மகாராஷ்டிராவில் 2013 ஆம் ஆண்டு குறைந்தது 3,146 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 1995 முதல் மேற்கு இந்திய மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை 60,750 ஆகிவிட்டது. மகாராஷ்டிராவின் இந்த பதிவுகள் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நிலை மாநிலத்தில் இன்னமும் மோசமாகிவிட்டது. 2004 முதல் 2013 ஆம் ஆண்டுக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3,685 விவசாயிகள் இம்மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
இதன் பொருள் என்னவென்றால் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள மகாராஷ்டிராவில், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது 1995 முதல் 2003ம் ஆண்டுக்கு இடையில் ஒரு நாளுக்கு ஏழு தற்கொலைகளாக இருந்த சராசரியைவிட மிகவும் மோசமானது. உண்மையில், இது 42 சதவிகித உயர்வு. (1995 ஆம் ஆண்டு முதல் தனது வருடாந்திர விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகளை அதன் அறிக்கைகளில் NCRB பதிவு செய்யத் துவங்கியது).
1995 முதல் இந்தியாவில் மொத்தம் 2,96,438
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
.
இதற்கிடையில் மகாராஷ்டிராவின் தற்போதைய விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையான 3,116யை 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 640 தற்கொலைகள் குறைந்து இருப்பதை காட்டுகிறது. உண்மையில் விவசாயத் தற்கொலைகள் நடக்கக்கூடிய முதல் ஐந்து மாநிலங்களிலும் முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டில் தற்கொலைகள் குறைந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் 558 குறைந்துள்ளதாகவும், சத்தீஸ்கரில் 4, மத்திய பிரதேசத்தில் 82 மற்றும் கர்நாடகத்தில் 472 என்ற எண்ணிக்கையிலும் குறைந்துள்ளது.
ஆகவே குறைந்த எண்ணிக்கையில் தான் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனரா? NCRB யின் ADSI என்ற அறிக்கை அவ்வாறு தான் பரிந்துரைக்கிறது. நாடு தழுவிய அளவில் விவசாயத் தற்கொலைகளின் எண்ணிக்கை 1,982 குறைந்து, 11,743 ஆக உள்ளது, இதுவே 2012 ஆம் ஆண்டில் 13,754 ஆக இருந்துள்ளது. (
http://ncrb.gov.in/adsi2013/table-2.11.pdf
).
இது ஒரு மிகவும் வரவேற்கத்தக்க சரிவு - நீங்கள் எண்ணிக்கைகளை மிக நெருக்கமாக பார்க்கும் வரை. மொத்தம் 7,653 தற்கொலைகளும் முதல் ஐந்து மாநிலங்கள் அனைத்து விவசாய தற்கொலைகளில் மூன்றில் இரண்டு பங்கை கொண்டுள்ளது. அந்த விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் மீதமுள்ள 15 மாநிலங்களில் பெரும்பாலானவை சிறிய அளவிலான அதிகரிப்பை பதிவு செய்திருக்கின்றன. அவற்றுள் ஹரியானாவில் குறிப்பிடத்தக்க அளவில் 98 என்கிற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இந்தப் பெரிய 'வீழ்ச்சி' மாநிலங்களின் வளர்ந்து வரும் போக்கை நிலை நிறுத்துகிறது, இல்லையென்றால் அதிக விவசாய தற்கொலைகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் அல்லது ஆண்டுதோறும் பூஜ்ஜியத்திற்கு அருகில் தற்கொலைகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படுகின்றன. சத்தீஸ்கர் இதை 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு செய்துள்ளது அவை முறையே: 0, 4 மற்றும் 0 விவசாய தற்கொலைகள் ஆகும். மேற்கு வங்கமும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் விவசாய தற்கொலைகள் நடைபெறவில்லை என்று பதிவு செய்திருக்கிறது. இந்த மாநிலங்கள் பூஜ்ஜிய விளையாட்டுக்களை துவங்குவதற்கு முன்பு அவர்களின் மூன்றாண்டு சராசரியை கணக்கிலெடுத்துக் கொண்டால் என்ன செய்வது? சத்தீஸ்கருக்கு அந்த சராசரி 1,567. அதுவே மேற்குவங்கத்தில் 951. இந்த எண்ணிக்கையே மொத்தம் 2,518 ஆகும். இதனையும் 2013 ஆம் ஆண்டின் மொத்தத் தற்கொலைகளில் எண்ணிக்கையுடன் சேர்த்தால், 14,262 அந்த எண்ணிக்கை உயர்கிறது. இது 2012 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும் (அந்த ஆண்டும் இத்தகைய மோசடி நடந்துள்ளது).
