவர்களின் விலங்குகளுக்கு கோடைகால மேய்ச்சல் நிலங்கள் அளிக்கவும் முன்வந்தது. பல வாரங்கள் பிடிக்கும் அவர்களின் பயணம் ஒரு நாளில் முடிந்துவிடும். ஆனால் குறைவான ட்ரக்குகளே இருந்தமையால் ட்ரக்குகளுக்கு ஒப்புக் கொண்ட பலருக்கு அவை கிடைக்கவில்லை. மற்றவர் கிளம்பிய பிறகு அந்த வாய்ப்பு வந்ததால் பயன்படுத்த முடியவில்லை. “ஆயிரக்கணக்கான பகர்வால் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் ட்ரக்குகள் இருக்கின்றன. பலர் இச்சேவையை பயன்படுத்த முடியாத நிலையே இருக்கிறது,” என ஒப்புக்கொண்டார் செம்மறி பராமரிப்பு அலுவலர் ஒருவர்.
*****
“20 நாட்களுக்கு முன்தான் பிறந்தான்.”
கூடாரத்தின் மூலையில் கிடக்கும் சிறு உடைகள் கட்டை காட்டுகிறார் மீனா அக்தர். அந்த துணிக்கட்டில் ஒரு குழந்தை இருப்பது அது அழும் வரை தெரியவில்லை. மலையடிவார மருத்துவமனையில் மீனா அக்குழந்தையை பெற்றெடுத்தார்.
“நான் பலவீனமாக உணர்ந்தேன். சரியாக அல்வா தின்று கொண்டிருந்தேன். கடந்த இரண்டு நாட்களாக ரொட்டி தின்று கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். மீனாவின் கணவர் அருகாமை கிராமங்களில் விறகுவெட்டியாக பணிபுரிகிறார். அவர் ஈட்டும் வருமானம் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு சரியாக இருக்கிறது.
தேநீர் தயாரிக்க பால் பாகெட்டை உடைத்து ஊற்றியபடி அவர், “இப்போது பால் எங்களுக்கு கிடைப்பதில்லை. ஆடுகள் குட்டிகள் ஈன்றவிருக்கின்றன. குட்டி போட்ட பிறகு எங்களுக்கு பால் கிடைக்கும்,” என்கிறார். நெய், பால் மற்றும் வெண்ணெய் ஆகியவைதான் பகர்வால்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் சத்தூட்டத்துக்கு முக்கியமான வழிகள்.
உயர மலைகளில் வெறும் கூடாரத்தின் பாதுகாப்பில், சமையல் சூடு மற்றும் கம்பளி வெப்பத்தில் இளம் குழந்தைகளின் குளிர் போக்கப்படுகிறது. அவர்களால் சுலபமாக வெளியே சுற்றி திரிந்து விளையாடியிருக்க முடியாது. நாய்களை பார்த்துக் கொள்வது, விறகு சேகரிப்பது, தண்ணீர் பிடிப்பது போன்ற சிறு வேலைகள் அவர்களுக்கு கொடுக்கப்படும். “மலையின் ஊற்று தண்ணீரில் நாள் முழுக்க குழந்தைகள் விளையாடும்,” என்கிறார் மீனா. மீனாமர்க்கின் குளிர்கால நிலங்களை விட்டுச் செல்வது சோகமளிக்கும் என்கிறார் அவர். “வாழ்க்கை அங்கு நன்றாக இருக்கிறது.”
ஷவுகத்தின் கூடாரத்தை சேர்ந்த கல்தா பேகமும் அவரது இளம் குழந்தைகளுடன் பயணிக்கிறார். ஆனால் அவரின் பதின்வயது மகள் ஜம்முவில் பள்ளிக்கு செல்வதற்காக ஓர் உறவினருடன் தங்கி இருக்கிறார். “அங்கு என் மகள் நல்லபடியாக படிக்க முடியும்,” என்கிறார் அவர் புன்னகையுடன். பல குழந்தைகளுக்கு அத்தகைய வாய்ப்பு இருப்பதில்லை. குடும்பங்களுடன் இடம்பெயர வேண்டியிருக்கும். நடமாடும் பள்ளிகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் அவற்றை சில பகர்வால்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.
