"நீங்கள் என் கதையை கேட்கவா இங்கே வந்து இருக்கிறீர்கள்?" என்று ஆச்சரியப்பட்டார் பொன் ஹரிச்சந்திரன். "எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் கதையை கேட்க யாரும் என்னை தேடி வந்தது இல்லை. நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை". 60 வயதாகும் இவர் தனது வாழ்நாளை, தனது கிராமமான கீழகுயில்குடியில் உள்ளவர்களின் கதைகளையும், 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை நகரத்தின் கதையையும் சொல்லியே கழித்துள்ளார்.
இவரது கதையை கேட்பவர்கள்: படிப்பறிவற்றவர்கள் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை உள்ளூர் முதல் வெளியூரிலிருந்து வந்து கேட்கின்றனர். அந்தக் கதைகளை சிலர் விருது வென்ற நாவல்களில் பயன்படுத்தியுள்ளனர், சிலர் அவற்றை திரைப்படங்களாக எடுத்துள்ளனர். இன்னும் சிலர் அவற்றை மானுடவியல் ஆய்வுகளில் பயன்படுத்துகின்றனர். "இப்போதெல்லாம் கல்லூரிகளிலிருந்தும், பல்கலைக்கழகங்களில் இருந்துமே நான் அதிக பார்வையாளர்களை பெறுகிறேன். பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களை என்னுடைய கதைகளை கேட்க அழைத்து வருகின்றனர். அந்தக் கதைகளில் இருந்து ஒன்றை உங்களுக்கும் சொல்லட்டுமா? என்று கேட்கிறார்.
தாமரை மலர்கள் நிறைந்த ஒரு குலத்திற்கும் பரந்துவிரிந்த சமண குகைகளுக்கும் இடையே அமைந்துள்ள கீழகுயில்குடியில் நாங்கள் அமர்ந்துள்ளோம். இந்த கிராமம் மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் உள்ளது. அவரை எங்கே சென்றால் பார்க்கலாம் என்று கருப்பசாமி கோவிலில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டோம். டீக்கடையிலோ அல்லது வீட்டிலோ என்றனர். "ஆனால் நீங்கள் இங்கு வந்து இருப்பதால், அவரே இங்கு வருவார் என்றனர். அது போலவே அவரும் தன்னுடைய மிதிவண்டியில் வந்தார்.
அவர் உடனே வந்து எங்களை வாழ்த்திவிட்டு: இந்த கிராமத்திற்கான வழி சற்று சிரமமாக இருந்ததா? என்று கேட்டார். எங்களுடைய முன்னோர் ஆங்கிலேயப் படையின் தாக்குதல்களை தாமதப்படுத்துவதற்காக இப்படி வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார். அவர்கள் இங்கு வந்து சேர்வதற்கு முன்பு எங்களது ஒற்றர்கள் அவர்கள் வரும் தகவலை அறிவித்திருப்பர். எனவே அவர்கள் இங்கு வரும்போது, அவர்களை எதிர்கொள்ள கிராமம் தயாராக இருக்கும்.
பிறமலைக் கள்ளர்களைக் (தேவர் சமூகத்தின் ஒரு உட்பிரிவு-இன்றைக்கு தமிழகத்தின் ஒரு ஆதிக்க சமூகம்) கொண்ட கிராமம் கீழகுயில்குடி. ஆங்கிலேயர்களுக்கும் இக்கிராமத்திற்கும் மோதல்கள் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு. ஆங்கிலேயர்களின் இறையாண்மையை இவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆங்கிலேய மன்னர்களுக்கு வரி செலுத்தியது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் கிராமம் வித்தியாசமானது," என்கிறார் ஹரிச்சந்திரன்.
சில காலத்திற்கு ஆங்கிலேயரின் கிராம நிர்வாகம் இவ்வூரிலுள்ள கழுவத் தேவருக்கு வரி செலுத்தியது என்கிறார் ஹரிச்சந்திரன். ஏனென்றால் கழுவ தேவர் மதுரை ராணியின் நகைகளை திருடியிருக்கிறார். இது ஆங்கிலேய அரசுக்கு முற்பட்ட காலத்தில் 1623 முதல் 1659 வரை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மதுரையின் மன்னராக இருந்த காலத்தில் நடந்தது. திருமலை நாயக்கர் மஹால், பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக உள்ள மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
கதை ஆரம்பமாகிறது...