2013 ஆம் ஆண்டிற்கான 11,744 என்ற எண்ணிக்கையை ஏற்றுக்கொள்வது கூட, 1995 முதல் தேசத்தில், மொத்தம் 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிவிக்கிறது (NCRB ASDI 1995 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான அறிக்கை)
இது மாநிலங்கள் தற்கொலையில் எந்த சரிவையும் காண முடியாது அல்லது காணவில்லை என்று சொல்லவில்லை. (ஒவ்வொரு ஆண்டும் உயர்வது அல்லது வீழ்ச்சி அடைவதும் மிகவும் சாதாரணமானது தான்) கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீழ்ச்சியின் தன்மை தான் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 2001 முதல் 2010 வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய தற்கொலைகளைக் கண்ட மாநிலமான சத்தீஸ்கர் அடுத்த மூன்றாண்டுகளில் திடீரென்று தற்கொலைகள் எதுவுமில்லை என்று கூறுகிறது. இது பின்பற்றக் கூடிய ஒரு மாதிரியா? பிற மாநிலங்கள் நிச்சயமாக அப்படித்தான் நினைக்கின்றன. அவர்களும் மோசடியில் ஈடுபடலாம் என்று எண்ணுகின்றனர்.
விவசாய தற்கொலைகள் அதிகமாக நடைபெறும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் விவசாய தற்கொலைகள் நடைபெறவில்லை என்று அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் கூட 4 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2009 ஆம் ஆண்டில் 154 விவசாயத் தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
"தெளிவாக, தரவுகளில் மோசடிகள் தொடர்கிறது", என்று சென்னையில் உள்ள ஆசிய பத்திரிக்கைக் கல்லூரியில் பொருளாதார நிபுணரும் மற்றும் பேராசிரியராமான கே. நாகராஜ் கூறுகிறார். பேராசிரியர் நாகராஜின் 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற விவசாய தற்கொலைகள் பற்றிய ஆய்வு இந்த விஷயத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். "நீங்கள் தொடர்ந்து நடைபெறும் ஒரு மோசமான எண்ணிக்கையை குறைக்க விரும்பினால், அவற்றை அழிக்க முடியாது. மாறாக நீங்கள் அதை வேறு பகுதியில் சேர்க்க வேண்டும். தேவையற்ற எண்களை "மற்றவைகள்" பகுதியில் நகர்த்துவது தான் தரவுகளின் மோசடி செய்வதற்கான பொதுவான வழியாகும்", என்று கூறுகிறார்.
NCRBக்கு மாநிலங்கள் சமர்ப்பிக்கும் தரவுகளின் போக்கு இதுதான். இந்த ஆண்டும் கூட.
இந்தத் தகவல்மோசடி தெரிவிக்கும் மற்றொரு விஷயம் மோசடி மாநில அளவில் நடைபெறுகிறது என்பதைத் தான்.
NCRBயின் அட்டவணையின் அதே பக்கத்தில் சுயதொழில் செய்பவர்கள் (விவசாயம்) என்கிற வரிசையும், மற்றொரு வரிசையான: " சுயதொழில் செய்பவர்கள் (மற்றவர்கள்)" என்ற வரிசையும் உள்ளது. (
http://ncrb.gov.in/adsi2013/table-2.11.pdf
).
