"ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எங்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொடர்பான சோதனைகளை வாட்ஸ்அப் வழியாக அனுப்பியது - அவற்றில் அவரவரின் பாஸ்போர்ட் எண்களும் எங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிய தகவலும் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. பரீட்சைப் பேப்பரின் ரிசல்ட் எப்படி வெறும் எண்களாக நாளிதழ்களில் வெளியாகுமோ அதே போல அவர்கள் அனுப்பிய விவரங்கள் இருந்தன. உண்மையான மருத்துவ அறிக்கைகள் எதுவும் இன்றுவரை எங்களுக்கு அவர்கள் அனுப்பவில்லை” என்கிறார் ஷபீர் உசேன் ஹக்கிமி. பாசிட்டிவா அல்லது நெகட்டிவா எனும் விவரம் மட்டுமே தரப்பட்டது. ஈரானில் உள்ள கோமில் இருந்து எங்களுடன் பேசிய லடாக் பகுதியின், கார்கில் நகரைச் சேர்ந்த 29 வயதான இவர், தனது பெற்றோருடன் இந்த ஆண்டு ஜனவரியில் ஷியா முஸ்லிம்களுக்குப் புனிதமான ஆலயங்களுக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈரான் நாட்டுக்குச் சென்று இமாம் அலி, உசேன் மற்றும் நபிகள் நாயகத்தின் இதர குடும்ப உறுப்பினர்களின் புனித இடங்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமாக ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த சுமார் 1,100 பேர் கொரோனா வைரஸ் தொடர்பான நோய் ஈரானைத் தாக்கியபோது அங்கிருந்தனர். அந்த தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்தியாவுக்கு திரும்பும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டபோது கோம் நகரில் சிக்கித் தவித்தனர்.
"எங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று மார்ச் 2 ஆம் தேதி சோதிக்கத் தொடங்கினார்கள். மார்ச் 10 வரை சோதித்தார்கள். எங்களின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக புனே நகரத்துக்கு அனுப்பப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது, புனித யாத்திரைக்காக வந்திருக்கிற ஒவ்வொருவரும் அந்தச் சோதனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது” என்கிறார் ஷபீர். 78 புனிதப் பயணிகளிடம் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் யாருக்கும் கிருமித் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டன, மார்ச் 10 அன்று ஐ.ஏ.எஃப் சி -17 விமானம் மூலம் இந்தியாவுக்கு போவதற்காக அவர்கள் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டனர்.
"ஆச்சரியப்படும் விதமாக, அவர்களில் 19 பேர் எந்த காரணமும் தெரிவிக்கப்படாமல் திரும்பவும் கோம் நகரத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஷபீர் கூறுகிறார். விரைவில், லடாக்கிலிருந்து வந்த 254 புனிதப் பயணிகளுக்கு நோய்த் தொற்று இருக்கிறது என்று சோதனை முடிவுகள் வந்தன. "அவர்களைத் தனிமைப்படுத்துவது எனும் நடைமுறையை அமலாக்குவதை மறந்துவிடுங்கள்.நோய்த் தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம், ஒரு சாதாரண முகமூடியைக் கூடத் தரவில்லை. அதற்கு பதிலாக, எங்களில் சிலர் தானாக முன்வந்து, கோமிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவர்களை அழைத்துச் சென்றோம், குறைந்தது ஒரு சிலராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.”
தெஹ்ரான் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு இந்த செய்தியாளர் மூன்று நாள்களுக்கு முன்பாக அனுப்பிய கேள்விகளுக்கான பதில்களுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.
பெரும்பாலான புனிதப் பயணிகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களிலும் கணிசமானோர் 80 வயதைக் கடந்தவர்கள். வயதான பயணிகளோடு பயணிக்கிற இளம் பயணிகளுக்கும், வயதான பயணிகளோடு உடன் வந்தவர்களுக்கும், வயதான பயணிகளின் உடல் நலம் மீது கூடுதல் அக்கறை உள்ளது. அது முன்னுரிமையான பிரச்சனையும் ஆகும். ஆனால், வைரஸ் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்ட அதே நோயாளிகளை அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், பரிசோதித்தபோது, அவர்களிடம் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புனிதப் பயணிகளிடம் பணம் குறைவாக இருக்கிறது. நெரிசலான சின்னச் சின்ன தங்குமிடங்களில்தான் அவர்கள் திரும்ப வேண்டியிருந்தது. அவர்களால் அதற்குத் தான் செலவழிக்க முடிந்தது.தற்போது இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அதனால் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் புனிதப் பயணிகள் தற்போது தங்கள் ஹோட்டல் அல்லது லாட்ஜ் அறைகளுக்கு பணம் செலுத்தவில்லை.
