“இந்தாண்டு மக்கள் விநாயகர் சிலைகளை வாங்குவார்கள் என நினைக்கிறீர்களா?” என்று விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் (குயவர் தெரு) வசிக்கும் யு. கெளரி ஷங்கர் கேட்கிறார். “நாங்கள் கடவுளின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வோர் ஆண்டும் சிலைகளைச் செய்கிறோம். கடவுளின் கருணையால், எங்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்து வந்தது” என்றார். “ஆனால், இந்தாண்டு கடவுளைக் காணவில்லை, ஊரடங்கும் வைரசும்தான் இருக்கின்றன.”
63 வயதாகும் ஷங்கர், 42 வயதாகும் அவரது மகன் வீரபத்ரா, 36 வயதாகும் மருமகள் மாதவி ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தின் இந்நகரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டில் செய்யத் தொடங்குவார்கள். தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூன் மாத மத்தியில்தான் பணியைத் தொடங்கியிருக்க முடியும்.
இயல்பாக ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் (குயவர்களின் பண்டிகை காலம்) விநாயகர் சதுர்த்தி முதல் தீபாவளி வரையில் கிடைக்கும் ஆர்டர்கள் மூலம் தலா ரூ.20,000 முதல் ரூ.23,000 வரை மாத வருவாய் ஈட்டுவார்கள். ஆனால் இந்தாண்டு விநாயகர் (கணேஷ்) சதுர்த்திக்கு முன்பான 48 மணி நேரம் வரை சிலைகள் செய்ய எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு குயவர் தெருவில் 30 கும்மாரா குடும்பங்கள் தங்கி, இப்பணியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனர். ஆனால் இப்போது நான்கு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு தொடங்கியது முதல் அவர்களின் நிலைமையும் மோசமானது.
“சிலைகளை சிறு வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யும் வணிகர்களிடம் இருந்து எங்களுக்கு மொத்த ஆர்டர்கள் வரும். இந்தாண்டு அப்படி ஒன்று கூட வரவில்லை,” என்கிறார் ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதவி. அவரது கணவரின் தாத்தா பாட்டி, கிராமத்திலிருந்து வந்து தற்போது விஜயநகரம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
சிறிய விநாயகர் சிலைகளை அளவிற்கு ஏற்ப ரூ.15 மற்றும் ரூ.30 விலைக்கு வீட்டில் வைத்து விற்கின்றனர். கடந்த 4-5 ஆண்டுகளாக, இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் சிறிய விநாயகர் சிலைகளை விற்பதன் மூலம் மாதம் ரூ. 7,000 - ரூ. 8,000 வரை லாபம் கிடைத்தது.
குடும்பமாக சேர்ந்து ஒருநாளுக்கு இதுபோன்று 100 சிலைகளைச் செய்துவிடுவார்கள். “அவற்றில் 60லிருந்து 70 வரை துல்லியமாக வந்துவிடும். ஒருசில சிலைகள் வண்ணம் பூசும்போது உடைந்துவிடும்,” என்கிறார் ஷங்கர். கையுடைந்த புதிய சிலை ஒன்றை மாதவி என்னிடம் காட்டினார். “உடைந்த சிலைகளை சரிசெய்ய முடியாது,” என்றார். “எங்கள் உழைப்பு வீணாய் போனதற்கான அடையாளம் அவை.” அவர்களின் வீட்டிற்கு வெளியே மூன்று பெரிய, உடைந்த, பாதி வர்ணம் பூசப்பட்ட துர்கை சிலைகளும் உள்ளன.
பானைகள், உண்டியல்கள், மண் ஜாடிகள், கோப்பைகள், களிமண் கைவினைப் பொருட்கள் போன்ற சிறிய பொருட்களையும் அவர்கள் செய்கின்றனர். அவர்களின் வீடுகளுக்கு வெளியே இவை முறையாக அடுக்கப்படாமல், ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ரூ.10 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. “இப்போதெல்லாம் இவற்றை யாரும் வாங்குவதில்லை. எல்லோரும் ஸ்டீல், செம்பில் செய்த பொருட்களைத் தான் வாங்குகின்றனர்,” என்கிறார் மாதவி.
