தனது நிலம் பறிபோகும் வரை பத்மாபாய் கஜாரிக்கு இது கடந்துபோகும் ஒரு விஷயமாகத் தான் இருந்தது. “இந்த நிலம் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எப்படி பிழைத்திருப்போம் என்பது கடவுளுக்கே தெரியும்,” என்கிறார் அவர்.
39 வயது கணவர் பண்டாரிநாத் இருசக்கர வாகன விபத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு பத்மாபாய் ஓய்வின்றி உழைத்து, இழப்பிலிருந்து மீண்டு, தனது குடும்பத்தை நிலைநிறுத்தினார். இரு மகன்கள், இரு மகள்கள், தனது தாய், 6.5 ஏக்கர் நிலம் ஆகியவற்றை பண்டாரிநாத் விட்டுச் சென்றார்.
“நான் அச்சத்துடன், தனிமையாக இருந்தேன்,” என்று அவுரங்காபாதின் வைஜாபூர் தாலுக்கா ஹதாஸ் பிம்பல்கான் கிராமத்தில் உள்ள தனது இரண்டு அறை கொண்ட வீட்டில் அமர்ந்தபடி அவர் சொல்கிறார். “என் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தனர். பொறுப்புகளை நானே எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. சமையலறையை கவனித்தபடியே விவசாயத்தையும் நான் தொடங்கினேன். இன்றும் நான் நிலத்தில்தான் அதிகம் வேலை செய்கிறேன்.”
இப்போது 40 வயதாகும் கஜாரி தனது நிலத்தை கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்படலாம். மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில், 26 தாலுக்காக்களில் 392 கிராமங்களை ‘இணைக்கும்’ சம்ருத்தி மகாமார்க் திட்டத்திற்காக (‘வளமையான நெடுஞ்சாலை’) மாநில அரசுக்கு அவை தேவைப்படுவதாக மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் இணைய தளம் சொல்கிறது. அவற்றில் 63 கிராமங்கள் அவுரங்காபாத் மற்றும் ஜல்னா மாவட்டங்களின் மராத்வாடா விவசாயப் பிராந்தியத்தில் உள்ளன.
‘வளமையான’ நெடுஞ்சாலையை கட்டமைக்க மாநில அரசிற்கு 9,900 ஹெக்டேர் (சுமார் 24, 250 ஏக்கர்) நிலம் தேவைப்படுகிறது என்கிறது மகாமார்க் இணைய தளம். பருத்தி, சோளம், பயறு போன்றவற்றை விளைவித்து வரும் பத்மாபாயின் விளைநிலமும் இதில் அடங்கும். கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்தினால் அக்குடும்பத்திற்கு அரை ஏக்கர் நிலம் மட்டுமே மிஞ்சும். இத்திட்டம் குறித்து யார் பேசினாலும் பத்மாபாய் பதற்றமடைகிறார், “என்னைக் கட்டாயப்படுத்தி நிலத்தை பிடுங்கினால், நான் தற்கொலை செய்துகொள்வேன்,” என்கிறார். “நிலம் எனக்கு குழந்தையைப் போன்றது.”
இந்தாண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு வாரியத்தில் (MSRDC) பத்மாபாயின் நிலத்தை மதிப்பீடு செய்யப்பட்டு, ஏக்கருக்கு ரூ.13 லட்சம் அல்லது ஆறு ஏக்கருக்கு ரூ.78 லட்சம் என்று தரப்படுமென தெரிவித்துள்ளது. இது லாபம் தருவதாக தோன்றினாலும், அவருக்கு பணம் பற்றி கவலையில்லை. “என் இரு மகள்களின் [இப்போது 25 மற்றும் 22 வயதாகிறது] திருமணம், மகன்களின் கல்வி, மாமியாரை கவனித்துக் கொள்வது, இந்த வீட்டை மீண்டும் கட்டியது என அனைத்து வேலைகளையும் விவசாயம் செய்தே நிறைவேற்றினேன்,” என்கிறார் அவர் ஆவேசத்துடன். “அதுவே எங்கள் குடும்பத்தை ஒன்றாக வைக்கிறது. நிலம் இல்லாவிட்டால், நான் எதை நம்புவது? எங்கள் நிலமே எங்கள் அடையாளம்.”
