"பனிப்பொழிவு பற்றி எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், அறுவடைக்கு நாங்கள் விரைந்து சென்று இருப்போம்", என்று முஷ்தக் அகமது கூறுகிறார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள பாம்போர் வட்டத்திலுள்ள நம்பல் பால் கிராமத்தில் அகமது வசித்து வருகிறார். இங்கே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடுப்பகுதியில் அவரும் பிற விவசாயிகளும் க்ரோகஸ் சடைவசை - க்ரோகஸ் குங்குமப்பூவினை நடவு செய்கின்றனர். அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இருந்து நவம்பர் மாதம் நடுப்பகுதி வரை, அவர்கள் அதன் பூவினை அறுவடை செய்கின்றனர். அதன் கருஞ்சிவப்பு நிற பகுதிகள் (பூவின் சூலக முடி மற்றும் சூலக தண்டு) தான் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த குங்குமப்பூவாக விற்கப்படுகிறது.
இந்தியாவில் குங்குமப்பூ வளரும் ஒரே மாநிலம் (இப்போது யூனியன் பிரதேசம்) காஷ்மீர் தான். பெரும்பாலானவை நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்ற அதே வேளையில் சிலவற்றை உள்ளூர் கஹ்வா தேனீருக்குப் பயன்படுத்துகின்றனர், முக்கியமான உணவு தயாரிப்புகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும், சடங்குகளிலும் கூட பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு காஷ்மீர் அதன் முதல் பனிப்பொழிவை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பாகவே - நவம்பர் 7 அன்றே ஆரம்பித்துவிட்டது. அது பூக்கின்ற செடிகளை பாதித்தது. அதன் விளைவாக பாம்போரில் உள்ள மைஜ் கிராமத்தைச் சேர்ந்த வாசீம் காண்டே, தான் வைத்திருக்கும் 60 கானல் நிலத்தில், கனால் ஒன்றுக்கு அவர் எதிர்பார்த்த 250 - 300 கிராமுக்கு பதிலாக 30 - 40 கிராம் குங்குமப்பூவை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. கானல் ஒன்றுக்கு (எட்டு கானல் என்பது ஒரு ஏக்கருக்கு சமம்) அவர் எதிர்பார்த்த 20,000 ரூபாய் லாபத்திற்கு பதிலாக இப்போது அவர் 3 லட்ச ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறார்.
இந்தப் பருவத்தின் மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்து இருந்தோம் ஆனால் தவறான நேரத்தில் பனி விழுந்து எங்கள் பயிரை சேதப்படுத்திவிட்டது என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் குங்குமப்பூ வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான அப்துல் மஜீத் வானி கூறுகிறார், அச்சங்கத்தில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த ஆண்டு காஷ்மீரின் குங்குமப்பூ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு சுமார் 20 கோடி ரூபாய். குங்குமப்பூ வர்த்தகம் ரூபாய் 200 கோடி என்று காஷ்மீரின் உணவு பதப்படுத்தும் தொழில் குழுவின் தலைவரான டாக்டர் ஜய்னுல் ஆபுதீன் சமீபத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 226 கிராமங்களில், சுமார் 32,000 குடும்பங்கள் குங்குமப்பூவை பயிரிட்டு வருகின்றனர், இதில் அகமது மற்றும் காண்டேயின் கிராமங்களும் அடங்கும், என்று காஷ்மீர் பிரதேச ஆணையர் தயாரித்த ஆவணத்தில் குறிப்பிடுகிறார். இவர்களில் பலர் புல்வாமா மாவட்டத்தில் பாம்போர் பகுதியில் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டொன்றுக்கு சுமார் 17 டன் குங்குமப்பூவை உற்பத்தி செய்கின்றனர் என்று வேளாண் இயக்குனரான சையது அல்தாப் அய்ஜாஸ் அண்ராபி