சத்தீஸ்கரில் விவசாய தற்கொலை எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்துவிட்டதால் இந்த "சுயதொழில் செய்பவர்கள் (மற்றவர்கள்)" வரிசையில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சத்தீஸ்கரின் விவசாயத் தற்கொலைகள் மறைக்கப்படாத காலங்களில் (எடுத்துக்காட்டாக 2008 மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்த "மற்றவர்கள்" வரிசை 826 மற்றும் 851 என்ற எண்ணிக்கையை கொண்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் விவசாயத் தற்கொலைகள் நடைபெறவில்லை என்று சொல்லும் அதே வேளையில், இந்த மற்றவர்கள் வரிசையில் எண்ணிக்கை 1,826 மற்றும் 2,077 ஆக அதிகரித்துள்ளது. விவசாயத் தற்கொலையில் 640 தற்கொலைகள் குறைந்துள்ளதாக கூறும் மகாராஷ்டிராவின் ஆவணத்தில் "சுய வேலை செய்பவர்கள் (மற்றவர்கள்)" என்ற வரிசையில் 1,000 தற்கொலைகள் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் விவசாய தற்கொலை 82 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது ஆனால் "மற்றவர்கள்" வரிசையில் 236 தற்கொலைகள் அதிகரித்துள்ளது.
புதுச்சேரியும் இதே போன்ற ஒரு போக்கையே காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டில் எந்த தரவையும் தாக்கல் செய்ததன் மூலம் மேற்கு வங்காளம் அந்த பிரச்சனையை தீர்த்து. எனவே தெளிவாக அவர்களால் எண்ணிக்கையை மூடி மறைக்க முடியாத போது அவர்கள் அதனை "மற்றவர்கள்" வரிசையில் சேர்த்து விடுகின்றனர்.
முன்கூட்டியே வீழ்ச்சியடைந்துவிட்டது என்று கொண்டாடுபவர்கள் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க தவறி விடுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் நமக்குக் காட்டுவது போல 2001ம் ஆண்டில் இருந்ததைவிட 7.7 மில்லியன் விவசாயிகள் 2011 ஆம் ஆண்டில் குறைந்து இருக்கின்றனர். லட்சக்கணக்கானவர்கள் இத்தொழிலை விட்டுவிட்டனர் அல்லது விவசாயி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டனர். இதே காலகட்டத்தில் நாடு சராசரியாக ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் 2000 வரை குறைவதை கண்டது. எனவே 2013 ஆம் ஆண்டு நிச்சயமாக குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே இருந்திருப்பர். சுருங்கிக் கொண்டிருக்கும் இந்த விவசாயிகளின் எண்ணிக்கைக்கும் அதற்கு எதிராக தற்கொலைகளின் எண்ணிக்கையும் வைத்துப் பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும்?
பேராசிரியர் நாகராஜ் மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள ஆய்வாளர்கள், NCRBயின் தரவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு ஆகியவற்றை கடந்த ஒரு தசாப்தத்திற்கு கணக்கிட்டார்கள்: இதில், "2011ம் ஆண்டிற்கான சரி செய்யப்பட்ட விவசாய தற்கொலைகளின் எண்ணிக்கை 2001ஆம் ஆண்டில் இருந்ததை விட சற்று அதிகமாக உள்ளது", என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (
http://psainath.org/farmers-suicide-rates-soar-above-the-rest/
) இது மாநில அளவில் தரவுகளில் கடும் மோசடி செய்த பிறகு கடைத்துள்ள தகவல்.
அவர்களின் கணக்கீடுகள் காட்டியபடி இந்திய விவசாயிகளிடையே தற்கொலை வீதம் மற்ற மக்களிடம் 2011-இல் இருந்ததை விட 47 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாய பிரச்சனைகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில மாநிலங்களில் அவை நூறு சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தன. மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளைத் தவிர பிற இந்தியர்களிடம் ஒப்பிடும்போது 162 சதவீதம் அதிகமாகும். இந்த மாநிலத்தில் உள்ள ஒரு விவசாயி, மற்ற விவசாயிகளைத் தவிர, நாட்டில் வேறு எவரையும் விட தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் இரண்டரை மடங்கு அதிகம்.
வறட்சி மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றால் தான் தற்கொலைகள் நடைபெறுகின்றனவா?
பயிர்கள் சிறப்பாக விளைந்திருந்த ஆண்டுகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். அதே போல பயிர் சேதம் ஆகிய காலங்களிலும் செய்திருக்கின்றனர். தங்களது உயிர்களை அதிகமான எண்ணிக்கையில் பல்வேறு வருடங்களில் எடுத்திருக்கின்றனர். மழை பெய்தாலும் இழப்பு அவர்களுக்குத் தான், பெய்யவில்லை என்றாலும் மிகவும் மோசமாக பாதிக்கிறது. சில நல்ல பருவமழை ஆண்டுகளில் கூட அதிகளவிலான தற்கொலைகள் நடந்தேறியுள்ளன. அதே போல வறட்சியான வருடத்திலும் நடந்தேறியுள்ளது அது நிலைமையை இன்னும் மோசமாகி இருக்கிறது.