கழுவத் தேவர் ராணியின் நகைகளை திருடுவதற்கு ஒரு பெருந்திட்டத்தை வைத்திருந்தார். அவர் தனது இரண்டு உடும்புகளுக்கு பயிற்சி கொடுத்து வைத்திருந்தார், உடும்புகள் தாங்கள் எதை பற்றினாலும் அதை விடாமல் பிடித்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய ஒரு உயிரினமாகும். அவை ராணியின் முக்கியமான நகைகளை திருடிக்கொண்டு வந்து கழுவத்தேவரிடம் சேர்த்துவிட்டது. "இன்றைக்கும் இதைப்பற்றி அறிவிக்கும் பலகையை திருமலை நாயக்கர் மகாலில் நீங்கள் காணலாம்," என்கிறார் ஹரிச்சந்திரன். (ஆனால் அத்தகைய அறிவிப்பை தெரிவிக்கும் பலகை ஏதும் திருமலைநாயக்கர் மகாலில் இன்று இல்லை, கடந்த காலத்தில் வேண்டுமானால் இருந்திருக்கலாம்).
முதலில் ஆத்திரப் பட்டாலும் பின்னர் கழுவ தேவரின் வேலையால் வசீகரிக்கப்பட்ட மன்னர் அவருக்கு ஒரு உபகாரத்தை அளிப்பதாகக் கூறினார். தேவர், மன்னரிடம் ஒரு வேஷ்டி (பாரம்பரியமாக ஆண்கள் இடுப்பிற்கு கீழே அணியும் உடை) ஓர் வள்ளவேட்டு (தோளில் அணியக்கூடிய துண்டு) மற்றும் ஒரு உருமா (தலைப்பாகை) ஆகியவற்றை கேட்டார்.
"மேலும் அவரே மதுரைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ஒரு சிறு படையை நடத்துவதற்கு ஆண்டு கட்டணம் தர வேண்டும் என்றும் கோரினார்" என்கிறார் ஹரிச்சந்திரன். "அவர் கேட்டது அவருக்கு வழங்கப்பட்டது, அவரது குடும்பமும் பன்னெடுங்காலமாக அதை அனுபவித்து வந்தது ஆங்கிலேய ஆட்சி இந்த நடை முறையை மரியாதை செய்ய மறுக்கும் வரை," என்கிறார் ஹரிச்சந்திரன். "இதையறிந்த ஆங்கிலேய நிர்வாகி ஒருவர், ஆங்கிலேய நிர்வாகம் யாரும் அறிந்திராத கிராமத்தில் இள்ள சாதாரண குடும்பத்திற்கு வரி செலுத்துவதை அவமானம் என கருதி தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்".
ஹரிச்சந்திரன் ஒரு மரபுவழிப்பட்ட கதை சொல்லி அல்ல, இங்குள்ள பலருக்கு தங்களது நாட்டுப்புறக் கதைகளை பாதுகாப்பது பரம்பரைத் தொழிலாக இருக்கிறது. இந்தக் கலை அவரை சிறுவயது முதலே ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் எல்லாம் கூடி அமர்ந்து தங்களது வாழ்வில் நடந்த சுவாரசியமான கதைகளையும், தங்களது முன்னோர்களைப் பற்றியும் பேசுகின்றனரோ அதையெல்லாம் இவரும் ஆர்வமுடன் கேட்டார். இக்கதைகள் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு முந்தைய அரசர்களை ஏமாற்றுவது முதல் இந்த கிராமத்து மக்கள் எவ்வாறு ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்தார்கள் என்பது வரை பல கதைகளை உள்ளடக்கியது. அவரது பதின்வயதில் இருந்தே ஹரிச்சந்திரன் இந்த நாட்டுப்புறக் கதைகளை பற்றி தெரிந்து கொண்டார், ஒருநாள் இக்கதைகளின் பாதுகாவலராக தான் இருக்கப் போகிறோம் என்பது தெரியாமல். இன்று ஊரில் இருக்கும் ஒரே ஒரு கதை சொல்லி அவர் மட்டுமே.