கூறுகிறார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீரில் இந்தப் பணப் பயிர் பயிரிடப்படும் நிலம் 5,700 ஹெக்டேருக்கும் மேல் இருந்து 3,700 ஹெக்டேராக குறைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் மழை பெய்யும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி பேசுகின்றனர் (ஒன்று மழைக்காலங்களில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் சாதாரண அளவை விட குறைவாகப் பெய்வது அல்லது பருவம் தவறிய மழை) மற்றும் மோசமான நீர்ப்பாசனம் ஆகியவை இப்பயிரை பயிரிடுவதற்கான ஏக்கர் நிலப்பரப்பு குறைவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
அவர்களில் சிலர் 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய குங்குமப்பூ திட்டம் கூட பெரிதும் உதவவில்லை என்று கூறுகின்றனர். உற்பத்தி முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் சந்தைப்படுத்துதல், நீர்த் தெளிப்பான்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் சிறந்த தரமான விதைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் பல நோக்கங்களில் சிலவாகும். "ஆனால் இவை யாவையும் எந்த பலனையும் அளிக்கவில்லை. விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் இருக்கின்றன..." என்கிறார் புல்வாமா மாவட்டத்தில் பாம்போர் வட்டத்தில் திரங்கா பால் பகுதியில் ஏழு கானல் நிலத்தை வைத்திருக்கும் குலாம் முகமது பாட்.
உள்ளூர் விவசாய அதிகாரிகள் வழங்கிய புதிய குங்குமப்பூ விதைகள் நல்ல பலனை கொடுக்கவில்லை, இருப்பினும் இது விளைச்சலை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறினர்", என்று அப்துல் அகமது மிர் கூறுகிறார். காஷ்மீரில் உள்ள மற்ற குங்குமப்பூ விவசாயிகளைப் போலவே, இவரும் இந்த ஆண்டின் மோசமான இழப்புகளை உள்வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த மோசமான அறுவடைக்கு பனிக்காலம் முன்பே ஆரம்பித்தது மட்டுமே ஒரே காரணமல்ல. ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு, ஷரத்து 370யை ரத்து செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலையற்றதன்மை மற்றும் கட்டுப்பாடுகள் இந்த பயிரின் விளைச்சலை பாதித்துள்ளது. ”கட்டுப்பாடுகள் காரணமாக எங்களால் எங்கள் வயல்களுக்குச் செல்ல முடியவில்லை மற்றும் முளைக்கத் தயாராக இருந்த பயிர்களையும் கவனிக்க முடியவில்லை” என்று திரங்கா பால் பகுதியைச் சேர்ந்த குங்குமப்பூ வளர்ப்பாளரான அய்ஜாஸ் அகமது பாட்.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காஷ்மீருக்கு வேலை தேடி வருவர், அதுவும் இப்பயிரினை பாதித்த ஒரு காரணம், குங்குமப்பூ விவசாயிகள் உள்ளூர் தொழிலாளர்களையே அதிக தினசரி ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்று பாம்போரின் ஜஃப்ரான் காலனியைச் சேர்ந்த பஷீர் அகமது பாட் தெரிவித்தார். "இனி இது லாபம் ஈட்டக்கூடிய வணிகம் அல்ல", என்றும் அவர் கூறினார்
இணைய நிறுத்தமும் இழப்புகளை அதிகரித்தது. "எங்களது குழந்தைகள் இணையத்தில் வானிலை முன்னறிவிப்பை தவறாமல் பார்ப்பது வழக்கம்", என்கிறார் முஷ்தக் அகமது. கடந்த காலத்தில், "மேகங்களைப் பார்த்தே மழை அல்லது பனி எப்போது பெய்யும் என்பதை எங்களால் கூற முடியும் என்று வாசீீம் காண்டே நினைவு கூர்ந்தார். ஆனால் நாங்கள் இணையத்தைத் தான் நம்பி இருந்தோம், வானிலை மாற்றங்களை கவனிப்பதையே நாங்கள் நிறுத்திவிட்டோம்", என்று கூறினார்.
தமிழில்: சோனியா போஸ்