பணப்பயிர் விவசாயிகளிடையே தான் தற்கொலைகள் பெருமளவில் நடந்தேறி இருக்கின்றன. பருத்தி, கரும்பு, நிலக்கடலை, வெண்ணிலா ,காபி, மிளகு மற்றும் பலவற்றை வளர்ப்பவர்களிடையே. நெல் அல்லது கோதுமை சாகுபடி செய்பவர்கள் இடையே தற்கொலை எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கின்றது. வறட்சி, பணப்பயிர் விவசாயிகளை தான் கொல்கிறது ஆனால் உணவுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளை அல்ல என்று நாம் வாதிட முடியுமா?
பருவமழை உண்மையில் விவசாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனால் எந்த வகையிலும் விவசாய தற்கொலைக்கு இது ஒரு முக்கிய காரணம் அல்ல. பணப்பயிர் விவசாயிகள் இடையே நிகழும் தற்கொலைகளில் பெரும்பகுதி கடன், உயர் வணிகமயமாதல், அதிகரித்து வரும் உள்ளீட்டு விலை, தண்ணீர் பயன்படுத்தும் முறை மற்றும் கடுமையான விலை உயர்வுகள் மற்றும் விலை ஏற்ற இறக்கம் போன்ற பிரச்சனைகள் தான் முன்னிலையில் உள்ளன. இந்த அனைத்து காரணிகளுமே மிக முக்கியமாக மாநில அரசின் கொள்கைகளால் இயக்கப்படுகின்றன.
இந்த காரணிகளின் பின்னணியில் இந்த ஆண்டு உண்மையில் வறட்சி ஏற்பட்டால் அவர்கள் மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். மேலும் நாம் அதனை விரைவில் அறிந்து கொள்வோம். பருவமழைக்கு ஜூலை மாதமே மிக முக்கியமானது. அது பொதுவாக 50 சதவீதத்திற்கும் அதிகமான மழையைப் பெறுகிறது இதனால் ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களின் முக்கியத்துவத்தைச் சேர்த்தாலும் அதை சமன்ப்படுத்துகிறது. இந்த சூழ்நிலை கட்டமைக்கப்படுவதைப் பொறுத்தவரை நான் இதைப் பற்றிய கொண்டாட்டங்களில் நான் அதிகம் ஈடுபடுவதில்லை.
மேலும் காண்க:
விவசாயத் தற்கொலை விகிதங்கள் மீதம் உள்ளவர்களை விட அதிகமாக உயர்ந்து வருகிறது:
http://psainath.org/farmers-suicide-rates-soar-above-the-rest/
2012 ஆம் ஆண்டில் விவசாய தற்கொலையின் போக்குகள் மோசமாக இருக்கிறது:
http://psainath.org/farm-suicide-trends-in-2012-remain-dismal/
ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் குறைந்து வருகின்றனர்
http://psainath.org/over-2000-fewer-farmers-every-day/
1995 முதல் 2013-ம் ஆண்டு வரை மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற விவசாய தற்கொலைகள்
வருடம் மகாராஷ்டிரா விவசாய தற்கொலைகள்
1995 1083
1996 1981
1997 1917
1998 2409
1999 2423
2000 3022
2001 3536
2002 3695
2003 3836
மொத்தம் 1995-2003 23,902
2004 4147
2005 3926
2006 4453
2007 4238
2008 3802
2009 2872
2010 3141
2011 3337
2012 3786
2013 3146
மொத்தம் 2004-2013 36,848
மொத்தம் 1995-2013 60,750
இக்கட்டுரை முதலில் வெளியானது: http://psainath.org/maharashtra-crosses-60000-farm-suicides/#prettyPhoto
இந்த செய்தி குறிப்பின் குறுகிய வடிவம் பிபிசியில் வெளியிடப்பட்டது:
https://www.bbc.com/news/world-asia-india-28205741
தமிழில்: சோனியா போஸ்