கீழகுயில்குடியின் எதிர்ப்பால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசாங்கம் 1871-இல் குற்றப்பரம்பரை சட்டத்தை (CTA) அறிமுகப்படுத்தினர். உண்மையில் வட இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்க்கும் பழங்குடியின மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட CTA அறிமுகப்படுத்தப்பட்ட கடைசி மாகாணம் மெட்ராஸ் தான்.
"தங்கள் மீது மிக மோசமான அடக்குமுறையை ஆங்கிலேயர்கள் கட்டவிழ்த்துவிட்ட பின்னர் தான் தங்கள் கிராமவாசிகள் திருடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்" என்கிறார் ஹரிச்சந்திரன். மாலை ஐந்து மணியிலிருந்து காலை பத்து மணிவரை கீழகுயில்குடி பகுதியைச் சேர்ந்த யாரையும் மதுரைக்குள் செல்ல தடை விதித்தனர். ஆங்கிலேயர்கள் இங்குள்ள கிராம மக்களின் பலவகையான வேலைகளையும், வியாபாரத்தையும் அழித்துவிட்டனர் என்கிறார்.
மொத்தம் நான்கு வகையான திருட்டு உள்ளது என்கிறார் ஹரிச்சந்திரன்: களவு (கிடைப்பதை திருடுவது), திருட்டு (தேவைப்படுவதை மட்டும் திருடுவது), கொள்ளை (பாதிக்கப்பட்ட நபருக்கு எதுவும் இல்லாமல் திருடுவது), சூரை (அந்த இடத்தில் இருக்கும் அனைத்தையும் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமான அனைத்தையும் மற்றும் அருகில் உள்ள இடங்களில் இருந்தும் திருடுவது). இந்த அனைத்து கொள்ளையர்களுக்கும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது இவர்கள் கொலை செய்யவும்,பாலியல் வனபுணர்வு செய்யவும் தயங்கவில்லை என்பதுதான். ஆனால், நீங்கள் பழைய வரலாற்று ஆவணங்களை எடுத்து பார்த்தீர்களானால் எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகும்.
கீழகுயில்குடி கிராமத்தை 'சீர்திருத்தும்' முயற்சியில் ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு கடன்களை வழங்கினர், பெண்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட அமைத்தனர், ஏனெனில் அவர்கள் பெண்களே ஆண்களை தவறான பாதையில் வழி நடத்துவதாக எண்ணினர். கீழகுயில்குடியில் ஒரு சிறிய சிறைச்சாலை சிறிய தவறை செய்தவர்களுக்கும், மதுரையில் ஒரு பெரிய சிறைச்சாலையும் அமைத்தனர். ஆனால் இக்கிராமத்தினர் கடனையும் மறுத்து, பள்ளிக்கூடத்தையும் எரித்தனர் என்கிறார் ஹரிச்சந்திரன்.பல மணி நேரத்திற்குப் பிறகும், பல கதைகளுக்கு பின்னரும் நாங்கள் இன்னும் அவரது சொந்தக் கதையை கேட்கவில்லை. அவர் சொல்லக் கூடிய கதைகளினால் அவர் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டு அவரது சொந்தக் கதையை சொல்வதற்கு அவரால் இயலவில்லை. "நான் ஒரு குறு நில விவசாயி, அந்த நிலத்தை வைத்து என் குடும்பத்தை நடத்தும் அளவிற்கு விவசாயம் செய்கிறேன். இதற்கு மேலும் உங்களுக்கு தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?" என்று கேட்கிறார் சற்றே எரிச்சலாக. அவருக்கு ஒரு மனைவியும், மகனும் உள்ளனர் ஆனால் அவர்களைப் பற்றி பெரிதாக அவர் ஒன்றும் கூறவில்லை. அவருக்குப் பின்னர் இந்த அசாதாரண கலையை எடுத்துச் செல்ல அவரது குடும்பத்தில் வாரிசு இல்லை என்று தெரிகிறது.