"ஈரானில் உள்ள இந்தியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகள் போதுமான அளவுக்கு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை ஈரானில் உள்ள இந்தியாவின் தூதரகம் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்" என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மார்ச் 13 அன்று மக்களவையில் தெரிவித்தார். மேலும், " உலகெங்கிலும் நமது குடிமக்கள் பரவியிருக்கிறார்கள். நமக்கு, இது மிகவும் அக்கறைக்குரிய விஷயம். அதே சமயம், நாம் பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் என்ன சொல்கிறோம் என்பதும், என்ன செய்கிறோம் என்பதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்பட வேண்டும், பயத்தை பரப்புவதற்கு அது பயன்படக்கூடாது”
பாராட்ட வேண்டிய நிலைபாடு இது. ஆனால், அமைச்சரின் நிலைபாட்டுக்கு முரண்பாடானதாக ஊடகங்களின் தலைப்புகள் இருந்தன. ஈரானுக்கு புனிதப் பயணமாக, லடாக் பகுதியிலிருந்து போன 254 புனிதப் பயணிகளுக்கு, நோய்த் தொற்று இருப்பதாக, ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் பேசின. இவை பின்னர் ‘இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை’ என்று மெதுவாக தங்களின் தொனியை மாற்றிக்கொண்டன. இது மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தியது, குறிப்பாக, லே எனும் பகுதியில் உள்ள சுச்சூட் கோங்மா கிராமமும் கார்கில் பகுதியில் உள்ள சங்கூ கிராமமும் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டன. இன்னமும் அத்தகைய தனிமைப்படுத்தலில்தான் அவை இருக்கின்றன. அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் குரல் செய்திகள் வெளிவரத் தொடங்கின, அவற்றில் சில வகுப்புவாதத் தொனியோடும் இன வெறுப்பு தொனியுடனும் இருந்தன. இதைத் தொடர்ந்து ஜம்முவிலும் மற்ற இடங்களிலும் படிக்கிற லடாக் பகுதியின் மாணவர்கள் கொடுமைப்படுத்துதலுக்கும், பாகுபாட்டுக்கும் ஆளானார்கள்.
சுச்சூட் கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான முதியவர் முகமது அலி இறந்தபோது, அவரை அடக்கம் செய்வதற்கு உதவ யாரும் முன்வரத் தயாராக இல்லை. அவரது இறப்புக்கான காரணம் கோவிட் -19 வைரஸ் அல்ல, சிறுநீர் பாதை நோய்த் தொற்று காரணமாகத்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது என்று பின்னர் தெரியவந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட அனுபவம் பற்றி முகம்மது அலியின் மகன் முகமது இசா நினைவுப்படுத்திக்கொள்ளும்போது " நான் வெறுத்துப்போய்விட்டேன். எதையும் செய்ய முடியாது. எந்த உதவியும் கிடைக்காத நிலை. எனது எதிரிகளுக்குக் கூட, இத்தகைய அனுபவங்கள் கிடைக்கக்கூடாது என்றார் அவர்.
கார்கில் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முஸ்தபா ஹாஜி மார்ச் 21 அன்று, இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, குறிப்பாக ஈரானில் உள்ள புனிதப் பயணிகளை உடனடியாக அங்கிருந்து அழைத்து வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது மனு கோரியது. மார்ச் 27 ம் தேதி, உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மார்ச் 30 க்குள் அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் மிக விரைவாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த நீதிமன்றம் கூறியதாவது: “ இந்த குடிமக்களின் நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம். அதற்கான பொருத்தமான செயல் திட்டம் ஒன்று ஈரானில் உள்ள இந்திய தூதரகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து தீட்டப்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. ”
நோய் தொற்று இருக்கிறதா என்று சோதிப்பதற்கான மாதிரிகள் சேகரிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஏப்ரல் 1 ம் தேதி அரசாங்கம் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. "ஈரானில் இருந்து இந்தியாவின் புனிதப் பயணிகளை அழைத்து வருவதில் ஏன் தாமதம் , ஏன் குழப்பம் ஏன்? அதுவும் , அவர்களில் பெரும்பாலோர் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய, ஒரு கொள்ளை நோய் பரவல் சூழல் ஈரானில் இருக்கும்போது ஏன் இந்த தாமதம் ?" என்று முஸ்தபா கேட்கிறார்.