“இதிலிருந்து எங்களுக்கு மாதம் ரூ.700-800 வரை வருமானம் கிடைக்கும்,” என்கிறார் ஷங்கர். “விநாயகர் சதுர்த்தி முதல் தீபாவளி வரையிலான காலத்தில் ஈட்டும் வருமானத்தில் தான் நாங்கள் வாழ்கிறோம்.” அதுவும் இல்லாமல் போனதால் பெரிய சிக்கலில் இருக்கிறோம்.
“7-8 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆறு மாதங்களுக்குள் 500 மட்காஸ் [பானைகள்] செய்துவிடுவோம். ஆனால் இப்போது 100-150 செய்வதே அரிதாகிவிட்டது,” என்கிறார் அவர். கடந்தாண்டு அவரது குடும்பம் 500 பானைகள், 200 பூத்தொட்டிகள், சில மண் பொருட்களை விற்றன. 2019ஆம் ஆண்டில் அவர்களின் வருமானம் ரூ. 11,000 முதல் ரூ. 13,000 வரை இருந்தது என்கிறார் ஷங்கர். இந்தாண்டு 200 பானைகள், 150 பூத்தொட்டிகள் விற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஊரடங்கிற்கு முன் விற்கப்பட்டவை.
தனது இரண்டு குழந்தைகளின் படிப்பு குறித்து மாதவி கவலையில் இருக்கிறார். “இணைய வழி வகுப்புகள் போதிய அறிவை அவர்களுக்கு கொடுப்பதில்லை,” என்று களிமண்ணை மிதித்துக்கொண்டே அவர் சொல்கிறார். ஊரடங்கு காலத்திலும் அவரது குழந்தைகள் படிக்கும் ஆங்கில வழி தனியார் பள்ளியில் மாதக் கட்டணம் செலுத்துமாறு இரண்டு மாதங்களாக கேட்டு வருகின்றனர். “ஆனால் எங்களால் செலுத்த முடியவில்லை,” என்கிறார் மாதவி.
எப்படி முடிகிறது? இரண்டு சிறுவர்களுக்கும் ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதாகும் கோபிநாராயனுக்கு மாத கட்டணமாக ரூ. 8,000மும், 3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது ஷ்ரவண் குமாருக்கு மாத கட்டணமாக ரூ. 4,500ம் செலுத்த வேண்டும்.
“ஒவ்வொரு ஆண்டுமே நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளின் கல்விக்காக சுமார் ரூ. 70,000 - 80,000 வரை பணம் கடன் வாங்குகிறோம்,” என்கிறார் ஷங்கர். பெரும்பாலும் வட்டியின்றி கடன் பெறுவதற்காக உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்குகின்றனர்.
ஷங்கரும், அவரது குடும்பத்தினரும் 5-6 அடி உயரமுள்ள விநாயகர் களிமண் சிலைகளை செய்கின்றனர். அவற்றில் விலை தலா ரூ. 10,000 - ரூ. 12,000 வரை இருக்கும். “பெரிய சிலைகளை வெளியே வைக்கக் கூடாது என காவல்துறையினர் எங்களிடம் கூறிவிட்டனர். இதனால் எங்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை,” என்று அவர் சோகத்துடன் புன்னகைக்கிறார். “பெரிய சிலைகள்தான் நல்ல லாபத்தை தரும்.”
முக்கிய சாலையிலிருந்து விலகி இருக்கும் இந்த குயவர் தெருவிற்கு அண்மை காலமாக சிறிது கவனமும், கொஞ்சம் வாடிக்கையாளர்களின் வருகையும் கிடைக்கிறது.
அண்மையில் - இத்தெரு அமைந்துள்ள பெரும் பகுதி முழுக்க கரோனா வைரஸ் தொற்று காரணமாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் ஷங்கரின் புதிய பார்வையாளர்களாக மாறினார்கள்.