பத்மாபாயின் 18 வயது இளைய மகன் அறிவியல் படிக்கிறார், மூத்த மகனுக்கு 20 வயதாகிறது. இருவரும் குடும்ப நிலத்தில் வேலை செய்கின்றனர். “இன்றைய உலகில் வேலை கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்,” என்கிறார் அவர். “ஒரு வேலையும் கிடைக்காவிட்டால், தினக்கூலியாக அல்லது நகரில் வாட்ச்மேனாக வேலை செய்ய வேண்டியது தான். உங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தால் அதைச் சார்ந்து வாழலாம்.”
சுமார் 1,250 மக்கள்தொகை கொண்ட ஹடாஸ் பிம்பல்கானில் உள்ள கஜாரிசின் நிலம் மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. இந்தப் புதிய நெடுஞ்சாலைத் திட்டம் மாநிலத்தின் நிலையை மாற்றும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் விளம்பரப்படுத்தி வருகிறார். எட்டு வழிச்சாலையாக 120 மீட்டர் அகலத்தில், 700 கிலோமீட்டர் நீளத்திற்கான விரைவுப்பாதை விளைப் பொருட்களை வேகமாக துறைமுகங்கள், விமான நிலையங்கள், கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுச் செல்ல உதவும் என்பதால் பொருளாதாரம் மேம்படும் என்கிறார். இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.46,000 கோடி.
பிராந்தியத்தின் பெரும் பகுதியில் விவசாயம் செய்வது கடினமாக இருக்கும்போது நல்ல விலை கிடைத்தும் மராத்வாடா விவசாயிகள் ஏன் தங்கள் நிலத்தை விற்க தயாராக இல்லை?
மாநில அரசிற்கு தேவைப்படும் 9,900 ஹெக்டேர் நிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனவும் 1000 ஹெக்டேர் தயாராக இருப்பதாகவும் இக்கட்டுரையாளரிடம் MSRDC இணை மேலாண் இயக்குநர் கே.வி. குருந்கார் தெரிவித்தார். மற்றவை கையகப்படுத்தப்படும். “2,700 ஹெக்டேர் நிலத்திற்கான அனுமதி மட்டுமே எங்களுக்கு கிடைத்துள்ளது. 983 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம்,” என்கிறார் குருந்கார். “மேலும் அதிக நிலங்களை நாங்கள் கையகப்படுத்த உள்ளோம். கிராமங்களில் எதிர்ப்பு இருப்பதால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம்.” 80 சதவீத நிலத்தை அரசு பெறும் வரை, இத்திட்டம் தொடங்கப்படாது. 2018 ஜனவரி மாதம் திட்டம் தொடங்கவுள்ளது.
முறையான கடன் வசதி இல்லை, நிச்சயமற்ற வெப்பநிலை, உணவுப் பயிர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை போன்ற பல்வேறு பிரச்சினைகள் பிராந்தியத்தின் பெரும்பகுதி விவசாயத்தை பாதித்து வரும்போது நல்ல விலை கிடைக்கிறது என்றாலும் மராத்வாடா விவசாயிகள் ஏன் தங்கள் நிலத்தை விற்க முன்வரவில்லை? நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் கடனில் உள்ளனர்.