நடமாடும் பள்ளிகளில் அரசாங்கம் நியமித்த ஆசிரியர்கள் வருவதே இல்லை. “அவர்கள் இங்கு வருவதில்லை. ஆனால் சம்பளம் மட்டும் கிடைக்கும்,” என்கிறார் 30 வயதுகளில் இருக்கும் காதிம் உசேன் விரக்தியோடு. கஷ்மீரை லடாக்குடன் இணைக்கும் சோஜி லா கணவாய்க்கு அருகே முகாமிட்டிருக்கும் பகர்வால் குழுவை சேர்ந்தவர் அவர்.
“இளம் தலைமுறைக்கு அதிக படிப்பு கிடைக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கைக்கு பதில் வேறு வாய்ப்புகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த மேய்ச்சல் வாழ்க்கையை அவர்கள் கடினமாக உணருகிறார்கள்,” என சுட்டிக் காட்டுகிறார் ஃபைசல் ரசா போக்தா. ஜம்முவின் குஜ்ஜார் பகர்வால் இளையோர் நல சம்மேளனத்தின் பிராந்திய தலைவராக இருக்கும் அவர், வெளியேற்றம் மற்றும் அநீதிகளை சுட்டிக்காட்டும் நடைபயணம் ஒன்றை பிர் பஞ்சல் மலைத்தொடரில் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார். “இளையோருக்கு இது சுலபம் இல்லை. பிற மக்களுடன் பழகுகையில் நாங்கள் இன்னும் பாரபட்சத்தை எதிர்கொள்கிறோம். டவுன்களில் இது அதிகம். இத்தகைய பாரபட்சம் எங்களை அதிகமாக பாதிக்கிறது,” என்கிறார் அவர். பட்டியல் பழங்குடிகளாக குஜ்ஜார் மற்றும் பகர்வால்கள் தங்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு கொள்ள அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீநகரின் வெளிப்புறத்தில் இருக்கும் சகுரா என்கிற பகுதியில் 12 பகர்வால் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களின் குளிர்கால நிலப்பரப்புகளை நீராற்றல் அணை திட்டம் ஆக்கிரமித்திருப்பதால் இங்கு அவர்கள் வசிக்கின்றனர். அல்தாஃப் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இங்கு பிறந்தவர்தான். ஸ்ரீநகரில் பள்ளி பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். “முதியோருக்காக நான் இங்கு பெற்றொருக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்து வசிப்பதென முடிவெடுத்தேன்,” என்கிறார் அவர் பிறரை போல் ஏன் இடம்பெயரவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கி.
அச்சமூகம் எதிர்நோக்கியிருக்கும் நிச்சயமற்ற எதிர்காலம் மற்றும் வேலி அடைப்பு பிரச்சினைகள், சுற்றுலா மற்றும் மாறி வரும் வாழ்க்கை ஆகியவற்றை கூறிவிட்டு, மலைகளில் சுற்றும் வாழ்க்கையை கொண்ட குலாம் நபி சொல்கிறார், “உங்களுக்கு எப்படி என் வலி தெரியும்?” என.
கட்டுரையாளர்கள் ஃபைசல் போக்தா, ஷவுகத் கண்டல் மற்றும் இஷ்ஃபக் கண்டல் ஆகியோரின் உதவி மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.
ரிதாயன் முகர்ஜி, மேய்ச்சலியத்துக்கான மையம் அளித்த சுயாதீன பயண மானியத்தின் உதவியில் மேய்ச்சல் பழங்குடி சமூகங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் அம்மையம் எந்தவித அதிகாரத்தையும் பிரயோகிக்கவில்லை
தமிழில்: ராஜசங்கீதன்