“பானைகள், பிற மட்பாண்டங்கள் விற்பதை நிறுத்துமாறு சில நாட்களுக்கு முன் எங்களிடம் சொன்னார்கள்,” என்கிறார். “இது வேடிக்கையாக இருக்கிறது. எனக்கு வாடிக்கையாளர்களே கிடையாது. வாரத்திற்கு ஒருவர் வந்தாலே பெரிய விஷயம்.” சிறிய அளவிலான, அலங்காரம் செய்யப்பட்ட, வர்ணம் பூசப்பட்ட பொருட்களை அக்கயம்பாளம் பிரதான சாலையில் கைவண்டியில் ‘கடை’ போல வைத்து அவர் விற்று வருகிறார். பெரிய அளவிலான சிலைகள், அலங்காரப் பொருட்களை தங்களது வீட்டின் வெளியே காட்சிக்கு வைத்து விற்பனை செய்கின்றனர்.
“இவற்றையும் உள்ளே வைக்குமாறு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவற்றை எங்கே வைப்பது?” என கேட்கிறார் ஷங்கர். புதிதாக செய்ப்பட்ட விநாயகர் சிலைகளால் அவரது வீடே நிரம்பியுள்ளது. களிமண் பொருட்களுடன் கடந்தாண்டு எஞ்சிய பொருட்களும் இருக்கின்றன.
“மட்பாண்டத் தொழில் என்பது பலருக்கும் மலிவாகத் தெரிகிறது. ஆனால் நாங்கள் இதற்கு பெரிய முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது,” என்கிறார் அவர். “இது ஒரு சூதாட்டம்,” என்கிறார் மாதவி.
கும்மாரி வீதியில் வசிக்கும் குயவர்கள் ஆண்டுதோறும் ரூ. 15,000க்கு ஒரு லாரி மண்ணை (சுமார் 4-5 டன்) வாங்குகின்றனர். இதற்காக ஷங்கர் ஆண்டிற்கு 36 சதவீத வட்டிக்கு உள்ளூரில் கடன் வாங்குகிறார். விநாயகர் சதுர்த்தி முதல் தீபாவளி வரையிலான காலத்தில் விற்கும் சிலைகள், பொம்மைகளில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அவற்றை திரும்ப செலுத்தி விடுகிறார். “இந்த காலகட்டத்தில் விற்க முடியாவிட்டால், என்னால் அவற்றை திரும்ப செலுத்த முடியாது,” என்கிறார் கவலையுடன்.
வாங்கும் மண்ணை 2-3 நாட்கள் வெயிலில் உலர்த்துகின்றனர். பிறகு நீரைக் கலந்து கால்களால் மிதிக்கின்றனர். சேற்றை குழைக்கும் வேலையை மாதவி செய்கிறார். “இதற்கு 4-5 மணி நேரங்கள் ஆகும்,” என்கிறார் அவர். பிறகு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி, அச்சு கொண்டு சிலைகளுக்கு வடிவம் கொடுக்கிறோம். “முன்பெல்லாம் இந்த அச்சுகள் 3-4 ஆண்டுகள் வரை வரும். இப்போது தரமற்றவை தான் கிடைப்பதால் ஆண்டுதோறும் அச்சுகளை மாற்ற வேண்டி உள்ளது,” என்கிறார் ஷங்கர். ஒவ்வொரு அச்சின் விலையும் சுமார் ரூ.1000.
அச்சுவார்த்த பிறகு ஒரு வாரத்திற்கு சிலைகளைக் காய வைக்கின்றனர். உலர்ந்ததும் வண்ணம் பூசுகின்றனர். “[பண்டிகைக் காலங்களில்] வண்ணங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ரூ. 13,000 - 15,000 வரை செலவாகும்,” என்கிறார் ஷங்கர். “இந்தாண்டு இன்னும் வாங்கவில்லை. யாரும் வாங்குவார்கள் என நினைக்கவில்லை. என் மகன் விரும்பினால் வாங்குவேன். எங்கள் வாழ்வாதாரத்திற்காக விற்க வேண்டி உள்ளது.”
“பொதுவாக ஜூன் மாதத்திலேயே மக்கள் சிலைகளுக்கு பணம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். ஏப்ரல் மாதம் வரையுமே எங்களுக்கு வருமானம் இல்லை,” என்கிறார் ஷங்கர். “பானை விற்றால் சிறிது கிடைக்கும், மற்ற பொருட்களில் அதுவுமில்லை.”