ஒரு காரணம், பத்மாபாய் குறிப்பிடுவது போல, நிலம் பண அடிப்படையில் அளவிட முடியாத மதிப்பைக் கொண்டுள்ளது. மற்றொருக் காரணம் அரசின் நம்பகத்தன்மை. கடனில் சிக்கியுள்ள விவசாயிகள் பலரும் தங்கள் நிலத்தை கொடுக்க தயாராக இருக்கலாம், ஆனால் இத்திட்டத்திற்காக அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
ஹதாஸ் பிம்பல்கானைச் சேர்ந்த காகாசாஹேப் நிகோடி கூறுகையில், “எந்த அரசின் வரலாற்றையும் பாருங்கள். அவற்றால் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியுமா? அவர்களுக்கு விவசாயிகள் குறித்து அக்கறையில்லை. விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு முன் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நாடெங்கும் செய்யப்படுகின்றன என எண்ணற்ற உதாரணங்களை கூறலாம். இறுதியில் யார் சுரண்டப்படுகின்றனர் என்பதே முக்கியம்.”
40 வயதாகும் நிகோடி நெடுஞ்சாலைக்காக தனது 12 ஏக்கர் நிலத்தில் ஆறு ஏக்கரை இழக்கிறார். MSRDC மார்ச் 3ஆம் தேதி அளித்த அறிவிக்கையை அவர் நம்மிடம் காட்டுகிறார். “விவசாயிகளின் அனுமதியின்றி எதுவும் செய்ய மாட்டோம் என்று அரசு சொல்கிறது,” என்றார் அவர். “ஆனால் அறிவிக்கையில், கொடுக்கப்பட்ட நாளில் நீங்களோ, உங்களது பிரதிநிதியோ வராவிட்டால், நிலத்தின் கூட்டு எண்ணிக்கை உங்களுக்கு தேவையில்லை என்று கருதப்படுவீர்கள் என்று சொல்கிறது. எங்கள் துயரங்களை சொல்வதற்கான எளியப் படிவத்திற்கு [ஆட்சியர் அலுவலகத்தில்] கூட நாங்கள் சண்டையிட வேண்டி இருந்தது.”
ஹதாஸ் பிம்பல்கானிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அவுரங்காபாத்-நாஷிக் நெடுஞ்சாலை அருகே பழைய மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலை செல்லும் கங்காபூர் தாலுக்காவின் மலிவாடா கிராம விவசாயிகளும் கூட சிக்கலில் உள்ளனர். இக்கிராமத்தின் பெரும்பான்மை மக்கள் சுமார் 4,400 பேர் கொய்யா, சப்போட்டா, அத்திப் பழங்களை விளைவிக்கின்றனர்.
அவுரங்காபாத், கங்காபூர் எல்லைகளில் அவர்களின் வயல்கள் அமைந்துள்ளன. மாலிவாடா வழியாக 10 அடி அகலத்தில் செல்லும் புழுதிச்சாலை இரண்டு தாலுக்காகளை பிரிக்கிறது. 2017 ஜூலை மாதம் MSRDC நிலத்தை மதிப்பீடு செய்தது. அவுரங்காபாத் நகரை ஒட்டியுள்ள கிராமங்களின் நிலங்கள் அதிக மதிப்பீடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவுரங்காபாத் தாலுக்காவில் இல்லாத மாலிவாடா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.12 லட்சம் தருவதாக சொல்கின்றனர், அதுவே 10 அடி தள்ளியிருக்கும் நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.56 லட்சம் என்கின்றனர்.
மாலிவாடாவின் 34 வயது பாலாசாஹேப் ஹெக்டே தனது 4.5 ஏக்கர் பழத்தோட்டத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. “இது [மதிப்பீடு] நியாயமற்றது. நான் குங்குமப்பூ, கொய்யா, மாம்பழம் விளைவிக்கிறேன். ஒரு ஏக்கருக்கு அவர்கள் தருவதாக சொன்ன தொகை [ரூ.12 லட்சம்] எனது ஓராண்டு லாபம். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், அது எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்?”