இதற்கிடையில்,வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தவர்களை, ஈரானில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனமான மஹான் ஏர், அழைத்துச் செல்ல முன்வந்தது. மார்ச் 24 அன்று 253 பேரையும், மார்ச் 28 அன்று 224 பேரையும் அந்த விமானம் அழைத்து வந்தது. ஆனாலும் இன்னும் ஈரானில் 324 லடாக் பகுதி புனிதப் பயணிகள் உள்ளனர் அவர்களில் 254 பேருக்கு 'கொரோனா' வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஷபீர் போன்ற இளையவர்கள் உட்பட 70 தன்னார்வ தொண்டர்களும் அங்கே உள்ளனர். அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்று ஏற்கெனவே பரிசோதித்து அறியப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் வயதான பயணிகளைக் கவனித்துக்கொள்வதற்காக, அங்கே தங்கிவிட்டவர்கள்.
வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தவர்களில் சிலர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பிறகு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ளனர். கார்கில் நகரத்தைச் சேர்ந்த 79 வயதான ஹாஜி முகமது அலியும் அவர்களில் ஒருவர். "என் அப்பா இந்தியாவில் இருக்கிறார், ஜோத்பூரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் நிம்மதியாகத்தான் இருக்கிறது" என்று எமது இணையதள செய்தியாளரிடம் பகிர்ந்துகொள்கிறார் அவரது 25 வயது மகள் ஹக்கீமா பானோ . "ஆனால் இன்னும் கவலையாகத்தான் இருக்கிறது, அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்வதற்காகவும் எங்களது குடும்பத்தில் இணைவதற்காகவும் நாங்கள் இனியும் காத்திருக்க முடியாது "
புனித யாத்திரைக்காக ஈரான் வந்து மார்ச் 28 அன்று ஒரு மாதத்தை ஷபீர் முடித்து விட்டார். “பல நாட்களுக்குப் பிறகு, கடைசியாக எங்களுக்கு ஹோட்டல் அறைகள் வழங்கப்பட்டன. அவர்கள் இப்போது வழக்கமான சோதனைகளைச் செய்ய ஈரானிய மருத்துவர்களை அனுப்புகிறார்கள். இருப்பினும், இங்கிருக்கும் அறைகள் 8, 6 மற்றும் 12 படுக்கைகள் கொண்டவை. எனவே, இது இன்னமும் கூட சரியான முறையிலான தனிமைப்படுத்தல் அல்ல. நோய் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்ட 254 லடாக் பகுதி புனிதப் பயணிகளுக்கு 14 நாட்கள் கடந்து விட்டன, ஆனால், அவர்களை இரண்டாவது சோதனைக்கு உட்படுத்துவதற்கு யாரும் வந்து அவர்களிடமிருந்து ‘மாதிரிகள்’ சேகரிக்கவில்லை. ”
"நாங்கள் வீட்டிற்கு வர விரும்புகிறோம்," என்று ஷபீர் கூறுகிறார். “தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது சோதனைகளையும் செய்யுங்கள். தனிமைப்படுத்தல்களையும் செய்யுங்கள், ஆனால், எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். இங்குள்ள வயதானவர்களை கொரோனா வைரஸ் கொல்ல வேண்டாம். மனச்சோர்வாலும், அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கிற நோய்களாலும் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்திருக்கிற சோகத்தாலுமே அவர்கள் இறந்துவிடுவார்கள் ” என்கிறார் அவர்.
அவர் இந்த ஒரு ஒரு விசயத்தைப் மிகவும் வேதனைப்படுகிறார்: “எங்கள் குடும்பங்கள் மனம் வெறுத்துப் போயிருக்கின்றனர். லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகவும் பயந்து போயிருக்கின்றனர். புனிதப் பயணமாக வந்த 254 பேருக்கு ‘கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது’ என்று அழைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்; அப்படிக்கூறுகிற எந்தவொரு மருத்து அறிக்கையும் எங்களுக்கு இதுவரையும் தரப்படவில்லை. நோய்த் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் உள்ள நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள் ” என்கிறார் அவர். இந்த நிலைதான் அவரை மிகவும் வேதனைப்பட வைக்கிறது.
தமிழில்: த. நீதிராஜன்