சில வீடுகள் தள்ளி எஸ். ஸ்ரீனிவாச ராவின் மூன்று அறை கொண்ட வீடு உள்ளது. இப்போது அவை பாதி வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளால் நிரம்பியுள்ளது. 46 வயதாகும் ஸ்ரீனிவாச ராவ், மட்பாண்டத் தொழில் செய்வதோடு, அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 10-12 ஆண்டுகளாக எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
அவரது மனைவியான 38 வயதாகும் எஸ்.சரஸ்வதி மட்பாண்டத் தொழிலை தொடர்கிறார். “இது எங்களுக்கு குலத்தொழில் [சாதித் தொழில்]. இதில் குறைந்த வருமானம் தான் கிடைக்கும்,” என்கிறார் அவர். “எனக்கு கல்வியறிவு கிடையாது, பானைகள், பொம்மைகள், சிலைகள் மட்டும் தான் செய்யத் தெரியும். மூன்று மகள்கள் என ஒன்பது பேர் கொண்ட குடும்பம் எங்களுடையது. அவரது வருமானத்தை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது.”
சிறிய விநாயகர் சிலைகளைச் செய்து தலா ரூ. 30க்கு சரஸ்வதி விற்கிறார். ஜூலை மத்தியில் நாங்கள் சந்திப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புவரை - “இதுவரை நான் 40 சிலைகளைச் செய்துள்ளேன்,” என்கிறார் அவர். பண்டிகைக் காலங்களில் விற்பனை லாபம் என்பது ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை இருக்கும்.
மே மாதம் முதல் ஸ்ரீனிவாச ராவிற்கு மாதச் சம்பளம் ரூ. 8,000 கிடைக்கவில்லை. ஜுன் மாதம் முதல் அவர் வேலைக்குச் செல்கிறார். “இந்த மாதம் எனக்கு சம்பளம் கிடைத்துவிடும் என நம்புகிறேன்,” என்கிறார் அவர்.
ஓய்வு நேரத்தில் அவர் சிலைகளைச் செய்வதில் மனைவிக்கு உதவுகிறார். “அதிக சிலைகள், அதிக வருமானம்,” என்கிறார் அவர். ஆர்டர்கள் எதுவும் கிடைக்காத போதிலும் இந்தாண்டு சிலைகளை விற்போம் என ஸ்ரீனிவாஸ் நம்புகிறார். “இப்போது நேரம் சரியில்லை,” என்று சொல்லும் அவர், “எனவே பலரும் கடவுளை வணங்கவும் சடங்குகளைச் செய்யவும் விரும்புவார்கள்” என்கிறார்.
15, 16 வயதுகளில் உள்ள இரண்டு மகள்களைக் குறித்து சத்யவதி மிகவும் கவலை கொண்டுள்ளார். “இருவரும் 10ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுவிட்டனர். ஏராளமான உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொருவருக்கும் ஆண்டிற்கு ரூ. 45,000 கேட்கின்றனர் - இப்போது அதுவும் இணைய வழிக் கல்வி,” என்கிறார் அவர். “நாங்கள் இன்னும் அவர்களை எதிலும் சேர்க்கவில்லை. கட்டணம் குறையும் என நம்புகிறோம்.” அவர்களின் 10 வயதாகும் இளைய மகள் ஆங்கில வழி தனியார் பள்ளியில் ஆண்டிற்கு ரூ. 25,000 வரை செலுத்தி 4ஆம் வகுப்பு படிக்கிறாள்.
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி காலங்களில் அவர்களின் குயவர் தெரு மகிழ்ச்சியாக இருந்த காலத்தை அவர் நினைவு கூர்கிறார். “இந்த தெருவே கொண்டாட்டமாக இருக்கும். தெரு முழுவதும் அரை ஈரத்தாலான சேற்று வாசத்தால் மணக்கும்,” என்கிறார் அவர். “ஆனால் இப்போது நான்கு குடும்பங்கள் தான் இத்தொழிலைச் செய்கின்றன.”
இப்பண்டிகை காலத்தில் மூழ்கியது கணபதி மட்டுமல்ல, கடன் சுமையால் இக்குடும்பங்களும் தான்.
தமிழில்: சவிதா