மராத்வாடாவின் பல பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர், மாலிவாடா போன்ற கிராமங்களில் தோட்டக்கலையின் பழத்தோட்டங்களை நிர்மாணித்தவர்கள் பொருளாதாரத்தால் செழுமையாக உள்ளனர் என்று சொல்கிறார் ஹெக்டே. அருகில் கேசாபூர் அணை உள்ளதால் இங்குள்ள நிலங்கள் செழுமையாக உள்ளன. “தங்கள் நிலம் செழுமையாக, பணம் தரும்போது யார் தான் விற்பார்கள்?” என அவர் கேட்கிறார். “முதலில் அதற்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும். அதை நீங்கள் தாக்குப்பிடித்துவிட்டால் போதும். இந்த பழத்தோட்டத்தை அமைக்க என் தந்தை 15ஆண்டுகள் செலவிட்டார். நிலத்திற்கு இழப்பீடாக வேறு ஒரு இடத்தில் ஒருவேளை அவர்கள் நிலம் கொடுத்தாலும், அங்கு பழத்தோட்டம் அமைக்க மற்றொரு 15 ஆண்டுகள் ஆகும். புதிய நிலம் செழுமையாக இருக்கும் என்று எப்படி நம்புவது?”
“செழுமையான நிலத்தை விவசாயிகள் விற்க மாட்டார்கள்,” என்று வலியுறுத்துகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய செயற்பாட்டாளரும், இத்திட்டத்தை எதிர்க்கும் சம்ருத்தி மகாமார்க் ஷேத்காரி சங்கர்ஷ் சமிதியின் உறுப்பினருமான ராஜூ தேஸ்லே. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீடுகளிலும் அதிருப்தி நிலவுகிறது. “குறைந்தது 10,000 விவசாயிகள் [மாநிலம் முழுவதும்] இடம்பெயர்க்கப்படுவார்கள். ஒரு திட்டம், ஒரே விலை என்று தான் இழப்பீடு இருக்க வேண்டும்,” என்கிறார் தேஸ்லே. “சில விவசாயிகளுக்கு ஏராளமான பலன்களும், மற்றவர்களுக்கு இழப்பும் ஏற்படுத்துகிறது.”
MSRDCன் குருந்த்கர் பேசுகையில், நிலத்தை முறையாக மதிப்பீடு செய்துள்ளோம் என்றும் முக்கிய இடங்களில் உள்ள நிலங்களுக்கும் ஒரே விலை என்பது நியாயமற்றது என்றும் கூறுகிறார். “நிலத்தின் விலையைவிட நான்கு மடங்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் போது இந்த வேறுபாடு மறைந்துவிடும்,” என்கிறார் அவர். “நிலத்தை [எங்களிடம்] விற்ற விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். சந்தை விலையைவிட நான்கு மடங்கு நிலையை அவர்களுக்குக் கொடுத்துள்ளோம். அவர்கள் காலிமனைகளை கூட வாங்கியுள்ளனர். இப்போது அவர்களுக்கு நிலமும், வங்கி இருப்பும் உள்ளது.”
‘காவ்பந்தி’ அல்லது MSRDC அதிகாரிகள் கிராமத்திற்குள் நுழையத் தடை எனும் தீர்மானத்தை மாலிவாடாவில் நிறைவேற்றினர். மராத்வாடாவில் உள்ள மற்றவர்களைப் போன்று இக்கிராமத்திலும் இந்தாண்டு கருப்பு விளக்குகள் ஏற்றப்பட்டு ‘கருப்பு தீபாவளி’ அனுசரிக்கப்பட்டது. தங்கள் நிலங்களை விற்பதற்கு எதிராக நாஷிக் மாவட்டத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தேஸ்லே சொல்கிறார்.
தேவையற்ற இந்த புதிய நெடுஞ்சாலைக்கு பதிலாக, “பழைய நெடுஞ்சாலைகளில் உள்ள குறைகளை அரசு சரிசெய்ய வேண்டும்,” என்கிறார் ஹெக்டே.
தமிழில்: சவிதா