ஆனால், அவருக்கும் ஒரு பெருங்கதை உள்ளது- எம் ஜி ராமச்சந்திரன் 1972இல் திமுகவிலிருந்து பிரிந்து தனது சொந்த கட்சியாக அஇஅதிமுக வை (தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சி) உருவாக்கிய பெரிய அரசியல் தருணம். நான் கட்சியில் இணைந்து உள்ளூர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். அதிமுகவின் மூத்த தலைவரான க.காளிமுத்து அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்தேன். அவர் தீவிரமாக வாசிப்பவர், நாங்கள் இருவரும் பல பிரச்சனைகளைப் பற்றிய நீண்ட உரையாடல்கள் ஈடுபட்டிருக்கிறோம். 2006 இல் காளிமுத்து இறந்ததற்குப் பிறகு, ஹரிச்சந்திரன் கட்சியில் இருந்து விலகி விட்டார். "இப்போது நான் வெறும் கதைகளை மட்டுமே சொல்லி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்கிறார்.
சு வெங்கடேசன் இன் சாகித்திய அகாடமி விருது பெற்ற காவல் கோட்டம் நூல் இவரது உரையாடல்களின் அடிப்படையிலிருந்து பெறப்பட்டது என்கிறார் ஹரிச்சந்திரன். "தங்களது கிராமத்தில் தான் குற்றப்பரம்பரை சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட்டது என்கிறார்." என் நாவலுக்காக நான் நடத்திய விரிவான ஆராய்ச்சியில் அரசாங்க பதிவுகள் இதை உறுதிபடுத்தின. குற்றப்பரம்பரை சட்டம் சென்னை மாகாணத்தினல் முதன் முதலாக கீழகுயில்குடியில் அமுல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திலும் அதன் கதைகளை தனது முதுகில் சுமந்து செல்லும் ஒருவரை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவ்வாறு கண்டுபிடிப்பது அபூர்வம், எனினும் அப்படிப்பட்ட நபர் நிச்சயம் இருப்பார். ஹரிச்சந்திரனும் அப்படிபட்ட அபூர்வமான நபரே. கீழகுயில்குடியின் மொத்த கதையையும் தன் முதுகில் சுமந்து கொண்டு இருக்கிறார். இளமையாக இருந்த போது அவர் தனது நேரத்தை 80 மற்றும் 90 வயது மனிதர்களிடம் கழித்துள்ளார். அவர் தனித்தன்மையான, திறமையான, அதிர்ஷ்டசாலி, இவரிடமிருந்து கதைகளை நாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்". என்கிறார் வெங்கடேசன்.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அரவான் (2012) திரைப்படம், ஹரிச்சந்திரன் கதைகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. 18ம் நுற்றாண்டில் அமைக்கப்பட்ட சரித்திர புனைவுத் திரைப்படமான இது செல்வந்தர்களிடமிருந்து திருடி, தங்கள் இனத்தவரை வாழ வைக்க உதவும் ஒரு குழுவினரின் வாழ்வினைப்பற்றியது.
ஆனால் வாய்மொழி நாட்டுப்புறக்கலை அப்படியே இருந்து வருகிறது. ஹரிச்சந்திரன் அவர்களிடம் இவற்றை ஆவணப்படுத்த ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று கேட்டபோது அவரும் அத்தகைய யோசனையில் இருப்பது போல தோன்றுகிறது. கதை சொல்வதைப் போல வசீகரமானது எதுவுமில்லை. ஆனால் இந்த கதைகளை தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பது ஒருபுறம் வருத்தமளிக்கிறது, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இன்னொருபுறம். வேண்டுமானால், நான் ஒருவரை கண்டுபிடித்து எனக்கு தெரிந்தவை அனைத்தையும், என் இதயத்தில் சுமந்து கொண்டு இருக்கும் அனைத்தையும் அவரிடம் கொடுக்க வேண்டும்" என்கிறார்.
தமிழில்: சோனியா போஸ்